உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 10, 2011

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர் : 

         கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது'' என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

               துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 13ம் தேதி மாலை கடலூர் அடுத்த ராமாபுரத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தை திறந்த வைக்கிறார். பின்னர் எம்.புதூரில் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு துறைகளுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்த வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். இவ்விழாவிற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. 

              நேற்று முன்தினம் மாலை அமைச்சர் பன்னீர்செல்வம், விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரவு 9 மணிக்கு எம்.புதூரில் அமைக்கப்படும் மேடை மற்றும் பந்தல் பணியை பார்வையிட்டு ஆலோசனை வழங்கி விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

பின்னர்அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியது: 

            பட்ஜெட்டில், கடலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட தலா 100 கோடி ரூபாய் வீதம் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வரும் 13ம் தேதி மாலை 4 மணிக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். டெண்டர் விடப்பட்டு 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிக்கு அருகிலேயே மாவட்ட பெருந்திட்ட வளாகம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 20 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

             பேட்டியின் போது கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.டி.ஏ., திட்ட அலுவலர் வீரராகவராவ், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மனோகர், டி.எஸ்.பி., பாண்டியன், சேர்மன் தங்கராசு, ஒன்றிய செயலர் ஜெயபால், ராமாபுரம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

ஏற்றுமதிக்கு தடை: கடலூர் மாவட்டத்தில் அரிசி விலை குறைகிறது

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் அரிசி விலை குறையத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது.  

            கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன. தற்போது சம்பா நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் விலை முந்தைய ஆண்டுகளைவிட பெருமளவுக்கு வீழ்ச்சி அடைந்து உள்ளது, விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தி வருகிறது. தமிழகத்தில் சம்பா பருவத்தில், பொன்னி, வெள்ளைப் பொன்னி, குள்ளப் பொன்னி, பிபிடி, ஏடிடி 38 உள்ளிட்ட சன்னரக நெல் பெருவாரியாக பயிரிடப்படுகிறது. 

             ஆனாலும் நகரப்புறங்களில் இந்த சன்னரக அரிசி ரகங்களைப் பெரும்பாலும் சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவது இல்லை. கர்நாடகா பொன்னி புழுங்கல், ஆந்திரா பொன்னி பச்சரிசி ரகங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.ஒரு மாதத்துக்கு முன் கர்நாடகா பொன்னி விலை தமிழகத்தில் கிலோ ரூ. 30 முதல் ரூ. 38 வரை விற்பனை செய்யப்பட்டது.  கடலூர் மாவட்டத்தில் கர்நாடகா பொன்னி கிலோ ரூ. 30 முதல் ரூ. 32 வரை விறபனை செய்யப்பட்டு வந்தது.ஆண்டுதோறும் பொதுவாக ஜனவரி மாதத்தில் அறுவடைக்குப்பின் அரிசி விலை குறையும் வாய்ப்பு உண்டு. 

             ஆனால் இந்த ஆண்டு நெல் விலை பெருமளவு குறைந்த போதிலும், கடந்த 10 நாளுக்கு முன்பு வரை அரிசி விலை குறையாமல் இருந்து வந்தது.ஆனால் தற்போது அரிசி விலை கொஞ்சம் குறையத் தொடங்கி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன், கர்நாடகா பொன்னி விலை கிலோ ரூ. 30 ஆக இருந்தது. தற்போது ரூ. 26 ஆகக் குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் அதிசயப் பொன்னி கிலோ ரூ. 26 ஆக இருந்தது ரூ. 22 ஆகவும், பிபிடி பொன்னி கிலோ ரூ. 28 ஆக இருந்தது ரூ. 23 ஆகவும், பொன்மணி கிலோ ரூ. 22 ஆக இருந்தது ரூ. 20 ஆகவும் குறைந்து இருப்பதாகவும் அரிசி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

காரணம் என்ன? 

                   அரிசி ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்து இருப்பதால் கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி குறைந்துவிட்டதால், தமிழகத்தில் அரிசி விலை குறைந்து வருவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். ஆந்திராவில் அரிசி ஆலைகள் மிக நவீன முறையில் அரிசி அரவை செய்கின்றன. நல்ல வெண்மையாகவும், உடைசல் இல்லாமலும் அங்குள்ள ஆலைகள் உற்பத்தி செய்கின்றன.ஆனால் தமிழகத்தில் அரிசி ஆலைகள் அந்த அளவுக்கு இன்னமும் நவீனமாகவில்லை. 

             மேலும் நெல் அரவைக்குப் பயன்படுத்தும் தண்ணீரைப் பொறுத்தும் அரிசியின் நிறம் மாறி விடுகிறது.இதனால்தான் கர்நாடகா பொன்னியை தமிழகத்து நகர்ப்புற மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு நாளொன்றுக்கு, 200 லாரிகள் கர்நாடகா பொன்னி புழுங்கல் மற்றும் ஆந்திரா பொன்னி பச்சை அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகவும், கடலூர் மாவட்டத்துக்கு நாளொன்றுக்கு 10 டன் அரிசி வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஆட்சியர் தொடங்கினார்

கடலூர்:

         கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.  

          மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியாளர்களிடம், புதன்கிழமை தனது குடும்ப விவரங்களைத் தெரிவித்து, மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.  

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியது:  

               மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் பற்றி, மார்ச் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மறுபரிசீலனை செய்யப்படும். மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு, 3 முறை பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.  2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்ட மக்கள் தொகை 22,895,395 ஆக இருந்தது. தற்போது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை கடலூர் மாவட்டத்தில் 4,334 தொகுப்புகளாகப் பிரித்து, 4,037 பணியாளர்களும், 659 கண்காணிப்பாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். 

           மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான படிவத்தில் 29 கேள்விகளுக்கான வரிசைகள் இருக்கும். ஆண், பெண், திருநங்கை ஆகியோருக்கான வரிசைகளும் இடம்பெற்று உள்ளன. 28-ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை, மன நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தெருவோரம் வசிப்போர், வீடற்றவர்கள் பற்றி, கணக்கெடுக்கும் பணி ஒரே நேரத்தில் நடைபெறும் என்றார் ஆட்சியர்.  மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், கடலூர் நகராட்சி ஆணையர் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.  

சிதம்பரத்தில்... 

              சிதம்பரம் தாலுக்காவில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.மங்கையர்கரசி வீட்டில் கணக்கெடுப்பு பணியை கோட்டாட்சியர் எம்.இந்துமதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஜே.ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் என்.ராஜமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

                   சிதம்பரம் நகராட்சி பகுதியில் நகர்மன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் வீட்டில் ஆணையாளர் (பொறுப்பு) பெ.மாரியப்பன் தொடங்கி வைத்தார். 

 பண்ருட்டியில்...  

            பண்ருட்டி நகர பகுதியில் முதலாவதாக பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் வீட்டில் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. பின்னர் நகர்மன்றத் துணைத் தலைவர் கே.கோதண்டபாணி வீட்டில் கணக்கெடுக்கப்பட்டது.  மக்கள் தொகை கணக்கெடுக்கும் பொறுப்பாளர்கள் முகமதுஉமர், தயாளன் ஆகியோர் விவரங்களை கேட்டறிந்து பதிவு செய்தனர். இந்நிகழ்வின்போது நகராட்சி ஆணையர் சு.அருணாசலம் உள்ளிட்ட பலர் இருந்தனர். 

Read more »

துணை முதல்வர் ஸ்டாலின் 13-ல் கடலூர் வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

கடலூர்:

            துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 13-ம் தேதி, கடலூர் வருவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  

            13-ம் தேதி மாலை 4 மணிக்கு, மு.க. ஸ்டாலின் கடலூர் வருகிறார். அவரது வருகைக்கான அரசு விழா, கடலூர் அருகே கேப்பர் மலையில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.  விழாவுக்கு வரும் மு.க. ஸ்டாலின், ராமாபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள பெரியார் சமத்துவபுரத்தைத் திறந்து வைக்கிறார். பின்னர் நடைபெறும் விழாவில் 3 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குகிறார். கடலூர் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவற்றை விழாவில் திறந்து வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.  

               ஸ்டாலின் வருகைக்காக கடலூரில், கேட்பாரற்று தூசி படிந்து கிடந்த பாலங்கள், சாலைகள் இரவு பகலாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. புதிய வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது. கேப்பர் மலை செல்லும் வண்டிப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் பிரதிபலிப்பான்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.  மாநில நெடுஞ்சாலையாக இருந்த போதிலும் ஆக்கிரமிப்புகள் காரணமாக இச்சாலை, ஊராட்சி சாலைகளை விட குறுகலாகி விட்டது.  துணை முதல்வர் வருகையை முன்னிட்டாவது, சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? என்று தெரியவில்லை.  

               ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் இச்சாலையில் 13-ம் தேதியன்று, குறிப்பாக இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதில், பெருத்த சிரமம் ஏற்படும் என்று கடலூர் மக்கள் கூறுகிறார்கள்.  விழாவுக்காக அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.  பந்தல் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். கூடுதல் ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2010-11- ம் ஆண்டில் ஊரக வளர்ச்சித் துறையில் ரூ.154 கோடியில் பணிகள் நிறைவு: கே.எஸ். அழகிரி எம்.பி

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில், 2010-11-ம் ஆண்டில் ரூ.154 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று இருப்பதாக, மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் கே.எஸ். அழகிரி எம்.பி. செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.  

            கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், மத்திய மாநில அரசுகளால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், கடலூரில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்தது.  

கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி எம்.பி. பேசியது: 

            மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில், இந்த ஆண்டுக்கு ரூ.117.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.107 கோடி செலவில் 87 சதவீதம் பணிகள் நடைபெற்று உள்ளன.   இந்திரா நினைவு குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் ரூ. 19 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ. 18.76 கோடிக்கான பணிகள் (99 சதவீதம்) முடிந்து உள்ளன.  பொன்விழா கிராம சுயவேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ. 5.76 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.4.65 கோடிக்கான 87 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.  

            பிரதமரின் கிராமச்சாலைகள் திட்டத்துக்கு ரூ.8.73 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.7.09 கோடிக்கான பணிகள் முடிவடைந்து உள்ளன.  ÷ஊரக குடிநீர் திட்டத்துக்கு ரூ.6.65 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.4.35 கோடிக்கான பணிகள் முடிவடைந்து உள்ளன.  முழு ஊரக சுகாதாரத் திட்டத்துக்கு ரூ.5.96 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.73 கோடிக்கான பணிகள் (26 சதவீதம்) நடந்துள்ளன. விதவை ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் உதவித் திட்டத்தில் 47,588 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு உள்ளது என்றார் கே.எஸ். அழகிரி.  

             கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், கூடுதல் ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், மற்றும் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Read more »

சிதம்பரத்தில் 7-வது புத்தகக் கண்காட்சி நாளை தொடக்கம்

சிதம்பரம்:

             சிதம்பரத்தில் அரிமா, அரிவையர் மற்றும் லியோ சங்கங்கள் இணைந்து 7-வது புத்தகக் கண்காட்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கலையரங்கில் இம்மாதம் 11-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடத்துகிறது.  

இது குறித்து அரிமா சங்கத் தலைவர் ஆர்.தர்பாரண்யன் தெரிவித்தது: 

               இக்கண்காட்சியில் 48 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. கண்காட்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் தொடங்கி வைக்கிறார்.  2-ம் துணைநிலை கவர்னர் ஆர்.எம்.சுவேதகுமார், பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன், மாவட்ட ஆலோசகர் கே.கண்பதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.  

              ஸ்ரீராமகிருஷ்ண மடம், நேதாஜி பப்ளிகேஷன்ஸ், கீதா பப்ளிகேஷன்ஸ், மதர் இந்தியா பப்ளிகேஷன்ஸ் கணியத்தணிவ் சாப்ட்வேர் நிறுவனம், அருண் புக் ஹவுஸ், ராம்கோ புத்தக நிலையம், லியோ புக் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்கின்றன.  தினமும் மாலை 3.30 மணி முதல் 9 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறுகிறது.  
 
              கண்காட்சி நுழைவுக் கட்டணம் ரூ.5. மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. கண்காட்சியில் பங்கேற்பவர்களில் ஒருவருக்கு தினந்தோறும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும்.  தினந்தோறும் நகரில் உள்ள பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தினந்தோறும் மாலை நேரத்தில் ஆட்சியர், எஸ்.பி., கோட்டாட்சியர், டிஎஸ்பி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட பிரமுகர்களில் ஒருவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகின்றனர் என ஆர்.தர்பாரண்யன் தெரிவித்தார்.  

             அப்போது துணை கவர்னர் ஆர்.எம்.சுவேதகுமார், புத்தக கண்காட்சி குழுத் தலைவர் ஜி.வெங்கடேசன், துணைத் தலைவர் ஆர்.செந்தில்நாதன், செயலர் கே.சண்முகசுந்தரம், பொருளாளர் கே.ரமேஷ்சந்த், அரிமா சங்கச் செயலர் எம்.ஆர்.ராஜமாணிக்கம், பொருளாளர் டி.வி.கே.பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

பண்ருட்டி முதியவரிடம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் டீ கொடுத்து ரூ.1 லட்சம் கொள்ளை?

பண்ருட்டி:

            பண்ருட்டி முதியவரிடம், சென்னை கோயம்பேட்டில் டீ கொடுத்து ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

               கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சின்னப்பேட்டையைச் சேர்ந்தவர் பரசுராமன் (55). இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது மகன், மகள் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்களிடமிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு பண்ருட்டி வருவதற்கு கோயம்பேட்டில் அரசு விரைவு பஸ்சில் ஏறினார். பஸ்சில் ஏறி உட்கார்ந்த பின், கேனில் டீ விற்றுக் கொண்டிருந்த நபரிடம் பரசுராமன் டீ வாங்கிக் குடித்தார். 

              சற்று நேரத்தில் மயங்கிய அவர், 9 மணியளவில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் பாதி மயக்கத்தில், கண்டக்டரால் இறக்கி விடப்பட்டார். அப்போது அவர் வைத்திருந்த பணப்பை காணாமல் பாயிருப்பது கண்டு திடுக்கிட்டார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரசுராமன் நடந்த விவரங்களை பண்ருட்டி குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனிடம் தெரிவித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Read more »

பண்ருட்டியில்அறுவடை தாமதம் முந்திரி விலை உயர்வு

பண்ருட்டி : 
 
            முந்திரி அறுவடை தாமதம் காரணமாக, முந்திரி பயிர் விலை உயர்ந்தது. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, கன்னியாகுமரி, தேனி மாவட்டத்தில் முந்திரி உற்பத்தி கடந்தாண்டை விட கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக, கடந்தாண்டு, 80 கிலோ எடை கொண்ட முந்திரி கொட்டை, 3,600 ரூபாய் வரை விற்றது. தற்போது படிப்படியாக உயர்ந்து கடந்த ஆகஸ்டில், 5,000 ரூபாய் வரையும், அரசு இலவச பொங்கல் பொருட்கள் அறிவிப்பு காரணமாக, 6,000 ரூபாயாகவும் உயர்ந்தது. 

              இதன் காரணமாக, முந்திரி பயிர் ரகங்கள் ஒரு கிலோவிற்கு, 30 முதல், 50 ரூபாய் விலை உயர்ந்தது. புதிய முந்திரி தேனி, நாகர்கோவிலில் ஜனவரியில் துவக்கம் முதல் அதிகளவில் அறுவடைக்கு வரும் என வியாபாரிகள் முகாமிட்டனர். ஆனால், மழை மற்றும் அறுவடை தாமதம் காரணமாக, 20 நாட்கள் தள்ளிப் போனதால் முந்திரி வரத்து குறைந்தது.

                 இருப்பில் உள்ள 80 கிலோ முந்திரி கொட்டை 6,700ம், புதிய ஈர ரக கொட்டை, 7,200ம் விற்பனையாகிறது. முந்திரி பயிர் ஒரு கிலோ, 240 ரகம், 420 ரூபாயும், 320 ரகம், 380, ஜே.எச்.,ரகம், 340ல் இருந்து 370, எஸ்.ரகம், 330ல் இருந்து 370, பட்ஸ் ரகம், 310லிருந்து 345, எல்.டபிள்யூ.பி.300லிருந்து 330, எஸ்.டபிள்யூபி ரகம், 225லிருந்து 260, ஆவரேஜ், 310லிருந்து 330 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இரு மடங்கு கொட்டை விலை உயர்ந்த நிலையில், முந்திரி பயிர் விலை மட்டும் உலகச் சந்தையில் உயராததால் ஏற்றுமதி முற்றிலும் பாதித்துள்ளது.

Read more »

சிதம்பரம் ரயில் நிலையத்தில் கழிப்பிட வசதியின்றி பயணிகள் தவிப்பு

சிதம்பரம் : 

           விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் ரயில் ஓடத் துவங்கி எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாமல் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.

         விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி முதல் ரயில் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று வரை கழிப்பிட வசதி செய்து தரப்படாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

            குறிப்பாக பெண்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. ரயில் நிலையத்தில் ஆண்களுக்கு, பெண்களுக்கென தனித்தனி கழிப்பிடம் கட்டி ஆறு மாதம் ஆகிறது. தனியாரிடம் டெண்டர் விட்டும் யாரும் எடுக்க முன்வரவில்லை என ரயில்வே நிர்வாகம் காரணம் கூறுகிறது. இதனால் பயணிகள் உபயோகத்திற்கு திறந்து விடப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. கடந்த மாதம் ரயில் பாதையை பார்வையிட வந்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் விரைவில் கழிப்பிடத்தை திறந்துவிட உத்தரவிட்டார். இருந்தும் இன்று வரை பூட்டிக் கிடக்கிறது.

             அத்துடன் ரயில் நிலையத்தில் பயணிகள் ஒய்வெடுப்பதற்கு ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி அறை உள்ளது. ரயில்வே நிர்வாகம் பராமரிப்பில் அந்த அறைகளும் பூட்டியே உள்ளன. பயணிகள் அவதியை கருத்தில் கொண்டு விரைவில் கழிப்பிடத்தை திறந்துவிடுவதுடன், ஓய்வு அறையையும் திறந்துவிட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் தொல்காப்பிய மெய்பாட்டியல் அடிப்படையில் சங்க இலக்கியங்களை காட்சி படிம விளக்க நிகழ்ச்சி

விருத்தாசலம் : 

           விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் தொல்காப்பிய மெய்பாட்டியல் அடிப்படையில் சங்க இலக்கியங்களை காட்சி படிமமாக விளக்கும் நிகழ்ச்சி நடந்தது.

              விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் தமிழ் துறை சார்பில் தொல்காப்பிய இலக்கியவியல் கொள்கைகளும் கோட்பாடுகளும் என்ற தலைப்பில் 10 நாள் பயிலரங்கம் நடந்து வருகிறது. நேற்று நடந்த பயிலரங்கத்தில் முனைவர் ரகுராமன் குழுவினர் தொல்காப்பிய மெய்பாட்டியல் அடிப்படையில் சங்க இலக்கியங்களை காட்சி படிமமாக விளக்கினர்.

               இசைப்பள்ளி ஆசிரியர் வானதி ரகுராமன் சங்கல இலக்கியங்களை பாடலாக பாட, சென்னை பல்கலைக்கழக நடன பேராசிரியர் லட்சுமி பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி மாணவர்களுக்கு விளக்கினார். நிகழ்சியில் கல்லூரி முதல்வர் மனோன்மணி, தமிழ்த் துறைத் தலைவர் முத்தழகன், பேராசிரியர்கள் தண்டபாணி, கலாவதி, பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கல்

கடலூர் : 

         பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட ஹால் டிக்கெட் நாளை (11ம் தேதி) வரை வழங்கப்படுகிறது.

அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

             மார்ச் மாதம் துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் நாளை 11ம் தேதி மாலை வரை வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வழங்கப்படுகிறது.

          விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம் வால்டர் ஸ்கேடர் மேல்நிலைப் பள்ளியிலும், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வழங்கப்பட்டு வருகிறது.

              தனித் தேர்வர்கள் ஹால் டிக்கெட் பெற்றதும், அதில் அச்சிடப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, பதிவெண், தேர்வு மையம், தேர்வு எழுத வேண்டிய பாடங்கள், தேர்வு நாள் போன்ற விவரங்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் பிழை இருந்தாலோ அல்லது உரிய காலத்தில் விண்ணப்பித்து ஹால் டிக்கெட் கிடைக்க பெறாதவர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் 

கூடுதல் செயலர் (மேல்நிலை), 
அரசுத் தேர்வுகள் இயக்ககம், 
சென்னை - 6

                என்ற முகவரிக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம். தனித் தேர்வர்கள் முதல் தேர்வு அன்று தங்களது சுய முகவரியிட்ட 30 ரூபாய்க்கான தபால் தலை ஒட்டிய பெரிய கவர் ஒன்றை தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு துணை இயக்குனர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் வேதியல் மன்றம் துவக்க விழா

விருத்தாசலம் : 

            விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் வேதியல் மன்றம் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மனோன்மணி தலைமை தாங்கினார். துறைத் தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் தனுஷ்கோடி மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர், மன்ற செயலர்கள் கலைசெல்வன், நந்தினி உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

Cuddalore Collector inaugurated the Census at the camp office


Census exercise began with Collector P.Seetharaman at his camp office in Cuddalore on Wednesday. 

CUDDALORE: 

             District Collector P. Seetharaman inaugurated the Census at the camp office here on Wednesday. Soon after giving out the details about him as the First Citizen of the district to the Census officials, the Collector told reporters that the district had been divided into 4,334 regions for the purpose.

        As many as 4,037 enumerators and 659 superintendents had been put on the job and they would collect the details from all the households. They had already undergone training in three stages in these aspects. There were 29 columns in the Census form to be filled up and there were separate columns for men, women and transgenders (aravanis). On the final day of February 28, the enumerators would collect the details of homeless people who are living on the platforms, and in railway stations and bus stands.

           The Collector further said that as per the 2001 census the population of the district was 22,85,395. He called upon the officials not to leave out even a single person because the Census would provide the critical inputs in framing socio-economic policies of the government. Moreover, the fund allocation by the governments would be based on the population in the panchayats. Therefore, the Collector has appealed to the people to extend full cooperation.

           A statement from the Neyveli Lignite Corporation stated that the competent authority has designated M.Sukumar, deputy general manager (education), NLC, as the in-charge officer for planning and carrying out the Census in the Neyveli Township. N.Jothikumar, assistant chief manager (education), NLC, would be coordinating the exercise.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior