கடலூர்:
கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி முதல்வரை மாற்ற வேண்டும் என்று, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
கல்லூரி ஆசிரியர்கள் சங்க மண்டலச் செயலாளர் குமார், செவ்வாய்க்கிழமை கடலூரில் கூறியது:
கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, 1961-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, நாவலர் நெடுஞ்செழியனால் திறந்து வைக்கப் பட்டது. கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மாணவிகள், குறைந்த கட்டணத்தில் கல்வி கற்க அமைக்கப்பட்ட கல்லூரி இது.
ஆனால் இப்போது கல்லூரி நிர்வாகம் சீர்குலைந்து வருகிறது. கல்லூரிக்கான நிர்வாகம் சென்னையிலும், பல்கலைக்கழக அலுவலகம் வேலூரிலும், இணை இயக்குநர் அலுவலகம் திருச்சியிலும் இருப்பதால், ஆசிரியைகள், மாணவிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில் பெருத்த காலதாமதம் ஏற்படுகிறது. மாணவிகளுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவித் தொகை கிடைப்பது இல்லை. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக பணியில் இருக்கும் கல்லூரி முதல்வர், ஆசிரியைகளுக்கு எதிராக மாணவிகளைத் தூண்டி விடுகிறார். ஆசிரியைகளுக்கு பாதுகாப்பில்லை. மாணவிகளிடையே அமைதியான கல்விச் சூழல் இல்லை. ஆசிரியை சாந்தி கல்லூரி ஊழியர் ஒருவரால் அண்மையில் தாக்கப் பட்டார்.
பின்னர் இப்பிரச்னை கல்லூரி நிர்வாகத்திடம் திரித்துக் கூறப்பட்டு உள்ளது. கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் அனுமதி இல்லாமலேயே மாணவிகளிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. மாணவிகளுக்கு அக மதிப்பீட்டு மதிப்பெண்கள் பாரபட்சமுடன் அளிக்கபட்டு, துறைத் தலைவரின் கையொப்பம் இல்லாமலேயே பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு பின் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. இதனால் மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதுகுறித்து கல்லூரிக் கல்வித்துறை விசாரித்து வருகிறது. உரிய நேரத்தில் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கவில்லை. ஆசிரியைகள் மரியாதையாக நடத்தப்படுவது இல்லை. எனவே முதல்வரை நீக்கவேண்டும் என்றார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் கூறியது :
, மேற்கண்ட குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தார். "இக்கல்லூரியில் இருந்துவந்த குறைகளை கடந்த ஓராண்டில் நிவர்த்தி செய்து இருக்கிறேன். மாணவிகளின் நம்பிக்கையை பெற்று இருக்கிறேன். மாணவிகளிடம் வெளிப்படையாகப் பேசி அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறேன். சிலர் தாங்கள் கல்லூரி முதல்வராக வர முடியவில்லை என்ற எரிச்சல் காரணமாக, எனக்கு நல்ல பெயர் கிடைத்து இருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், புகார் சொல்கிறார்கள்.கல்விக் குழுவின் முடிவின்படியே மாணவிகளிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. கல்வி உதவித் தொகை மாணவிகளுக்கு தாமதமின்றி கிடைத்து வருகிறது. அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதில் குறைபாடுகள் இருந்தன. மாணவிகளின் முறையீடு காரணமாகவே மாற்றப்பட்டது. கல்லூரியில் இருக்கும் அமைதியான சூழ்நிலையைக் கெடுக்கவும், குழப்பம் விளைவிக்கவும் சிலர் பலவிதமாக புகார் கூறுகிறார்கள்' என்றார்.
ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளின் பேட்டியின்போது, கல்லூரி ஆசிரிர்கள் சங்க மண்டல பொருளாளர் சம்பத், சட்ட ஆலோசகர் இளங்கோவன், கல்லூரி கிளைச் செயலர் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.