உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.யில் விரைவில் பி.ஜி.எல். படிப்பு

                  தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பி.ஜி.எல். (இளநிலை பொது சட்டப் படிப்பு) பட்டப் படிப்பை விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

                தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் 105-க்கும் மேற்பட்ட இளநிலை, முதுநிலை மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், முதல் முறையாக பி.ஜி.எல். எனப்படும் இளநிலை பொது சட்டப் படிப்பை விரைவில் அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.இந்தப் படிப்பைத் தொடங்க முதல் கட்டமாக பொதுவான சட்டம் சார்ந்த பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்தப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டவுடன் கல்விக் குழு மற்றும் ஆட்சி மன்றக் குழு அனுமதி பெற்ற பின் பொது சட்டக் கல்விக்கென தனித் துறை அமைக்கப்படும். 

            பல்வேறு சட்டப் பிரிவுகளைச் சார்ந்த சட்டவியல் வல்லுனர்களின் ஆலோசனையுடன் சட்ட கவுன்சிலின் அனுமதியுடன் இந்த பி.ஜி.எல்.- இளநிலை பொது சட்டப் படிப்பு அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் படிப்பில் சேர முடியும்.இப்போது சில பல்கலைக்கழகங்கள் வழங்கும் பிஜிஎல் பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றால், சட்டங்கள் குறித்த பொதுவான அறிவை மட்டுமே பெற முடியும்.

                         ஆனால், தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பிஜிஎல் இளநிலை பொது சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற வேண்டுமெனில், அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞரிடம், ஒரு மாதம் நீதிமன்ற நடைமுறைகள் குறித்து பயிற்சி பெறுவது அவசியம். இதன் பின்னரே பிஜிஎல் பட்டம் பெற இயலும். இதற்கு முறையான அங்கீகாரம் பெற சட்ட கவுன்சிலிடம் அனுமதி பெறவும்  திட்டமிடப்பட்டுள்ளது.

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.பி.வெங்கட்ரங்கன் காலமானார்


 
சிதம்பரம்:
 
              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.பி.வெங்கட்ரங்கன் (72) திங்கள்கிழமை காலை, சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் காலமானார்.
 
              எல்.பி.வெங்கட்ரங்கன் 20-10-1938 அன்று கடலூரில் பிறந்தவர். அண்ணாருக்கு சித்ரலேகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. மக்கள் தொகையியல், எம்.ஃபில், பிஎச்டி முடித்து அதே பல்கலையில் விரிவுரையாளராக சேர்ந்தார். பின்னர் மக்கள்தொகையியல் துறைத் தலைவராகவும், 1999-2002 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மைய இயக்குநராகவும், 2002 முதல் 2008 வரை துணைவேந்தராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார்.
 
                இவர் துணைவேந்தராக இருந்த காலத்தில் பல்கலைக்கழக 75வது ஆண்டு விழா, 93வது அறிவியல் மாநாடு ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. இவ் விழாக்களில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 
இரங்கல் கூட்டம்: 
 
               அண்ணாரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமையில் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், தொலைதூரக்கல்வி மைய இயககுநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.பல்கலை. 
 
விடுமுறை: 
 
                    வெங்கட்ரங்கனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

காலமானார் தமிழறிஞர் இரா.சாரங்கபாணி


சிதம்பரம்:

            முதுபெரும் தமிழறிஞர் முனைவர் இரா.சாரங்கபாணி (85) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) காலமானார். இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை சிதம்பரம் மாரியப்பாநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

               சிதம்பரத்தை அடுத்த தேவன்குடி கிராமத்தில் 21-3-1925 அன்று பிறந்தவர் இவர். அண்ணாருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், அந்துவன் என்ற மகனும் உள்ளனர். இரா.சாரங்கபாணி 1949-82 வரை 32 ஆண்டுகள் அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும், உயர் ஆராய்ச்சி மைய நெறியாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1982-86 வரை 4 ஆண்டுகள் துறைத் தலைவராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1988-94 வரை சிறப்பு நிலைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 

                     இவருக்கு தமிழகஅரசின் திருவள்ளுவர் விருது 1998-ல் முதல்வர் மு.கருணாநிதியால் வழங்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு உரை வேற்றுமை 3 தொகுதிகளாக வெளியிட்டவர். சங்கப் பாடல்களுக்கும், திருக்குறள் ஆய்வுக்கும் உலகளவில் பேரறிஞராக மதிக்கப்பட்டவர். நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவினரும், என்எல்சி நிறுவனமும் இணைந்து சிறந்த எழுத்தாளர் விருது அளித்து பாராட்டியுள்ளன. சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம். மேல்நிலைப் பள்ளிக்குழுத் தலைவராகவும் இருந்து வந்தார்.

Read more »

3-வது நாளாக மழை: வயல்போல் மாறிய கடலூர் சாலைகள்


நாற்று நடவுக்குத் தயாராக இருக்கும் வயல் போல் காட்சி அளிக்கும், திருப்பாப்புலியூர் முத்தையா நகர் விரிவாக்கச் சாலை.
 
கடலூர்:

           கடலூரில் 3-வது நாளாக மழை நீடித்தது. இதனால் பல சாலைகள், உழுது நாற்று நடுவதற்குத் தயாராக இருக்கும் வயல்போல் மாறிவிட்டன. எனவே நகர மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

              தென்மேற்குப் பருவ மழையாகத் தொடங்கி, வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையும் ஏற்பட்டு கடந்த 3 நாள்களாகக் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்து விட்டதாக மூத்த விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருந்துவிட்டு, வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், நெடுஞ்சாலைகளை தோண்டத் தொடங்கி இருக்கிறார்கள். 

              தரை மட்டத்தில் இருந்து 5 அடி தோண்டினாலே பலஇடங்களில் நீர் சுரக்கும் கடலூரில், மழைக்காலத்தில் வேலைகளைத் தொடங்கி இருப்பது எத்தகைய ஆபத்து என்பதை பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவோர் புரிந்துகொண்டு இருப்பதாகவே தெரியவில்லை.பல நகராட்சிகளில் எல் அண்ட் டி போன்ற தரமான நிறுவனங்களிடம் பாதாளச் சாக்கடை திட்டப் பணி ஒப்படைக்கப்பட்டு இருக்கும் நிலையில், கடலூரில் அனுபவமற்ற நபர்களிடம் கான்ட்ராக்ட் ஒப்படைக்கப்பட்டு இருப்பதே, கடலூரில் இப்பணி நீண்டுகொண்டே போவதற்குக் காரணம் என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

             ற்கெனவே நகராட்சி நிர்வாகம், சாலைகள் அமைக்க நிதியின்றித் தவிக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் சாலைகளைத் தோண்டுவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. 3 நாள்களாகப் பெய்துவரும் மழையால், கடலூர் நகரச் சாலைகள் அனைத்தும் சீர்குலைந்து, நாற்று நடவுக்குத் தயாராக இருக்கும் வயல்கள்போல் மாறி விட்டன.மக்கள் நடந்து செல்வதற்கே லாயக்கற்றதாகச் சாலைகள் மாறிவிட்டன. இரு சக்கர வாகனங்களில் செல்வவோர் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது.  இதுகுறித்து மக்கள் புகார் தெரிவித்தால், நகராட்சி ஆணையரோ, பொறியாளர்களோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

                 நகராட்சித் தலைவரின் முயற்சியால், அவருக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தின்படி, 2 அல்லது 3 லாரிகளில் கேப்பர் மலை சரளைக் கற்களை அடித்து நிரவிவிட்டுச் செல்கிறார்கள் நகராட்சி ஊழியர்கள். அவற்றை ரோலர்கள் மூலம் அழுத்தம் கொடுக்காததால், மழைக்காலத்தில் சாலைகள் மீண்டும் சேறும் சகதியுமாக மாறிவிடுவதுடன், சாலைகளின் உயரம் அதிகமாக உயர்ந்து, வீடுகள் பள்ளத்துக்குள் தள்ளப்பட்டு வருகின்றன.கடலூர் நகரின் பலபகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து, 2 மீட்டர் உயரத்துக்குள் இருக்கும் நிலையில், சாலை மட்டத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதால், மழைக் காலங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது

இதுகுறித்து நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறியது ,

                      50 கி.மீ. நீளச் சாலைகளுக்கு நிதி தருவதாக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. எந்தெந்த சாலைகள் என்று நகராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்து, மன்றக் கூட்டத்தில் வைத்து தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும். சாலைகளைச் சீரமைக்க விரைவில் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

Read more »

குண்டு உப்பலவாடியில் ரூ.5.59 கோடியில் உயர்மட்ட பாலம்


கடலூர் : 

            கடலூர் குண்டு உப்பலாவடி - கண்டக்காடு இணைக்கும் வகையில் உப்பனாற்றில் 5.59 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மட்ட பாலம் கட்டுவதற் கான பூமி பூஜை  நடந்தது. 

               கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் வெங்கடேசன், உதவிக் கோட்டப் பொறியாளர் நடனசபாபதி, முன்னாள் நிலவள வங்கிச் சேர்மன் ஜெயபால், ஊராட்சி தலைவர்கள் குப்புசாமி, லட்சுமணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், லட்சுமணன், மணிமொழிரவிராஜ், கவுன்சிலர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சின் போது கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில், 

                "கடந்த மழைக் காலத்தின்போது ஏற்பட்ட வெள்ளத்தால் இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இந்தப் பகுதியில் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அரசு 5.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உப்பனாற்றின் இடையே பாலம் கட்ட அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து பணிகள் நடக்கவுள்ளது. 125 மீ., நீளமும், 12  மீ., அகலமும் கொண்ட பாலத்தில் இரண்டு பகுதிகளிலும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதையும் அமைக்கப்படவுள்ளது. திட்டம் தொடங்கி 15 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட வேண்டும்' என தெரிவித்தார்.

Read more »

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி வெற்றி

கடலூர் : 

             மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் அண்ணாமலை பல்கலைக் கழக அணி வெற்றி பெற்றது. 

             மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அள விலான போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக அணி முதல் பரிசை வென்றது. இரண்டாம் பரிசை ஆண்கள் பிரிவில் கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி அணியும், பெண்கள் பிரிவில் திருப்பாதிரிப்புலியூர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அணியும் பெற்றன. 

                   இதன் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட கைப்பந்து கழக புரவலர் வக்கீல் பிரேம்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சாமிக்கண்ணு, கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.  விழாவில் டாக்டர் கணபதி, மாவட்ட கபடிமற்றும் ஹாக்கி சங்க செயலளர் ராமமூர்த்தி, நடுவர்கள் பாபு, கார்த்திக், சங்கர், திருஞானம் பங்கேற்றனர். கைப்பந்து கழக செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலம் நகரில் நடைபாதை பணிக்கு பூமி பூஜை

விருத்தாசலம் : 

              விருத்தாசலம் கடை வீதி பகுதியில் நடை பாதை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. 

            விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், நகரை அழகுபடுத்தும் வகையிலும் கடைவீதி சிக்னலில் இருந்து பழைய தபால் நிலையம் வரை சாலையின் இருபுறங்களிலும், விருத்தகிரீஸ்வரர் கோவிலின் முன்புறம் உள்ள சாலையின் ஒரு புறத்திலும் வடிகாலுடன் கூடிய நடை பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

               இதற்காக நெடுஞ் சாலைத் துறை சார்பில் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 லட்சம் ரூபாயும், நகராட்சி சார் பில் 13 லட்சம் என 38  லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் தில்லைகோவிந் தன், கமிஷனர் திருவண்ணாமலை முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, கவுன்சிலர்கள் அரங்கபாலகிருஷ்ணன், ராமு, கர்ணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Read more »

கடலூரில் ரூ.20 லட்சம் கருவாடுகள் சேதம் மழையால் மீனவர்கள் கவலை

கடலூர் : 

                கடலூரில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஏற்றுமதிக்கு தயார் நிலையிலிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான கருவாடுகள் சேதமடைந்தன. 

              கடலூர் துறைமுகம், மீனவளத் துறை அலுவலகம் மற்றும் சோனங்குப்பம் தோணித்துறை ஆகிய இடங்களில் மீனவர்கள் கருவாடு தயார் செய்து, கோழி தீவனத்திற்காக ஈரோடு மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம். உற்பத்தி செய்யப்படும் கருவாடுகள், சீசன் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 40  முதல் 50 டன் வரை ஏற்றுமதி செய்து வந்தனர்.  சீசன் இல்லாத காலங்களில் வாரத்திற்கு 40 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் கருவாடுக்காக மீன்கள் உலர வைப்பது குறைந்துள்ளது.

               இருப்பினும் கடந்த ஒரு வாரமாக கடலூர் துறைமுகம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் 3 களங்களிலும் மீன்களை உலர வைத்து 20 லட்ச ரூபாய் மதிப்பிலான கருவாடுகளை ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் வைத்தி ருந்தனர். இந்நிலை யில் கடந்த 21ம் தேதி  இரவு முதல் பெய்த தொடர்  மழையால் கருவாடு கள் ஏற்றுமதி செய்ய முடியாத அளவிற்கு வீணாகிப் போனது. 

இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், 

                 "மழையால் கருவாடுகள் பாழாகிப் போனது. இவற்றை பள்ளம் தோண்டி அழிப்பதை தவிர வேறு வழியில்லை' என்றார்.

Read more »

சிதம்பரம் நகரின் முக்கிய வடிகாலில் மண்டிய செடிகள் அகற்றப்படுமா?

சிதம்பரம் : 

              சிதம்பரம் நகர மேற்கு பகுதி மக்களின் முக்கிய வடிகாலான தில்லையம்மன் வாய்க்காலில் ஆகாயத் தாமரை செடிகள் மண்டி தண்ணீர் வடிய முடியாத நிலை உள்ளது. 

                சிதம்பரம் நகர மேற்கு பகுதி மக்களின் முக்கிய வடிகாலாக தில்லையம்மன் வாய்க்கால் உள்ளது. பாசிமுத்தான் ஓடையில் மொத்த கொள்ளவான 1,800 கன அடிக்கு மேல் தண்ணீர் வரும் போது இந்த வாய்க்கால் வழியாக உபரிநீர் திறந்து விடப்படுகிறது. சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் துவங்கி தில்லையம்மன் நகர், கோவிந்தசாமி நகர் வழியாக பஸ் நிலையம் பின்புறம் கான்சாகிப் வாய்க்காலில் கலக்கிறது. மழைக் காலங்களில் நகரில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் வெள்ள நீர் இந்த வாய்க்கால் மூலமாக வடிகிறது. நகர மக்களை வெள்ள பாதிப்பில் இருந்து காக்கும் முக்கிய வடிகாலாக உள்ள தில்லையம்மன் வாய்க்கால் மழைக் காலங்களுக்கு முன்பு ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுவதும், தூர்வாரப்படுவதும் வாடிக்கை.

                     ஆனால் சமீபகாலமாக ஆகாயத் தாமரை செடிகள் அகற்றப்படாததால் வெள்ள காலங்களில் தண்ணீர் தேங்கும் போது அவசரத்திற்கு பொக் லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு தண்ணீர் வடிய வைக்கும் நிலையே இருந்து வருகிறது. 54 மீட்டர் அகலமான வாய்க்கால் தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்து 20 மீட்டர் அகலமே உள்ளது. போர்க்கால அடிப்படையில் தில்லையம்மன் ஓடை மற்றும் சிதம்பரம் நகரில் தெற்கு பகுதியில் முக்கிய வடிகாலாக உள்ள  ஓமகுளம் வடிகால், வெள்ளந்தாங்கியம்மன் கோவில் அருகே செல்லும் வடிகால் ஆகியவற்றை தூர் அகற்றி ஆகாயத் தாமரை செடிகளை அப்புறப்படுத்தினால், வெள்ள காலங்களில் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

Read more »

டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படும் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உறுதி

பண்ருட்டி : 

              போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள  டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்படும் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ்  கூறினார். பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ்  கூறியது :- 

            பண்ருட்டி சப் டிவிஷனில் 7 சதவீதம் அளவில் தான் போலீசார் எண்ணிக்கை குறைவாக உள்ளனர். மற்ற சப் டிவிஷன்களில் 20 சதவீதம் அளவில் பற்றாக்குறை உள்ளது. பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம்  செயல்பட போலீசார் நியமிக்கப் படுவர். போக்குவரத்து பிரிவில்  தற்போது சிதம்பரம், விருத்தாசலம், வடலூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.
 
               விரைவில் பண்ருட்டியிலும் போக்குவரத்து சீரமைக்கப்படும். போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் பேனர்களால் விபத்துகள் ஏற்படுகிறது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள டிஜிட்டல் போர்டுகள் அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விரைவில் அகற்றப்படும். உடன் டி.எஸ்.பி., பிரசன்னகுமார், மகளிர் இன்ஸ்பெக்டர் ஆலீஸ் மேரி, சப் இன்ஸ்பெக்டர் பவானி உள்ளிட்டோர் இருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior