உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 26, 2010

டெல்டா விவசாயிகளுக்கு உதவுமா வேளாண் துறை?

கடலூர் அருகே பாரம்பரிய முறையில் தயாரான நெல் நாற்றுகளை, நிலத்துக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயத் தொழிலாளர்கள்.



கடலூர்: 

           டெல்டா பாசன விவசாய நிலங்களில் போதுமான தண்ணீர் இருந்தும் சம்பா சாகுபடி பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை.16 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பாசன விவசாயிகள், தங்களது பாரம்பரிய முறைகளையே நம்பியுள்ளனர். 

                மேட்டூர் அணை திறந்தால்தான் சேற்றில் கால்வைக்க முடியும் என்ற நிலை பன்னெடுங்காலப் பழக்கம். டெல்டா பாசனப் பகுதிகளில் குறிப்பாகக் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக தென்மேற்குப் பருவமழை பெய்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து 3 டி.எம்.சி. தண்ணீர் திறந்தால் எந்த அளவுக்கு தண்ணீர் தேங்குமோ, அந்த அளவுக்கு மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

                  கடந்த 10 தினங்களுக்கு மேலாக இந்த நிலை நீடிக்கிறது. மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது.ஆனால் சம்பா நெல் சாகுபடிப் பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. கோடை உழவும் பெரும்பாலான நிலங்களில் நடைபெறவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.ஆடிப் பட்டம் தேடிவிதை என்பது பழமொழி. இந்த ஆண்டு ஓரளவுக்கு நல்ல மழை பெய்து இருக்கும் நிலையில், பாரம்பரிய விவசாயிகள் ஆடிப்பட்டம் தொடங்கும் ஆகஸ்ட் முதல் வாரத்திலாவது வேளாண் பணிகளைத் தொடங்கி இருக்க வேண்டும். 

                  ஆனால் தொடங்கவில்லை.இனி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, மீண்டும் வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய பின்னர்தான் வேளாண் பணிகள் தொடங்கப்படும் என்றால், டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா நாற்று நடவுப் பணிகள் அக்டோபர் கடைசியில்தான் முடிவடையும். பிப்ரவரி மாதத்துக்கு மேல்தான் சம்பா அறுவடை.  இடையில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தையும் சந்திக்க நேரிடும்.

               ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மழை திருப்தியாக இருந்தும், சம்பா சாகுபடிப் பணிகள் பிந்திப் போவதும், சம்பாவுக்குப் பின் 10 லட்சம் ஏக்கரில் உளுந்து பயிரிட முடியாமல் போவதும், வேளாண்துறை டெல்டா விவசாயிகளுக்கு முறையான அறிவிப்புகளை வெளியிடாததும், பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப விவசாயத்தை மாற்றிக் கொள்ள, விவசாயிகளைத் தயார் செய்யாததுமே காரணம் என்று, முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

               முன்பெல்லாம் சம்பா நெல் என்றால் குறைந்தபட்சம் 6 மாதப் பயிர். இன்று 6 மாத விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைப்பது இல்லை. விவசாயிக்கும் பொறுமை இல்லை. எனவே குறுகியகால நெல் ரகங்களை வந்துவிட்டன. ஆனால் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப அவற்றையாவது காலாகாலத்தில் பயிரிட்டு, நல்ல மகசூலுக்கு வழிவகுக்கப்படுகிறதா என்றால், இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும் எப்போது சம்பா சாகுபடியைத் தொடங்கலாம், எந்தரக நெல்லை விதைக்கலாம், மேட்டூர் அணை நீர் எத்தனை நாளுக்குக் கிடைக்கும் என்ற எந்த அறிவிப்பையும் வேளாண்துறை வெளியிடவில்லை என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

                இந்த ஆண்டு ஆகஸ்ட் 20ல் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்தது. அதன்படி மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. வானிலை ஆய்வுமைய அறிவிப்புக்கு ஏற்ப விவசாயிகளைத் தயார் படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டியது வேளாண் துறையின் பொறுப்பு. ஆனால் அதைச் செய்ய வில்லையே என்கிறார் முன்னோடி விவசாயியும், மாவட்ட உழவர் மன்றக் கூட்டமைப்பின் தலைவருமான பி.ரவீந்திரன்.

                  பன்னாட்டு இயற்கை பேரிடர் மேலாண்மை முகமை என்ற தொண்டு நிறுவனம், வானிலை ஆய்வு மையங்களுடன் இணைந்து, விவசாயிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகளையும் ஆலோசனைகளையும், 17 நாடுகளில் வழங்கி வருகிறது. இந்த முகமை தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசனப்பகுதிகளுக்கு இந்த ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பை அண்மையில் ஏற்றுக் கொண்டு இருப்பதாகவும் ரவீந்திரன் கூறினார். இனியாவது டெல்டா விவசாயத்தில் மாற்றம் ஏற்படுமா?

Read more »

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் தலைமையில் பசுமை ராணுவம்!


செம்மை நெல் சாகுபடியில் தயாரிக்கப்பட்ட பாய் நாற்றங்கால்.
 
கடலூர்: 
 
              வேளாண் பணிகளில் பசுமை ராணுவம் என்ற புதிய அமைப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் வேளாண் பொருள்கள் உற்பத்தி குறைந்து வருகிறது. 
 
               கூலியாள் பற்றாக்குறை, உற்பத்திப் பொருள்களுக்கு உரியவிலை கிடைக்காமை, இயற்கை இடர்பாடுகள் போன்றவற்றால், விவசாயத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் கூட அதை விட்டு வெளியேறவும், அதை உபதொழிலாக மேற்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறர்கள்.இந்நிலையில் நவீன வேளாண்மையும், இயந்திர மயமாதலும் இன்றியமையாத் தேவையாகி வருகிறது. 
 
               இயந்திரங்களின் அதிகப்படியான விலையும், தொழில்நுட்பமும், விவசாயிகள் இயந்திரங்களைப் பயன்படுத்த தடைக் கற்களாக உள்ளன. இந்நிலையைப் போக்க நவீன தொழில்நுட்பத்துடன் வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தி, வேளாண் உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளைக் கொண்ட பசுமை ராணுவம் என்ற அமைப்பு தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலமாக உருவாக்கப்பட்டு வருகிறது.நாட்டு மக்களைக் காப்பதற்கு ராணுவம் இருப்பதுபோல், வேளாண்மையைப் பாதுகாக்க பசுமை ராணுவம் தொடங்கப்பட்டு இருக்கிறது. 
 
               ராணுவ வீரர்கள் வேறுயாரும் அல்ல, விவசாயிகளேதான். தமிழகத்தில் முதல் முறையாக நாகை மாவட்டத்தில் தொடங்கிய இத்திட்டம் தற்போது கடலூர் மாவட்டத்துக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 6 தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, உழவுக்குப் பயன்படும் ரோட்டாவேட்டர், பவர் டில்லர், மின் டிராக்டர், நாற்று நடவு இயந்திரம், பூச்சிமருந்து தெளிக்கும் இயந்திரம் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.ஒரு கூட்டுறவு சங்கத்துக்கு தலா 4 விவசாயிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள்தான் பசுமை ராணுவத்தினர். 
 
