பந்தை பவுண்டரிக்கு விளாசுகிறார் விராட் கோலி. பந்தை சிக்ஸருக்கு விளாசும் ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா.
புலவாயோ (ஜிம்பாப்வே):
ரோஹித் சர்மா, விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா சேர்க்கப்பட்டார்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து இலங்கை அணியின் கேப்டன் தில்ஷனும், உபுல் தரங்காவும் ஆட்டத்தைத் துவக்கினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு களமிறங்கிய உபுல் தரங்கா, 1 ரன்னில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து தில்ஷனுடன் சமரவீரா ஜோடி சேர்ந்தார். தில்ஷன் கேப்டன் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சமரவீரா 19 ரன்களில் இருந்தபோது தினேஷ் கார்த்திக்கால் ஸ்டம்ப்டு முறையில் அவுட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து துணை கேப்டன் ஏஞ்செலோ மேத்யூஸ், தில்ஷனுடன் இணைந்தார். அணியின் ஸ்கோர் 97 ரன்களை எட்டியபோது சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த தில்ஷன் எதிர்பாராதவிதமாக ரன்அவுட் ஆனார்.
அவர் 84 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார். இதையடுத்து மேத்யூஸýடன், கபுகேதரா ஜோடி சேர்ந்தார். கபுகேதரா மிகவும் நிதானமாக விளையாட, மறுமுனையில் இருந்த மேத்யூஸ் ஓரளவு சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 48 பந்துகளைச் சந்தித்த கபுகேதரா, 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த சில்வா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பெரேரா மேத்யூஸடன் ஜோடி சேர்ந்தார். பெரேரா அதிரடியாக விளையாடியதால் மந்தமாக இருந்த இலங்கை அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது. அவர் 23 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 226 ரன்களை எட்டியபோது சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த மேத்யூஸ், யாதவ் பந்தில் கிளீன் போல்டு ஆனார். இறுதியில் 49.5 ஓவர்களில் இலங்கை அணி 242 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.இந்திய வீரர்கள் திண்டா, ஜடேஜா, ஓஜா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோர் ஆட்டத்தைத் துவக்கினர். கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடாத இந்த ஜோடி நிதானமாக விளையாடியது.
இருப்பினும் விஜய் 14 ரன்களுக்கும், கார்த்திக் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர் .இதைத்தொடர்ந்து விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தில் ரன்அவுட் ஆன கோலி, இந்த ஆட்டத்தில் மிகவும் கவனமாக விளையாடினார். இந்த ஜோடி விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டதோடு, பந்துகளையும் வீணடிக்காமல் அருமையாக விளையாடியது. இருவரும் அடுத்தடுத்து அரை சதமடித்தனர்.37.4-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 201 ரன்களை எட்டியபோது,82 ரன்களில் விளையாடிக்கொண்டிருந்த கோலி, ரனதேவ் பந்தில், பெர்ணான்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 92 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.
இதையடுத்து கேப்டன் ரெய்னா களமிறங்கினார். 43-வது ஓவரின் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து, ஒருநாள் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை ரோஹித் சர்மா நிறைவு செய்தார். கடந்த ஆட்டத்திலும் ரெய்னா சதமடித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 43.3 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 100 பந்துகளில் 2 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 101 ரன்களுடனும், ரெய்னா 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறப்பாக விளையாடி சதமடித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சுருக்கமான ஸ்கோர்:
இலங்கை- 242 (மேத்யூஸ் 75, ஓஜா 2வி/44), இந்தியா- 243/3 (ரோஹித் 101*, விராட் கோலி 82). ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் தோற்றதால் விமர்சனங்களுக்குள்ளான இந்திய அணி, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வென்றதன் மூலம் அதிலிருந்து மீண்டுள்ளது. ரெய்னா தலைமையிலான இந்திய அணியின் வெற்றி தொடருமா? என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு.
Read more »