ுலியூர் ரயில்நிலையத்தில், மேற்கூரை இல்லாத நடை மேடையில் கொளுத்தும் வெயிலில் அவதிப்படும் பயணிகள்.
கடலூர்:
கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் போதுமான அளவுக்கு மேற்கூரை வசதி இல்லாததால், நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள், மழையில் நனைந்து வெயிலில் வதங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
200 ஆண்டுகள் பழைமையான ராமேசுவரம் - சென்னை பிரதான ரயில் பாதையில், மிகவும் தொன்மை வாய்ந்தது, திருப்பாப்புலியூர் ரயில் நிலையம். விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில்பாதை, மீட்டர் கேஜ் பாதையாக இருந்து, அகலப் பாதையாக மாற்றப்பட்டபின், மிகவும் மோசமாகப் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் ரயில் நிலையம் திருபாப்புலியூர் ரயில் நிலையம் என்பது, கடலூர் மக்களின் குற்றச்சாட்டு.
புகழ்பெற்ற திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் வந்து செல்லும் பல லட்சம் பக்தர்கள், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றுச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்காக, பொது நல அமைப்புகள் நடத்தி வரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதற்காக உயர் நீதிமன்றத்தில் மக்கள் வழக்கு தொடரும் நிலையும், மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, தில்லியில் தனது பெரும்பான்மை நேரத்தை இக்கோரிக்கைக்காக ரயில்வே அமைச்சகத்துடன் செலவிடும் நிலையும் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு ரயில் பாதை மீட்டர் கேஜ் பாதையாக இருந்து, அகலப் பாதையாக மாற்றப் படும்போது, ஏற்கெனவே ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் அகலப்பாதையாக மாற்றப்பட்ட பின்னரும் நிறுத்தப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. ÷ஆனால் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை, விதிகளை ரயில்வே இலாகா அப்பட்டமாக மீறிச் செயல்படுவதால் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் நிலையும், அதை ரயில்வே இலாகா தொடர்ந்து உதாசினப் படுத்தும் நிலையும் நீடித்து வருகிறது.
மக்களவை உறுப்பினர்
கே.எஸ்.அழகிரி மேற்கொண்ட கடும் முயற்சி காரணமாக, சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருப்பாப்புலியூரில் நின்று செல்கின்றன. திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் ரயில் நிலைய அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தாததால், ரயில் பயணிகள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. குறிப்பாக ரயில் நிலைத்தில் எந்த எண் ரயில் பெட்டி எங்கு நிற்கும்?, முன்பதிவு செய்யப்படாதவர்களுக்கான பெட்டிகள் எங்கு நிற்கும்? என்ற விவரங்கள், எந்த நடைமேடையிலும் வைக்கப்படாதது, ரயில் பயணிகளை பெரிதும் குழப்பத்துக்கு உள்ளாக்கி வருகிறது.
இரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணிக்குள்தான் பெரும்பாலான ரயில்கள் திருப்பாப்புலியூர் ரயில்நிலையம் வந்து செல்கின்றன. மேற்கண்ட வசதி இல்லாததால் இரவு நேர ரயில் பயணிகள், திக்கு தெரியாத காட்டில் விடப்பட்டவர்களாக உள்ளனர். பகல் நேரத்தில் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் ஒவ்வொன்றுக்கும் வரும் பயணிகள் 300-க்கும் மேற்பட்டோர், கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் அவதிப்படுகின்றனர். ÷இது குறித்து பொதுநல அமைப்புகள் ஓராண்டுக்கும் மேலாக குரல் எழுப்பியும், கோரிக்கை மனுக்கள் அளித்தும், அண்மையில் கிடைத்தது
10 அடிக்கு 10 அடி ஷெட்தான்.
மழை, வெயிலுக்கு 10 பேர் தான் இதில் ஒதுங்க முடியும். அதுவும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு இதனால் எப்பயனும் இல்லை. ரயில்வே நடைமேடையில் எத்தனை பயணிகள் வருகிறார்கள்? முன்பதிவு செய்யாதவர்கள் எத்தனை பேர்? ரயில்களை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்? அவர்கள் நடைமேடையில் எந்த இடத்தில் ரயிலுக்காக காத்து நிற்கிறார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இந்த ஷெட்டை அமைத்து இருக்கிறார்கள் என்று, ரயில்வே நிர்வாகம் மீது பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள். திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் மழையில் நனைந்து வெயிலில் கருகும் பயணிகளின் பரிதாபநிலை எப்போது மாறும்?