                இவர்களுக்கு தனிச் சீருடைகள் வழங்கப்பட்டு, வேளாண் இயந்திரங்களை இயக்குவதற்கு தனியார் நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.நிலத்தைப் பண்படுத்துதல், செம்மை நெல் சாகுபடி முறையில் நாற்றங்கால் (பாய் நாற்றங்கால், தட்டு நாற்றங்கால், மரச்சட்ட நாற்றங்கால், தெளிப்பு நாற்றங்கால்) தயாரித்தல், நாற்று நடவு செய்தல் போன்றவற்றில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து கீழ மூங்கிலடி கிராமத்தில் களப் பயிற்சியும், கடலூரில் வேளாண் இயந்திரங்களை இயக்குதல் மற்றும் பழுது பார்த்தல் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
 
                பயிற்சி பெற்ற பசுமைப் படையினர் தங்களது சேவைப் பகுதிகளில், அழைக்கும் விவசாயிகளுக்கு, இயந்திரங்களுடன் சென்று, நிலத்தைப் பண்படுத்துதல் முதல் நாற்று நடவு வரையிலான வேளாண் பணிகளைச் செய்து கொடுப்பார்கள். இப் பணிகளுக்கான கூலி, ஊக்கத் தொகையாகவும், வாடகையாகவும் வழங்கப்படும். இதில் ஊக்கத் தொகை பசுமைப்படை விவசாயிக்கும், வாடகை கூட்டுறவு சங்கத்துக்கும் கிடைக்கும்.
 
இப்பயிற்சியை பார்வையிட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளர் இரா.ராஜேந்திரன் கூறுகையில், 
 
                 ""வேளாண்மையப் பாதுகாக்க விவசாயிகளைக் கொண்ட ராணுவம் அமைக்கப்பட்டு உள்ளது. வேளாண்மையில் உள்ள இடையூறுகளைப் போக்க மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், நவீன வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் எளிதாகப் பயன்படுத்த முடியும், வேளாண் செலவுகள் குறையும்'' என்றார்.
 
பயிற்சியில் பங்கேற்ற உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 
 
                   ""பசுமை ராணுவம் திட்டம் சிறந்த வேளாண் திட்டமாகத் தெரிகிறது. இயந்திரங்கள் இன்றி, கூலியாள்களை பயன்படுத்தி நிலத்தைப் பண்படுத்துதல், நாற்றங்கால் தயாரித்தல், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஏக்கருக்கு |3 ஆயிரம் முதல்  5 ஆயிரம் வரை செலவாகும், ஆனால் பசுமை ராணுவம் திட்டத்தில் ஏக்கருக்கு  1,800தான் செலவாகிறது. வேளாண் பணிகளுக்கு உதவுவதற்காக கூட்டுறவுத் துறை மூலம் கடலூர் மாவட்டத்தில், 400 கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்களுக்கும் வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்கி பயிற்சி அளிக்க வேண்டும்'' என்றார்.

Read more »

தமிழ்நாட்டில் ஏறுமுகத்தில் மக்காச்சோள விலை

கடலூர்:   

            நல்ல விலை கிடைக்கும் என்பதால், தமிழ்நாட்டில் எதிர்வரும் பருவத்தில் மக்காச் சோளம் பயிரிடலாம் என்று வேளாண் துறை பரிந்துரை செய்து உள்ளது.
 
                   2009-10-ம் ஆண்டு உலக அளவில் மக்காச்சோளத்தின் உற்பத்தி 804 மில்லியன் டன்னாக இருக்கும் என்று, சர்வதேச தானியக் கழகம் கணித்து உள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இது 2 சதவீதம் அதிகம்.இவ்வாண்டு மக்காச் சோளத்தின் தேவை 818 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 44 சதவீதம் அதிகம் ஆகும் .இந்தியாவில் மக்காச் சோளம் சாகுபடி கரீப் பருவத்தில் 27.97 லட்சம் ஹெக்டேராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
                இது கடந்த ஆண்டைவிட 2.1 சதவீதம் குறைவாகும்.பரப்பளவு குறைவுக்கு, மக்காச்சோளம் அதிகம் உற்பத்தி செய்யப்படும் உத்தரப்பிரதேசம்,  மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பருவ மழை தாமதமானதே காரணம் என்று கூறப்படுகிறது.எனினும் ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மக்காச்சோள உற்பத்தி, அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வர்த்தக மையங்கள் எதிர்பார்க்கின்றன. தமிழ்நாட்டில் மக்காச்சோளத்தின் விலை ஜூலை மாதத்தில் குவிண்டால்  1100-ஐ தாண்டி உள்ளது. எனவே ஆடிப்பட்டத்தில் விதைத்து, அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்தைக்கு வரும் மக்காச்சோளத்துக்கு இதே விலை கிடைக்குமா என்று விவசாயிகளிடம் கேள்வி எழுந்துள்ளது.
 
                 வர்த்தக மையங்களின் தகவல்களின்படி மக்காச்சோளத்தின் விலை, ஆகஸ்ட் மாத இறுதி வரை, அதாவது கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் சந்தைக்கு வரும் வரை, இதே போக்கில் இருக்கும் என்று, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் அறிவித்து உள்ளது.ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு  1000-த்தில் இருந்து சரிய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் மக்காச்சோளத்தின் விலையை முன்னறிவிப்பு செய்ய ஆய்வு மேற்கொண்டது.
 
                  உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலவிய விலை விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆடிப் பட்டத்தில் விதைக்கப்பட்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை சந்தைக்கு வரும் மக்காச் சோளத்தின் விலை குவிண்டாலுக்கு  850 முதல்  950 வரை நிலவும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.தொடர்ந்து கோழித் தீவனத்தின் தேவை மற்றும் கரீப் பருவத்தில் சாகுபடி பரப்பளவு குறைவு போன்ற காரணங்களால், மக்காச்சோளத்தின் விலை ஏறுமுகமாக இருக்கும் என  எதிர்பார்க்கலாம் என்றும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் அறிவித்து உள்ளது. 
 
                     மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் தமிழக விவசாயிகள் எதிர்வரும் பட்டத்தில், மக்காச்சோளத்தை பயிரிடலாம் என்று, வேளாண்துறை சிபாரிசு செய்து உள்ளது. நல்ல விலை கிடைக்க வேண்டுமானால் பெரிய மணிகள் உள்ள மக்காச்சோள ரகங்களைப் பயிரிடுமாறும், வேண்டுகோள் விடுத்துள்ளது.100 கிராம் மக்காச்சோளக் கதிரில் 350-க்கும் குறைவான மணிகள் இருந்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more »

வாழ்க்கைக்கு தமிழ்; வயிற்றுப் பிழைப்பிற்கு ஆங்கிலம் : கிருஷ்ணராஜ் வானவராயர்




குறிஞ்சிப்பாடி : 

             ""ஓட்டுப் போட்டு அனுப்பியவர்கள் பார்த்துக் கொள்வர் என்ற மெத்தனம், அலட்சியம், அறியாமையால், 63 ஆண்டுகள் வளர்ச்சி அடையாமல் இருந்து வருகிறோம்,'' என, பாரதிய வித்யபவன் கோவை கேந்திராவின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசினார்.

                கடலூர் மாவட்டம் வடலூர் சுத்த சன்மார்க்க நிலையம் சார்பில் சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் 40ம் ஆண்டு நினைவு நாள், சுத்த சன்மார்க்க நிலையத்தின் 60ம் ஆண்டு வைர விழா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா டாக்டர் நா.மகாலிங்கம் கலையரங்கில் நேற்று நடந்தது. ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்கள் தாளாளர் செல்வராஜ் வரவேற்றார். சுத்த சன்மார்க்க நிலைய துணைத் தலைவர் ஊரன் அடிகளார் தலைமை தாங்கினார். என்.எல்.சி., சுரங்கங்கள் இயக்குனர் சுரேந்திரமோகன் ஓ.பி.ஆர்., உருவப் படத்தை திறந்து வைத்தார்.

பாரதிய வித்யபவன் கோவை கேந்திராவின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியது: 

                 நான் அரசியலை பற்றியோ, ஓ.பி.ஆரை பற்றியோ பேசப்போவது இல்லை. ஓ.பி.ஆரைப் பற்றி அவர் புத்தகங்கள் படித்தாலே தெரிந்து கொள்ளலாம். உங்களிடம் இருந்து ஒரு ஓ.பி.ஆர்., போன்றவரை உருவாக்க வேண்டும் என்பதற்காக பேச வந்துள்ளேன். இளைஞர்களுக்கு எங்களைப் போன்றவர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இளைஞர்கள் திறந்த மனதுடன், புதிய கருத்துக்களை பரிசீலித்து நியாயம் இருந்தால் ஏற்றுக் கொள்வர். அளவற்ற அறிவாற்றல் உண்டு.

                   எங்களுக்கு அறிவு இருக்குமே தவிர ஆற்றல் இல்லை. இளைஞர்கள் எதிலும் துணிவுடன் செயல்படுவர். அது எங்களை போன்றவரிடம் இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது உலகில் அனைவரும் இந்தியா பிரிந்து துண்டு துண்டாகி விடும் என எண்ணினர். அதை உடைத்து 63 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். உலகத்திலேயே சூப்பர் பவர் இந்தியர்களாகிய நாம் தான். இருந்தாலும் 8 சதவீத மக்கள், குழந்தைகள் உணவு இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். 

                      சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் வளர்ச்சி அடைந்தும் ஏழைகள் இருக்கின்றனர். இதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்தனை ஆண்டுகளும் மக்களை வளர்ச்சிக்கு பயன்படுத்தவில்லை என்பதை உணர வேண்டும். சுதந்திரம் அடைந்த பிறகு மக்கள் இயக்கமாக இல்லாமல், நாம் ஓட்டு போட்டு அனுப்பியவர்கள் பார்த்துக் கொள்வர் என்று மெத்தனம், அலட்சியம், அறியாமையால் 63 ஆண்டுகள் வளர்ச்சி அடையாமல் இருந்து வருகிறோம். 

                             கல்வி வழங்கினால் விழிப்புணர்வு ஏற்பட்டு அறியாமை அழிந்து விடும் என கல்வி வழங்கினோம். கல்வி விழிப்புணர்வு வளர்ந்ததே தவிர பொறுப்புகள் வளரவில்லை. கல்வி கற்றவர்கள் மூன்று பொறுப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வியை மாற்றி அமைப்பது, ஆன்மிக அறிவியலை மாற்றுவது, தேசிய பொறுப்பு, இவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

நம் கல்வியின் குறிக்கோள் என்ன தெரியுமா? 

                     வாழ்க்கைக்கு தமிழ், வயிற்று பிழைப்புக்கு ஆங்கிலம், கல்வியின் குறிக்கோளை புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டு கல்வி குறித்து குழந்தைசாமி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல அயல் நாட்டு அறிஞர்கள் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியது, அறிவுரை எதுவும் இல்லை. அறிந்து கொள்ள அதிகம் உள்ளது என்றனர். அந்தக் கல்வி அலமாரியில் இருந்து வெளியே வரவில்லை. இவ்வாறு கிருஷ்ணராஜ் வானவராயர் பேசினார்.

Read more »

கடலூர் - பரங்கிப்பேட்டை கடற்கரை சாலை பணி முடங்கியது : 750 மீ., தூர நிலத்தால் 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

கடலூர் : 

                   கடலூர் - பரங்கிப்பேட்டை சாலையில் தனியாரிடம் உள்ள 750 மீட்டர் தூர நிலத்தை அரசு கையகப்படுத்தி கொடுத்தால் பணி முடிவடைந்து 50 கிராம மக்கள் பயனடைவார்கள்.

               கடலூர் - பரங்கிப்பேட்டை கடற்கரை சாலையில் பரங்கிப்பேட்டை வெள்ளாற்றின் முகத்துவாரத்தில் மீன்பிடி துறைமுகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கடல் வாழ் உயிரின ஆராச்சி மையம் உள்ளன. சாமியார்பேட்டை - வேலங்கிராயன்பேட்டை இடையில் சிறிய துறைமுகமும், கப்பல் புனரமைப்பு தளம், குமாரப் பேட்டை - மடவாப்பள்ளம் இடையே மிகப் பெரிய "ஜவுளி பூங்கா' உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. 

                  மேலும் அய்யம்பேட்டை முதல் பேட்டோடை, பெரியகுப்பம் வரை நகார்ஜூனா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. அன்னப் பன்பேட்டை- அய்யம் பேட்டை இடையில் நாகார் ஜூனா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள், தொழிலாளர்கள் குடியிருப்பு அமைக்கப்பட இருக்கிறது. நஞ்சலிங்கம்பேட்டை - தம்மனாம்பேட்டை இடையே 800 ஏக்கரில் இ.ஐ.டி., பாரி உட்பட பல்வேறு நிறுவனங்களும் அமைந்துள்ளது. பல புதிய நிறுவனங்களும் அமைய உள்ளது. இதன் மூலம் இப்பகுதி வருங்காலத்தில் மிகப்பெரிய தொழிற் பேட்டையாக மாறும்.

                   இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் 10 முதல் 20 கி.மீ., தூரம் வரை சுற்றித் தான் கடலூர் - சிதம்பரம் சாலையை அடைய வேண்டும். கடலூர் - பரங்கிப்பேட்டை வரை சாலை அமைக்க வேண்டும் என பொது மக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து கடற் கரை சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்தது. இச்சாலையில் சொத்திக்குப்பம் - ராசாபேட்டை இடையே உப்பனாற்றில் 24 கோடி ரூபாயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 

                 மேலும் பரங்கிப்பேட்டை வெள்ளாறின் குறுக்கே 20 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கிடையே சாலை அமையும் இடத்தில் நிலம் வைத்திருப்போர் நிலங்களை வழங்க தயக்கம் காட்டினர். இதனையடுத்து மாவட்ட அமைச்சர், எம்.பி., மாவட்ட நிர்வாகத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற் கொண்ட முயற்சியால் அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து நிலங்களை கொடுத்ததால் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

                 இந்நிலையில் தம்மனாம்பேட்டை - சித்திரைப் பேட்டை இடையே உள்ள இ.ஐ.டி., பாரி நிறுவனத்திற் கும், தனியார் ஒருவருக்கும் சொந்தமான நிலத்தை வழங்காததால் தம்மனாம்பேட்டை - சித்திரைப்பேட்டை வரை 750 மீ., சாலை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. மிகவும் பயனுள்ள திட்டமான இச்சாலையில் கடலூர் - சிதம்பரம் சாலை மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவதுடன், 50 கிராம மக்கள், தொழில் நிறுவனத்தினர் பயனடைவர். 

                      50 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு பாலம் கட்டப்பட்டு வெறும் 750 மீ., தூர நிலத்தால் சாலை மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. சாலை முழுமையடைந்தால் 50 கிராமத்தினர் பயனடையவர். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்களைக் கொண்டு வரவும், கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் வரும் பொருட்களை வெளியூர்களுக்கு ஏற்றிச் செல்லவும் வசதியாக இருக்கும்.

                     மேலும் ஆண்டு தோறும் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் - சிதம்பரம் சாலை துண்டிக் கப்பட்டு 10 நாட்கள் வரை போக்குவரத்து தடைபடும். இதுபோன்ற காலங்களில் இச்சாலை மாற்று வழியாகவும் அமையும். மேலும் சுற்றுலாத் தலமான பிச்சாவரத்திற்கு கடலூர் உட்பட பல பகுதிகளில் இருந்து எளிதாக சென்று வரலாம். இ.ஐ.டி., பாரி நிறுவனமும் பயனடையும். எதிர் காலத்தில் பல்வேறு புதிய தொழில் நிறுவனங்களும் அமைய வாய்ப்புள்ளது. எனவே அரசு இந்த இடங்களை கையகப்படுத்தி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கடலூர் : 

             கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. 

              பள்ளி முதல்வர் அக் னல் முன்னிலை வகித் தார். கல்லூரி முதல்வர் ரட்சகர் துவக்கி வைத்தார். விழாவில் பாலர் பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ், உள்விடுதி தந்தை மரிய அந்தோணி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். வகுப்பு வாரியாக மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சியில் பல் வேறு தலைப்புகளில் 150 காட்சிப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது. 

                    மின்சாரம் இல்லாமல் இயங்கும் அரவை இயந்திரம், குப்பைகளை பிரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக மாணவர்கள் வடிவமைத்திருந்த பிரமாண்ட ரோபா மனிதன் அனைவரையும் கவர்ந்தது. ஏற்பாடுகளை மரிய சேவியர், ஜான்பீட்டர், ஆரோக்கியதாஸ், சின்னப்பராஜ், வாசு, விமல்ராஜ், பாரி, மேஸ், டேவிட் ஆகியோர் செய்திருந்தனர்.

Read more »

பயன்பாடின்றி எரிவாயு தகன மேடை பண்ருட்டியில் ரூ.58 லட்சம் வீண்

பண்ருட்டி : 

              பண்ருட்டியில் 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை பயன்பாடின்றி வீணாகி வருகிறது. 

                பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரையோரம் நகராட்சி சார்பில் 43 லட்சம் ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. ஆற்றங்கரையோரம் உள்ளதால் மழைக் காலத்தில் வெள்ளத்தில் வீணாகி விடும் என்பதால் 15 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட்டால் ஆன சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுற்றுச்சுவர், தியான மண்டபம், ஆர்ச், சாலை அமைக்க கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கு முடிவு செய்யப்பட்டு 15 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் துவங்கி பாதியில் நின்றது. 

                    இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி காடாம்புலியூர் வருகை தந்த துணை முதல்வர் ஸ்டாலின் நவீன எரிவாயு தகன மேடையை துவக்கி வைத்தார். அதன் பின் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அனாதை பிணத்தை எரித்து சோதனை செய்தனர். ஆனால் தியான மண்டபம் உள்ளிட்ட பணிகள் முடிவு பெறாத நிலையில் உள்ளது. அரசு திட்டபடி குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகளை முடிக்காமல் ஒன்னரை ஆண்டை வீணடித்துள்ளதால் தற்போது திட்ட மதிப்பீடு உயர்ந்துள்ளது மட்டுமின்றி எரிவாயு மிஷன் செயல் படாமல் வீணாகி வருகிறது.

Read more »

ரசாயன பூச்சு வினாயகர் சிலைகளை கரைக்க வேண்டாம்: கலெக்டர் வேண்டுகோள்

கடலூர் : 

              ரசாயனம் பூசப்பட்ட வினாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வினாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அண்மை காலமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸினால் செய்யப்பட்டு ரசாயன வர்ணம் பூசப்பட்ட வினாயகர் சிலைகளை, வழிபாட்டிற்கு பின்னர் கரைத்து வருகின்றனர். இதனால் நீர்நிலைகளில் மாசு ஏற்படுகிறது. 

                  எனவே பொதுமக்கள் களிமண்ணால் செய்யப் பட்ட வினாயகர் சிலைகளையும், ரசாயன கலவையற்ற சிலைகளை பயன்படுத்த வேண்டும். கடலோரம் மற்றும் ஏரிகளில் சிலைகளை கரைக்காமல் கடலில் 500 மீட்டர் தூரம் எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தேவனாம்பட்டினம் கடற்கரை, உப்பனாறு, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு, காவிரி பகுதிகளில் சிலைகளை கரைக்கும்படி கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள். வினாயகர் சிலைகளை பாரம்பரிய வழக்கப்படி, சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு கொண்டாடவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சிதம்பரத்தில் திறப்பு விழாவிற்கு தயாரான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு

 
சிதம்பரம் : 

              சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு ஒரு கோடியே 50 ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. 

                     சிதம்பரம் ரயில் நிலையம் அருகே தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் குடியிருப்பு இல் லாமல் தவித்து வந்தனர். அதனையொட்டி அவர்களுக்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மூலம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பணி துவங்கியது. நிலைய அலுவலர் குடியிருப்பு மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான 24 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து காண்ட்ராக்டர்கள் சாவியையும் ஒப்படைத்து விட்டதால் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.

Read more »

மேல்பட்டாம்பாக்கத்தில் தொழுநோய் கண்டறியும் பயிற்சி

கடலூர் : 
 
             மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம தாதியர்களுக்கு தொழு நோய் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

               நிலைய மருத்துவர் டாக்டர் பரிமேலழகர் தலைமை தாங்கினார். மருத்துவமல்லா மேற்பார்வையாளர் நசீர் அகமத் வரவேற்றார். முகாமில் தொழு நோய் ஆரம்ப அறிகுறிகள் கண்டுபிடிக் கும் விதம், புதிய கூட்டு மருந்து சிகிச்சை ஆகியவை குறித்து மருத் துவரல்லா மேற்பார்வையாளர் ராமலிங்கம் விளக்கிக் கூறினார். மேலும் முட நீக்குனர் அந்தோணிதாஸ் பயிற்சி அளித்தார். முகாமில் அனைத்து கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர், சமுதாய சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் பணியாளர்களும் பங்கேற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் அரிகிருஷ்ணன், சேகர் செய்திருந்தனர். சுகாதார ஆய்வாளர் பாலு நன்றி கூறினார்.

Read more »

கடலூரில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூர் : 

                 கடலூர் முதுநகரில் கேட்பாரற்று கிடந்த 6,500 ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

                      ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன், பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வருவாய் அதிகாரிகள் சங்கர், சுப்ரமணியன் ஆகியோர் கடலூர் முதுநகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இருசப்பச்செட்டித் தெருவில் 6,500 ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ எடைகொண்ட 10 மூட்டை ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் கடலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

Read more »

கடலூர் முதுநகர் அருகே பாசன வாய்க்காலில் ரசாயன கழிவுநீர்: சாலைமறியல்

கடலூர் : 

                கடலூர் முதுநகர் அருகே தொழிற்சாலை ரசாயனக் கழிவு நீர் பாசன வாய்க்காலில் கலப்பதைக் கண்டித்து சங்கொலிகுப்பம் கிராம மக்கள் நேற்று சிதம்பரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

                கடலூர் முதுநகர் சிப்காட்டில் 50க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற் சாலைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து தான் ஆற்றிலோ, கடலிலோ கலக்க விட வேண்டும். ஆனால் ஒரு சில தொழிற்சாலைகள் இதை முறையாக பின்பற்றுவதில்லை. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையினால் பாசன வாய்க்காலில் ஓடும் தண்ணீரோடு ரசாயன கழிவு நீரும் கலந்துள்ளது. சிப்காட் தொழிற்சாலையை அடுத்துள்ள சங்கொலிக்குப்பம் அருகே ஓடும் பாசன வாய்க்காலில் ரசாயன கழிவு கலந்ததால் அதில் இருந்த மீன்கள் இறந்தது மட்டுமின்றி துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த தண்ணீர் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

                      இதனைக் கண்டித்து சங்கொலிக்குப்பம் கிராம மக்கள் கடலூர்-சிதம்பரம் சாலையில் நேற்று காலை 10.30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த முதுநகர் போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிற் சாலை ரசாயனக் கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து 11.30 மணிக்கு மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior