தூர்ந்து கிடக்கும் கடலூர் திருவந்திபுரம் அணை.
கடலூர்:
காமராஜர் ஆட்சி காலத்தில் கடலூர் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை, 40 ஆண்டுகளாக தூர்ந்து கிடக்கிறது. அணையைத் தூர்வாரி அங்கு மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கெடிலம் ஆறு கல்வராயன் மலைப் பகுதியில் கருடன் பாறை என்ற இடத்தில் உற்பத்தியாகி விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக ஓடி, கடலூர் உப்பனாற்றில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது. கெடிலம் ஆற்றில் திருவந்திபுரம், திருவதிகை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு உள்ளன. காமராஜர் ஆட்சி காலத்தில் இவைகள் கட்டப் பட்டவை. இந்த அணைகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஏக்கர் வரை பாசன நிலங்களைக் கொண்டது.
திருவந்திபுரம், திருவதிகை அணைகள் கடந்த 40 ஆண்டுகளாகத் தூர்ந்து கிடக்கின்றன. கெடிலம் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள நிலங்களில், ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நிலத்தடி நீóர் தாரளமாகக் கிடைப்பதால், இந்த அணைகளில் இருந்து கிடைக்கும் நீரை விவசாயிகள் எதிர்பார்ப்பது இல்லை. இதனால் தூர்ந்து கிடக்கும் அணைகள் பற்றி பொதுப் பணித்துறை கவலை கொள்வது இல்லை. கடலூர், பண்ருட்டி தாலுகாக்களில் மலைப் பாங்கான புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் மழைநீரை சேகரிக்கும் வகையில், நீர் வடி முகடுகள் அமைக்கும் திட்டத்தில், பல கோடி ரூபாய் கடந்த காலங்களில் செலவிடப்பட்டு இருக்கிறது.
மழை காலத்தில் வழிந்தோடி வீணாகும் நீரை, ஆங்காங்கே தேக்கி வைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்கெல்லாம் கோடிக் கணக்கில் செலவிடும் பொதுப்பணித் துறை, தூர்ந்து கிடக்கும் கெடிலம் அணைகளைத் தூர்வாரி, அவற்றில் மழைநீரைச் சேமிப்பது குறித்தோ, ஆண்டு தோறும் மழை காலத்தில் கெடிலம் ஆற்றில் பல டி.எம்.சி. தண்ணீர், வீணாக வங்கக் கடலில் கலப்பது குறித்தோ, சற்றும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. திருவந்திபுரத்தில் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு இருக்கும் அணை, 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்டது. 132 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையில், அதிக பட்சம் 7.9 மீட்டர் உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகக் கட்டப்பட்டு உள்ளது.
ஆனால் இப்போது ஒருமீட்டர் உயரத்துக்குகூட தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு, தூர்ந்து கிடப்பதுதான் அணையின் பரிதாப நிலை. அணையைத் தூர் வாருவதற்கு பொதுப்பணித் துறை, கோடிக்கணக்கில் பணம் செலவிட்டாக வேண்டியது இல்லை. கடலூர் பகுதியில் பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆறுகளில் எங்கும் மணல் குவாரி இல்லை. இதனால் மணல் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. திருவந்திபுரம் அணையில் குவாரி அமைத்து மணலை அகற்றினால், கடலூர் மக்களுக்குக் குறைந்த விலையில் மணல் கிடைக்கும். அதே நேரத்தில் அணையும் தூர்வாரப்படும். அணைக்குச் செல்ல சாலைவசதி அமைத்துக் கொடுத்தால் போதும்.
திருவதிகை, திருவந்திபுரம் அணைகளைத் தூர்வாரினால் பல்லாயிரம் ஏக்கரில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே அணைகளைத் தூர் வாருமாறு, 2 ஆண்டுகளுக்கு முன் அரசுக்குக் கோரிக்கை வைத்தோம், எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார், விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் பட்டாம்பாக்கம் வெங்கடபதி. அருகில் கேப்பர் மலையில் அமைந்து உள்ள, கடலூர் நகராட்சிக் குடிநீரேற்று நிலையத்தில் உள்ள சுத்திகரிப்பு தொட்டிகளுக்கு, மாதம் 140 லாரி லோடு கெடிலம் மணல் தேவைப்படுகிறது. மேலும் திருவந்திபுரம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்புத் தொட்டிகள் புதிதாகக் கட்டப்பட உள்ளன. அவற்றுக்குத் தேவையான மணலையும் இந்த அணையில் இருந்து பெறமுடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது
அணை தூர்ந்து கிடப்பது உண்மை. அணையைத் தூர்வாரினால் நல்லதுதான். ஆனால் ஆறுகளைத் தூர் வாருவதற்கு பொதுப்பணித் துறையில் திட்டம் எதுவும் இல்லை. கெடிலம் ஆறு நீர்வள நீலவள ஆதாரத் திட்டத்தில், கெடிலம் ஆற்றின் கரைகளை பலப் படுத்தும் திட்டம் தற்போது, ரூ. 30 கோடியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அணையைச் சீரமைக்க நிதி பெறலாம். ஆனால் அணையத் தூர்வார நிதி கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கான திட்டமும் இல்லை. அணையில் குவாரி அமைத்து மணலை அப்புறப் படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
திருவந்திபுரத்தில் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு இருக்கும் அணை, 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்டது. 132 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையில், அதிக பட்சம் 7.9 மீட்டர் உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகக் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது ஒருமீட்டர் உயரத்துக்குகூட தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு, தூர்ந்து கிடப்பதுதான் அணையின் பரிதாப நிலை.