கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினம் நாளை கடைபிடிக்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முதல் வரும் 19ம் தேதிவரை சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி கடலூர் சில்வர் பீச்சை சுத்தம் செய்யும் பணியை ஊராக தொழில்துறை மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார். கே.என்.சி., மற்றும் அரசு கல்லூரி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்,
சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினம் நமது மாவட்டத்தில் ஒருவாரம் கடைபிடிக்கப்படுகிறது. சில்வர் பீச்சில் சேகரித்த குப்பைகள் 16 வகையாக பிரித்தெடுத்துள்ளனர். கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் வராதவாறு கண்காணிக்கப்படும். ஒருவாரத்திற்கு கடற்கரையொட்டியுள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் 27 ஆயிரம கிலோ பிளாஸ்டிக்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது .மாவட்டத்தில் இதுவரை 70 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் தடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குறைப்பதற்கு வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்போர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் விஜயக்குமார், இன்ஜினியர் ரவி, நகராட்சி தலைவர் சுப்ரமணியன், துணைச் சேர்மன் குமார்,அ.தி.மு.க.,ஒன்றிய செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து ஓருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி குழுமம் 2011-12 திட்டத்தின் கீழ் 29.50 லட்சம் செலவில் இரண்டு டம்பர் பிளேசர் லாரியும், 9.60 லட்சம் செலவில் 16 டம்பர் பிளேசர் பின்களை என மொத்தம் 39.10 லட்சம் செலவில் புதிதாக வாங்கப்பட்டது