கடலூர்:
கடந்த தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும், வழங்காத உறுதிமொழிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கடலூர் அருகே வண்டிக்குப்பம் கிராமத்தில் சமத்துவபுரத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். பின்னர், அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் நடந்த அரசு விழாவில் ரூ. 100 கோடியில் அமையவுள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டினார். அந்த விழாவில் 2 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி, 400 சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார். மேலும் ரூ. 32.88 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
அத்துடன் ரூ. 133.15 கோடிக்கான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 25.29 கோடிக்கான அரசு நல திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இவ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது:
பல அரசு விழாக்களில் நல திட்ட உதவிகளை முழுமையாக வழங்குவதில்லை. சிலருக்கு வழங்கிவிட்டு பின்னர் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ள செய்வார்கள். அதுதான் மரபாக இருந்துவருகிறது. ஆனால் நான் நல திட்ட உதவிகள் வழங்குவதில் மாற்றத்தைக் கொண்டுவந்தேன். நல திட்ட உதவிகளை அனைவருக்கும் வழங்கிவிட்டு, அதன் பின்னரே மேடையைவிட்டு இறங்குகிறேன். தற்போது இங்கு நல திட்ட உதவிகள் வாங்குவோர், அவற்றை வாங்கும்போதே புகைப்படம் எடுத்து, அவர்கள் மீண்டும் இருக்கையில் சென்று அமரும்போது அந்த புகைப்படம் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல மணி நேரம் நின்று நல திட்ட உதவிகளை வழங்குவதன் காரணம், நல திட்ட உதவிகளைப் பெறும் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன்.
திட்டத்தின் பயன்கள் மக்களைச் சென்றடைகிறது என்ற நம்பிக்கை முதல்வர் கருணாநிதிக்கு ஏற்படுகிறது. இதுவரை மொத்தம் 125 மணி நேரம் செலவிட்டு நல திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. 1996-ல் பெரியார் சமத்துவபுர திட்டம் தொடங்கப்பட்டது. 2001 வரை 148 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சமத்துவபுரங்கள் கட்டப்படவில்லை. 2006-க்கு பின்பு மீண்டும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.
95 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டு உள்ளன.அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டில் அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இங்கே இந்த விழாவில் ஆண்கள் இடம்தர மறுத்ததால் பெண்கள் பின்னால் அமர்ந்து இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பெண்கள் இல்லாமல் ஆண்கள் வெற்றிபெற முடியாது. கடந்த தேர்தலின்போது அளித்த, அளிக்காத உறுதிமொழிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம் என்றார் ஸ்டாலின். விழாவுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வரவேற்றார்.
மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ.க்கள் கோ.அய்யப்பன், சபா.ராஜேந்திரன், தி.வேல்முருகன், துரை.ரவிக்குமார், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் வி.கே.சுப்பாராஜ் ஆகியோர் பேசினர்.கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.