உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

கடலூரில் பிரேமானந்தா சாமியாரு க்கு ஆபரேஷன்-பித்தப் பை கற்கள் அகற்றம்

கடலூர்: 

             இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பித்தப் பை கற்களை அகற்ற லேப்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது.

              கடந்த 16 வருடங்களாக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரேமானந்தா. அவருக்கு நுரையீரல், சிறுநீரகம், இருதயம் என பல்வேறு கோளாறுகள். கண்ணும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறஅனுமதிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார் பிரேமானந்தா. இதுகுறித்து பரிசீலிக்குமாறு சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து பிரேமானந்தாவுக்கு 30 நாள் பரோல் கொடுத்து சிறைத்துறை எஸ்.பி. ஆனந்தன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி பிரேமானந்தா பரோல் மூலம் விடுவிக்கப்பட்டு கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பித்தப் பை கற்களை ஆபரேஷன் மூலம் அகற்றினர்.


Read more »

ஈழத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் கொல்ல உதவுகிறது மத்திய அரசு-தா.பாண்டியன்


Tha Pandian



கடலூர்: 

             ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது இந்தியத் தமிழர்களையும் கொல்ல இலங்கை அரசுக்கு பண உதவி, பொருளுதவியை அளித்து வருகிறது இந்திய அரசு. இந்தியர்கள் யாரையும் காக்கும் நிலையில் இந்திய அரசும், மாநில அரசுகளும் இல்லை. ராஜபக்சேவுக்கு மட்டும்தான் அவர்கள் சேவகம் செய்கிறார்கள் என்று சாடியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன்.

கடலூர் வந்த 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில்,

               தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க செல்பவர்களை கைது செய்கிறார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கண்டித்து இலங்கை துணை தூதர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற வைகோவை கைது செய்துள்ளனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வரும்போது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள். இலங்கை தமிழர்களும், இந்திய தமிழர்களும் கொல்லப்பட வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இலங்கைக்கு பணம் மற்றும் பொருள் உதவியை வழங்கி வருகிறார்கள். இந்திய மக்கள் யாரையும் காப்பாற்றும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் இல்லை. இந்திய அரசின் அத்தனை அங்கங்களும் ராஜபக்சேவுக்குத்தான் சேவை செய்வார்கள்.

            தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அதை குறிப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தேவைக்கேற்ற மின்சாரம் கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தி 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மின்சாரம் இன்றி தொழில் உற்பத்தி பெருகிட முடியாது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு வரும் நிலம் பாழடிக்கப்பட்டு வருகிறது. பிறகு உண்மையான நில உரிமையாளர்களிடம் இருந்து மிரட்டி பறிக்கப்படுகிறது. பெண்களும் கடத்தப்பட்ட அவல செய்தி இந்த மாவட்டத்தில் இருந்து வந்துள்ளது. கடலூர் நகரத்தை சுற்றி கட்டப்பட்டு வரும் தொழிற்சாலை சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரமாக கடலூர் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கடலூர் வாழ்வதற்கு தகுதியற்றதாகிவிடும்.

ஜனநாயகத்தை மீட்போம்

                தமிழ்நாடு முழுவதும் சொந்த குடியிருப்பு இல்லாத மக்களுக்கு வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும், ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கைபடி அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கவேண்டும், நில உச்சவரம்பு சட்டப்படி நிலங்களை கையகப்படுத்தி உழவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜனநாயகத்தை மீட்போம் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 9-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்தை நடத்துவது தொடர்பாக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் வருகிற 31 மற்றும் ஆகஸ்டு 1, 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கலந்து கொள்கிறார்.

நந்தன் பாதைக்கான தடையை நீக்க வேண்டும்

                அதேபோல சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் சென்ற பாதைக்கான தடையை நீக்க வேண்டும், அந்த பாதையை திறக்க வேண்டும் என்று கோரி ஆகஸ்ட் 15-ந் தேதி எங்கள் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணியாக சென்று போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றார் தா.பாண்டியன்.

Read more »

ஆசிரியை 5-வது வகுப்பில் இருந்து 1-ம் வகுப்புக்கு மாற்றினார்: 5-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை; “ஊஞ்சல்” என்ற வார்த்தையை உச்சரிக்காததால் விபரீதம்

 ஆசிரியை 5-வது வகுப்பில் இருந்து 1-ம் வகுப்புக்கு மாற்றினார்:
 
 5-ம் வகுப்பு மாணவி
 
 தீக்குளித்து தற்கொலை;
 
 “ஊஞ்சல்” என்ற வார்த்தையை உச்சரிக்காததால் விபரீதம்


நெல்லிக்குப்பம்:

              நெல்லிக்குப்பம் அருகே உள்ள நத்தப்பட்டு காலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி. இவரது மகள் அபினா (வயது 10), அருகில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் அபினா வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள்.

                  பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியை ஒருவர், ஊஞ்சல் என்ற வார்த்தையை சொல்லி கொடுத்து பாடம் நடத்தினார். வகுப்பில் இருந்த அனைத்து குழந்தைகளையும், ஊஞ்சல் என்ற வார்த்தையை திரும்ப சொல்லுமாறு கூறியுள்ளார்.  அப்போது அபினா ஊஞ்சல் என்ற தமிழ் வார்த்தையை உச்சரிக்க முடியாமல் திணறினாள். ஆசிரியை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தும் ஊஞ்சல் வார்த்தையை அபினாவால் சரியாக சொல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மாணவி அபினாவை கண்டித்தார்.

                 படிக்க தெரியாத நீ 5-ம் வகுப்புக்கு தேவையில்லை, பேசாமல் 1-ம் வகுப்புக்கு சென்று விடு என்று கூறி அபினாவை வெளியில் அனுப்பினார்.  வகுப்பறையில் சக மாணவ- மாணவிகள் மத்தியில் அவமானப் படுத்தப்பட்டதை அபினாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மிகுந்த மனவருத்தத்துடன் அவள் வீடு திரும்பினாள்.

                நேற்று காலையில் அபினா பள்ளிக்கு புறப்படாமல் விரக்தியுடன் வீட்டில் இருந்தாள். பெற்றோர் அவளிடம் ஏன், பள்ளிக்கு செல்ல மறுக்கிறாய், யாராவது அடித்தார்களா? என்று கேட்டனர். அப்போது அபினா நடந்த சம்பவங்களை கூறி கண்ணீர் வடித்தாள். இதனால் பெற்றோர், அவளை வற்புறுத்தாமல் வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்றனர்.

                   அபினா வீட்டில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணையை பாலித்தீன் பையில் ஊற்றினாள். பின்னர், வீட்டுக்கு வெளியில் வந்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தாள்.  வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அபினா, உடல் கருகிய நிலையில் கரிக்கட்டையாக கீழே விழுந்தாள்.

              அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அபினாவை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  அவளது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அபினா பரிதாபமாக உயிரிழந்தாள்.

               இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அபினா படித்த அரசு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.   இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Read more »

ரூ.5 லட்சம் கேட்டு வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண் சித்ரவதை; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

கடலூர்:
 
            கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்த வர் தண்டபாணி. இவரது மகள் மஞ்சுளா (வயது 22). இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த என்ஜினீயர் சரவணனுக்கும் கடந்த 2 1/2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சரவணன் மும்பை அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

                 திருமணம் முடிந்ததும் மனைவியை அவர் மும்பைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் மஞ்சுளா மும்பையிலிருந்து கடலூர் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் ரூ.5 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி மும்பையில் வீட்டில் அடைத்து வைத்து தனது கணவர் சரவணன் சித்ரவதை செய்ததாகவும் அவருக்கு சரவணனின் தாய் ஞானசவுந்தரி, அண்ணன் மாணிக்கவாசகம், அக்காள் மாரிதேவி ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறியிருந்தார்.

 
               இதையடுத்து அந்த மனு கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சரவணன், ஞானசவுந்தரி, மாணிக்கவாசகம், மாரிதேவி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

அண்ணா பல்கலை.யில் ​ தமிழ் தேடல் பொறி அறிமுகம்

           சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் தேடல் பொறி முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக தமிழ்க் கணிம ஆய்வகம் உருவாக்கிய இந்த தேடல் பொறியை,​​ பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தொடங்கி வைத்தார்.​ இத்துடன் அகராதி டாட் காம் என்ற இணைய தளமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து, ​​ தமிழ்க் கணிம ஆய்வக ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் கீதா,​​ ரஞ்சனி பார்த்தசாரதி,​​ மதன் கார்க்கி ஆகியோர் வெள்ளிக்கிழமை கூறியது:

                கூகுல் போன்ற தேடல் பொறிகள் சொல் சார்ந்த தேடல் பொறிகளாகும்.​ ஆனால்,​​ இப்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் கோரி என பெயரிடப்பட்டுள்ள தமிழ் தேடல் பொறி,​​ இணைய பக்கங்களில் உள்ள உரைகளை ஆராய்ந்து அதன் பொருளை மட்டும் தன் சுட்டு வரிசையில் சேமித்துக் கொள்கிறது. உரைகளில் உள்ள பொருள்களையும்,​​ அப்பொருள்களிடையே உள்ள உறவையும் அறிவதன் மூலம்,​​ தேடும் கோப்புகளை விரைவில் அடைய வழி செய்கிறது. அகராதி டாட் காம் என்ற இணைய தளம் ஒரு இலவச தமிழ் அகராதி ஆகும்.​ இது சொல் பகுப்பான்,​​ சொல் உருவாக்கி,​​ பிழை திருத்தம்,​​ மாற்றுச் சொற்கள்,​​ சொற்களின் இனிமை மதிப்பெண்,​​ சொற்களின் பயன்பாட்டு மதிப்பெண்,​​ திருக்குறள் பயன்பாடு,​​ பாரதி மற்றும் ஒளவை பாடல்களில் சொற்களின் பயன்பாடு,​​ 15 இலக்க எண்கள் வரை ​சொற்றொடர்களாக மாற்றுதல் உள்பட 20 சேவைகளை வழங்கும் என்றனர்.

Read more »

CPI to launch agitation on August 9

CUDDALORE:

           The Communist Party of India will launch a continuous agitation for the restoration of democracy in Tamil Nadu on August 9, according to D. Pandian, State secretary of the party.

          The modalities would be drawn in the State committee meeting to be held from July 31 to August 2 in which A.B. Bardhan, CPI general secretary, would participate, Mr. Pandian told reporters here on Friday. He further said that the agitation would draw the attention of the ruling Dravida Munnetra Kazhagam government to its unfulfilled election promise of issuing house site pattas to the homeless and cultivable lands to the landless farmers.

             As for the Chidambaram Natarajar temple issue, Mr Pandian said Chief Minister M. Karunanidhi's recent utterances were inconsistent with his earlier stand. The Chief Minister had been emphatic about the manner of death of Saivite saint Nandanar all along but was now raising doubts about the latter's existence. Mr Pandian said that the wall erected at the point where Nandanar entered the temple was a standing testimony to the ugly face of untouchability.

          Therefore, the farmers' wing of the CPI would take out a rally at Chidambaram on August 11 to urge the government to remove the wall. About the arrest of MDMK general secretary Vaiko, Mr. Pandian said it was ironical that when Sri Lankan President Mahinda Rajapaksa came to Tirupati he was given a red carpet welcome whereas Mr Vaiko, who sought the democratic rights of Sri Lankan Tamils, was sent to the jail. Mr. Pandian said that when the four oil companies — the ONGC, BPL, HPL and the IOC — had figured in the top 15 companies of the Fortune magazine, the stand of Prime Minister Manmohan Singh that these companies were in the red would not wash.

Read more »

ஆன்-லைன் தமிழ் டிக்ஷனரி அண்ணா பல்கலை வெளியீடு




                 
                  அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், "அகராதி' என்ற ஆன்-லைன் தமிழ் டிக்ஷனரி உருவாக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் நேற்று கூறியதாவது:

              அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், "அகராதி' என்ற ஆன்-லைன் தமிழ் டிக்ஷனரி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் வார்த்தையின் அர்த்தம், உபயோகம், இணையதள பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம். இந்த ஆன்-லைன் தமிழ் டிக்ஷனரியை அண்ணா பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் மையத்தின் பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், சரக்கோ என்ற தமிழ் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. எம்.ஐ.டி., வளாகத்திலுள்ள ஏ.யு.,- கே.பி.சி., ஆராய்ச்சி மையம் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் தமிழ் மொழியில் பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலும் தமிழ் மொழியில் தேடல் இயந்திர வசதியும் இந்த இணையதளத்தில் உள்ளது. இவ்வாறு மன்னர்ஜவகர் தெரிவித்தார்.

Read more »

கடலூர் சிறையில் இருந்து வைகோ விடுதலை

கடலூர் : 

             கடலூர் சிறையில் இருந்து வைகோ விடுதலை செய்யப்பட்டார். சென்னையில் இலங்கை துணை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த வைகோ, பழநெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வைகோ, பழ‌நெடுமாறனன்ஆகியோருக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடலூர் சிறையில் இருந்து அவர்கள் இன்று காலையில் விடுவிக்கப்பட்டனர்.

Read more »

நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணத்தில் ஏரி ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

நெல்லிக்குப்பம் : 

            ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர் வார சென்றவர்களை ஆக்கிரமிப்பா ளர்கள் தடுத்ததைக் கண் டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

            நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணத்தில் உள்ள ஏரியை பலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தூர் வாரி ஆழப்படுத்த கடந்தாண்டு 26 லட்சம் ரூபாய் நிதி ஒதுக் கப்பட்டது. ஏரியில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற ஆக்கிரமிப்பாளர் கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஓராண் டாக ஏரி சீரமைக்கப்படவில்லை.

               ஏரியை சீரமைக்காவிட்டால் ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள், வருவாய் துறை பதிவேட்டில் உள் ளபடி 2.5 ஏக்கர் பரப் பளவு ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த வாரம் அகற்றினர். அதனைத் தொடர்ந்து நேற்று ஏரியை தூர் வாரும் பணிக்கு அதே பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்களை ஏரியை ஆக்கிரமித்திருந்த ஆளுங்கட்சியினர் விரட்டினர்.

             ஆத்திரமடைந்த மக்கள் கடலூர் - பாலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர் களை இன்ஸ்பெக்டர் பாண்டியன் சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் 2.5 ஏக்கரில் மட்டும் தூர்வாருவது சரியில்லை. முறையாக அளவீடு செய்து முழு ஏரியையும் தூர் வார வேண்டும் என ஏரியை ஆக்கிரமித்திருந்தவர்கள் கூறினர்.

                  அதற்கு அதிகாரிகள் வருவாய்துறை பதிவேட்டில் ஏரி 2.5 ஏக்கர் மட்டுமே உள்ளது. முதலில் அதை தூர்வாரலாம். பழைய கணக்கை பார்த்து கூடுதலாக இருந் தால் அதையும் தூர்வார நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஒரு வழியாக 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் ஏரி தூர் வாரும் பணி துவங்கியது.

Read more »

டெல்டா வாய்க்கால் புனரமைப்பு பணி: கண்காணிப்பு குழு அமைக்க வலியுறுத்தல்

கடலூர் : 

            காவிரி டெல்டா பாசனப் பகுதியில் நடைபெறவுள்ள புனரமைப்பு பணிகள் முறையாக நடந்திட கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                விவசாயிகள் மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் கடலூரில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், கலெக்டர் உதவியாளர் (விவசாயம்) மணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் கார்மாங்குடி வெங்கடேசன் பேசுகையில், 

            திட்டக்குடி பகுதியில் பொதுப்பணித்துறை குளங்களை மழைக் காலத்திற்குள் தூர் வார வேண்டும். வெலிங்டன் ஏரியில் 2 ஆண்டாக நீர் பிடிப்பு இல்லாததால் மின் மோட்டாரை கொண்டு விவசாயம் செய்திட தினசரி 14 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்துகள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க விவசாயிகளை கொண்டு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்றார்.

பாசிமுத்தான் ஓடை பாசன விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் பேசுகையில், 

              கடந்த 2006-07ம் ஆண்டு காவிரி படுகை பாசன வாய்க்கால்களை புனரமைக்க அரசு 400 கோடி ஒதுக்கீடு செய்தது. அதில் கடலூர் மாவட்டத்தில் தற்போது 4 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடக்கவுள்ளது. பணிகள் முறையாக நடக்க விவசாயிகளை கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்.

           சிதம்பரம் பகுதியில் கிடங்கு அமைத்து உளுந்து கொள்முதல் செய்ய 5 லட்சம் அரசு அனுமதித்துள்ளது. இதற்கு உள்ளூர் வியாபாரிகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். எனவே அரசு நடவடிக்கை எடுத்து இந்தாண்டு உளுந்து பயிர் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கொள்ளிடம் கரையை பலப்படுத்த அணைக்கரை முதல் பெராம்பட்டு வரையிலான 62 கி.மீட்டர் தூரத்திற்கு கரையின் அடிப்பகுதியில் 45 மீட்டர் அகலமும், மேல் பகுதியில் 18 மீட்டர் அகலமும், தற்போது உள்ள உயரத்தை விட ஒன்றரை மீட்டர் உயர்த்தி அதன் மீது தார் சாலை அமைக்க 108 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

              இதற்கு தேவையான மண்ணை பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் வீராணம் ஏரியிலிருந்து எடுத்து பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணி பல்வேறு நபர்களிடம் டெண்டர் விடவுள்ளதாக தெரிகிறது. பணிகள் சிறப்பாக நடக்க ஒரே நிறுவனத்திடம் (குளோபல் டெண்டர்) விடவேண்டும் என்றார்.

சேத்தியாதோப்பு அணைக் கட்டு பாசன விவசாயி விஜயகுமார் பேசுகையில், 

                 வண்டுராயன்பட்டு பகுதியில் உடைந்துள்ள மானம்பாத்தான் வாய்க்காலை சீரமைக்க கலெக்டர் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

Read more »

யூனியன் பாங்க் ஆப் இந்தியா சிதம்பரத்தில்188வது கிளை திறப்பு

சிதம்பரம் : 

           சிதம்பரத்தில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.

            யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தமிழகத்தின் 188 வது கிளை சிதம்பரம் தெற்கு வீதியில் "கியான் டவர்ஸ்'சில் நேற்று துவக்கப்பட்டது. ஏசி வசதி மற்றும் ஏ.டி.எம்., சேவை மையத்துடன் இணைக்கப்பட்ட புதிய கிளையை அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேந்தர் ராமநாதன் திறந்து வைத்தார். விழாவில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் சிக்ரி, அண்ணாமலை பல்கலைக் கழக பதிவாளர் ரத்தினசபாபதி, வங்கியின் முதுநிலை மேலாளர் பாலசுப்ரமணியன், கடலூர் கிளை மேலாளர் காமராஜன், கடலூர் ஊராட்சி தலைவர்கள் காசிநாதன், ஞானசேகரன், வக்கீல் ஜெகநாதன் மற்றும் வாடிக்கையாளர்கள், சுயஉதவிக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read more »

நெய்வேலி ஜவகர் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

நெய்வேலி : 

             நெய்வேலி ஜவகர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த போன் தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர்.

              நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 17ல் இயங்கி வரும் ஜவகர் மெட்ரிக் பள்ளி முதல்வர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு போன் வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இரவு 12 மணிக்குள் வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். போன் தகவலைக் கேட்டு திடுக்கிட்ட பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் தகவலின் பேரில், டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் இரவே பள்ளியை முழுமையாக சோதனை செய்தனர். வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து நேற்று வழக்கம் போல் பள்ளி இயங்கியது.

               இந்நிலையில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் ஏட்டு ராமலிங்கம் தலைமையிலான வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் நேற்று பகல் 2 மணிக்கு பள்ளியில் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்து வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதையும், போன் தகவல் புரளி என்பதையும் உறுதி செய்தனர்.

Read more »

கைவினைஞர் முன்னேற்றக் கழகம் கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

             விஸ்வகர்ம சமூகத்தினரை மிகவும் பிற்பட் டோர் பட்டியலில் சேர்க் கக் கோரி கடலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

               தமிழகத்தில் உள்ள கருமார், கன்னார், சிற்பி, தச்சர், பொற்கொல்லர் தொழில் செய்யும் விஸ்வ கர்ம சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும். ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கடலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கடலூர் உழவர் சந்தை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

             ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சக்திவேல், சிற்ப பிரிவு செயலாளர் யாகமூர்த்தி, நகர தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். நிறுவன பொதுச் செயலாளர் சிவக்குமார் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலா ளர் பாலு, அவைத் தலைவர் நடராஜன், மாநில இளைஞரணி செயலாளர் பழனிவேல், மாணவரணி செயலாளர் உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Read more »

ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா

ஸ்ரீமுஷ்ணம் : 

            ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா செய்தனர்.

              ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்தை சேர்ந்த ராமாபுரம், கொளத்தங்குறிச்சி, வாலீஸ்பேட்டை, தண்டகாரங்குப்பம் கிராமங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக ஜாதி, வருமான, இருப்பிடச்சான்று கேட்டு ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ.,) அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு கொடுத்தனர்.

               மனுவைப் பெற்றுக் கொண்ட ஆர்.ஐ., சுந்தரம் மறுநாள் காலை வந்து மனுக்களை வாங்கிச் செல்லுமாறு கூறினார். அதன்படி 60 பேரும் நேற்று காலை 9 மணிக்கு ஆர்.ஐ., அலுவலகத்திற்கு வந்தனர். அதற்கு முன்பாக ஆர்.ஐ., காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். வெகுநேரம் ஆகியும் ஆர்.ஐ., வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆர்.ஐ., அலுவலகம் முன் தர்ணா செய்தனர். தகவலறிந்த ஆர்.ஐ., சுந்தரம் மாலை 3 மணிக்கு ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்து, சான்றிதழில் கையெழுத்திட்டு கொடுத்தார்.

Read more »

சாலையை சரி செய்யாததை கண்டித்து விருத்தாசலத்தில் திடீர் சாலை மறியல்

விருத்தாசலம் : 

             விருத்தாசலத்தில் காட்டுகூடலூர் சாலையை சரி செய்யாததைக் கண் டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

             விருத்தாசலத்தில் இருந்து காட்டுக்கூடலூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாகி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதில் புதிய சாலை அமைக்க டெண்டர் விட்டு ஜல்லிகள் கொட்டி 6 மாதமாகியும் சாலை போடும் பணி துவங்கவில்லை. இதனால் அந்த சாலையில் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

               இதனால் ஆத்திரமடைந்த விருத்தாசலம் அண்ணாநகர், திரு.வி.க., நகர், தாஷ்கண்ட் நகர் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் நேற்று காலை 11 மணிக்கு கடலூர் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் நாகராஜன் ஆகியோர் விரைவில் சாலை போடப்படும் என உறுதியளித்தனர். அதனையேற்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கடலூர் ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Read more »

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 110 மாணவர்கள் வாந்தி


சிதம்பரம் : 

              சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சத்துணவு சாப்பிட்டு வாந்தி எடுத்து மயங்கிய, 110 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

               சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தினசரி பள்ளிக்கு வரும் மாணவர்களில், 350 பேர் சத்துணவு சாப்பிடுகின்றனர்.நேற்று காலையில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. மாணவர்கள் கலைச்செல்வன், சிவபாலன் இருவரும் திடீரென வாந்தி எடுத்தனர். அவர்கள் சாப்பாட்டை சோதித்ததில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. மற்ற மாணவர்களும் வாந்தி எடுத்து மயங்கினர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.வாந்தி எடுத்து மயக்கமடைந்த மாணவர்கள் 110 பேரையும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

                 அவர்களில் 103 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மற்ற 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் தாசில்தார் காமராஜ், குமராட்சி பி.டி.ஓ., ஆண்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களின் சம்பவம் குறித்து விசாரித்தனர். அதனை தொடர்ந்து  சத்துணவு பொறுப்பாளர்  பள்ளிப்படை அன்பழகன் (55), உதவியாளர்கள் பானுமதி, குப்பம்மாள் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து, குமராட்சி பி.டி.ஓ., உத்தரவிட்டார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior