உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

பி.எஸ்ஸி. (நர்சிங்): அரசு இடங்கள் நிரம்பின


சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு
 
 
         அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்புக்கு உரிய 125 இடங்களில் பெரும்பாலான இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரம்பிவிட்டன.
 
           பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்பில் அரசு கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரியவற்றில் சில இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.பி.எஸ்ஸி. (நர்சிங்), பி.ஃபார்ம், பி.பி.டி. உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 12) முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டு வருகிறது.பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்புக்கு அடுத்தபடியாக பி.ஃபார்ம். படிப்புக்கு உரிய 110 அரசு இடங்களில், சில இடங்களே காலியாக உள்ளன. 
 
               பி.பி.டி. (ஃபிஸியோதெரப்பி  படிப்பு) படிப்பில் மொத்தம் உள்ள 50 இடங்களில், பாதிக்கும் மேற்பட்ட அரசு இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.சுயநிதி அரசு ஒதுக்கீட்டு இடங்கள்: கலந்தாய்வு வரும் சனிக்கிழமை (ஜூலை 17) வரை நடைபெறுகிறது. சுயநிதி கல்லூரிகளில் பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்புக்கு உரிய 3,703 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், பி.ஃபார்ம். படிப்புக்கு உரிய 1,228 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், பி.பி.டி. படிப்புக்கு உரிய 736 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.
 
கட்டணம் என்ன? 
 
                 சுயநிதி கல்லூரிகளில் பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.30,000; பி.ஃபார்ம்.-பி.பி.டி. படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ஆண்டுக்கு ரூ.28,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read more »

நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்: அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா

கோவையில் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் மக்கள் வெள்ளமாகக் காட்சியளிக்கும் வஉசி
              தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி அமையும் காலம் நெருங்கிவிட்டது. நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அதிமுக அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்; ஜனநாயக முறையில் திமுகவை அகற்றும் பணியை நீங்கள் நிறைவேற்றுங்கள்; தேர்தல் பணிக்குத் தயாராகுங்கள் என்றும் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். 
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோவை வஉசி பூங்கா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:
            கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை. தமிழ் மொழியும் வளர்ச்சி அடையவில்லை, தமிழர்களும் வளர்ச்சி அடையவில்லை. தமிழின் பெயரால் ஒரு குடும்பம் மட்டுமே  அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை உள்பட தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஐந்தாவது ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைத்திருக்கிறது. இது தேர்தலுக்கான ஆண்டு; எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும். வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற, தங்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்பதையும், வாக்களிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். திமுக அரசின் தோல்விகளையும், சாதனைகளையும் கணக்கு  போடுவதற்கான நல்ல தருணமும் இதுவே. 
               திமுக அரசின் தோல்விகளே ஏராளம். சாதனைகள் என்று சொல்லக் கூடியவை மிகக் குறைவானவை என்பது மட்டுமல்லாமல் அவை வெறும் மாயத் தோற்றங்கள்தான். இந்த அரசின் முதல் தோல்வி அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு. அடுத்ததாக, மின்சாரப் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது பிற மாநிலங்களை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டைக் கட்டாயமாக மக்கள் மீது திணிக்க வேண்டிய அளவுக்கு மின்உற்பத்தியில் பின்னடைவை தமிழகம் சந்தித்து வருகிறது.விவசாய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் பாதிப்பு திருப்பூர் ஜவுளித் தொழில் முதல் சிவகாசி அச்சுத் தொழில் வரை தெளிவாகத் தெரிகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் பாறைகள் வெளிப்படும் அளவுக்கு மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு செ.மீ. மண் இயற்கையாக உருவாவதற்கு 200 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இப்போதைய நிலையில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய 10 லட்சம் ஆண்டுகள் தேவைப்படும். பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது. இலவச கலர் டிவி திட்டம் சாதனையாக சொல்லப்பட்டாலும், அதற்கு கேபிள் கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.200 வரை முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினருக்குத் தான் செலுத்த வேண்டியுள்ளது. 
             ரேஷனில் ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது. அரசு இருப்பில் இருந்து மக்களுக்காக அளிக்கப்படும் தரமான அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. பழைய கெட்டுப்போன அரிசி ரேஷன் கடைகள் மூலமாக மக்களைச் சென்றடைகிறது. அரிசி கடத்தலில் அரசு அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் கைகோர்த்துச் செயல்படுகின்றனர்.  மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சிக்குன் குனியா, காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு இத் திட்டத்தில் சிகிச்சை பெற முடியாது. அறுவைச்சிகிச்சைகளுக்கு மட்டுமே இத் திட்டத்தில் பயன்பெறலாம். ஆனால், இந்த அறுவைச்சிகிச்சைகள் ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகின்றன.  இதற்கு காப்பீட்டுத் திட்டம் தேவையில்லை. செம்மொழி மாநாடு என்ற போர்வையில், கோவையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்காக தமிழகம் முழுவதும் திமுகவினரால் ரூ.2 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 
                உணவுப் பொட்டலங்கள் வழங்கியதில் மட்டும் ரூ.2 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது. தமிழகத்தின் நலனைக் காக்க திமுக அரசை அகற்ற வேண்டும். மீண்டும் நல்லாட்சி மலர அதிமுகவுக்கு வாக்களிப்பது என அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

Read more »

புத்தகங்களை படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம்: என்.எல்.சி. 2-ம் சுரங்க முதன்மைப் பொதுமேலாளர் ராமலிங்கம்


  நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் (இடமிருந்து)
நெய்வேலி:
 
        நல்ல புத்தகங்களை படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்று என்.எல்.சி. 2-ம் சுரங்க முதன்மைப் பொதுமேலாளர் ராமலிங்கம் பேசினார்.
 
நெய்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் 5-ம் நாள் விழாவில்என்.எல்.சி. 2-ம் சுரங்க முதன்மைப் பொதுமேலாளர் ராமலிங்கம் பேசியது:
 
              புத்தகங்களை நாம் தலைகுனிந்து படிக்கிறோம். அப் புத்தகமே எதிர்காலத்தில் நம்மை தலைநிமிர்ந்து வாழ வைக்கும். ஒரு மனிதன் பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அவன் வாழும்போது அவன் படைக்கும் படைப்புகளே அம் மனிதன் வாழ்ந்த காலத்தை மேல்நோக்கி நிறுத்துகிறது. மாணவர்களும் இளைஞர்களும் புத்தக வாசிப்பை ஒரு கடமையாக கொள்ள வேண்டும். புத்தகத்தில் கிடைக்கும் நல்ல செய்திகளை விதையுங்கள். 
 
               கெட்ட செய்திகளை புதையுங்கள் என்றார் ராமலிங்கம்.தினமும் எழுத்தாளர் பாராட்டப்படுபவர் என்ற வரிசையில் எழுத்தாளர் உத்தமசோழன் விழாவில் பாராட்டப்பட்டார். அவர் பேசியது:நான் வருவாய்த் துறையில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட அனுபவங்களையும் சம்பவங்களையும் வைத்தே நாவல் எழுதியுள்ளேன். நெய்வேலி புத்தகக் கண்காட்சி சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு நிகராக விளங்குகிறது என்றார் உத்தமசோழன்.
 
நெருஞ்சி என்னும் சிறுகதை நூலை வெளியிட்டு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பேசியது:
 
               குழந்தைகளுக்கு உண்டியல் வழங்கி சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி அதன்மூலம் புத்தகம் வாங்கும் யுக்தியை ஈரோடு புத்தகக் கண்காட்சி குழுவினர் செய்து வருகின்றனர்.   குழந்தைகள் உண்டியல்களில் சேமிக்கும் பணத்தை கொண்டு புத்தகங்களை வாங்கும்போது அதைக் காட்டிலும் 2 மடங்கோ அல்லது 3 மடங்கோ புத்தகங்களை பரிசாக வழங்குகின்றனர். புரவலர்களும் பதிப்பகத்தாரும் செய்துவரும் இந்த ஊக்கமிகு நிகழ்வை நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவினரும் ஏனைய புத்தகக் கண்காட்சி நடத்தும் குழுவினரும் பின்பற்ற வேண்டும்.
 
               நெய்வேலியில் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகக் கண்காட்சி நடத்தி, தமிழுக்கும் இலக்கியத்திற்கும், தொண்டாற்றிவரும் என்.எல்.சி. நிறுவனத்தைப் பாராட்டி  தமிழக அரசு பரிசு வழங்க வேண்டும் என்பது எனது அவா.சாதாரணமாக இது போன்று நிறுவனங்கள் நடத்தும் விழாவில் ஆங்கிலத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் இந்த அரங்கில் தமிழுக்கு முதலிடம் அளித்துப் பெருமை சேர்த்துள்ளீர்கள். 
 
நெய்வேலியை தமிழகம் பின்பற்றுமா? 
 
             தொலைக்காட்சிப் பெட்டிகளும் கணினிகளும் அறிவியல் உலகுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள். தட்டிவிட்டால் தகவல்கள் கிடைக்கின்றன.ஆனால் வெளிநாடுகளில் உள்ள குழந்தைகள் கம்ப்யூட்டரை தட்டிவிட்டால் எழுத்துகள் வந்துவிடுகின்றன. இதனால் அவர்களுக்கு எழுத்துகளை எழுதக்கூட தெரியாத நிலை ஏற்பட்டு மொழி அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்குள்ள குழந்தைகள் மீண்டும் எழுத்துகளை எழுதிப் பார்க்கும் பழக்கத்துக்கு மாறி வருகிறார்கள் என்றார் ஆசிரியர் வைத்தியநாதன். தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்பனாதேவி வரவேற்றார். பேராசிரியர் சோ.சத்யசீலனின் சொற்பொழிவு நடைபெற்றது.

Read more »

கடலூர் அருகே மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க கோரிக்கை

கடலூர்:

                    கடலூர் அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று, கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன் கோரிக்கை விடுத்தார். 

பாதிக்கப்பட்டவர்களுடன் சென்று அவர், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: 

              கடலூர் அருகே நாயக்கர் நத்தம் காலனியில் அண்மையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். திட்டக்குடி கோடங்குடியில் கடந்த 9-ம் தேதி இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மலைக்கள்ளன் என்பவர் வீடு சேதப்படுத்தப்பட்டது. இதில் ஒரு தரப்பினர் மீது மட்டுமே போலீஸôர் நடவடிக்கை எடுக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் எதிரிகள் போலீஸôரைக் கண்டித்தே ஆர்ப்பாட்டம் நடத்தத் துணிந்து உள்ளனர். ஊரில் இல்லாதவர்களில் முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் நெப்போலியன் உள்ளிட்ட பலரது வீடுகளும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. போலீஸôர் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு

              மதுரை காமராஜ் பல்கலையில், கடந்த ஏப்ரலில் நடந்த முதுநிலை பட்டப் படிப்பு (செமஸ்டர்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எம்.எஸ்சி., கணிதம், எம்.காம்.,(சி.ஏ) மற்றும் பாங்கிங், பைனான்ஸ் ஆகிய பாடங்களுக்கு தேர்வு முடிவுகளை, "www.mkuniversity.org   ல் தெரிந்து கொள்ளலாம். இப்பாடங்களுக்கு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்த இணையதள முகவரியில் சென்று விண்ணப்பங்களையும், மதிப்பெண் பட்டியலையும் பெற்று விண்ணப்பிக்கலாம். ஜூலை 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வாணையர் ராஜியக்கொடி தெரிவித்துள்ளார்.


Read more »

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் மாணவியர் விடைத்தாள் மாயம் : தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு


           வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில், 229 மாணவியரின் விடைத்தாள்கள் மாயமானதால், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 85 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை இளங்கலை தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிந்து நான்கு லட்சத்து 50 ஆயிரம் விடைத்தாள்கள், 10க்கும் மேற்பட்ட மையங்களில் திருத்தப்பட்டன. தேர்வு முடிவுகள், நேற்று முன் தினம் வெளியிடப்பட்டு, அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆற்காடு மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியரில் இளங்கலை மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதிய 229 பேரின் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

துணைவேந்தர் ஜோதிமுருகன் கூறியதாவது

               ஆற்காடு மகாலட்சுமி கல்லூரி மாணவியரில், நான்கு பேரின் தேர்வு பேப்பர் திருத்தப்பட்டன. அதில், ஒரு பேப்பர் மட்டும் காணாமல்போய்விட்டது. இதனால், இக்கல்லூரியில் தேர்வு எழுதிய 229 மாணவியரின் தேர்வு முடிவுகளை தவிர மற்ற மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் கல்லூரியில் காணாமல் போனதா, திருத்தும் போது காணாமல் போனதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜோதிமுருகன் கூறினார்.

Read more »

கடலூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்:மாணவி உட்பட நான்கு பேர் பலி; 9 பேர் படுகாயம்

கடலூர்:

                கடலூர் அருகே அதிவேகமாக வந்த டிப்பர் மற்றும் டாரஸ் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவி உட்பட நான்கு பேர் உடல் நசுங்கி இறந்தனர். ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்தினால் கடலூர் - புதுச்சேரி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

 கடலூர் அருகே நடந்த இந்த கோர விபத்து குறித்த விவரம் வருமாறு: 

                 புதுச்சேரியிலிருந்து டி.என்.32.சி-8319 பதிவெண் கொண்ட டிப்பர் லாரி நேற்று மாலை 4.45 மணிக்கு அதிவேகமாக கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கடலூர் அருகே சின்ன கங்கணாங்குப்பம் வந்த போது டிப்பர் லாரியின் "ஆக்சில்' முறிந்தது. அதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அதே திசையில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள், ஆட்டோ மீது மோதி எதிரே சிமென்ட் ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

                இந்த கோர விபத்தில் இரண்டு லாரிகளின் முன்பக்கமும் அப்பளம் போல் நொறுங்கின. மோதிய வேகத்தில் டாரஸ் லாரியின் முன் பக்க அச்சு முறிந்து வலது புறமாக கவிழ்ந்தது. அதே போல டிப்பர் லாரியும் நடுரோட்டில் கவிழ்ந்தது. டாரஸ் லாரியில் சிமென்ட் லோடு இருந்ததால் கவிழ்ந்த வேகத்தில் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அருகில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

            இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவி பரசுராமன் மகள் பவித்ரா (10), மேட்டுப்பாளையம் ஆறுமுகம் (42), டாரஸ் லாரி டிரைவர் ரவி (26), கடலூர் புதுப்பாளையம் கான்வென்ட் தெருவைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் சிவக்குமார் (42) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த டாக்டர் ரூபநாதன் கால் எலும்பு முறிந்தது. பரசுராமனின் மற்றொரு மகள் பாரதி (7), டிப்பர் லாரி டிரைவர் கோதண்டபாணி (35), கடலூர் ஜோதி (47), ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் (18), ரமேஷ் (22), கிளீனர் தட்சணாமூர்த்தி (30), பரசுராமன் (40) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் - புதுச்சேரி பிசியான சாலையில் விபத்து நடந்ததால் இரு திசையிலும் ஏராளமான வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

கலெக்டர் ஆறுதல்: 

            விபத்தில் சிக்கி கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எம்.பி., அழகிரி, எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். 

வீட்டின் அருகே நடந்த சோகம்: 

                 சின்ன கங்கணாங்குப்பம் பள்ளியில் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகள்கள் பவித்ரா (10), பாரதி (7) இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

                 வீட்டிற்கு 100 அடி தூரம் அருகே வந்த போது டாரஸ் லாரி மீது மோதிய டிப்பர் லாரி மாணவிகள் மீது கவிழ்ந்தது. அதில் பவித்ரா அதே இடத்தில் இறந்தார். பாரதி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். ஒரு சில நொடிகளில் சாலையோரத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலையில் மாணவிகள் விபத் தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read more »

கடலூரில் திருமாணிக்குழி பாலத்தை சீரமைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்

கடலூர்:

               கடலூரில் மா.கம்யூ., ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுகு மாறன், தட்சணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் மாதவன், உறுப்பினர்கள் வைத் திலிங்கம், தயாளன், நீலநாராயணன், அய் யாதுரை, ராமர், மச்சகாந்தி, செந் தாமரைக்கண்ணன் பங்கேற்றனர்.

              கூட்டத்தில்,பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விலை உயர்வை ஈடுகட்ட மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள சுங்க வரியை திரும்பப் பெற வேண்டும். கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர் முதுநகரில் இருந்து சேலம் செல்லும் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும். வெள்ளப் பெருக்கில் சேதமடைந்த திருமாணிக்குழி பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

மேட்டூர் அணை திறக்காததால் காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றம்

கடலூர்:

              பாசனத்திற்காக மேட் டூர் அணை திறக்கப்படாததால் காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் உள்ள ஒரு லட்சத்து 46 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மேட்டூர் அணை திறப்பதன் மூலம் பாசன வசதி பெற்று வந்தன. காவிரி டெல்டா பகுதி விவசாயத்திற்காக ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.

               அங்கிருந்து கல்லணை மற்றும் கீழணை, வடவாறு வழியாக காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கு ஜூலை 12ம் தேதி வந்தடையும். அதன் பிறகு பாசன வாய்க்கால்கள் மூலம் கட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் தாலுகா பகுதி விளை நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீரைக் கொண்டு இரண்டு தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக ஆடிப் பெருக்கு ( ஆடி மாதம் 18ம் தேதி) அன்று விதை விதைப்பார்கள். அதே நேரத்தில் நிலங் களை ஏர் ஓட்டி பதப்படுத்தி தயாராக வைத்திருப் பார்கள். விதை விதைத்த 30ம் நாளில் நாற்றை பிடுங்கி பதப்படுத்திய நிலங்களில் நடவு செய் வார்கள்.

                 நாற்று பச்சை பிடித்து செழிப்பாக வளர்ந்த நிலையில் அக்டோபர் இரண் டாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை பெய் யும். அதிகமாக மழை பெய்தாலும், பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக பயிர்கள் மேலும் செழிப்பாக வளர்ந்து கூடுதல் மகசூல் தரும். நன்கு விளைந்த பயிர்களை டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் அறுவடை செய்வார்கள். இந்த முறையில் ஏக்கருக்கு 45 மூட்டை நெல் மகசூல் கிடைத்தது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

                இந்த நடைமுறை கடந்த சில ஆண்டாக பின்பற்றப்படுவதில்லை. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் காலம் தவறி திறக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அணை திறப்பதால் செப்டம்பர் மாதத்தில் விதை விதைத்து அக்டோபர் மாதத்தில் நாற்று நடுகின்றனர்.இவ்வாறு நாற்று நட்ட ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நாற்றுகள் சேதமடைகின்றன. மழை நீர் வடிந்ததும் எஞ்சிய நாற்றுகளை காப்பாற்ற விவசாயிகள் கூடுதல் உரங்கள் தெளிக்க வேண்டியுள்ளது. அப்படியே உரங்கள் தெளித்தாலும் போதிய விளைச்சல் இருப்பதில்லை. விளைந்த நெல் லும் தரமில்லாததால் விலை போகாத நிலை உள்ளது.

                 இந்நிலையில் இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு இதுவரை மேட்டூர் அணை திறக்கப்படாததால், வரும் ஆகஸ்ட் 3ம் தேதி (ஆடிப் பெருக்கு) அன்று விதை விதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை தற்போது 79.77 அடி அளவிற்கே தண்ணீர் உள்ளதால் பாசனத்திற்கு திறந்து விட ஒரு மாதத் திற்கு மேலாகும் எனக் கூறப்படுகிறது.அதிகாரிகள் கூறுவது போல் ஆகஸ்ட் மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு எந்த வித பயனும் இல்லை. மாறாக அதிக இழப்புதான் ஏற்படும் நிலை உள்ளது.

                இதனை தவிர்த்திட அணையில் தற்போது உள்ள 79.77 அடி தண்ணீரில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டால் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் வீராணத் திற்கு தண்ணீர் வந்து சேரும். அதனைக் கொண்டு விதை விதைக் கும் பணியை துவங்க முடியும். பின்னர் செப்டம்பர் முதல் வாரத்தில் 26 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டால் நாற்று நடவு பணி எளிதாக செய்ய முடியும்.அதன் பிறகு அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விடும் என்பதால் தண்ணீர் தேவைப்படாது. ஆகவே மேட்டூர் அணையில் தற் போது உள்ள நீரில் இருந்து உடனடியாக 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

பண்ருட்டி பகுதியில் மானிய விலையில் விதைகள்

பண்ருட்டி:

          பண்ருட்டி பகுதியில் 50 சதவீத மானிய விலையில் காய்கறி விதைகள் வாங்கிப் பயன் பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராமலிங்கம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:

               ஒருங்கிணைந்த தோட்டக்கலை காய்கறி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஆடிப் பட்டத்தில் பயிரிட பண்ருட்டி வட்டார விவசாயிகள் அண்ணாமலை கத்திரி விதை 50 சதவீத மானிய விலையில் ஒரு கிலோ 400ஆக விற் பனை செய்யப்படுகிறது. அதுபோல் புடலங்காய், பாகற் காய், வெண்டைக் காய் ஆகிய விதைகளும் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு விற் பனை செய்யப்படுகிறது.

                இது போல் நகரம், கிராமங்களில் காய் கறிகளை வீட்டுத் தோட்டம் மூலம் உரம், பூச்சி மருந்து இல் லாமல் ஆரோக்கியமாக உற்பத்தி செய்ய பொதுமக்களுக்கு 20 ரூபாய்க்கு எட்டு வகையான பாகற் காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், பூசணி, கத்திரி, கீரை, பீர்க்கங்காய் ஆகிய விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மழைக் காலம் துவங்கியுள்ளதால் விவசாயிகளும், வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்களும் தேவைப்படும் விதைகளை பண்ருட்டி பூங்குணம் உதவி தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வாங்கிப் பயனடையலாம்.

Read more »

விருத்தாசலம் பஸ் நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விருத்தாசலம்:

             விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் அகற்றினர். விருத்தாசலம் பஸ் நிலையத்தின் உள் பகுதியிலும், வெளிப்பகுதியிலும் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பெட்டிக் கடைகள், நடைபாதை கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

                 மேலும் பஸ் நிலையம் முன்புறம் உள்ள காமராஜர் பூங்காவையும் தனி நபர் கள் ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்ததால் அங்கு பூங்கா இருப்பதே பொதுமக்களுக்கு தெரியாத நிலை இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு சிலர் அகற்றாததால் நேற்று அதிரடியாக நகராட்சி கமிஷனர் திருவண்ணாமலை மற்றும் அதிகாரிகள் முன் னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

Read more »

உயிரி இடுபொருள் உற்பத்தி மையம் : கடலூர் வட்டாரத்தில் துவக்க விழா

கடலூர்:

                  கடலூரில் உயிரி இடுபொருட்கள் உற்பத்தி மையம் துவக்க விழா நடந்தது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் துறை மூலம் உயிரி இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத்திட 2.5 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கடலூர் வட்டத்தில் இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத்திட காரணப் பட்டு டான்வெப் பண்ணை மகளிர் குழு தேர்வு செய்யப்பட்டு, இக் குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் பயிற்சி பெற்று குழு மூலம் உற்பத்தியை துவக்கி உள்ளனர்.

                தூக்கணாம்பாக்கத்தில் அமைந்துள்ள உயிரியல் காரணி உற்பத்தி மையத் தைத் துவக்கி வைத்த வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், மையத்தில் தயாரான "சூடோமோனாஸ்' மற்றும் உற்பத்திக்கு பயன்படுத் தப்படும் இடுபொருட்கள், இயந்திரங் களை பார்வையிட்டார். பின்னர் "சூடோமோனாஸ்' உற்பத்தி மற்றும் அதனைக் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் நன்மைகளை விளக்கினார். தரமான உயிரியல் காரணி உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து வேளண் துணை இயக்குனர் பாபுவும், சுற்றுச் சூழல் பாதிக்காமல் நோய்களை கட்டுப்படுத்த உயிரியல் காரணிகளை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை உதவி இயக்குனர் இளவரசனும் விளக்கினர்.விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளர் புத்ததாசன், வேளாண் அலுவலர்கள் சின்னக்கண்ணு, உதவி வேளாண் அலுவலர் ஜெயராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Read more »

விருத்தாசலம் அடுத்த தொழூரில் குடிநீருக்கு தவிக்கும் மக்கள்:விவசாய நிலங்களை தேடிச் செல்லும் அவலம்

விருத்தாசலம்:
          
               தொழூர் ஊராட்சியில் இரண்டு குடிநீர் தொட்டிகள் இருந்தும் குடிநீருக்கு விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களை நாடிச் செல்லும் அவல நிலை உள்ளது. விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ளது தொழூர் கிராமம். தனி ஊராட்சியாக செயல்படும் இக்கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்திற்குச் செல்லும் சாலை சரியில்லை என்பதோடு இல்லாமல், அடிப்படை தேவையான குடிநீருக்காக அக்கிராம மக்கள் தினமும் அல்லாடி வருகின்றனர்.இக்கிராம மக்களுக்கு தோப்பு தெரு பகுதியில் கோவில் அருகில் போர்வெல் அமைத்து குடிநீர் வழங் கப்பட்டு வருகிறது.

                இதில் இருந்து மேலத்தெரு பகுதிக்கு சரியாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு தவித்து வந்தனர்.இந்த பிரச்னையைப் போக்க கடந்த 2002 - 2003ம் ஆண்டில் ராஜிவ்காந்தி தேசிய கிராம குடிநீர் திட்டத்தின் மூலம் மேலத்தெரு பகுதியில் புதிய போர்வெல்லுடன், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப் பட்டது. இருந்தும் போர் வெல்லில் இருந்து வரும் தண்ணீர் பழுப்பு நிறத்தில் இருப்பதால் அதை குடிக்க முடியாத நிலை இருந்தது.புதிய போர்வெல் அமைத்தும் குடிநீர் கிடைக்காததால் கடந்த 2007 - 2008ம் ஆண்டு அப் பகுதியில் மினி வாட்டர் டேங்க் அமைக்கப் பட்டது. இதிலிருந்து மேலத்தெரு மக்கள் குடிநீர் பிடித்து வந்தனர். இதுவும் சரிவர இயக்கப்படாமல் தற்போது பூட்டியே கிடக்கிறது. இதனால் மேலத்தெரு மக்கள் குடிநீருக்கு விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களையே நாடி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பானுமதி கூறுகையில், 

               "எங்கள் ஊரில் நாங்கள் வசிக்கும் மேலத்தெரு பகுதியில் தான் குடிநீர் பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. ஆறு ஆண்டிற்கு முன் போட்ட போரில் இருந்து வரும் தண்ணீர் பழுப்பு கலரில் வருவதால் குடிக்க முடியாது. துணி துவைக்கவும், பாத்திரங்கள் கழுவ மட்டுமே பயன்படுத்துகிறோம்.அதற்குப்பிறகு போடப்பட்ட மினி டேங்கில் தண்ணீர் பிடித்து வந்தோம். ஆனால் தற்போது அந்த குடிநீர் தொட்டியும் பயன்பாடின்றி உள்ளது. நாங்கள் விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களில் இருந்துதான் குடிக்க தண்ணீர் பிடித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஒரு பெரிய டேங்க், ஒரு மினி டேங்க் இருந்தும் எந்த பயனும் இல்லை. நாங்கள் குடிநீருக்கு அலைவது தொடர்கதையாகவே உள்ளது' என வேதனையோடு தெரிவித்தார்.

Read more »

பண்ருட்டியில் கிடப்பில் போடப்பட்ட சாலை: விவசாயிகள் கடும் அவதி

பண்ருட்டி:

                பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் - ஒறையூர் இடையிலான 3 கி.மீ., தார் சாலையை பொக்லைன் இயந்திரம் உடைத்து ஐந்து மாதங்களாகியும் சீரமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் - ஒறையூர் இடையிலான 3 கி.மீ., தார்சாலை அமைக்க கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நபார்டு திட்டத்தின் கீழ் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்து டெண்டர் விடப்பட்டது. பணிகள் துவங்குவதற்காக ஐந்து மாதங்களுக்கு முன் ஏற்கனவே இருந்த தார் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் முழுவதும் கொத்தி எடுத்தனர்.பின் ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட அளவுபடி ஒன்னரை ஐல்லிகள் ஏதும் வைக்காததால் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது.

               இதனால் பண்டரக் கோட்டை, வாணியம்பாளையம், நல்லூர்பாளையம், ஒறையூர் செல்லும் கிராம மக் கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஒன்றிய பொறியாளர், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் இப்பகுதியில் ஒன்னரை ஐல்லிகள் வைத்து ஒன்றரை மாதங்களாகியும் இதுவரை பணிகள் துவங்கப்படவில்லை. இந்த சாலை வழியாக தினமும் கத்திரி, வெண்டை, பூசணி, கொய்யா போன்ற தோட்டப் பயிர்கள் கொண்டு செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Read more »

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டபணியால் குடிநீர் பைப் "கட்'

கடலூர்:

                திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டித் தெருவில் பாதாள சாக்கடைப் பணி செய்யும் போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. திருப்பாதிரிப்புலியூர் போடிசெட்டித் தெருவில் பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகிறது.தற்போது வீடுகளுக்கு பைப் லைன் இணைப்பு கொடுப்பதற்காக பொக்லைனால் தோண்டும் போது குடிநீர் பைப்பும் உடைந்து பழுதாகி விடுகிறது.

                  அதை உடனடியாக சரி செய்யாமல் அப்படியே அரைகுறையாக விட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் நேரங்களில் குடிநீர் வீணாகி சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கடலூரில் பல இடங்களில் உள்ளன. பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்து நகராட்சிக்கு புகார் செய்தால் ஒப்பந்தக்காரரிடம் போய் சொல்லுங்கள் என பொறுப்பற்ற பதிலை கூறி முடித்துக் கொள்கிறார்களாம். இதனால் குடிநீர் வீணாகி செல்வதோடு தெருக்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Read more »

பெண்ணாடம் அருகே வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

திட்டக்குடி:

                பெண்ணாடம் அருகே வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை காலனியைச் சேர்ந்த ஜெயமணி (50), தங்கவேல் (55) உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு நேற்று மதியம் திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. உடன் பெண்ணாடம், திட்டக்குடி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர், விருத்தாசலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Read more »

பரங்கிப்பேட்டையில் மாணவரை நிர்வாணப்படுத்தியஆசிரியர் கோர்ட்டில் சரண்

பரங்கிப்பேட்டை:
            
                 பரங்கிப்பேட்டையில் வகுப்பறையில் மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் கோர்ட்டில் சரணடைந்தார். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் சுந்தர்ராஜன். 10ம் வகுப்பு மாணவர் உபைது ரஹ்மானின் பேண்ட், சட்டையைக் கழற்றி நிர்வாணப்படுத்தினார். இச்சம்பவம் குறித்து கலெக்டர் உத்தரவுப்படி கடந்த 9ம் தேதி ஆசிரியர் சுந்தர்ராஜன் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மேலும், மாணவரை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் மீது பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஆசிரியர் சுந்தர்ராஜன் நேற்று பரங்கிப்பேட்டை கோர்ட்டில் சரண டைந்தார்.

Read more »

சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்ததின பேச்சுப் போட்டி

சிதம்பரம்:
          சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டி ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
               பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் மேல்நிலைப் பிரிவில் நந்தனார் ஆண்கள் பள்ளி மாணவர் ப.அஜித்குமார் முதலிடமும், நந்தனார் பெண்கள் பள்ளி மாணவி ப.பார்கவி இரண்டாமிடமும், ஆறுமுகநாவலர் பள்ளி மாணவி ந.நந்தினி மூன்றாமிடமும் பெற்றனர். உயர்நிலைப் பிரிவில் நிர்மலா மெட்ரிக் பள்ளி மாணவி ரிஷாந்தினி முதலிடமும், நந்தனார் ஆண்கள் பள்ளி மாணவன் ச.குமரவேல் இரண்டாமிடமும், ஆர்.சி.டி பள்ளி மாணவி மு.பிரியங்கா மூன்றாமிடும் பெற்றனர்.அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் எம்.கமல்கிஷோர்ஜெயின் போட்டிகளை தொடங்கி வைத்தார். பொருளர் எஸ்.பாலநாகசுப்பிரமணியன் வரவேற்றார். செயலர் ஏ.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Read more »

சிதம்பரத்தில் 'அரசு, ரோட்டரி சங்க பங்களிப்புடன் தடுப்பனை'

சிதம்பரம்:

              வெள்ளநீரை தேக்கி வைக்க ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தமிழக அரசு நிதிஉதவி மற்றும் சர்வதேச ரோட்டரி சங்க பங்களிப்பு பெற்று தடுப்பணை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என புதிதாக பொறுப்பேற்ற சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்தார்.

             சிதம்பரத்தில் ரோட்டரி சங்க 2010-11-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் தலைவர் ஏ.அஷ்ரப்அலி புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக எஸ்.செந்தில்குமார், செயலராக கே.பார்த்தசாரதி, பொருளராக எஸ்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பதவிஏற்றனர். ரோட்டரி மாவட்ட முன்னாள் கவர்னர் ராஜதுரை மைக்கேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் தலைவர் எஸ்.செந்தில்குமார் ஏற்புரையாற்றுகையில் சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ரூ.1 கோடி செலவில் மின்மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். விழாவில் முன்னாள் தலைவர்கள் கே.சீனுவாசன், ஏ.அஷ்ரப்அலி, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலர் கே.பார்த்தசாரதி நன்றி கூறினார்.

Read more »

Multiple collision claims four lives in Cuddalore


Mangled:Vehicles involved in a multiple collision at Chinnakanganankuppam, near Cuddalore on Tuesday.

CUDDALORE: 

          In a multiple collision that occurred on Tuesday at Chinnakanganankuppam, located on the Cuddalore—Puducherry highway near here, four persons got killed and eight others were seriously injured.

          A cement laden multiple-axle truck, a lorry, a share-auto and a motorcycle, besides two pedestrians, were involved in the accident. The truck proceeding from Cuddalore to Puducherry had a head-on collision with the lorry coming from the opposite direction. The impact was such that the front portions of both the vehicles were heavily damaged, with their axles broken. The overturned vehicles lied about 100 metres apart and the share-auto was found smashed behind the lorry. The motorcycle too was thrown on the road side. As the accident had occurred in a split second there was no eye-witness account.

               Of the victims only two were identified as P. Pavithra (eight-year-old and a Class III student) and Arumugham (42), a farm hand. The bodies were taken to the Cuddalore headquarters government hospital for post-mortem. The injured, including a doctor serving in a Primary Health Centre, have been referred to Chennai government hospital. It was presumed that the truck might have lost control and crashed against the oncoming lorry and the share-auto and the motorcycles trailing behind the lorry. Another version had it that after the axle got broken the driver of the truck might have lost control resulting in the accident. Parasuraman (48), father of Pavithra, was in a dazed condition. He lost his elder daughter Pavithra in the mishap while his younger daughter P. Bharati (five-year-old studying Class I) sustained head injury.

            When asked he said that the accident occurred soon after his daughters had returned from school. While he was standing with his daughters on the roadside he heard a loud thud after which he saw Pavithra lying dead in a pool of blood. He could not exactly recall how it occurred. A large number of local people and passersby gathered there to help out the injured. The traffic on the highway was affected for over an hour.

Read more »

அரசு பஸ் நடத்துனர்களின் அலட்சியம்:நள்ளிரவில் பரிதவித்த பஸ் பயணிகள்

கடலூர்:

                  அரசு பஸ் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களிடையே ஒத்துழைப்பு இல்லாததால் பயணிகள் நள்ளிரவு நேரத்தில் அவதிப்பட்டனர்.அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிர்வாக வசதிக்காக 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இயக்கி வருகின்றன. போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஒற்றுமையின்மையால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் நள்ளிரவு நேரத்தில் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. சேலம் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பஸ் (டி.என்.30, என்.0799) நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சேலம் பஸ் நிலையத்திலிருந்து புறப் பட்டு, புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தது.

                பஸ்சில் 65க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதில் புதுச்சேரி பயணிகள் 17 பேரும், கடலூர் பயணிகள் 15 பேரும் இருந்தனர்.நள்ளிரவு 12.30 மணிக்கு ஆத்தூர் - தலைவாசல் இடையே பஸ் பழுதாகி நின்றது. அப்போது மழை பெய்ததால் மின்சாரம் தடைபட்டு கும்மிருட்டில் பஸ் நின்று கொண்டிருந்தது. பஸ்சை மீண்டும் ஓட்ட முடியாது என டிரை வர் கைவிரித்து விட்டார். கட்டணத்தை திருப்பித் தருமாறு பயணிகள் கேட்டனர். ஆனால், கட்டணத்தை திருப்பித் தருவதற்கில்லை; வேண்டுமென் றால் இவ்வழியாக வரும் அரசு பஸ்சில் ஏற்றி விடுவதாக நடத்துனர் நடுசாமி திட்டவட்டமாக கூறினார். பயணிகளும் மழையில் நனைந்தபடியே வேறு பஸ்சை எதிர்நோக்கி காத்திருந்தனர். 2 மணி நேரம் கடந்து அவ்வழியாக வந்த கோவை மண்டல பஸ்சில் (டி.என்.33. என்.2463) நடத்துனர் புதுச் சேரி பயணிகளை மட்டும் ஏற்றி விட்டார் .பஸ்சில் ஏறியவுடன் நடத்துனர், "மீண்டும் டிக் கெட் வாங்கினால் தான் பயணம் செய்ய முடியும். இல்லாவிட்டால் இறங்கிக் கொள்ளுங்கள்' என கூறினார்.

                  பயணிகள் எவ்வ ளவோ மன்றாடியும் பல னில்லை. வேறு வழி யின்றி நடத்துனர், பயணிகளை இறக்கி விட்டுச் சென்றார். இதேபோல் சென்னை செல்லும் பல பஸ்சில் பயணிகளை ஏற்ற எந்த போக்குவரத்துக் கழகமும் முன் வரவில்லை. விடியவிடிய அவதிப்பட்ட பயணிகள் பலர் மீண்டும் டிக்கெட் வாங்கிக் கொண்டு கிடைத்த பஸ்களில் புறப்பட்டனர்.போக்குவரத்துக் கழக பஸ்கள் பழுதாகும் போது, இப்படிப்பட்ட உதவிகள் செய்ய போக்குவரத்துக் கழகங்கள் உதவ முன் வராததால் பயணிகள் விடிய விடிய காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Read more »

சீமான் கைதை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் கைது

கடலூர்:

                நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைதை கண்டித்து, கடலூரில் போஸ்டர் ஒட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் இந்திய - இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் சீமான் பேசியதாக, வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.

                      சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கடலூரில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் "தமிழகத்தில் நடப்பது தமிழக அரசா அல்லது சிங்கள அரசா' என்ற தலைப்பில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டினர்.இதுபற்றி தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து சென்று, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுவரில் போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கடலூர் சிவானந்தபுரத்தைச் சேர்ந்த ஜலதீபன் (29), புதுச்சத்திரம் அடுத்த வேலங்கிராயன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திவாகரன் (25) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Read more »

கடலூர் செஷன்ஸ் கோர்ட் வக்கீல்கள் புறக்கணிப்பு

கடலூர்:

               வக்கீல்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரி கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். பண்ருட்டி வக்கீல் செல்வம் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரி வக்கீல்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 

                   அதற்கு ஆதரவு தெரிவித்து நேற்று கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கடலூர் அருள் நாதன் உள்ளிட்ட சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் வேதநாயகம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் போடுவதை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக்கோரியும் அடுத்த வாரம் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் செயலர் கிருஷ்ணசாமி, இணை செயலர் அனந்தராமன் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior