கடலூர்:
வங்கியில் செலுத்திய ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் முயற்சியால், பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கும் அந்தப் பணம், அதே வங்கியில் இருந்து பெற்றுத் தரப்பட்டது.
வங்கியில் செலுத்திய ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது. கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் முயற்சியால், பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கும் அந்தப் பணம், அதே வங்கியில் இருந்து பெற்றுத் தரப்பட்டது.
இதுகுறித்து கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
கடலூர் அருகே ஆதிவராக நல்லூரைச் சேர்ந்தவர்கள் ஷெரியாபேகம் மற்றும் அவரது மாமியார் மகபூப்பீவி. இருவரும் 2007-ம் ஆண்டு சிதம்பரம் நகரில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் வங்கியில் தலா ரூ.1 லட்சம் டெபாஸிட் செய்தனர். வங்கி மோலாளர் அப்துல்ரகீம் அவற்றுக்கு ரசீதும், பாலிஸியும் வழங்கினார். உலக அளவில் வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து விட்டதாக அறிந்த ஷெரியா பேகமும், மகபூப் பீவியும், தங்கள் பாலிஸிக்கு வட்டி குறைந்து இருக்கிறதா என்று பார்க்க, 2008 அக்டோபரில் அந்த வங்கிக்குச் சென்று விசாரித்தனர். அப்போது வங்கி மேலாளர் அப்துல் ரகீம் அங்கு இல்லை. புதிய மேலாளராக அய்யப்பன் இருந்தார். அந்த இருவரின் பாலிஸிகளையும் மேலாளர் வாங்கிப் பார்த்தார். ஆனால் அத்தகைய பாலிஸிகள் எதுவும் வங்கியில் இருந்து வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். எனவே, இருவருக்கும் 2007-ல் வழங்கப்பட்ட பாலிஸிகள் போலியானவை என்று தெரியவந்தது. இது குறித்து இருவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் வங்கி மேலாளராக இருந்த அப்துல் ரகீம் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருவரும் செலுத்திய பணத்தை வங்கி நிர்வாகம் வழங்காமல் இருந்தது. இதனால் வழக்கு விசாரணை நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை பெற்றுத் தருவதற்கான முயற்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் நடவடிக்கை எடுத்தார். இரு பெண்களும் அந்த வங்கியில் பணம் செலுத்தியதற்கான ஆதாரம் முறையாக உள்ளது. எனவே வழக்கு நிலுவையில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வங்கி, பணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வங்கியின் மும்பை அலுவலகத்துக்கு கடிதம் மூலம் தொடர்பு கொண்டு எஸ்.பி. இதைத் தெரிவித்தார். அதன்பேரில் வங்கித் தலைமை அலுவலக அதிகாரிகள் சிதம்பரம் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி, இரு பெண்களும் வங்கியில் பணம் செலுத்தியது உண்மைதான் என்று கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் வங்கியில் செலுத்திய தொகை, தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை வங்கியில் இருந்து வழங்கப்பட்டு உள்ளது என்றார் எஸ்.பி.