கடலூர்:
மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே அகல ரயில்பாதைத் திட்டமானாலும் அதன்பிறகு ரயில்கள் இயக்கம் ஆனாலும், ரயில்வே துறையின் செயல்பாடுகள் கடலூர் மாவட்ட மக்களைப் புறக்கணிப்பதாக அமைந்துள்ளது.
மயிலாடுதுறை- விழுப்புரம் மார்க்கத்தில் 122 கி.மீ. நீள அகலப் பாதை அமைப்பதற்காக 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2007 ஜனவரியில் தொடங்கி 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று அறிவித்த இந்தத் திட்டம், மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஏப்ரல் மாதத்தில்தான் பணிகள் முடிவடைந்து இருப்பதாக ரயில்வே தெரிவிக்கிறது. 2007-ல் திட்டம் தொடங்கும்போது ரூ. 198 கோடியில் திட்டத்தை நிறைவேற்றுவதாக அறிவித்து, தற்போது ரூ. 400 கோடிக்கு மேல் செலவாகி இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.ரயில்களை இயக்குவதற்கு ஏற்றவகையில் பணிகள் நிறைவுற்று இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒரு மாதத்துக்கு முன் அறிவித்து விட்டார். இன்னமும் 25 சதவீத பணிகள் முடிவடையவில்லை என்கிறார்கள் ரயில்நிலைய அதிகாரிகள். ரயில்கள் இயக்கமும்கூட வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஏப்ரல் 23-ம் தேதிக்குள் ரயில்களை இயக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் காரணமாகவே ரயில்வே இலாகா அவசர அவசரமாக விழா எதுவும் இல்லாமல் ரயில் 23-ம் தேதி பாசஞ்சர் ரயில் ஒன்றை இயக்கியது.
ரயில்நிலைய அதிகாரி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். அகலரயில் பாதைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று, மக்களும் பொதுநல அமைப்புகளும் போராட்டங்களை நடத்தின. அப்போதெல்லாம் அதற்காக துரும்பைக்கூட தூக்கிப்போடாத அரசியல் தலைவர்கள் எல்லாம், சிறப்பாகப் போஸ் கொடுத்து செய்தித் தாள்களில், தொலைக் காட்சிகளில் காட்சியளிக்கும், நல்லதொரு விழா கைநழுவிப் போனதே என்ற அங்கலாய்ப்பில் உள்ளனராம். விழா ஏன் நடத்தவில்லை என்று ரயில்வே இலாகா அதிகாரிகளைக் கேட்டு நச்சரிக்கிறார்களாம்.அகலப் பாதை திறக்கப்பட்டு, இரு பாசஞ்சர் ரயில்களும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கியதுதான் மிச்சம், மக்களுக்கான குறைந்தபட்ச வசதிகள்கூட ரயில் நிலையங்களில் இல்லை என்பதற்காக, யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. பல ரயில் நிலையங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லை. கழிப்பறை இல்லை. மூன்றரை ஆண்டாக இதைக்கூட ஆர்.வி.என்.எல். நிர்வாகம் ஏன் செய்யவில்லை என்று கேட்பதற்கும் ஆளில்லை.
பணிகளை முடித்து ரயில்வேயிடம் ஒப்படைத்து விட்டதாம் ஆர்விஎன்எல். இந்நிலையில் ரயில் நிலையங்களில் பணியாற்ற போதிய ஊழியர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை.இந்த மார்க்கத்தில் பகல் நேரத்தில் இயக்கப்படும் ஒரே ரயிலான திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது. ஆனால் இது கடலூர், திருப்பாப்புலியூர், பண்ருட்டி, தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்காது என்று ரயில்வே அறிவித்து இருப்பது வியப்பாக உள்ளது. இது கடலூர் மாவட்ட மக்களுக்காக விடப்பட்ட ரயிலாகத் தெரியவில்லை என்கிறார்கள் மக்கள்.இந்த ரயில் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்கும். ஆனால் கடலூர் நகரின் பெரும்பகுதி மக்கள் ரூ. 100 ஆட்டோவுக்குக் கொடுத்து இந்த ரயில் நிலையம் செல்ல வேண்டும்.கடலூரில் இருந்து பஸ்களில் சென்னை செல்வோரில் 80 சதவீதம் பேர் தாம்பரத்தில் இறங்கி விடுவர். ஆனால் கடலூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் தாம்பரத்தில் நிற்காது. ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள், புகழ்மிக்க பாடலீஸ்வரர் கோயில், திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் ஆகியவற்றுக்கு இறங்கிச் செல்லும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில், சோழன் எக்ஸ்பிரஸ் நிற்காது என்றால், இது யாருக்காக விடப்பட்ட ரயில்? மயிலாடுதுறை- விழுப்புரம் இடையே விடப்பட்ட பாசஞ்சர் ரயில்கள் எல்லாம் மாணவர்களுக்காகவும் அலுவலகம் செல்வோருக்காகவும் விடப்பட்டவை.
ஆனால் தற்போது இயக்கப்படும் இரு பாஞ்சர் ரயில்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் அலுவலகங்கள் செல்வோருக்கும் வசதியாக இல்லை என்கிறார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ரயில்கள் இல்லாததால், தனியார் மற்றும் அரசு பஸ்களுக்கு கிடைத்து வந்த அபரிமிதமான வருவாய், ரயில் விடப்பட்டும் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக யாரோ நிகழ்த்தி இருக்கும் சதித் திட்டத்தின் விளைவே, இத்தகைய மக்களுக்கு எதிரான காலஅட்டவணை என்கிறார்கள் பொதுமக்கள்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய