பக்கவாட்டுச் சுவர்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த கண்ணுத்தோப்பு பாலத்தில் விபத்துக்குள்ளாகி நிற்கும் லாரி.
நெய்வேலி:
விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் அருகே உள்ள கண்ணுத்தோப்பு குறுகலான பாலத்தில் குறுகிய கால இடைவெளியில் விபத்துக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இப்பாலத்தில் நிகழும் விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இதுவரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலைத் திட்டத்தின்கீழ் அகலப்படுத்தும் பணி 5 ஆண்டுகளாக நடைபெற்ற போதிலும், தஞ்சை - ஜெயங்கொண்டம் கூட்டுரோடு வரையே இச்சாலை இருவழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் கூட்டு ரோடு முதல் விக்கிரவாண்டி வரை இச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனிடயே உள்ள பாலங்களும் இதுவரை அகலப்படுத்தப்படாமலும், சாலை தரம் உயர்த்தப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சாலை மார்க்கத்தில் கனரக வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இந்த சாலை மார்க்கத்தில் வடலூர் அருகேவுள்ள கண்ணுத்தோப்பு மற்றும் மருவாய் ஆகிய இரு இடங்களிலும் மிகவும் குறுகலான பாலங்கள் உள்ளன. இந்தப் பாலங்களில் அடிக்கடி விபத்து நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. பாலத்தில் பக்கவாட்டுச் சுவர்களில் வாகனங்கள் மோதி உடைபடுவதும்,அவ்வாறு உடைபடும் பக்கவாட்டுச் சுவர்கள் மாதக்கணக்கில் சரி செய்யப்படாமல் அப்படியே இருக்கும் போது, சில வாகனங்கள் பாலத்தின் விளிம்பு தெரியாமல் தலைகுப்புற கவிழ்வதும் இந்த பாலங்களில் அடிக்கடி நிகழும் சம்பவங்களாகும்.
யாரேனும் வி.ஐ.பி.க்கள் இந்த வழியாக செல்லும்போது மட்டும் சாலையின் பக்கவாட்டுச் சுவர்கள் அசுர வேகத்தில் கட்டப்படும். அவ்வாறு அண்மையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்துக்கு வந்திருந்த போது, உடைபட்டிருந்த கண்ணுத்தோப்பு பாலத்தின் பக்கவாட்டச் சுவர் அவசர கதியில் கட்டப்பட்டது. தற்போது அந்த பாலத்தில் சனிக்கிழமை ஒரு லாரி மோதி, பக்கவாட்டுச் சுவர் உடைந்து லாரி அபாயகரமான நிலையில் தொங்கிக் கொண்டி ருக்கிறது.
இந்தக் காட்சி அவ்வழியே புதிதாக செல்பவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அப்பகுதி மக்களோ இந்த பாலத்தில் ஒரு சாதனையே நிகழ்ந்துள்ளது. அதாவது இதுவரை சுமார் 100 விபத்துகள் நிகழ்ந்திருக்கலாம் என கூறி ஆதங்கப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இப்பாலத்தின் முக்கியத்துவம் அறிந்தும், விலை மதிப்பில்லா உயிர்களுடன் விளையாடுவதை தவிர்த்து போர்க்கால அடிப்படையில் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை மட்டுமல்ல அவ்வழியே பயணிக்கும் பயணிகளின் கோரிக்கையும்கூட.