உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 19, 2010

அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம்



             தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, "ஸ்மார்ட் கிளாஸ்' எனும் டிஜிட்டல் வகுப்பறை திட்டத்தை அறிமுகம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 412 பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

              தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டம் அறிமுகம் செய்துள்ள செயல் வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி ஆகிய கல்வி முறைகளால் ஈர்க்கப்பட்டுள்ள மாணவர்கள், பாடங்களை ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் கற்கின்றனர். இந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையும் அறிமுகமாகியுள்ளதால், கல்வித் தரம் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. இதனால், தனியார் பள்ளி மாணவர்களில் பலர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் அடுத்த முயற்சியாக, வகுப்பறைகளில், "ஸ்மார்ட் கிளாஸ்' எனும் டிஜிட்டல் வகுப்பறை திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில இணை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது

                  புத்தகத்தைப் பார்த்து பாடம் படிப்பதை விட, செயல் வழி மற்றும் "விஷுவல்' முறையில் படிப்பது அதிக பலன் அளிக்கிறது. வெளிநாட்டு பள்ளிகளில் இந்த திட்டம் மூலம் படிக்கும் மாணவர்கள் புத்திக்கூர்மையுடன் விளங்குகின்றனர். தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விஷுவல் கல்வி வழங்கும் நோக்கத்துடன், "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் துவக்கப்படுகிறது.

                  முதற்கட்டமாக, தமிழகம் முழுவதும் ஒன்றியத்துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 412 பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை நடத்த தேர்வு செய்யப்படும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்படும். சமச்சீர் கல்வி முறையுடன் இணைத்து பாடங்கள் கற்பிக்கப்படும். அனைத்து விஷயங்களும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவு செய்யப்பட்டு விடும். அதன் பின், நடப்பு கல்வியாண்டிலேயே இத்திட்டம் துவங்கப்படும்.

                   412 பள்ளிகளில் இத்திட்டம் பெறும் வெற்றியின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் படித்து 10ம் வகுப்பு முடித்து வெளியேறும் மாணவன், கம்ப்யூட்டர் கல்வியில் ஆர்வமிக்கவனாக வெளியேறுவான். உயர்கல்வியில் கம்ப்யூட்டர் தொடர்பான துறைகளில் மிளிர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் கைகொடுக்கும். இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி கூறுகையில், 

                 ""ஒன்றியங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தும் பள்ளிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உள்கட்டமைப்பு வசதியின் அடிப்படையில் பள்ளி தேர்வு செய்யப்படும். இந்தியாவில் அரசுப் பள்ளிகளில் தமிழகத்தில் தான், "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களால், எதிர்காலத்தில் சர்வதேச அளவுக்கு அனைத்து துறைகளிலும் எளிதில் வெற்றி பெற முடியும்,'' என்றார்.

வகுப்பறைகள் "டிஜிட்டல் மயம்'

              திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபா மனோன்மணி கூறுகையில், ""இத்திட்டம் தற்போதைய பாடத்திட்டத்தின்படி செயல்படுத்தப்படும். இதற்கான பாடங்கள், "இன்டர்ஆக்டிவ் போர்டில்' தயாரிப்பின்போதே புகுத்தப்படும். பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு, மாணவர்களே திரையில் விடையை கண்டுபிடிக்க முடியும். ஜீரண மண்டலம் போன்ற பாடங்களை அசையும் படங்களுடன் வண்ணமயமாக சினிமா போல் திரையில் காண முடிவதால், பாடங்கள் எளிதில் மனதில் பதியும். தேர்வுக்கென தனியாக படிக்க வேண்டியதில்லை; அனைத்தையும் தமிழில் படிக்க முடியும் என்பது தான் இதன் சிறப்பு,'' என்றார்.

                   ""இத்திட்டத்தை அரசுப் பள்ளி வகுப்பறையில் துவக்குவதற்கான கம்ப்யூட்டர், "இன்டர்ஆக்டிவ் ஒயிட் போர்டு,' ஆம்பிளிபையர், எல்.சி.டி.புரொஜக்டர், டிஜிட்டல் கேமரா வாங்கப்படவுள்ளன. மைக்ரோசாப்ட், இன்டெல், எஜுகாம்ப் போன்ற நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது,'' என இணை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

Read more »

இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்

                நம் உடலைத்தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக திகழ்கிறது கொய்யாப்பழம். பச்சைப்பசேலென்ற நிறத்திலும், ஒருசில வகைகள் மஞ்சள் நிறத்திலும் உள்ளன.

               வெப்பம் மிகுந்த நிலங்களில் விளையும் கொய்யப்பழங்கள் ருசியில் முதல் இடத்தை பிடிக்கின்றன.
கொய்யாவின் பிறப்பிடம் அமெரிக்கா. இதில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது விசேஷம். வெப்பம் மிகுந்த நாடுகளில் தற்போது அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. தற்போது கொய்யாப்பழ சீசன் என்பதால் அதிக அளவில் கொய்யாப்பழம் வந்து குவிந்துள்ளன.

கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவ மனையின் இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம் கூறியது:-

             மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது கொய்யாப் பழம். சிலருக்கு தொடர்ச்சியாக தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாக தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம். இப்பழம் ரத்தத்தை சுத்திகரித்து தலைவலிக்கான மூலகாரணத்தை சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறைய சாப்பிடலாம்.

                    நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும். கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாக சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரண கோளாறு, பேதி போன்ற வற்றை குணப்படுத்தும்.

                   கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய் களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா கொழுந்து மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலை கட்டுப்படுத்தும். கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

                  கொய்யாவில் சிறிதளவு கொழுப்பு, புரோட்டின் உள்ளன. உடலில் ஏற்படும் காயங்களுக்கு இதன் இலையை அரைத்து போட்டால் காயம் குணமாகும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் பெரிதும் உதவுகின்றன. கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய்வலிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு கொடுக் கப்படுகிறது.

                 கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

                கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது. புகை பழக்கம் உடைய வர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யா சீராக்குகிறது. அனைத்து நோய்களையும் இது தீர்ப்பதால் மேற்கத்திய நாடுகளில் “டாக்டர் கொய்யா” என்று அழைக்கிறார்கள்.இவ்வாறு டாக்டர் திருத்தணிகாசலம் கூறினார். 
 
               கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் கொய்யாப்பழங்கள் கொய்யாப்பழ சீசன் தொடங்கி விட்டதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொய்யாப்பழ வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 100 டன்¢ கொய்யாப்பழங்கள் கர்நாடகம் மற்றும் விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து வருகிறது. இவற்றில் கர்நாடக கொய்யா பழங்கள் முதல் தரமாக கருதப்படுகிறது. இவை கிலோ ரூ.15-க்கு விற்கப்படுகிறது. விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளை சேர்ந்த கொய்யாப்பழங்கள் கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதில் பெரிதாக இருக்கும் பழங்கள் ரூ.11-க்கு விற்கப்படுகிறது.

                     இப்பழங்களை வாங்க மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்பழத்தின் வரத்து அதிகரிப்பால் மற்ற பழங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கோயம்பேடு வணிக வளாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more »

பண்ருட்டி அருகே விசித்திரம் தங்க நகையை மட்டுமே காணிக்கையாக செலுத்தும் கோவில் திருவிழாவின்போது கர்ப்பிணி பெண்கள் ஊரில் தங்க தடை



பண்ருட்டி:
             பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் சிறு கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான செல்லி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டு களுக்கு ஒரு முறை 8 நாட்கள் கோவில் திருவிழா நடைபெறும். விழா முடிந்ததும் கோவில் கருவறையில் அம்மன் சிலையை தோண்டி புதைத்து விடுவார்கள். 5 ஆண்டு முடிந்தபின் மீண்டும் சிலையை தோண்டி எடுத்து திருவிழா நடத்துவார்கள்.

               இந்த கோவில் திருவிழாவின் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் தலைப்பிள்ளைகள் ஊரில் தங்கக்கூடாது என்று நிபந்தனை உள்ளது.  மேலும் இந்த கோவிலில் தங்கநகை மற்றும் தங்க நாணயங்களை மட்டுமே பக்தர்கள் காணிக்கையாக செலுத்த வேண்டும். இந்த விசித்திரமான கோவிலின் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. கோவில் கருவறையில் புதைக்கப்பட்டிருந்த சிலை ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. 
              பின்னர் அம்மன் சிலையை புனித நீரால் நீராட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் தங்க நகைகளை காணிக்கையாக செலுத்தினார்கள். திருவிழாவையொட்டி கர்ப்பிணி பெண்கள் மற்றும் தலைப்பிள்ளைகள் ஊரை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.

செல்லி அம்மன் கோவில் திருவிழாவின் சிறப்பு நிகழச்சி பற்றி பக்தர் ஒருவர் கூறும்போது:-

               செல்லி அம்மன் துடிப்பான தெய்வம். எனவே கோவில் திருவிழாவின் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் தலைப்பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வெளியூருக்கு அனுப்பி விடுகிறோம். 8 நாள் திருவிழா முடிந்தபின்னர் தான் அவர்கள் மீண்டும் ஊருக்கு வருவார்கள். 8-வது நாள் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அன்று அம்மனுக்கு 8 கன்னிபெண்கள் சிறப்பு பூஜை செய்வார்கள். 
                மதியம் 12 மணிக்கு செல்லி அம்மன் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது யாரும் எதிரில் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அம்மன் வீதி உலா வரும்போது பக்தர்கள் ஆடு, கோழிகள் பலி கொடுப்பார்கள். இந்த கோவிலில் யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது. அப்படி படம் எடுத்தால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

சின்ன வெங்காயம் - பெரிய லாபம்: வேளாண் துறை ஆலோசனை


 
கடலூர்: 
 
             தற்போது விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம் என்று வேளாண் துறை பரிந்துரை செய்து உள்ளது. 
 
              இந்தியாவின் முக்கிய காய்கறிகளில் சின்ன மற்றும் பெரிய வெங்காயம் முக்கிய இடத்தை வகிக்கிறது. நாட்டின் மொத்த காய்கறி உற்பத்தியில் வெங்காயம் 10.5 சதவீதம். தமிழ்நாட்டில் 35 ஆயிரம் ஹெக்டேரில் 3.05 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 75 சதவீதம் சின்ன வெங்காயம். கடலூர் மாவட்டத்தில் நாணமேடு, சுபஉப்பளவாடி, கண்டக்காடு, சிறுபாக்கம், எஸ்.நாரையூர், ரெட்டாக்குறிச்சி, எஸ்.புதூர் ஆகிய கிராமங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. 
 
                சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தகவல் மையம், கடந்த 10 ஆண்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை நிலவரத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் நா.தனவேல், கீழ்காணும் பரிந்துரைகளை விவசாயிகளுக்கு அளித்து உள்ளார். 
 
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் நா.தனவேல் அளித்துள்ள பரிந்துரை விவரம்: 
 
            ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வெங்காய வரத்து அதிகம் இருக்கும். இதனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் வெங்காயத்தின் விலை, கர்நாடக வெங்காய வரவால் பாதிக்கும். எனவே தமிழக வெங்காய விவசாயிகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யும் வகையில், தற்போது வெங்காய விதைப்பை மேற்கொள்ளலாம். 
 
                    அக்டோபர், நவம்பர் மாதங்களில் இங்கு விலை ஏறுமுகத்தில் இருக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி சந்தை தகவல் மைய ஆய்வு முடிவுகளின்படி, தரமான வெங்காயத்தின் விலை வரும் அக்டோபர் முதல் நவம்பர் வரை கிலோவுக்கு 13 முதல் 16 வரை இருக்கும். சுமாரான வெங்காயம் கிலோ 10 முதல் 13 வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தற்போது வெங்காயம் பயிரிடலாம். விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை விதைத்தால் பயிர் செலவு குறையும். ஆனால் இந்த வெங்காயம் சேமிக்க உகந்ததல்ல என்றும் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Read more »

விதை நெல் பாதுகாப்புக்கு புதிய ஏற்பாடு


விதை நெல் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள தகரப் பத்தையம்.
 
சிதம்பரம்: 

           பாரம்பரிய நெல் மற்றும் சிறு தானியங்களை பாதுகாக்க புதிய வகை தகரப் பத்தையம் தற்போது வேளாண் இடுபொருள் சந்தைகளில் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு அதிகப்படியாக விற்பனை செய்யப்படுகிறது. 

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலை வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது: 

           பாரம்பரிய மரப் பத்தையங்களுக்கு மாற்றாகவும், குறைந்த செலவில் விதை நெல் மற்றும் தானியங்களை பாதுகாக்கும் வகையிலும் இந்த புதிய வகை தகரப் பத்தையம் தற்போது வேளாண் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்புதிய தானிய சேமிப்பு முறையில் மரப் பத்தையம் அல்லது மரக் களஞ்சியத்துக்கு மாற்றாக சிறிய அளவு வடிவமைப்பில் இந்த தகரப் பத்தையம் உருவாக்கப்பட்டுள்ளது.

            புதிய வகை தகரப் பத்தையத்தில் விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்த பின் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாத நன்றாக முதிர்ந்த தானியங்களை சேகரித்து சுத்தப்படுத்தி, நன்றாக காய வைத்து பின்பு வேப்ப இலை, நொச்சி இலைகள் கலந்து தகரப் பத்தையத்தில் சேகரித்து வைக்கலாம். பின்னர் மாதம் ஒருமுறை சேமிப்பு பூச்சிகள் தாக்குதல் பற்றி கண்காணிப்புப் பணிகளை தகரப் பத்தையத்தின் உள்ளேயும், வெளியேயும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

       நிலத்திலிருந்து அல்லது தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு மண் தொடர்பு இல்லாதவாறு தகரப் பத்தையத்தை வைத்துக்கொள்ள வேண்டும். தகரப் பத்தையத்துக்கு கீழே உள்ள திறப்பு வழியாக தானியங்களை எளிதாக எடுத்து சோதித்து அறிந்து மீண்டும் தகரப் பத்தையத்தின் மேல் பகுதியின் வழியாக உள்ளே போடலாம். குறைந்த அளவு வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள இந்த தகரப் பத்தையம் குடியிருப்பு பகுதியில் இடத்தை அடைக்காது. 

                  குறைந்தச் செலவில் அதிக காலத்துக்கு சிறு மற்றும் குறு விவசாயிகள் உணவு தானியங்களை எளிதாக பாதுகாத்து நெடுங்காலத்துக்கு தொடர்ச்சியாக சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும் விவசாயிகளிடம் உள்ள பூச்சி மற்றும் நோய் தாக்குதலை எதிர்கொள்ளும் பாரம்பரிய நீண்ட ரக விதைகள், வட்டார அளவிலான நாட்டு ரக விதைகள், மருத்துவ குணம் கொண்ட உணவு தானிய ரகங்கள் ஆகியவற்றை தகரப் பத்தையத்தின் மூலம் எளிதாக பாதுகாக்க முடியும். எனவே தமிழக விவசாயிகள் குறைந்த செலவிலான இந்த புதிய வகை தகரப் பத்தையத்தை பயன்படுத்தி பயன் பெறலாமே.

Read more »

பண்ருட்டியில் பாதுகாப்பற்ற நிலையில் மாணவர் விடுதி


சிறுகிராமம் கிராமத்தில் உள்ள மாணவர் விடுதி. (உள்படம்) விடுதிக்கு வெளியே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தரைத் தொட்டி.

பண்ருட்டி:

            அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் சிறுகிராமம் மாணவர் விடுதி இயங்குவதால் அதில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

                  பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சிறுகிராமம் ஊராட்சியில் 3000-ம் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுகிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக, இக்கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி கட்டப்பட்டது.

          இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2  வரையிலும் உள்ள 52 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.÷விடுதியைக் கட்டிய ஒப்பந்ததாரர் ஆழ்துளை கிணற்றை மிக ஆழமாக தோண்டாததால் தண்ணீரின்றி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மாணவர்களின் தண்ணீர் தேவைக்காக விடுதி அருகே பெரிய தரைத் தொட்டியை கட்டி ஊராட்சி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் இருந்து மின் மோட்டார் மூலம் விடுதியின் மேல் உள்ள தொட்டியில் தண்ணீர் ஏற்றி வருகின்றனர். 

            இந்தத் தண்ணீர்தான் உணவு சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பற்றச் சூழலில் திறந்த வெளியில் உள்ள இத்தொட்டியில் குப்பைகள், தவளை,  பாம்பு ஆகியவை உள்ளே விழுந்துள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இந்த விடுதியில் சுற்றுச் சுவர் இல்லாததால், விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் சமூக விரோதிகளால் மாணவர்களின் பொருள்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும் நிலவுகிறது.÷விடுதிக்கு செல்ல சரியான வழி இல்லை. 

              இருக்கும் வழியிலும் களிமண் கொட்டப்பட்டுள்ளதால் மழைக்காலத்தில் மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். விடுதியின் வெளியே உள்ள சோடியம் விளக்கு பல வாரங்களாக எரியவில்லை எனவும், இதனால் இருள் சூழ்ந்த பகுதியில் தங்கி இருப்பதாகவும், விடுதியில் இரவு காவலர் இல்லாததால் பாதுகாப்பு இல்லை எனவும் மாணவர்கள் கவலைப்படுகின்றனர். 

                      பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுற்றுச்சுவர், மின் விளக்கு, சாலை வசதி, இரவு காவலர் ஏதுமின்றி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விடுதி தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

இன்று உலக புகைப்பட தினம


        
           முதல் புகைப்படம் பதிவு செய்யப்பட்டு 196 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. 
 
          பாக்ஸ் வடிவில் கண்டுபிடிக்கப்பட்ட கேமரா, தற்போது டிஜிட்டலுக்கு மாறியிருக்கிறது. இதில், புகைப்படச்சுருள் பயன்படுத்திய கேமராக்கள் இன்று ஏறக்குறைய முற்றிலும் பயன்பாட்டிலிருந்து மறைந்துவிட்டன. சிறிய வகை டிஜிட்டல் கேமரா முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பயன்படுத்தும் கேமராக்கள் வரை எத்தனையோ வகை.  புகைப்படம் எடுப்பது என்பது இன்றைய சூழலில் மிகச் சாதாரணமாக மாறிவிட்டிருக்கிறது. 
 
                புகைப்படம் எடுப்பதே அரிதான செயலாக இருந்த காலம் மாறி, அனைவருமே இன்றைக்கு எளிதில் பயன்படுத்தும் தொழில்நுட்பமாக மாறியிருக்கிறது. முந்தைய கேமராக்களில் கை அசைவுகள் கூட, படத்தின் பதிவைக் குலைத்துவிடும். ஆனால் இன்று, கேமரா லென்ஸ் தொழில்நுட்பம் காரணமாக மிகக் குறைந்த வெளிச்சத்தில் கூட நல்ல படத்தைப் பதிவு செய்ய முடியும்.  முன்பு 6 அடி தொலைவுக்கு அப்பால் படம் எடுத்தால், படம் சரியாகப் பதிவாகாது. இன்றைக்கு "தொலைவு' என்பதே தொலைந்துபோனது.  வயது முதிர்ந்த, கை நடுங்கும் மூதாட்டி கூட தங்களது பேரக் குழந்தைகளை இன்றைய கேமராவில் பதிவு செய்ய முடியும். 

Read more »

No A(H1N1) flu in State, says Panneerselvam

CUDDALORE: 

             Health Minister M.R.K. Panneerselvam has categorically stated that there is no incidence of A(H1N1) flu in Tamil Nadu and 28 cases reported recently were carriers from outside the State.

            There was no need to panic and people should not give credence to rumours, he said on Tuesday. He was speaking at Vriddhachalam Government Hospital after inaugurating additional buildings constructed at a cost of Rs.1.65 crore. The Minister, however, said that the State government had taken all precautionary measures against A(H1N1) flu, including timely medical help wherever required. Medical teams had been deployed along State boundaries to screen those entering Tamil Nadu as was done last year. The World Bank has promised assistance of Rs.600 crore for improving facilities at government hospitals this year.

Read more »

First year Engineering classes begin

CUDDALORE:

           First year classes for B.E., B. Tech and M.C.A. courses at Krishnasamy College of Engineering and Technology here began on Wednesday.

           Chairman of the college K. Rajendran gave an overview of the performance of the college from its inception and facilities available at the institution. R. Anand, chief executive officer, welcomed the freshers and said that bright career prospects awaited them if they fully utilised the opportunities made available to them. K. Kathiersan, professor of Marine Biology, Faculty of Marine Sciences, Annamalai University, K.Ethirajulu, director, and P.Sivagnanam, principal, spoke.

Read more »

Succumbs to injuries

CUDDALORE: 

           Thirty-five-year-old Ravi of Neyveli, who was suspiciously moving around in a cashew grove at Sathipattu near here, was given a chase by policemen on Wednesday. While running away, Ravi fell down and sustained severe injuries, sources said. When policemen took him to hospital, he was declared “brought dead.” The police are verifying his antecedents.

Read more »

B.E., M.C.A classes begin

CUDDALORE: 
      
              Vice-Chancellor of Annamalai University M. Ramanathan has said in a statement that first year classes forB.E and M.E (all branches), M.C.A., M.Sc (engineering—five-year integrated course) programmes, B.Sc (Agriculture) and B.Sc (horticulture) for 2010-11 will begin on Friday.

Read more »

நெய்வேலியில் பத்திரிகை ஆசிரியர் தாக்கு: போலீசார் வழக்கு பதிவு

நெய்வேலி: 

             நெய்வேலியில் பத்திரிகை ஆசிரியரின் இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கித் தாக்க முயன்ற கும்பலை, டவுன்ஷிப் போலீசார் தேடி வருகின்றனர். 

                வடக்குத்து ஊராட்சிக்குட்பட்ட வேலுடையான்பட்டைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர், "அரசியல் ஒற்றன்' என்ற மாத இதழின் பொறுப்பு ஆசிரியராக உள்ளார். இவருக்கும் இவரது வீட்டின் உரிமையாளர் சரோஜாவுக்கும் முன்விரோதம் உள்ளது. இது தொடர்பாக வழக்கும் உள்ளது. இந்நிலையில் செந்தில்குமார், டவுன்ஷிப் போலீசில், சரோஜாவின் கணவர் மணிமாறன் மற்றும் லட்சுமணன், கார்த்திக், மீனா மற்றும் சிலர் வீட்டிற்குள் புகுந்து  இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி பாக்கெட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு இரும்பு பைப் மற்றும் கத்தியால் தாக்க முற்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து தான் தப்பி வந்து விட்டதாகவும் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'

கடலூர்: 

             குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை தன் மனைவி இல்லை என, கோர்ட்டில் மறுத்த அரசு ஊழியருக்கு செருப்படி விழுந்தது. 

             இச்சம்பவம் கடலூர் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் டி.குமராபுரத்தைச் சேர்ந்தவர் அருள் (50). வரக்கால்பட்டு மின் அலுவலகத்தில் லைன் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.  இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் முதல் திருமணத்தை மறைத்து விழுப்புரம் மாவட்டம் அந்தராசிபாளையம் விஜயலட்சுமி (35) என்பவரை மயிலம் கோவிலில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

               இவருக்கும் 9 வயதிலும், 5 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அருள் அலுவலகம் தொடர்பான அனைத்து ஆவணங்களிலும், முதல் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சேர வேண்டும் என வாரிசு உரிமையை எழுதி வைத்துள்ளார். இதனையறிந்த விஜயலட்சுமி, அருளைத் திருமணம் செய்து  இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என ஆதாரங்களுடன், கடலூர் கலெக்டர் சீத்தாராமனிடம் புகார் கொடுத்தார்.  இது குறித்து, கடலூர் மாவட்ட முதன்மை தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். 

               இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. விஜயலட்சுமி தனது மனைவி இல்லை என விசாரணையின் போது அருள் கூறினார்.  பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அருள், வீட்டிற்குச் செல்ல கலெக்டர் அலுவலகம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வெளியே நின்றிருந்த விஜயலட்சுமி, அருளிடம் சென்று, "கோவிலில் தாலி கட்டி, இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டு "நா கூசாமல்' கோர்ட்டில் என் மனைவி இல்லை என கூறுகிறாயே' எனக்கேட்டு செருப்பால் அடித்து, சட்டையைப் பிடித்து உலுக்கினார். 

                    அவமானமடைந்த அருள், விஜயலட்சுமியை உதறித் தள்ளி விட்டு மீண்டும் கோர்ட்டுக்குள் ஓடினார்.  மண்ணை வாரி விட்டு அழுத விஜயலட்சுமியை அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கொள்ளையன்;தடுக்கி விழுந்து சாவு

கடலூர்: 

               முந்திரித்தோப்பில் பதுங்கியிருந்த பிரபல கொள்ளையன், போலீசாரை கண்டு தப்பியோடிய போது தவறி விழுந்து இறந்தான். 

                விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் உள்ள கூட்டுறவு வங்கி பூட்டை உடைத்து இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து டி.ஐ.ஜி., மாசானமுத்து உத்தரவின் பேரில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பிரபல கொள்ளையன் கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த தாண்டவங்குப்பம் கலியன் மகன் கொற ரவி என்கிற ரவி (35), ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 

              அதன்பேரில் தனிப்படை போலீசார், கொற ரவியை தீவிரமாக தேடி வந்தனர்.  அவர், பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு முந்திரிக் காட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. பண்ருட்டி டி.எஸ்.பி., பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், தனிப்படை சப் - இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் நேற்று மாலை சாத்திப்பட்டு முந்திரிப்தோப்பை சுற்றி வளைத்தனர். போலீசைக் கண்ட கொற ரவி தப்பியோடிய போது, முந்திரி மரக்கிளை தடுக்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தார். 

                  ஆபத்தான நிலையில் இருந்த கொற ரவியை, தனிப்படை போலீசார் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ரவி இறந்து விட்டதாக கூறினார். காடாம்புலியூர் போலீசார்  விசாரிக்கின்றனர்.

Read more »

பண்ருட்டியில் "லிங்க் ரோடு' அமைப்பதில் இழுபறி : பணிகள் மந்தமாக நடப்பதால் மக்கள் அவதி

பண்ருட்டி : 

               பண்ருட்டி லிங்க் ரோடு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. 

               பண்ருட்டியில் கடலூர்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக (லிங்க் ரோடு) உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்கள் அனைத்தும்  நான்கு முனை சந்திப்பு வழியாக செல்லாமல் லிங்க் ரோடு வழியாக வெளியேறுவதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 100 அடி வரை அகலம் கொண்ட சாலையாக உருவாக்கப்பட்டது. 

                அதன்பின் லிங்க் ரோடு பராமரிக்ப்படாததால் 200க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் ஆக்கிரமித்ததன. இதனால் 100 அடி சாலை 10 அடி சாலையாக குறுகியது. கடந்த 1998ம் ஆண்டு கோர்ட் உத் தரவின்படி லிங்க் ரோடு  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அங்கு குடியிருந்தவர்களுக்கு மேலப்பாளையம் பகுதியில் மாற்று இடம் வழங்கப்பட்டது. 

                  அதன் பின் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் அனைத்தும்  லிங்க் ரோடு வழியாக சென்று வந்தன.  இதனால் கடலூர் சாலை மற்றும் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த லிங்க் ரோடு முறையான பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமானதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

                   நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திட லிங்க் ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த 2008ம் ஆண்டு ஜெர்மன் வங்கி கடனுதவி திட்டத்தின் கீழ் லிங்க் ரோட்டில் இருபுறமும் வடிகால் வசதியுடன் 9 மீட்டர் அகலத்தில் 1.3 கி.மீ., நீளத்திற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. 

                  இதற்கான மொத்த செலவான 2.9 கோடி ரூபாயில் 60 சதவீதத்தை ஜெர் மன் வங்கிக் கடனாகவும், 30 சதவீதம் மானியமாவும், 10 சதவீதம் நிதியை நகராட்சியின் நிதியில் செலவு செய்ய முடிவு செய்யப் பட்டது. இத்திட்டத்திற்கு நீண்ட இழுபறிக்குப் பின் நகராட்சி நிர்வாக ஆணையரின் ஒப்புதல் பெறப் பட்டு கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி டெண்டர் விடப் பட் டது. இந்தப் பணியை திண்டிவனம் வெங்கடேசன் என்பவர் எடுத்தார். கடந்த செப்டம்பர் 20ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின், பண்ருட்டி லிங்க் ரோடு பணியை துவக்கி வைத்தார்.

                        பணிகள் துவக்கி 11 மாதங்கள் ஆகியும் இருபுறமும் வடிகால் அமைக்கும் பணிகள் முழுமை பெறவில்லை. பணிகள் குறித்த தகவல் பலகை இல்லை. சாலையின் இருபுறங்களில்  மின் கம்பங்கள், டெலிபோன் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர், கோவில்கள், மண்மேடுகள் சமப்படுத்தாமல் கும்பகோணம் சாலை சந்திப்புப் பகுதியில்  ஐல்லிகள் பரப்பப் பட்டுள்ளது. 

                    இப்பணிகளை கடந்த மாதம் ஆய்வு செய்த சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் பிச்சை, செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக ஆணையர் தண்டபாணி ஆகியோர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். ஆனால் அதன் பின்பும் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் வடகிழக்குப் பருவமழை துவங்கினால் பணிகள் பாதிக்கும். அதற்குள் விரைந்து முடிக்க நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சிதம்பரத்தில் நாணய கண்காட்சி

சிதம்பரம் : 

                 கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு பெண்கள் பள்ளியில் தொல்லியல் மன்றம் சார்பில் கும்பகோணம் சோழ மண்டல நாணயவியல் கழகத்தின் நாணயம் மற்றும் ஸ்டாம்பு கண்காட்சி நடந்தது. 

                பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் துவக்கி வைத்தார். கண்காட்சியில் ஆங்கிலேயர் காலத்திய நாணயங்கள் முதல் தற்போதுள்ள நாணயங்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்கள் இடம் பெற்றன. பல்வேறு நாடுகளின் ஸ்டாம்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. 3,000க்கும் மேற்பட்ட மாணவிகள் கண்காட்சியை பார்த்து  நாணயங்கள் மற்றும் ஸ்டாம்புகள் பற்றி தெரிந்து கொண்டனர். சோழ மண்டல நாணவியல் கழக லட்சுமி நாணயம், ஸ்டாம்புகளை சேகரிக்கும் ஆர்வத்தை மாணவிகள் மத்தியில் ஏற்படுத்துவது குறித்து விளக்கமளித்தார்.

Read more »

மாநில ஹேண்ட்பால் போட்டி கடலூரில் 22ம் தேதி நடக்கிறது

கடலூர் : 

             கடலூரில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி வரும் 22ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.

இது குறித்து மாவட்ட ஹேண்ட்பால் சங்க செயலாளர் அசோகன் விடுத்துள்ள அறிக்கை: 

           கடலூர் மாவட்ட அளவிலான ஆண், பெண் இருபாலருக்கான ஹேண்ட்பால் போட்டி  வரும் 22ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. பங்கேற்கும் அணிகள் வரும் 22ம் தேதி காலை 8 மணிக்கு அண்ணா விளையாட்டரங்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

                    மாலையில் மாநில ஹேண்ட்பால் கழகச் செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பரிசு வழங்குகின்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை புரவலர் துரை பிரேம்குமார், தலைவர் சாமிகண்ணு, பொருளாளர் பூவராகமூர்த்தி, பயிற்றுனர்கள் கார்த்திகேயன் மற்றும் பாபு, வெங்கடேசன், செல்வராஜ், கார்த்திக், சங்கர், தினகர், செங்குட்டுவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Read more »

மத்திய ரிசர்வ் படை பிரிவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

            மத்திய ரிசர்வ் படை பிரிவிற்கு தமிழ்நாட்டிலிருந்து 581 இடங்களுக்கான தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

          ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளிலிருந்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரரிடமிருந்து மத்திய ரிசர்வு போலீஸ் படை பிரிவிற்கு  இருபாலருக்கும் சேர்த்து  581 பேர் தேர்வு செய்யப் படவுள்ளனர். இதற்கு  மெட்ரிக்குலேஷன் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.8.2010 அன்று 18 - 23 வயதிற்குள் இருக்க  வேண்டும். பழங்குடியினருக்கு 5 வயது தளர்த்தியும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கு 3 வயது தளர்த்தி சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

                   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 25ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். தகுதி பெறும் நபருக்கு பதிவுத் தபால் மூலம் தெரிவிக்கப்படும். தேர்வு நடக்கும் தேதி, இடமும் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். தேர்வு செய்யப்படுவோர் மருத்துவத் தேர்விற்கு உட்படுத்தப்படுவார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சுற்றுச் சூழல் பாதிப்பு: கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் :

             கடலூரில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

              சிப்காட் கெமிக்கல் கம்பெனிகள் வெளியிடும் கழிவுகளால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கிறது. சுற்றுச் சூழலை பாதிக்கும் கம்பெனிகள் மீது மாவட்ட மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என் பதை வலிறுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், டி.ஒய். எப்.ஐ., உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் கடலூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியலாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. 

                ஒன்றிய கவுன்சிலர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார்.  டி.ஒய். எப்.ஐ., நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஒன்றியத் தலைவர் நேதாஜி, மனோரஞ்சிதம், தனுசு, வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி, குமார் முன்னிலை வகித்தனர்.  துரைராஜ், வாலண்டினா, மருதவாணன், பால்கி, ராஜேஷ் கண்ணன், திருமுருகன், பாபு பங்கேற்றனர்.

Read more »

ஊதிய உயர்வு அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர் பேட்டி

கடலூர் : 

              டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் அறிவிப்பு திருப்தி அளிக்கவில்லை என அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.

இதுகுறித்து அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: 

                  காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் பல போராட்டங்கள் நடத்தினர். இறுதியாக கடந்த 11ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஒடுக்க நிர்வாகம் கவனம் செலுத்தியதால் நிர்வாகத்திற்கும், பணியாளர்களுக்கும் இடையே கசப்புணர்வு மேலோங்கியுள்ளது. 

              இந்நிலையில் முதல்வர் கருணாநிதி. டாஸ்மாக் மேர்பார்வையாளர்களுக்கு 500, விற்பனையாளர்களுக்கு 400, பார் உதவியாளர்ளுக்கு 300 ரூபாய் ஊதிய உயர்வும், ஊக்கத் தொகை 1.5 சதவீதம் என்பதை 1.75 சதவீதமாகவும், வைப்பு தொகைக் கான வட்டியை 3.5 சதவீதம் என் பதை 6 சதவீதமாக உயர்த்தி வழங் கப்படும் எனவும், காலி அட்டை பெட்டிகளின் உள் கழிவுத் தொகையை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.

                 முதல்வரின் இந்த அறிவிப்பு டாஸ்மாக் பணியாளர்களை பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. காலமுறை ஊதியம் கேட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்கு சொற்ப அளவில் ஊதிய உயர்வு அளித்தது நியாயமல்ல. பணி நிரந்தரம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற் றமளிக்கிறது. ஊக்கத் தொகை வழங்குவதில் பின்பற்றப்படும் முறையை மாற்றி மொத்த வசூல் தொகைக்கு வழங்க மறுபரிசீலனை செய்ய வேண்டும். வைப்பு நிதிக்கான வட்டியை 8.5 சதவீதம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை டாஸ்மாக் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.

Read more »

கடலூரில் பயிற்சிக் காவலர்களுக்கு உயிர் காக்கும் உதவிப் பயிற்சி

கடலூர் : 

            கடலூரில் பயிற்சிக் காவலர்களுக்கு அடிப் படை உயிர் காக்கும் உதவிப் பயிற்சி நடந்தது. 

               கடலூர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் 151 பயிற்சிக் காவலர்களுககான பயிற்சி முகாம் கடந்த ஐந்து மாதங்களாக நடந்து வருகிறது. தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் நேற்று புதிய காவலர்களுக்கு "அடிப்படை உயிர் காக்கும் உதவிப் பயிற்சி' முகாம் நடந்தது. எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமை தாங்கி, பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். பயிற்சிப் பள்ளி ஆய்வாளர் மணவாளன் வரவேற்றார். அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி டாக்டர் கார்த்திகேயன், அவசர சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் நித்தியானந்தன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.

Read more »

மாநில அளவிலான யோகாசனப் போட்டி ஏ.ஆர்.எல்.எம்., பள்ளிக்கு சாம்பியன்ஷிப்

கடலூர் : 

                 மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பை கடலூர் ஏ.ஆர். எல்.எம்., பள்ளி கைப்பற்றியது. 

                  27வது மாநில அளவிலான யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2010 திருப் பூரில் நடந்தது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற் பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். யோகாசனப் பேட்டி பொதுப்பிரிவு அத்லெடிக் யோகா, ஆர்ட்டிஸ்டிக் யோகா, ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு, ரிதமிக் யோகா இரட்டையர் பிரிவு ஆகிய பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் ஏ.ஆர்.எல். எம்., பள்ளி மாணவர்கள் அனைத்து பிரிவுகளிலும் வென்று மொத்தம் 16 தங்கப் பதக்கங்களும்,  6 வெள்ளியும், 3 வெண்கலமும் பெற்று சாதனை படைத்தனர். இப்போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் ஏ.ஆர். எல்.எம்., பள்ளி அணி கைப்பற்றியது. 

               எட்டு வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஜீவிகா, சத்யபிரியாவும், ஆண்கள் பிரிவில் லோகேஷ், ஸ்ரீராமும், 12 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் அரவிந்த், கலையன்பன், ஆனந்த கீர்த்தனன், சுதர்சன், நந்தகுமார் ஆகியோர் பெண்கள் பிரிவில் அஜீதா, தீபலட்சுமி, சரண்யா, சுபஸ்ரீ ஆகியோரும், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஹரீஷ் ராஜா மற்றும் ஜீவாவும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பள்ளி முதல்வர் ராஜயோககுமார் பாராட்டினார்.

Read more »

பண்ருட்டியில் கருப்பு கலரில் குடிநீர் பண்ருட்டியில் மக்கள் அவதி

பண்ருட்டி : 

             பண்ருட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் இரும்புத் துகள்கள் கலந்து கழிவுநீர் போல் வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பண்ருட்டி நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள 28வது வார்டு பஞ்சவர்ணம் நகர். இங்குள்ள ஆறு தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகராட்சி அலுவலகத்தையொட்டியுள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

               இந்த குடிநீர்த் தொட்டி சமீப காலமாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கடந்த நான்கு நாட்களாக குடிநீரில் இரும்புத் துகள் கலந்து கருப்பு கலரில் கழிவு நீர் போல் வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இரும்பு குழாய் என்பதால் அதன் துகள்கள் தண்ணீரில் கலந்து வருவதாக கூறப்படுகிறது. உடன் அதிகாரிகள் பழைய துருப்பிடித்த இரும்புக் குழாயை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read more »

விருத்தாசலத்தில் தாசில்தார் வீடு முற்றுகை

விருத்தாசலம் : 

             விருத்தாசலத்தில் கழிவு நீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி தாசில்தார் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 

                விருத்தாசலம் 7வது வார்டில் டாக்டர் ராமதாஸ் நகர், பாரதி நகர் உள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக மழை நீர், கழிவு நீர் சென்று கொண்டிருந்த பாதையை சில தனி நபர் கள் தடுத்து விட்டதால், கழிவு நீர் மாத கணக்கில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று திடீரென தாசில்தார் ஜெயராமன் வீட்டை முற்றுகையிட்டு கழிவு நீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Read more »

குறிஞ்சிப்பாடியில் ஓடும் பஸ்சிலிருந்து இறங்கிய மாணவர் தவறி விழுந்து பலி

குறிஞ்சிப்பாடி : 

 
              ஓடும் பஸ்சிலிருந்து இறங்க முயன்ற மாணவர் தவறி விழுந்து உடல் நசுங்கி இறந்தார். வடலூர் அடுத்த ராசாக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் தவமணி (16). 

                     குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக உள்மருவாய் செல்லும் அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். ராசாக்குப்பத்தில் தனது வீட்டின் அருகே பஸ் சென்ற போது, தவமணி ஓடும் பஸ்சின் முன் படிக்கட்டிலிருந்து இறங்க முயன்ற போது தவறி கீழே விழுந்தார். இதில் தவமணி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. அதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம்: 15 பேர் கைது

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்ற 14 பேரை போலீசார் கைது செய்தனர். 

               கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுகிறது. மேலும் கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது என எஸ்.பி., அஷ்வின் கோட்னீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில் சேத்தியாத்தோப்பு பகுதியில் திருட்டுத்தனமாக மணல் எடுத்த 7 மாட்டு வண்டிகளும், ஒரத்தூர் பகுதியில் 3 மாட்டு வண்டிகளும் பிடிபட்டன. அதேப்போல் குள்ளஞ்சாவடி பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேரும், ஒரத்தூரில் 3, காட்டுமன்னார்கோவில், திருப்பாதிரிப்புலியூர், சோழதரம் பகுதிகளில் தலா ஒருவரும், கடலூர் முதுநகர் பகுதியில்  3 பேர் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

Read more »

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் துவங்கியது

கடலூர்  : 

             பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது.

                மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் துவக்கி வைத் தார். 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு கபடி, கைப்பந்து, கையுந்து பந்து, இறகுப் பந்து, கோ-கோ, செஸ், வளைய பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் 40 பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கடலூர் முதுநகர் அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன், உடற் கல்வி இயக்குனர் முருகேசன், உடற் கல்வி ஆசிரியர் வசந்தி ஆகியோர் செய்திருந்தனர். போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் கடலூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட் டிகளில் பங்கேற்பர். இன்று (19ம் தேதி) 14 -19 வயதிற்குட்பட்டவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior