கடலூர் சிதைந்து இருக்கிறது! இயற்கை அழித்துப் போட்டதை இவர்கள் எப்போது மாற்றிக் கொடுப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், அதற்குள் மக்கள் என்ன ஆவார்களோ தெரியவில்லை. உடனடியாக அங்கு செய்தாக வேண்டியது என்ன?
ராணுவம் வர வேண்டும்!
எவிடென்ஸ் கதிர்,
மனித உரிமைச் செயற்பாட்டாளர்
மனித உரிமைச் செயற்பாட்டாளர்
''லட்சக்கணக்கான ஏக்கர்களில் தோப்புகள், வீடுகள், மின்சாரக் கம்பங்கள், சாலை வசதி என அனைத்தும் சேதமாகிக் கிடக்கின்றன. இவற்றை முதலில் சீரமைக்க வேண்டும். அதற்கு ராணுவம் வர வேண்டும். நம்முடைய மத்திய உள்துறை அமைச்சகத் தின் கீழ் மீட்புப் பணிகளுக்கான அமைப்பு ஒன்று செயல்படுகிறது. 'தேசிய பேரிடர் மீட்புக் குழு’(National Disaster Response Force - NDRF) எனும் அந்த அமைப்பில் 144 அணிகள் இருக்கின்றன. இவற்றின் பணி பேரிடர் சமயங்களின்போது மீட்பு, மறுவாழ்வு, புணரமைப்பு ஆகியவற்றை மேற்கொள்வது. உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், ராணுவம் ஆகிய மூன்றும் கை கோத்து செயல்பட்டால்தான் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும்!''

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்!
இயக்குநர் தங்கர்பச்சான்
''கடலூர் மாவட்டத்தில் புயலுக்கு முன் பான டாஸ்மாக் விற்பனையை எடுத்துப் பாருங்கள். நிவாரணத் தொகை வழங்கி யதற்குப் பிறகான விற்பனையை எடுத்துப் பாருங்கள். புயலுக்குப் பிறகு அடித்தட்டில் இருப்பவன் சோகத்தில் அதிகமாகக் குடிக் கிறான். தனக்கு வேறு எந்த ஆதரவும் ஆறுதலும் இல்லாத நிலையில் குடிக்காதவனும் குடிக்க ஆரம்பித்துவிட்டான். அரசாங்கம் தந்த சொற்ப நிவாரணத் தொகையையும் சாராயக் கடைக்கே செலவழிக்கிறான். உணவு இல்லாத இடத்தில் சாராயம் விற்பது போன்ற கொடுமை வேறு எங்கே இருக்கும்? கை கூப்பி வேண்டுகிறேன். இன்னும் ஒரு வருடத்துக்காவது அந்த இரண்டு மாவட்டங்களின் சாராயக் கடை களை மொத்தமாக மூடிவிடுங்கள்.
அத்தனை குடும்பங்களும் உங்களைக் கும்பிடும்!''

மரங்கள் அழிவு - மாற்று என்ன?
பாமயன், சூழலியல் செயற்பாட்டாளர்
''இத்தனை லட்சம் மரங்கள் ஒரே நாளில் மொத்தமாக வீழ்ந்துவிட்டன என்பது, புவி வெப்பமயமாதல் எனும் கண்ணோட்டத்தில் பார்த்தால், உலகமே கவலையோடு தன் கவனத்தைக் குவிக்க வேண்டிய ஒரு பிரச்னை. புயல் ஏற்பட்ட தற்கான முக்கியக் காரணமே அந்தப் பகுதிகளில் இருந்த அலையாத்திக் காடுகள் அழிந்து குறைந்து போனதுதான். முத்துப்பேட்டை, பிச்சாவரம் தொடங்கி சென்னைக் கடற்கரை ஓரம் வரைக்கும் ஒரு காலத்தில் அலையாத்திக் காடுகள் நிறைந்து இருந்தன. காலப்போக்கில் அவை அழிக்கப்பட்டுவிட்டன. அந்த அலையாத்தி மரங்களுக்கு காற்றின் வேகத்தைக் குறைத்துவிடும் இயல்பு உண்டு. அப்படியான மரங்களை வளர்ப்பதற்கு அங்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மரங்கள் அழிந்துவிட்டதால், காற்றில் ஈரப் பதம் குறையும். அதனால், அந்தப் பகுதியில் மழை மேகங்களை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துபோகும். தவிர, மேற்பரப்பு நீருக்கும் நிலத்தடி நீருக்கும் இடையில் உள்ள 'காபிலரி வாட்டர்’ என்று சொல்லப்படும் இடைநிலை நீர் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தவிர, பறவைகள், நுண்ணுயிர்கள் என அந்தப் பகுதி சூழலியலும் வெகுவாகப் பாதிக்கப்படும். இவற்றைச் சரிசெய்ய மரங்கள் நடும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்!''
மக்களுக்குத் தேவை மன நம்பிக்கை!
நிஜாமுதீன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு
''இந்தப் புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சுமார் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டன. முந்திரி, பலா போன்றவை பலன் தரக் குறைந்தது 15 வருடங்களாவது ஆகும். அதன் பிறகு, அவற்றில் இருந்து கிடைக்கும் முதல் உற்பத்தி, விளைச்சல் பெறுகிற வரை, விவ சாயிகளுக்கு நீண்ட கால நிவாரனத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அரசு தரும் 5,000 ரூபாயில் குடிசை வீட்டுக்கான கீற்றுகூட வாங்க முடியாது. இதை நினைத்து நொந்துபோய்க் கிடக்கிறார்கள் மக்கள். அவர்களுக்கு முதலில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கான மனோவியல் சிகிச்சை மிகமிக அவசியம்!''
பசுமை வளப் பரப்பு அதிகரிக்கப்பட வேண்டும்!
ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
''கடந்த 25 ஆண்டு காலப் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால், வெள்ளம், வறட்சி, புயல் ஆகியவற்றால் கடலூர் மாவட்டம் பாதிக்கப்படாத ஆண்டே இருக்காது. இந்த மாவட் டத்தின் வனப் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. கடலூரில் வனப் பரப்பு வெறும் 5 சதவிகிதம் தான். சமீபத்திய புயலால் அந்த அளவு 2 சதவிகிதமாகக் குறைந்து இருக்கிறது. இதனால் மழை அளவு குறையும், நிலத்தடி நீரும் குறையும். இவற்றைச் சரிசெய்ய மரம் நடுகிற திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்!'' காலத்தினால் செய்யும் உதவி மிகப் பெரிது... அதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!