கடலூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் குரூப்-4க்கான தேர்வு வரும் 7ம் தேதி நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் இருந்து 55 ஆயிரத்து 35 பேர் தேர்வு எழுதுகின்றனர்.அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது. வருவாய்த் துறையில் உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 55 ஆயிரத்து 35 பேர் 101 மையங்களில் 2,827 ஹால்களில் தேர்வு எழுதுவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 161 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விடைத்தாள்களை சேகரித்து கருவூலத்தில் செலுத்த 20 நடமாடும் குழு அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நடமாடும் குழுவும் 5 பள்ளிகளை கண்காணிக்க வேண்டும். தேர்வு எழுதும் மையங்களில் தவறு நடைபெறாமல் இருக்க முழுமையாக வீடியோ மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வரும் 7ம் தேதி குரூப்-4க்கான தேர்வு காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. பிற்பகல் இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள இ.ஓ., பதவிக்களுக்கான தேர்வு 3 முதல் 5 மணி வரை நடைபெறும். பல்வேறு ஊர்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சரியான நேரத்திற்கு வருகை தர வேண்டியுள்ளதால் தேர்வர்களுக்கு வசதியாக அனைத்து பகுதியில் இருந்தும் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.இந்த தேர்வுக்குரிய வினாத்தாள் நேற்று லாரி மூலம் எடுத்து வரப்பட்டு கடலூர் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது