உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 31, 2011

கடலூரில் பழுதடைந்த சாலைகளால் மக்கள் சிரமம்: அமைச்சர் எம்.சி. சம்பத் உத்தரவு மழையில் நனைகிறது


கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையின் பரிதாப நிலை. (வலது படம்) தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல்
கடலூர்:

          கடலூரில் பழுதடைந்துள்ள சாலைகளால், மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டு, 4-வது ஆண்டாக வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது கடலூர் நகரம். நகரின் மையப் பகுதியில் செல்லும் 12 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சிதைந்து கிடக்கிறது. 

                இதனால் கடலூர் நகர மக்களும் கடலூர் வழியாக செல்லும் பயணிகளும் படாத பாடுபட்டு வருகின்றனர். முதுநகர் மணிக்கூண்டு முதல், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரையிலான 12 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை தாற்காலிகமாகக் கூட சீரமைக்கப்படாமல் இருப்பதால், இச்சாலையைப் பயன்படுத்தும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பலர் கீழேவிழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. புதுப்பாளையம் பிரதானச்சாலை, வண்டிப்பாளையம் சாலை, பஸ்நிலையச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் சிதைந்து கிடக்கும் நிலையில், 12 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை மட்டுமாவது, 3 நாள்களுக்குள் சீரமைக்குமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சர் எம்.சி. சம்பத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். 

              ஆனால் அதன்படி, சாலை சீரமைப்புப் பணி வேகமாக நடைபெறவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சாலை சீரமைக்கப்படுகிறது. பிரதானச் சாலைகள் பலவும் பழுதடைந்துள்ளதால், அவற்றை பயன்படுத்தும் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து உள்ளது. பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வழக்கத்தைவிட 30 நிமிடம் முன்னதாகவே வீடுகளில் இருந்து புறப்பட்டாக வேண்டிய நிலை உள்ளது. 

           மேலும், கடலூர் நகரின் பிரதான அங்காடியான, 400-க்கும் மேற்பட்ட கடைகள் நிறைந்த திருப்பாப்புலியூர் பான்பரி மார்கெட்டுக்குள், பொதுமக்கள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு, சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. ஆக்கிரமிப்பு, அசுத்தத்தின் உச்சத்தில் காணப்படும் இந்த மார்க்கெட்டின் நிலை, மழைக்காலத்தில் மக்களை பெரிதும் பரிதவிக்க வைக்கிறது. அடிப்படை வசதியில் கடலூர் நகர மக்களின் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டும் ஒரே இடம் பான்பரி மார்க்கெட் தான். இதை சீர்படுத்த யார் துணிவுடன் முன்வருவார்களோ அவர்கள்தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாகவும், ஊதியம் பெறத் தகுதியுள்ள அலுவலர்களாகவும் இருக்க முடியும் என்பதே சிதம்பரம் நகர் மக்களின் கருத்தாக உள்ளது. 












Read more »

கடலூர் மாவட்டத்தில் கனமழை

கடலூர்:'

         கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. 

             மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான பெருமாள் ஏரி நிரம்பி வழிகிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், கடலூர் மாவட்டத்திலும், கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏ ரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. வீராணம் ஏரியில் 44 அடிவரை நீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. கீழ் அணையில் இருந்து வடவாறு வழியாக, வீராணத்துக்கு நீர் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. வீராணத்தின் பாசன வாய்க்கால்கள் மூடப்பட்டு உள்ளன. 

              தொடர் மழை பெய்து வருவதால், கடைமடைப் பகுதிகளில் நாற்று நடவுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டெல்டா பகுதிகளில் ஏற்கெனவே நடவு செய்யப்பட்ட வயல்களுக்கும் மழைநீரே போதுமானதாக உள்ளது. மாவட்டத்தின் பிரதான ஏரிகளில் ஒன்றான பெருமாள் ஏரியின் நீர் மட்டம் ஞாயிற்றுக்கிழமை 6.5 அடியாக இருந்தது (மொத்த உயரம் 6.5 அடி). ஏரிக்கு வரும் நீர் முழுவதும் பரவனாறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மற்ற நீர்நிலைகளில் ஞாயிற்றுக்கிழமை நீர் மட்டம் வருமாறு: 

             கோமுகி அணை 44 அடி (அதிகபட்ச உயரம் 46 அடி), மணிமுத்தாறு 21.9 அடி (36 அடி), வாலாஜா ஏரி 4.5 அடி (5.5 அடி) வெலிங்டன் ஏரி 15 அடி (29.78 அடி). 

                மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். புருஷோத்தமன் நகர், கூட்டுறவு நகர் மரியசூசை நகர், கோண்டூர் மற்றும் பாதிரிக்குப்பம் பகுதிகளில் சில நகர்கள், கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளின் கரைகளில் அமைந்துள்ள நகர்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

மாவட்டத்தில் மழை அளவு: 

           கடலூர் மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு, மில்லி மீட்டரில் வருமாறு: பரங்கிப்பேட்டை 75, கடலூர் 53, காட்டுமன்னார்கோயில் 36, ஸ்ரீமுஷ்ணம் 22, அண்ணாமலை நகர் 21.4, கொத்தவாச்சேரி 21, காட்டுமயிலூர் 18, குப்பநத்தம் 17.2, வேப்பூர் 15, லால்பேட்டை 14, விருத்தாசலம் 12.2, பெலாந்துரை 12, சிதம்பரம் 10, கீழ்ச்செறுவாய், சேத்தியாத்தோப்பு, புவனகிரி தலா 6, மேமாத்தூர் 5, பண்ருட்டி 4.8, தொழுதூர் 4.2.




















Read more »

ரயில் திருட்டை தடுக்க 24 மணி நேர இலவச உதவி மையம்

              ரயிலில் பயணிகளிடம் திருட்டு போவதை தடுக்க வேண்டி ரெயில்வே போலீசார் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை தொடங்கி உள்ளனர்.

            சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். தென்மாவட்டம் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்தும் சென்னை வரும் பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ரெயில்களில் பயணிகளின் பொருட்கள் திருடு போவதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

              இதுகுறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை ரெயில்வே போலீசார் தொடங்கி உள்ளனர். ரெயில் சென்று கொண்டிருக்கும் போது பயணிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் உடனே 99625-00500 என்ற செல்போன் எண்ணை டயல் செய்து ரெயில்வே போலீஸ் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இது இலவச இணைப்பு ஆகும்.

              தற்போது ரெயில்வே போலீசாரின் இந்த இலவச உதவி மைய எண் குறித்த நோட்டீசு ரெயில்களில் ஒட்டப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில்களிலும் இந்த உதவி மைய எண் ஒட்டப்படுகிறது. இந்த உதவி மையம் இன்று முதல் செயல்படுகிறது. குறிப்பாக பயணிகளிடம் திருட்டு போவதை தடுக்க வேண்டி இந்த உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.














Read more »

கடலூர் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் 13 இடங்களை அ.தி.மு.க.கைப்பற்றியது

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் 13 துணைத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது. தி.மு.க., 2, காங்., ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் வடலூர், பரங்கிப்பேட்டை இரண்டை தவிர மற்ற 14 பேரூராட்சிகளின் தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியது. இந்நிலையில் நேற்று நடந்த துணைத் தலைவர் தேர்தலில் பரங்கிப்பேட்டை, வடலூர் பேரூராட்சிகளில் தி.மு.க.,வும், புவனகிரியில் காங்., கட்சி கைப்பற்றியது. மற்ற 13 பேரூராட்சிகளிலும் துணைத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க.,வே கைப்பற்றியது. 

அதன் விபரம் வருமாறு:

மேல்பட்டாம்பாக்கம்: 

              பேரூராட்சி 15 வார்டில் அ.தி.மு.க., 4, தி.மு.க., 3, தே.மு.தி.க., 1, பா.ம.க., 1, சுயேச்சை 6 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். நேற்று நடந்த துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் செல்வி, தி.மு.க., சுகுமார் போட்டியிட்டனர். தலைவர் உட்பட 16 பேர் ஓட்டளித்தனர். 13 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க., செல்வி துணைத் தலைவராக வெற்றி பெற்றார்.

புவனகிரி: 

           பேரூராட்சி தலைவராக அ.தி.மு.க., வள்ளி வெற்றி பெற்றார். நேற்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் உஷாராணியும், காங்., சார்பில் ராம்குமார் மனுத் தாக்கல் செய்தனர். போட்டியிருந்ததால் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. தலைவர் மற்றும் 18 கவுன்சிலர்கள் ஓட்டு போட்டனர். பதிவான 19 ஓட்டுகளில் காங்., ராம்குமார் 10 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி கலைப்பாண்டி வழங்கினார்.
 
பரங்கிப்பேட்டை: 

            பேரூராட்சி தலைவராக தி.மு.க., முகமது யூனுஸ் வெற்றி பெற்றார். 18 வார்டுகளில் தி.மு.க., 8, அ.தி.மு.க., 2, சுயேச்சைகள் 8 பேர் வெற்றிப்பெற்றனர். நேற்று நடந்த துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் கணேசன், தி.மு.க., சார்பில் நடராஜன் போட்டியிட்டனர். ஒரு உறுப்பினர் தேர்தலில் பங்கேற்கவில்லை. பதிவான 18 ஓட்டுகளில் தி.மு.க., நடராஜன் 13 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி ஜீஜாபாய் சான்றிதழ் வழங்கினார்.

கிள்ளை: 

             அ.தி.மு.க., சார்பில் காத்தவராயசாமி, பொன்மொழி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். 15 கவுன்சிலர் மற்றும் தலைவர் என மொத்தமுள்ள 16 பேரில் அ.தி.மு.க., உறுப்பினர் விஜயலட்சுமி தேர்தலில் பங்கேற்கவில்லை. பதிவான 15 ஓட்டுகளில் இரண்டு ஓட்டுகள் செல்லாதவை. மீதமுள்ள 13 ஓட்டுகளில் பொன்மொழி 9 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அலுவலர் முகம்மது மன்சூர் சான்றிதழ் வழங்கினார்.

தொரப்பாடி: 

             அ.தி.மு.க., வைச் சேர்ந்த 14வது வார்டு உறுப்பினர் கனகராஜ் மனுத்தாக்கல் செய்தார். வேறு எவரும் மனுத்தாக்கல் செய்யாததால் கனகராஜ் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி ராணி அறிவித்தார்.

சேத்தியாத்தோப்பு: 

              தேர்தல் அலுவலர் ஆறுமுகத்திடம் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 2வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் மனுத்தாக்கல் செய்தார். வேறு எவரும் மனுத் தாக்கல் செய்யாததால், ராமலிங்கம் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

திட்டக்குடி: 

             பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மணி மனுத் தாக்கல் செய்தார். வேறு எவரும் மனுத்தாக்கல் செய்யாததால் மணி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் குப்புசாமி அறிவித்தார்.

பெண்ணாடம்: 

          அ.தி.மு.க., செல்வி மட்டுமே மனுத் தாக்கல் செய்ததால், போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் ராம்குமார் அறிவித்தார். அவருக்கு சேர்மன் மதியழகன் வாழ்த்து தெரிவித்தார்.

குறிஞ்சிப்பாடி: 

           அ.தி.மு.க., நகர செயலரும், ஆறாவது வார்டு உறுப்பினரான ரஜினிகாந்த் மட்டுமே மனுத் தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி ஜோதிமாணிக்கம் அறிவித்தார்.

காட்டுமன்னார்கோவில்: 

            அ.தி.மு.க., சாமிநாதனும், லால்பேட்டை பேரூராட்சியில் மனித நேய மக்கள் கட்சி அகமது அலி போட்டியின்றி துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மங்கலம்பேட்டை: 

        சுயேட்சை உறுப்பினர் ஜியாவுதின் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
ஸ்ரீமுஷ்ணம்:

        அ.தி.மு.க., சின்னப்பன் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
கங்கைகொண்டான்: 

      அ.தி.மு.க., ராஜ்மோகன் போட்டின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
வடலூர்: 

      தி.மு.க.,வைச் சேர்ந்த விஜயகுமாரி போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அண்ணாமலைநகர்:

          அ.தி. மு.க., செந்தில்குமார் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 




















Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் சனிக்கிழமை நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

 காட்டுமன்னார்கோயில் - வை.சுவாமிநாதன் (அதிமுக).
அண்ணாமலை நகர் - கே.செந்தில்குமார் (அதிமுக).
சேத்தியாத்தோப்பு - பி.ராமலிங்கம் (அதிமுக).
புவனகிரி -  ந.ராம்குமார் (காங்கிரஸ்).
பரங்கிப்பேட்டை - ஆர்.நடராஜன் (திமுக).
கிள்ளை - பொன்மொழி (அதிமுக)
ஸ்ரீமுஷ்ணம் - பி.சின்னப்பன்.
லால்பேட்டை - அகமதுஅலி (மனிதநேய மக்கள் கட்சி).
மங்கலம்பேட்டை - அ.ஜியாவுதின் (சுயேச்சை).
கெங்கைகொண்டான் - பி.ராஜ்மோகன் (அதிமுக).
குறிஞ்சிப்பாடி - ஆர்.ரஜினிகாந்த் (அதிமுக).
வடலூர் - விஜயகுமாரி (திமுக).
திட்டக்குடி - மணி (அதிமுக).
பெண்ணாடம் - செல்வி சேகர் (அதிமுக). 
தொரப்பாடி - கனகராஜ்.
மேல்பட்டாம்பாக்கம் - செல்விஜோதி.







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior