கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடலூர் அனைத்து வியாபார சங்கங்களின் பேரவை வழக்கறிஞர் கே. சக்திவேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு:
கடலூரில் லாரன்ஸ் சாலை முக்கிய வியாபார மையமாக உள்ளது. இந்தச் சாலைக்கு அருகிலேயே கடலூர் பஸ் நிலையம், திருபாதிரிப்புலியூர் ரயில் நிலையம் போன்ற முக்கியமான இடங்கள் உள்ளன. அந்தச் சாலையில் உள்ள ரயில்வே கேட், ரயில் வரும் நேரத்தில் மூடப்படும்போது, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அந்தச் சாலையில் ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை உருவாக்கியுள்ள திட்டத்தின்படி, அந்தப் பாலம் அமைக்கப்பட்டால், அதில், இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். மினி வேன்கள், பஸ்கள் போன்ற பெரிய வாகனங்கள் செல்ல முடியாது. இதனால், மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர், வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். மேலும், அந்தச் சாலை முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களை கையகப்படுத்தியாக வேண்டும். இதனால், அந்தப் பகுதியில் உள்ள கடைகளும் பாதிக்கப்பட்டு வியாபாரமும் குறைந்துவிடும்.
எனவே, எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில், கடலூர் பஸ் நிலையத்தின் பின் புறம், சுரங்கப்பாலம் அமைக்கும் வகையில் பொதுமக்கள் சார்பில் மாற்றுத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அளிக்கப்பட்டது. இதை ஆதரித்து 15,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதைப் பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியரும் தெரிவித்தார். பாலம் அமைப்பது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மக்கள் கொடுத்த திட்ட வரைவு குறித்து ஆட்சியர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
லாரன்ஸ் சாலையில் பாலம் அமைந்தால் ஏற்படும் இடையூறுகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், அந்தச் சாலையில் பாலம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்தச் சாலையில் உள்ள குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை மாற்றி அமைப்பது தொடர்பாக அரசு டெண்டர் விட்டுள்ளது. எனவே, அந்தச் சாலையில் சுரங்கப் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ளவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்கள். வழக்கு விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.