கடலூர் மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்துள்ள திட்டக்குடி (தனி) தொகுதி வடகிழக்கே விருத்தாசலம் தொகுதியையும், வடமேற்கே சேலம், தென்மேற்கே பெரம்பலூர், தெற்கே அரியலூர், வடக்கே விழுப்புரம் மாவட்டங்களை எல்லையாக கொண்டுள்ளது.
கடந்த 1957ம் ஆண்டு நல்லூர் பெயரில் துவங்கப்பட்ட இத்தொகுதி 1967ம் ஆண்டு மங்களூராக மாறியது. இத் தொதியில் திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் பேரூராட்சி பகுதிகளும், மங்களூர், நல்லூர் ஒன்றியங்கள் முழுமையாகவும், விருத்தாசலம் ஒன்றியத்தின் சில ஊராட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தொகுதியில் மொத்தம் 1,93,879 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த போதிலும், கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1,42,349 ஓட்டுகள் பதிவாகின. அதில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி (தற்போது காங்., கட்சியில் உள்ளார்) செல்வப் பெருந்தகை 62,217 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., கணேசன் 55,303 ஓட்டுகள் பெற்றார். ஓட்டு வித்தியாசம் 6,914 ஆகும். தே.மு.தி.க., மகாதேவன் 15,992 ஓட்டுகள் பெற்று மூன்றாமிடத்தை பிடித்தார்
தொகுதி மறுசீரமைப்பில் சிறிய மாற்றங்களுடன் திட்டக்குடி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. தொகுதியில் பெண்ணாடம், திட்டக்குடி பேரூராட்சிகளும், மங்களூர் ஒன்றியம் முழுவதும், நல்லூர் ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளனர். தற்போது 87,542 ஆண்கள், 86,065 பெண்கள் என மொத்தம் 1,73,607 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இது கடந்த தேர்தலைவிட 44, 275 வாக்காளர்கள் குறைவாகும்.
எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை பேட்டி:
தேர்தலில் நான் அளித்த வாக்குறுதிகளை விட அதிகளவில் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையாக உள்ள வெலிங்கடன் ஏரியை பற்றி முதல்வரிடம் எடுத்துக் கூறினேன். 30 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சீரானால் மட்டுமே மக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்பதை கருத்தில் கொண்டு விருத்தாசலம்-ராமநத்தம் நெடுஞ்சாலை 20 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதே சாலையில் திட்டக்குடி மற்றும் முருகன்குடி வெள்ளாற்றில் 20 கோடி ரூபாய் செலவிலும், இளையூர் ரயில்வே கேட் பகுதியில் 20 கோடி ரூபாய் செலவிலும் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 76 லட்சம் மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்கு, நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் கட்டி தரம் உயர்த்தி உள்ளேன். பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம், கணபதிகுறிச்சி ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.
திட்டக்குடி பேரூராட்சியில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் மற்றும் தார் சாலைகளும், அங்கன்வாடி கட்டடங்கள் கட்டியுள்ளேன். திட்டக்குடி, பெண்ணாடம், ஆவினங்குடி மற்றும் தொழுதூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 60 லட்சம் ரூபாய் பர்னிச்சர்கள் வாங்கி கொடுத்துள்ளேன். பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச் சுவரும், திட் டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. தொகுதி மக்கள் பொது பிரச்னை தொடர்பாக உதவி கேட்டு வந்தால் செய்து கொடுக்க தயாராக உள்ளேன். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
தேர்தலில் தோல்வியடைந்த தி.மு.க., கணேசன் பேட்டி:
முதல்வர் கருணாநிதி கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுபோலவே மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.,க்களையும் அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர் என பாராமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வளர்ச்சி பணிகளை செயல்படுத்தி வருகிறார். அதன்படி இத்தொகுதியில் வெலிங்டன் ஏரிக் கரையை சீரமைத்துள்ளார். பல கோடி செலவில் சாலைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்பாலங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய இத்தொகுதியை வளர்ச்சி அடையச் செய்துள்ளார்.
சிறுபாக்கம் அருகே விழுப்புரம் மாவட்டம் பாக்கம்பாடிஅணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை தடுப்பணை கட்டி சேமித்தால் 30 கிராமங்கள் பாசன வசதி பெறும். மங்களூரில் போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்பு நிலையம் துவங்க வேண்டும். சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா துவக்க வேண்டும். மங்களூர் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் நூற்பாலை அமைத்தால் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்கு எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்கவில்லை. இருப்பினும் வரும் தி.மு.க., ஆட்சியில் இத்திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கணேசன் கூறினார்.