அஞ்சல் துறையில் உள்ள 615 காலியிடங்களுக்கு அக்டோபர் 14-ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. தமிழக அஞ்சல் வட்டாரத்தில், அஞ்சல் உதவியாளர், கடிதங்களை பிரிக்கும் உதவியாளர் ஆகிய பணிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு நேரடியாக ஆள்தேர்வு செய்யப்படவுள்ளது.
இது குறித்து தமிழக வட்டத்தின் தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கை:
விண்ணப்பங்கள், தகவல் கையேடு மற்றும் காலியிட விவரங்கள் ஆகிவவை தமிழக அஞ்சல் வட்டாரத்துக்குட்பட்ட அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் கிடைக்கும். இதன் விலை ரூ. 25 ஆகும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கப்படும் பணியிடத்தின் பெயரை அதற்கான விண்ணப்பம் அடங்கிய அஞ்சல் உறை மீது தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
அஞ்சல் துறையின் இணையதளத்தின் மூலம் விண்ணப்ப படிவம், தகவல் கையேடு மற்றும் காலி பணியிட விவர அட்டவணை ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை எந்த அஞ்சல் அலுவலகத்தில் யூ.சி.ஆர். முறையில் செலுத்தலாம். கட்டணத்துக்கு தரப்படும் ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, யூ.சி.ஆர். ரசீது இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் முன்னாள் ராணுவத்தினர் இணையதளத்தில் உள்ள தனி விண்ணப்பப்படிவத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களுடன் அக்டோபர் 5-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். மற்ற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன் அது தொடர்பான எந்த கடித போக்குவரத்தும் ஏற்கப்படமாட்டாது.