
கடலூர் செம்மண்டலத்தில் பிடிபட்ட ஆஸ்திரேலிய வகை ஆந்தை.
கடலூர்:
ஆஸ்திரேலியன் ஆந்தை ஒன்று, கடலூரில் வியாழக்கிழமை பிடிபட்டது. கடலூர் செம்மண்டலம் ஆஞ்சநேயர் கோயில் அருகே வியாழக்கிழமை அதிகாலை, சாம்பல் வண்ணம் கலந்த வெள்ளை நிற ஆந்தை ஒன்று சுற்றித் திரிந்தது.
அளவில் மிகப் பெரிதாக இருந்த அந்த ஆந்தையை அப்பகுதி மக்கள் பிடித்தனர். ஆந்தையின் உடலில் சிறிய காயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை வனத்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். ஆஸ்திரேலியன் பான் என்ற அந்த அரிய வகை ஆந்தையை மாவட்ட வன அலுவலர் ஏ.சுப்பிரமணியன் கைப்பற்றி, பாம்பு பிடிக்கும் வல்லுநர் கடலூர் புனம்சந்த் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். ஆந்தையின் காயம் குணம் ஆனதும், வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்படும் என்று வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இறக்கைகளை விரித்த நிலையில் ஆந்தை 3 அடி நீளம் கொண்டதாக இருந்தது.