உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

கம்பி, சிமென்ட் விலை விர்ர்...!: வீடு கட்டுவோர் கலக்கம்

பண்ருட்டி:

                 கட்டுமான பொருட்களான இரும்பு கம்பி, சிமென்ட் விலை அதிகரிப்பால் வீடு கட்டுவோர் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்கள் கடும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.கட்டுமான பொருட்களில் முக்கிய பொருட்களான சிமென்ட், கம்பிகளின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.

              கம்பியின் மூலப்பொருட்கள் உலக வர்த்தகத்தில் கூடுதலாகியுள்ளதால் இரும்பு கம்பிகள் கிலோவிற்கு 6 ரூபாய் முதல் 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.  இதனால் கடந்த மாதம் ஒரு கிலோ அசோகா கம்பிகள் 28 ரூபாய்க்கு விற்றவை தற்போது 38 ரூபாயாகவும், அக்னி பிராண்ட் கம்பிகள் 33ல் இருந்து 41 ஆகவும் உயர்ந்துள்ளது.

                     சிமென்ட் உற்பத்தியில் போட்டி காரணமாக கடந்த இருமாதங்களுக்கு முன் சிமென்ட் மூட்டை 290 ரூபாயிலிருந்து 210 ஆக விலை குறைந்தது. செட்டிநாடு, சுவாரி, டால்மியா, கோரமண்டல், ராம்கோ, அல்டராடெக், பாரதி என ஒவ்வொரு கம்பெனி சிமென்டிற்கும் ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை வித்தியாசம் இருந்தது.
                     தற்போது சிமென்ட் ஆலை உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து ஒரே விலை 257ல் 7 ரூபாய் கழித்து 250 ரூபாயிற்கு நிர்ணயம் செய்துள்ளதால் தற்போது சிமென்ட் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. மேலும், அனைத்து கம்பெனி சிமென்டுகளும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய கட்டுமான பணிகளில் ஈடுபடும் நிறுவனத்திற்கு லோடு கணக்கில் குறைந்த விலையில் சிமென்ட் கம்பெனியினர் விற்பனை செய்து வந்தனர். அதுவும் தற்போது நிறுத்தியுள்ளனர்.

                   கட்டுமான பணிகள் சுணக்க நிலையில் உள்ளபோதும் செயற்கையாக சிமென்ட் விலையை உயர்த்தியுள்ளதாக கட்டுமான பொறியாளர்கள், வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு சிமென்ட், இரும்பு கம்பிகள் விலைகள் வெகுவாக குறைந்ததால், பலர் வீடு கட்ட திட்டமிட்டு பணியை துவக்கியவர்கள், தற்போது திட்ட மதிப்பீட்டை விட கூடுதல் செலவு ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதால் "திரிசங்கு' நிலையில் உள்ளனர்.

               மேலும் கம்பி, சிமென்ட் விலைகள் குறையும் என ஒப்பந்தம் செய்த கட்டுமான நிறுவனங்களும் பெருமளவில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கம்பி, சிமென்ட் விலைகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடியில் சாலைப் பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பெருமிதம்


சிதம்பரம்:

                  தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 55 ஆயிரத்து 785 கிலோ மீட்டர் தூர சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதன் பேசினார்.

காட்டுமன்னார்கோவிலில் நடந்த விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதன் பேசியதாவது:

                           தமிழகத்தில் ஐந்தாவது முறையாக பொறுப்பேற்ற தி.மு.க., அரசு தமிழகத்தில் பாலங்கள், சாலைப்பணிகள் என வரலாற்று சாதனைகளை செய்துள்ளது.  61 ஆயிரத்து 461 கி.மீ., சாலைகள் பராமரிப்பு, அகலப்படுத்துதல், உறுதிபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆட்சி பொறுப்பேற்ற முதல் கடந்த மாதம் வரை 10 ஆயிரம் கோடி ரூபாயில் 55 ஆயிரத்து 785 கி.மீ., சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
                          ரயில்வே அனுமதியுடன் 106 ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஐந்தாண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஏழு ரயில்வே பாலங்கள் மட்டுமே அனுமதி பெறப்பட்டன. தமிழக அரசு பாலம் கட்ட 50 சதவீத பங்கு ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடு ரயில்வே பாலங்கள் அனுமதி வழங்கி வருகிறது. தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு இதுவரை 2,400க்கும் மேற்பட்ட பாலங்கள் முடிக்கப்பட்டு விட்டன.

                     அணைக்கரை பாலம் பொதுப்பணித்துறையின் குடிநீர் தேக்குவதற்கான மதகு. அதை நாம் போக்குவரத்து பாலமாக பயன்படுத்தி வந் தோம். தற்போது அந்த பாலம் உடைந்ததால் போக்குவரத்து நிறுத் தப்பட்டுள்ளது. அதையொட்டி ஈழத் தநல்லூர் அருகே கொள்ளிடத்தின் குறுக்கே 33 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. 18 மாதங்களில் இந்த பணி முடிக்கப்படும்.
                       அதே போன்று அங்கிருந்து 20 கி. மீட்டர் இடைவெளியில் முட்டம்- மணல்மேடு இடையே கொள்ளிடம் ஆற்றில் 48.85 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இரு பால பணிகளும் முடிவடைந்தால் தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அத்துடன் வியாபாரம், தொழில்வளம் பெருகும், வேலை வாய்ப்பு ஏற்படும் இப்படி பயனுள்ள பல திட்டங்களின் புகழ் அத்தனையும் தமிழக முதல்வர் கருணாநிதியையே சாரும். இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் பேசினார்.

Read more »

பணி நிரந்தரம் செய்யக்கோரி கம்ப்யூட்டர் ஊழியர்கள் மனு

கடலூர்:

               கம்ப்யூட்டர் விவர பதிவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி துணை முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஊழியர்கள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு:

                    கம்ப்யூட்டர் விவர பதிவு ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட நாங்கள் கடந்த ஐந்தாண்டு காலம் தொடர்ந்து அதே நிலையில் இருந்து வருகிறோம். எங்களை நியமனம் செய்த நாளிலிருந்து இதுவரை பணி நிரந்தரம் செய்யாமலும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளான பணிப்புத்தகம் பராமரிப்பு, விடுப்பு சலுகை, மருத்துவ காப்பீடு மற்றும் பிற சலுகைகள் கிடைக்க பெறாமலேயே பணிபுரிந்து வருகிறோம்.
                 திடீரென எங்களுக்கு உயிரிழப்பு நேரிடின் எங்கள் குடும்பத்திற்கு எவ்வித சலுகைகளும் பெற முடியாத சூழ்நிலையில் உள்ளோம். எனவே எங்கள் மீது கருணை கூர்ந்து நியாயமான சலுகைகள் கிடைக்கவும், பணி நிரந்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சூரியகாந்தி பயிரில் அதிக லாபம் பெறும் வழிகள் : வேளாண்துணை இயக்குனர் ஆலோசனை


சிறுபாக்கம்:

           மங்களூர் ஒன்றிய விவசாயிகள் சூரியகாந்தி பயிரில் அதிக லாபம் பெற வேளாண் துறை சார்பில் ஆலோசனை தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து கடலூர் வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) கனகவேல், விருத்தாசலம் கோட்ட அலுவலர் (வணிகம்) அமுதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                    மங்களூர் ஒன்றியம் மங்களூர், தொழுதூர், வேப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது சூரியகாந்தி பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

               எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தியில் எண்ணெய் அளவு குறையாமல், தரம் கெடாமல் காக்கவும், நல்ல லாபத்தில் விற்கவும் சூரியகாந்தி பயிரின் இலைகள் பழுத்து மஞ்சள் நிறமாக மாறிய நிலையிலும், பூக்கொண்டைகள் பழுப்பு நிறமாகவும் மாறியிருந்தால் மட் டுமே அறுவடை செய்ய வேண்டும். விதைகளை சோதித்து பார்த்தால் மேல்புறம் கருமையாகவும், உட்புறம் வெள்ளை நிறமாகவும், கடினமானதாகவும் இருக் கும்.
               சூரியகாந்தியின் பூத்தலையினை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். பின்னர் ஒரே சீராக களத்தில் பரப்பி காயவைத்து, மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை திருப்பி விட வேண்டும்.பூத்தலைகளை அறுவடை செய்தவுடன் வெயிலில் பரப்பி காய வைக்க வேண்டும். குவித்து சேமித்தால் விதைகளை பூஞ்சானம் தாக்கி மணிகளின் தரம் பாதிக்கப்படும்.

             காய்ந்த பூக்களிலிருந்து விதைகளை பிரித்தெடுக்க கதிரடிக்கும் இயந்திரம் அல்லது தடிகள் கொண்டு அடித்து பிரிக்க வேண்டும்.பிரித்தெடுத்த நல்ல விதையுடன் கலந் துள்ள சுருங்கிய, முதிராத விதைகள், கெட்டுப் போன விதைகள், பூச்சி நோய் தாக்கிய விதைகளை தனியே பிரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு தரம் பிரித்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வந்து விற்பதன் மூலம் சூரியகாந்தி பயிரில் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.

Read more »

தீயணைப்பு வீரர்களுக்கு முதல்வர் விருது


சேத்தியாத்தோப்பு:

                சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கு முதல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது. சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் முன்னணி தீயணைப்பு வீரர்கள் தர்மலிங்கம், நவரத்தினம், அன்பழகன் ஆகியோரின் பணிகளை பாராட்டி தீயணைப்பு வீரர்களுக்கான முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளது. விருது பெற்ற தீயணைப்பு வீரர்களை நிலைய அலுவலர் செந்தில்குமார், தீயணைப்பு படைவீரர் ஆனந்தன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Read more »

சுனாமி குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டு விழா

கடலூர்:

                கடலூர் செல்லங்குப்பத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சுனாமி குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் 1,678 சுனாமி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு அதில் பரங்கிப்பேட்டையில் 168ம், பனங்காட்டு காலனியில் 74ம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.

                செல்லங்குப்பத்தில் 219 வீடுகள் முடியும் தருவாயிலும், கிள்ளை, முடசல் ஓடை பகுதிகளில் 103 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.  இது தவிர செல்லங்குப்பம் பகுதியில் 355 வீடுகளும் மற்றும் பனங்காட்டு காலனியில் 45 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செல்லங்குப்பத்தில் நடந்தது.இதன் மூலம் சோனங் குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, மோகன் சிங் வீதி, ஆற்றங்கரை வீதி பகுதி மக்கள் பயனடைவர்.
                 நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் தமிழரசன், தங்கமணி, நித்யானந்தம், கோமதி, குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் சையத் சுலைமான் சேட், உதவி நிர்வாக பொறியாளர் ஸ்ரீதர், உதவி பொறியாளர்கள் ஜெயக்குமார், சுகுமார், இளநிலை பொறியாளர் மதிமாறன், பிளஸ் தொண்டு நிறுவன குழு தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

திருச்சோபுரம் சுகாதார நிலையம்தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்

கடலூர்:

                திருச்சோபுரத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கடலூர் காயல்பட்டு அடுத்த பேட்டோடை கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. இணைப்பதிவாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

              துணைப் பதிவாளர் (பொது வினியோகத் திட்டம்) மகபூப் பாஷா வரவேற்றார்.மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், காயல்பட்டு ஊராட்சி தலைவர் ராதிகா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 ரேஷன் கடையை திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில் 

                   "இந்த பகுதிநேர கடை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இயங்கும். 250 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுவர்.

               உயர்மட்ட கோபுர விளக்கு அமைத்தல் மற்றும் 4 லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைத்து தர எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும். திருச்சோபுரத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என பேசினார்.

Read more »

தொழுதூர் ஆறுமுகம் கல்லூரியில்நேனோ டெக்னாலஜி கருத்தரங்கு

ராமநத்தம்:

                   தொழுதூர் ஆறுமுகம் கல்லூரியில் தமிழ், இயற் பியல், வேதியியல் துறை சார்பில் முத்தமிழ் மன்றம், நேனோ டெக்னாலஜி கருத்தரங்கு நடந்தது.முத்தமிழ் மன்ற விழாவிற்கு தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ராஜபிரதாபன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை விரிவுரையாளர் மீனாட்சி வரவேற்றார்.

              இதில் நெய்வேலி ஜவகர் கல்லூரி தமிழ்த்துறை விரிவுரையாளர் தியாகராஜன், ஆறுமுகம் கல்வியியல் கல்லூரி முதல்வர் துரைஎழிலன் தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து விளக்கினர்.கல்லூரி இயக்குனர் மேஜர்குஞ்சிதபாதம், முதல்வர் அரங்கநாதன் வாழ்த்துரை வழங்கினர். விரிவுரையாளர் தேன் மொழி நன்றி கூறினார்.
                     இயற்பியல், வேதியியல் துறை சார்பில் நடந்த நேனோடெக்னாலஜி கருத்தரங்கிற்கு இயற்பியல் துறைத்தலைவர் ஆசைதம்பி வரவேற்றார். நெய்வேலி ஜவகர் கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் முனைவர் கொளஞ்சிபாபு எதிர் வரும் காலத்தில் நேனோ டெக்னாலஜியின் பயன்பாடுகள் குறித்து பேசினார்.வேதியியல் துறைத்தலைவர் கொளஞ்சிநாதன் நன்றி கூறினார்.

Read more »

தபால் நிலையம் அமைக்கஇடம் வழங்க கோரிக்கை

சிதம்பரம்:

            சிதம்பரம் மேற்குபகுதியில் தபால் நிலையம் மீண்டும் அமைக்க இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து முன்னாள் மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி புரவலர் கண்ணதாசன் கலெக்டருக்கு அணுப்பியுள்ள மனு:

                சிதம்பரம் லால்கான் தெருவில் தனியார் இடத்தில் வாடகைக்கு கடந்த 100 ஆண்டுகளாக தபால் நிலையம் இயங்கியது. சொந்த இடத்தில் தபால் நிலையம் அமைக்க தபால் துறை நிர்வாகம் வாங்கிய இடத்தில் வில்லங்கம் இருப்பதால் தபால் நிலையம் அமைக்க முடிய வில்லை. மேலும் வாடகை இடத்தில் இயங்கிய இடம் காலி செய் யப் பட்டதால், தற்போது தலைமை தபால் நிலையத்தில் கச்சேரி தபால் நிலையம் இயங்கி வருகிறது. இதனால் சிதம்பரம் மேற்கு பகுதிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
                  எனவே சிதம்பரம் ஆர்.டி.ஓ,. அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக கட்டடத்தில் காலியாக உள்ள இடத்தில் தபால் நிலையம் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

அரசு கல்லூரியில் ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் மைய பொதுக்குழு வலியுறுத்தல்

விருத்தாசலம்:

                விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி இடத்தில்உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மையம் கோரிக்கை விடுத்துள்ளது. விருத்தாசலத்தில் மக்கள் மைய பொதுக்குழு கூட்டம் நடந்தது. முன்னாள் ஆர்.டி.ஓ., முத்தையா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராமசாமி வரவேற்றார்.

            கூட்டத்தில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வருவதால் அரசு தலையிட்டு கல்லூரிக்கான நிலத்தை பாதுகாக்க வேண்டும்.
                  தற்போது கோடைகாலம் துவங்கிவிட்ட நிலையில் மழைகாலங்களில் தண்ணீர் தேக்கி விவசாயத்திற்கு பெருமளவில் பயன்படும் வகையில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

பேராசிரியருக்கு விஷ்வகர்மா விருது

சிதம்பரம்:

               பேராசியர் ரகுநாத்துக்கு விஷ்வகர்மா விருது வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக கட்டட அமைப்பியல் துறைபேராசிரியர் ரகுநாத்தின் ஆய்வு  நுட்பம் மற்றும் பங்களிப்பை பாராட்டி கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமம் மற்றும் இந்திய திட்டகுழு இந்த விருதை வழங்கியுள்ளது.

Read more »

சாலையை சீரமைக்க வேண்டும் அரசுக்கு பா.ஜ., கோரிக்கை

சேத்தியாத்தோப்பு:

                  சேத்தியாத்தோப்பு - விருத்தாசலம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க தமிழகஅரசுக்கு பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு நகர பா.ஜ. செயலாளர் பன்னீர்செல்வம் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப் பியுள்ள மனு:

                 சேத்தியாத்தோப்பிலிருந்து கம்மாபுரம் வழியாக விருத்தாசலம் செல்லும் சாலை பெரும்பாலான இடங்களில் சிதைந்து சின்னாபின்னமாகி உள்ளது. சில இடங்களில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தினசரி நூற்றுக்கணக்கான பஸ்களில் பயணம் செய்யும் மக்கள் சாலை சீர்கேட்டால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
                 சாலை நெடுகிலும் பெயர்ந்து கிடக்கும் கற்களால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விருத்தாசலத்திலிருந்து ஒரு மணிநேரத்தில் சேத்தியாத்தோப்பிற்கு பயணிக்க வேண்டிய பொதுமக்கள் ஒன்னரை மணிநேரம் பயணம் செய்யக்கூடிய நிலை உள்ளது. எனவே சேத்தியாத்தோப்பு - விருத்தாசலம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

தொழிற்சங்கத்திற்கு விருது

நெல்லிக்குப்பம்:

           நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை லேபர் யூனியனுக்கு சிறந்த தொழிற் சங்க விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் செயல்படும் தொழிற் சங் கங்களில் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி லேபர் யூனியனுக்கு சிறந்த தொழிற் சங்கத்துக்கான விருது வழங்கப்பட்டது.

                 சென்னையில் நடந்த விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன், மேயர் சுப்ரமணியன் ஆகியோர் தொழிற் சங்க பொது செயலாளர் அரிகிருஷ்ணனிடம் வழங்கினர். ஆலை மேலாளர் தங்க திருப்பதி, இணை செயலாளர் வைத்தியநாதன் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Read more »

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் : தலைமை பொறியாளர் பாலாஜி பேட்டி

திட்டக்குடி:

               விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை 19.5 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி விரைவில் துவங்கப்படும் என நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் பாலாஜி கூறினார். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே முருகன்குடி வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை நெடுஞ்சாலைத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் பாலாஜி ஆய்வு செய்தார்.

            பணியை துரிதமாகவும், தரமாகவும் செய்ய வேண்டுமென அதிகாரிகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:

           மேம்பாலம் கட்டும் பணியால் போக்கு வரத்து பாதிக்காமல் இருக்க தற்காலிக மாற்றுப்பாதை விரைந்து அமைக்கப்படும். வெள்ளாற்றில் தண்ணீர் வரத்து அதிகமான இடத்தில் கூடுதலாக சிமென்ட் பைப்கள் வைக்கவும், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றுவர மாற்றுப்பாதை தரமாக கட்ட உத்தரவிட்டுள்ளேன்.
                வரும் 2011 மே மாத இறுதிக்குள் தரைப் பாலங்கள் மேம்பாலங்களாக தரம் உயர்த்தி திறப்பு விழாவிற்கு தயாராகி விடும்.இறையூர் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கும் பணியின்போது, குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள வீடுகள் அகற்ற வேண் டும். இதில் பட்டா உள்ள வீடுகளுக்கு மாற்று இடத்தில் பட்டாவுடன் நிலம் வழங்கப்படும். புறம்போக்கில் குடியிருப்போருக்கு நிலம் வழங்கிட வருவாய்த்துறையினர் பரிசீலிக்க வேண்டும்.

                பெண்ணாடம் நகர்ப்பகுதியில் சாலையினை அகலப்படுத்தும் பணி வரும் 13ம் தேதி துவங்குகிறது. நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும். உலக வங்கி நிதியுதவி திட்டத்தில் விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையினை அகலப்படுத் திட 19.5 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

                  ஆய்வின்போது, விழுப்புரம் கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன், கடலூர் மண்டல பொறியாளர் வெங்கடேசன், விருத்தாசலம் உதவி செயற்பொறியாளர் வெள்ளிவேல், உதவி பொறியாளர் கலையரசி, கட்டுமான பொறியாளர் முகமது உடனிருந்தனர்.

Read more »

முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்த வழிமுறை வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சாத்தையா தகவல்

விருத்தாசலம்:

             முந்திரி மரங்களை தாக் ககூடிய தேயிலை கொசுவை கட்டுப்படுத்தினால் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் அறிவியல் நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சாத் தையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

               முந்திரி மரங்களை தாக்கக்கூடிய பூச்சிகளில் தேயிலை கொசுவும் ஒன்றாகும். இத் தேயிலை கொசு முந்திரி மரத்தில் இளந்தளிர், பூங்கொத்து மற்றும் பிஞ்சு உருவாகும் பருவங்களில் தாக்கி சேதம் விளைவித்து அதிக அளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். எனவே இப்பூச்சியின் தாக்கத்தை அறிந்து கட்டுப்படுத்துவது இன்றியமையாதது. எனவே முந்திரி பூக்கும் பருவத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி., எண் டோசல்பான் 35 இ.சி., அல்லது குளோர்பைரிபாஸ் 20 இ.சி., மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 மி.லி., என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
                மேலும் பூக்கள் கொட்டுவதை தடுக்க மருந்தோடு லிட்டருக்கு 2-3 கிராம் என்ற அளவில் யூரியாவை பயன்படுத்தலாம். இது தவிர புரோபினோபாஸ் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 மி.லி., என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். முந்திரி பிஞ்சுவிடும் பருவத்தில் இப்பூச்சியை கட்டுப்படுத்த கார்பரில் 50 சத நனையும் தூள் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் கரைத்து தெளித்திட வேண்டும். இவ்வாறு செய்தால் முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் ரோட்டரி அரங்கில் டாக்டர்களுக்கு யோகா பயிற்சி

கடலூர்;

           இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் டாக்டர்களுக்கான ஒருநாள் யோகா பயிற்சி முகாம் கடலூர் ரோட்டரி அரங்கில் நடந்தது. இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் டாக்டர்களுக்கான ஒருநாள் யோகா பயிற்சி முகாம், கடலூர் பீச் ரோட்டில் உள்ள ரோட் டரி அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவச் சங்க தலைவர் டாக்டர் சந்திரன், செயலாளர் டாக்டர் சீனுவாசன், ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.

                 நிகழ்ச்சிக்கு பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி யோகா பயிற்சியை துவக்கி வைத்தார். சென்னை சத்தியாநந்தா யோகா மையத்தை சேர்ந்த ஜெயகோபால் பயிற்சி அளித்தார். அதில் ஆசனா, பிரமாயாமா, யோகநித்ரா ஆகிய பயிற்சிகள் அளிக் கப்பட்டது. முகாமில் 30 டாக்டர்கள் பங்கேற்றனர்.

Read more »

மீனவர்களுக்கு அடையாள அட்டை

கிள்ளை:

           மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணி துவங்கியது. மாவட்ட மீன் வளத்துறை சார்பில் கடலில் மீன் பிடித்தொழில் செய்யும் மீனவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க புகைப் படம் எடுக்கும் பணி கிள்ளை மீனவர் காலனி சமுதாயக் கூடத்தில் நடந்தது.கிராம தலைவர் மலையரசன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜகோபால், பொரு ளாளர் அருணகிரி முன்னிலையில் 350 மீனவர்களுக்கு நேற்று புகைப் படம் எடுக்கப்பட்டது.

Read more »

வேலைவாய்ப்பு முகாம்

ராமநத்தம்:

                 தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வு நடந்தது.இதில் திருச்சி குறிஞ்சி பொறியியல் கல்லூரி, கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி, விழுப்புரம் ஐ.எப்.இ.டி., மயிலாடுதுறை ஏ.வி.சி., திருச்சி எம்.ஐ.இ.டி., உள்ளிட்ட பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 306 பேர் கலந்து கொண்டனர். முகாமில் திருச்சி இன்போடெக், பெங்களூரு சாப்ட்வேர் நிறுவனங்கள் கலந்து கொண்டு 17 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து பணி ஆணை வழங்கினர்.

Read more »

.குழாய் மூலம் பாலம்: கிராம மக்கள் எதிர்ப்பு

பரங்கிப்பேட்டை:

               பரங்கிப்பேட்டை அருகே நெடுஞ்சாலைத்துறை சாலையில் குழாய் மூலம் பாலம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே நெடுஞ்சாலைத்துறை சாலையில் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டுவதற்கு நேற்று முன்தினம் பள்ளம் தோண்டப்பட்டது.

                   நேற்று குழாய் பதிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்தது. இதனால் அகரம் மெயின்ரோடு, புதுப்பேட்டை மண்டப தெரு மற்றும் தேரோடும் வடக்கு வீதியை சேர்ந்த பொதுமக்கள் பாலம் கட்டும் இடத்திற்கு சென்று பழைய பாலம் போல் கட்ட வேண்டும். குழாய் பதித்து பாலம் கட்டினால் மழை, வெள்ள காலங்களில் தண்ணீர் வடியாமல் போய்விடும். அதனால் இந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு:மங்கலம்பேட்டை த.மு.மு.க., முடிவு

விருத்தாசலம்:

                 மங்கலம்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முடிவு செய்துள்ளது. மங்கலம்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் நடந்தது.

               ஜபருல்லா தலைமை தாங்கினார்.நகர தலைவர் அசன்முகமது, செயலாளர் லியாகத் அலி, பொருளாளர் கலிமுல்லா, துணை செயலாளர் முகமதுநஜீர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விரைவில் மங்கலம்பேட்டையில் நடைபெற உள்ள ஆம்புலன்ஸ் சேவை அர்ப்பணிப்பு விழா மற்றும் சாதனை விளக்க பொது கூட்டத்திற்கு வருகை தரும் மாநில பொது செயலாளர் ஹைதர் அலிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது,
               மங்கலம் பேட்டையில் 2 மணி நேரம் மின் தடையை விட கூடுதலாக 4 மணி நேரத்திற்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 23ம் தேதி மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more »

மத்திய அமைச்சர் பாதுகாப்புக்கு வந்த போலீசார் ரகளை : கார் கண்ணாடி உடைப்பு; டிரைவர்கள் தாக்கு

சிதம்பரம்:

                   சிதம்பரத்தில் மத்திய அமைச்சர் பாதுகாப்புக்கு வந்த போலீசார், துப்பாக்கியால் அடித்து கார் கண்ணாடியை உடைத்து, டிரைவர்களை தாக கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . புதுச்சேரியை சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை கடலூர் வழியாக காரைக்கால் சென்றார்.
                  அவருக்கு கடலூர் மாவட்ட எல்லையில் இருந்து கடலூர் மாவட்ட போலீசார் சுமோவில் பாதுகாப்புக்குச் சென்றனர். சிதம்பரம் - சீர்காழி சாலையில் நந்தனார் பள்ளி அருகே அமைச்சரின் கார் முன்னால் சென்ற அம்பாசிடர் காரை "ஓவர்டேக்' செய்துக் கொண்டு சென்றது. அமைச்சரின் காரை தொடர்ந்து பாதுகாப்பு போலீசாரின் சுமோ கார், அம் பாசிடர் காரை முந்திச் செல்ல முயன்றபோது எதிரில் வந்த மகேந்திரா ஜீப் மீது மோதியது. அதில், போலீசார் சென்ற சுமோவின் முன்பகுதி சேதமடைந்தது.

                  ஆத்திரமடைந்த அமைச்சரின் பாதுகாப்பிற்கு வந்த போலீசார் சுமோவிலிருந்து இறங்கி, நீ வழி கொடுக்காததால் தான் விபத்து நடந்ததாக கூறி தனக்கு முன்னாள் சென்ற அம்பாசிடர் கார் கண்ணாடியை துப்பாக்கி கட்டையால் அடித்து உடைத்தனர். டிரைவர் வைரக் கண்ணுவை தாக்கினர். அப்போது அந்த வழியாக கர்ப்பிணி பெண்ணை ஏற்றி வந்த மற்றொரு அம்பாசிடர் கார் டிரைவர் கோவிலாம்பூண்டி இஸ்மாயில், மக்கள் கூட்டம் இருக்கவே "ஹாரன் அடித்தார்.
              ஆத்திரமடைந்த போலீசார், டிரைவர் இஸ்மாயிலையும் தாக்கினர். காரில் இருந்த கர்ப்பிணி பெண் ரூபா அலறினார். போலீசாரின் ரகளையைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காரில் வந்த கர்ப்பிணி பெண்ணை வேறு காரில் அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., மூவேந்தன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார். மத்திய அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீசாரின் இந்த ரகளை சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more »

இளம்பெண்ணை கடத்தியவர் கைது

சேத்தியாத்தோப்பு:

            இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது சென்றனர். சேத்தியாத்தோப்பை அடுத்த பெரியநற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் தமிழ்வாணி (17). சேத்தியாத்தோப்பு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நாகை மாவட்டம் சீர்காழி பச்சை மைதானம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகன் கோபால் (23).

                 இவர் சேத்தியாத்தோப்பில் உள்ள உறவினர் பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.இந்நிலையில் தமிழ்வாணி கடந்த நவம்பர் 7ம் தேதி திடீரென காணாமல் போனார்.

               இதுபற்றி அவரது தந்தை சேகர், தனது மகள் தமிழ்வாணியை கோபால் கடத்தி சென்று விட்டதாக சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தார் .அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் தமிழ்வாணி மற்றும் கோபாலை பிடித்தனர். தமிழ்வாணியை மருத்துவ சோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோபாலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

Read more »

திடீர் தீ விபத்து: ரூ. ஒரு லட்சம் சேதம்

நெல்லிக்குப்பம்:

             நெல்லிக்குப்பம் அருகே இரண்டு வீடுகள் எரிந்ததில் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. நெல்லிக் குப்பம் அடுத்த நத்தமேட்டை சேர்ந்தவர் சின்னபொண்ணு. இவரது கூரைவீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.

              அச்சமயம் காற்று வீசியதால் அருகில் இருந்த முத்து வீட்டிற் கும் தீ பரவியது. தகவலறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் இரண்டு வீடுகளில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

Read more »

அழைப்பிதழ் அச்சடித்த தொகையை கேட்டு சென்னை நிறுவனம் கலெக்டருக்கு கடிதம்

கடலூர்:

                   நெல்லிக்குப்பம் பஸ் நிலைய திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடித்த தொகை 87 ஆயிரம் ரூபாய் கேட்டு சென்னை நிறுவனம் கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கடலூர் மாவட்டம், நெல்லிக் குப்பம் நகராட்சி புதிய பஸ் நிலையம் கட்டட திறப்பு விழா 2008 அக்டோபர் 24ம் தேதி காராமணிக் குப்பத்தில் நடந்தது.

                  துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழா என்பதால், சிறப்பாக அழைப்பிதழை அச்சடிக்க சென்னையில் உள்ள "என்த்ரால்' நிறுவனத் திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. அதற்கான தொகை 87 ஆயிரம் ரூபாயை இதுவரை கொடுக்கவில்லை. பொறுத்துப் பார்த்த "என்த்ரால்' நிறுவனம் கடன் பாக்கியை கேட்டு கலெக்டர் சீத்தாராமனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
                 தகவலறிந்த கலெக்டர் நடந்தது என்ன என்பது குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பஸ் நிலைய திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்த துறையினர் இதுவரை அதற்கான தொகை செலுத்தாமல் உள்ளார்களா அல்லது தொகை செலுத்தி வரவு வைக்கப்படாமல் உள்ளதா அல்லது பொறுப்பில் இருந்த பி.ஆர்.ஓ., தொகையை செலுத்தாமல் கைவரிசையைக் காட்டினாரா என்பது விசாரணையில் தெரியவரும்.

Read more »

நடுவீரப்பட்டு பகுதியில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்கள் வீணாகிறது

நடுவீரப்பட்டு:

                  நடுவீரப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 2 லட்சம் செலவில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் பயன்படுத் தாமல் வீணாகி வருகிறது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தலா 2 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

              நடுவீரப்பட்டு ஊராட்சியில் கைலாசநாதர் கோவில் எதிரில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்படுத்த தயங்குகின்றனர். அரசு அதிகாரிகள் ஒவ்வொரு அரசு கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்த பிறகுதான் கட்ட நடவடிக்கை எடுக்கின்றனர். அப்படி இருந்தும் எப்படி இங்கு கட்ட அனுமதி அளித்தனர். சி.என்.பாளையத்தில் உள்ள சுகாதார வளாகம் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
                அதற்கான மின் இணைப்புக்கான பணம் கட்டுவது சம்பந்தமாக மகளிர் மன்ற நிர் வாகிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் மின்சாரம் இல்லாமல் தற்போது பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது.முத்துகிருஷ்ணாபுரத் தில் உள்ள சுகாதார நிலையம் திறப்பு விழா காணாமலேயே முட்புதர்களால் மூடப்பட்டு வீணாகி வருகிறது. இப்பகுதி மக்கள் அதன் அருகில் ரோட்டையே பொது கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இரண்டு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்திற்கு சில நூறு செலவு செய்தாலே மக்கள் பயன்பாட்டிக்கு வரும் நிலையில் உள்ளதை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

உளுந்துப் பயிருக்கு வீராணம் நீர் திறப்பு

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் உளுந்துப் பயிருக்கு வீராணம் ஏரியில் இருந்து வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படப்பட இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் 1.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா நெல் அறுவடைக்கு 10 தினங்களுக்கு முன், வயல்களில் ஊடுபயிராக உளுந்து விதைத்து விடுவார்கள். வயலில் உள்ள ஈரப்பதத்திலும், பனியிலும் 90 நாள்களில் விளைந்து அறுவடைக்குத் தயாராகி விடும் உளுந்து. இந்த ஆண்டு சம்பா பயிருக்கு காவிரி நீர் தாமதமாகக் கிடைத்ததாலும், உளுந்து விதை, தேவையான அளவுக்கு கிடைக்காததாலும், 70 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே உளுந்து விதைக்கப்பட்டு உள்ளது. அண்மையில்தான் டி-9 உளுந்து விதையை, வேளாண் துறை தருவித்து வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனைக்கு வைத்து உள்ளது. வழக்கம்போல் மேட்டூர் அணை ஜனவரி 28-ம் தேதியுடன் பாசனத்துக்கு மூடப்பட்டு விட்டது. வீராணம் ஏரியின் அனைத்து பாசன வாய்க்கால்களும் மூடப்பட்டு விட்டன. எனவே தற்போது பயிரிடப்பட்டு 30 முதல் 40  நாள்கள் ஆகி இருக்கும் உளுந்து பயிருக்கும், புதிதாக உளுந்து விதைக்க விரும்பும் விவசாயிகளுக்கும், வீராணம் ஏரி நீர் விட்டு விட்டு 3 நாள்கள்கள் வழங்கினால், உளுந்து உற்பத்தியை பெருக்க முடியும் என்று விவசாயிகள் அரசுக்குத் தெரிவித்து இருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு இருப்பதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன்  கூறியது: 

                உளுந்துப் பயிருக்கு  வீராணம் ஏரி நீர் வழங்துவது குறித்து, பொதுப் பணித்துறை அதிகாரிகள் விவாதித்தனர். அந்தந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, வாய்க்கால்களில் 20 கன அடி நீர் திறக்க சம்மதித்து இருக்கிறார்கள். இதன் மூலம் முக்கிய வாய்க்கால்களில் தண்ணிரைத் தேக்கி வைத்து, அதில் இருந்து தேவைப்படும் நீரை விவசாயிகள் எடுத்து, டி.ஏ.பி. நுண்ணூட்டச் சத்துக் கரைசலை, கைத் தெளிப்பான்கள் மூலம் தெளிக்க வசதியாக இருக்கும். இதனால் உளுந்து மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏறப்பட்டு உள்ளது. டி.ஏ.பி. உரம் 50 சதவீதம் மானிய விலையில் மத்திய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் வழங்கப்படுகிறது. புதிதாக உளுந்து பயிரிடுவோரும், இந்த நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தினால் 40 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிரிட்டு, நல்ல மகசூலைப் பெறமுடியும். விவசாயிகள் தங்கள் பகுதி பொதுப் பணித் துறை அலுவலர்களை அணுகி தண்ணீரைக் கேட்டுப் பெற்று, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ரவீந்திரன்.

Read more »

விழிப்புணர்வு முகாம்

நெய்வேலி:

            நெய்வேலி பயோனியர் தொண்டு நிறுவனம் சார்பில் தட்பவெப்பம் மாற்றம் குறித்த தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. இம் முகாமை ஒட்டி மாணவ, மாணவியருக்கு இடையே கட்டுரை, பேச்சு, பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.  இம்முகாமின் நிறைவு நாளன்று பயோனியர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.எம்.கார்த்திக்கேயன் சிறப்புரை நிகழ்த்தினார்.  மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் ஜெயமூர்த்தி, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Read more »

உலக மகளிர் தின விழா

நெய்வேலி:

                    நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம், என்எஸ்எஸ் பிரிவு 12 மற்றும் நெய்வேலி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற மகளிர் தினவிழாவுக்கு கல்லூரி முதல்வர் அரங்கராசன் தலைமை வகித்தார். பேராசிரியர் கிப்ட் கிறிஸ்டோபர் வரவேற்றார். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் ஜி.எம்.வசந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். பேராசிரியர் விவேகானந்தன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் எஸ்.தியாகராஜன் நன்றி கூறினார். விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள் உட்பட 200 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Read more »

ராஜ்ய விருது

நெய்வேலி: 

                  நெய்வேலி மாவட்ட சாரண, சாரணியருக்கான ராஜ்ய புரஷ்கார் வழங்கும் விழா நெய்வேலி வட்டம் 25-ல் உள்ள பி.பி.பவனில் சனிக்கிழமை நடைபெற்றது. என்எல்சி நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளர் சி.செந்தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாரண மாணவ, மாணவியரின் பணிகளைப் பாராட்டி, 80 பேருக்கு ராஜ்ய புஷ்கார் விருதை வழங்கினார். விழாவுக்கு, என்எல்சி கல்வித்துறை செயலர் சுகுமார் தலைமை வகித்தார்.கூடுதல் முதன்மை மேலாளர் ஜோதிக்குமார் வாழ்த்துரை வழங்கினார். நெய்வேலி சாரண இயக்கத்தின் மாவட்டச் செயலர் சேகர் வரவேற்றார். சாரண ஆசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Read more »

விலைவாசி உயர்வுக்கு மருந்து விற்பனை பிரதிநிதிகள் கண்டனம்

கடலூர்:

                      விலைவாசி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து, கடலூர் மாவட்ட மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்க ஆண்டு பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தனியார் நிறுவனத்தின் தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். பாலகணேஷ் தலைமை தாங்கினார். சரவணன் வரவேற்றார். மாவட்டச் செயலர் ஆர்.எஸ். ராமசாமி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் கருப்பையன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். சங்கத்துக்கு மாவட்டத் தலைவராக பாலகணேஷ், செயலராக ராமசாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

Read more »

மாணவர்களை தாக்கியவர்கள் கைது

ராமநத்தம்:

                 ராமநத்தத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் தேவநாதன் மகன் வினோத்ராஜ் (20). இவர் தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன் றாமாண்டு பி.பி.ஏ., படித்து வருகிறார்.

                நண்பர்களுடன் ராமநத்தம் சென்றுவிட்டு, ரூமிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தொழுதூர் காலனியை சேர்ந்த பெரியசாமி மகன் பழனிவேல் (40), கோவை மாதம்பட்டியை சேர்ந்த சந்தனதுரை மகன் நாகேந்திரன் (21) இருவரும் குடிபோதையில், வினோத்ராஜ், அவரது நண்பர்களை ஆபாசமாக திட்டி தாக்கினர். ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து பழனிவேல், நாகேந்திரனை கைது செய்தனர்.





Read more »

பண்ருட்டியில் பழவியாபாரி மீது தாக்குதல் மூவருக்கு வலை

பண்ருட்டி:

                       பழ வியாபாரியை தாக் கிய மூவரை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் முருகன்(32). இவர் காந்தி ரோட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் செக்கு மேட்டு தெரு ராஜா பழம் கேட்டார். பணம் கொடுத்தால் தருவதாக முருகன் கூறினார்.

                     இதில் ஆத்திரமடைந்த ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களான செக்குமேட்டு தெரு ஆனந்த், பங்களா தெரு ஸ்ரீதர் ஆகியோர் முருகனை தாக்கினார் .இதில் காயமடைந்த முருகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து ராஜா உள்ளிட்ட மூவரையும் தேடிவருகின்றனர்.

Read more »

கார் கவிழ்ந்து நால்வர் காயம்

சிறுபாக்கம்:

           சாலை தடுப்பு கட்டையில் கார் மோதி கவிழ்ந்ததில் நான்கு பேர் படுகாயமடந்தனர். சென்னையை சேர்ந்த பீட்டர்காவு (70). இவர் தனது உறவினர்களான அனில்காவு (55), லில்லிகாவு (70) ஆகியோருடன் நேற்று முன்தினம் காரில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

                   காரை சிவகங்கையை சேர்ந்த செந்தில்வேல் (26) ஓட்டி வந்தார். வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் புல்லூர் கைகாட்டி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கார், சாலை தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. அதில் பீட்டர்காவு உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திட்டக்குடி: 

              பெண்ணாடத்தை சேர்ந்தவர் சண்முகம் (55). சம்பவத்தன்று ரோட்டில் நடந்து சென்றபோது திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. அதில் படுகாயமடைந்த சண்முகம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

வங்கியில் அலாரம் ஒலித்ததால் திடீர் பரபரப்பு

கடலூர்:

                  கடலூர் வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் நேத்தாஜி ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. விடுமுறை தினமான நேற்று காலை 9.45 மணியளவில் வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஓலித்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டனர்.
 
                 தகவலறிந்த வங்கி மேலாளர் கேசவன், விரைந்து வந்து வங்கியை திறந்து மின் இணைப்பை துண்டித்தார். பின்னர் பாதுகாப்பு பெட்டக அறைகளை சரி பார்த்ததில் எந்த சம்பவமும் நிகழவில்லை என்பதை உறுதி செய்தார்.
                   
              பின்னர் எலக்ட்ரீசியனை வரவழைத்து சரிபார்த்ததில் அலாரத்திற்கு செல்லும் ஒயரை எலி கடித்திருப்பது தெரிய வந்தது. விடுமுறை தினத்தில் வங்கியில் பாதுகாப்பு பெட்டக அலாரம் அடித்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.




Read more »

கார்குடல் தீ விபத்து அரிமா சங்கம் நிவாரணம்

விருத்தாசலம்:

               தீ விபத்தில் வீடிழந்தவர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஜெயராமன், ராதாகிருஷ்ணன், ஆதிமூலம் ஆகியோரின் வீடுகள் எரிந்து சாம்பலாயின.
 
              இதில் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு அரிமா சங்கம் சார்பில் அரிசி, வேட்டி, சேலை, மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.அரிமா சங்க வட்டார தலைவர் சுரேஷ்சந்த், தலைவர் அருணாசலம், செயலாளர் ராதாகிருஷ் ணன், துரைராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் குறிஞ்சிசெல்வம் கலந்து கொண்டனர்


Read more »

மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி விடுதி மாணவர் பலி

நெல்லிக்குப்பம்:

                  விடுதி வார்டனுக்கு தெரியாமல் வெளியே சென்ற மாணவன், மதில் சுவர் இடிந்து விழுந்து இறந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி லட்சுமி. இவர் களது மகன் முரஷரி (15). குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

                 முரஷரி, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இப் பள்ளிக்குச் சொந்தமான குமராபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் முரஷரி தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு முரஷரி மற்றும் அவரது நண்பர்கள் பிரபாகரன், விஜயேந்திரன், சஞ்சய்வாசன், வினோபாலன் ஆகியோர் சினிமா பார்க்க விடுதி வார்டனுக்கு தெரியாமல் மதில் ஏறி குதித்து கடலூர் சென்றனர்.
                    டிக்கெட் கிடைக்காததால், ஓட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தனர். ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்டமதில் மீது ஏறி இரண்டு மாணவர்கள் விடுதிக்குச் சென்றனர். மூன்றாவதாக முரஷரி மதிலை பிடித்து ஏற முயன்றபோது அவர் மீது சுவர் இடிந்து விழுந்தது. முரஷரி இடிபாட்டில் சிக்கி இறந்தார்.

            நேற்று காலை முரஷரி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) செல்வம், சப்-இன்ஸ் பெக்டர் அன்பரசு ஆகியோர் வழக்குப்பதிந்து இறந்த முரஷரியுடன் வெளியே சென்ற நான்கு மாணவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Read more »

கர்ப்பிணி பெண் தீயில் கருகி பலி

பண்ருட்டி : 

                கர்ப்பிணி பெண் தீயில் கருகி இறந்தார். பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் நாகஜோதி மனைவி சிவகங்கா(23).  இவர்களுக்கு திவாஸ்(2) என்ற ஆண் குழந்தை உள்ளது. தற் போது  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவகங்கா தனது குழந்தை திவாசிற்கு கொடுப்பதற்காக பால் காய்ச்சினார். அப்போது அவரது சேலையில் தீ பரவியது. உடல் கருகிய சிவகங்காவை  புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

Read more »

பிரளயகாலேஸ்வரர் கோவிலில் உண்டியல் உடைத்து திருட முயற்சி

திட்டக்குடி : 

                பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
 
               பெண்ணாடத்தில் அழகியகாதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், கோவில் பூட்டப்பட்டது.  இரவு காவலர் மீனாட்சி சுந்தரம் கோவிலில் படுத்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை அம்மன் சன்னதி கதவு திறந்து கிடந்தது. அங்கிருந்த உண்டியல் மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தை கம்பியால் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனைக் கண்டு திடுக்கிட்ட இரவு காவலர் மீனாட்சி சுந்தரம் கொடுத்த தகவலின் பேரில் கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.  இரவில் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல் மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து திருட முயன்றதும், அது முடியாமல் போனதால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றது தெரிய வந்தது. புகாரின் பேரில் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன், சப்- இன்ஸ் பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும்,  இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Read more »

டாஸ்மாக் கடை முன் மறியல் : மனித நேய மக்கள் கட்சியினர் கைது

சிதம்பரம் : 

                   சிதம்பரத்தில் மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
                டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மனித நேய மக்கள் கட்சி சார்பில் சிதம் பரம் லால்கான் தெரு டாஸ்மாக் கடை முன்பு மறியல் போராட்டம் நடந்தது.  த.மு.மு.க., மாவட்ட பொருளாளர் அமீர்பாஷா தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி நகர பொருளாளர் ஜமால் உசேன், நகர செயலாளர் அல்தாப் உசேன், இஸ்மாயில் முன்னிலை வகித்தனர்.  த.மு.மு.க., மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத், துணை செயலாளர் மன்சூர், மருத்துவ அணி மகபூப் உசேன் கண்டன உரையாற்றினர். மறியலில் ஈடுபட்ட 120 பெண்கள் உட் பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
விருத்தாசலம்: 

                    பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் அகமத் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் நிஜாமுதீன், முஜிபுர் ரகுமான், முகமது உசேன், சர்புதீன் முன்னிலை வகித்தனர். நெய்வேலி நகர செயலா ளர் ஜாபர் அலி ஆர்ப் பாட் டம் குறித்து பேசினார். மாநில கொள்கை விளக்க பேச்சாளர்  தெய்மியா, மாதர்ஷா, நவாப் பள்ளி செயலாளர் முகமது முஸ்தபா, நகர செயலாளர் அப்துல்ஹக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை துவங்கியது


கிள்ளை:

             சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் சுற் றுலா மையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை துவங்கியுள்ளது. கோடைக் காலம் துவங்கியதால் சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை துவங்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

                அத்துடன் சுற்றுலா மையத்தில் கடந்த நவம்பர் மாதம் 11ம்தேதி புராதன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்ட கோபுரத்தில் "டெலஸ் கோப்' துவக்கி வைத்தார்.  இரண்டு நிமிடத்திற்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இதன் மூலம் இதுவரை 60 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior