கடலூர் கடலில் வெள்ளிக்கிழமை கிடைத்த வஞ்சரம் மீன்கள்.
கடலூர்:
கடலூரில் மீன்கள் வரத்து பெருமளவுக்குக் குறைந்ததால், மீன்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன. தமிழக மக்களின் உணவுத் தேவையில் பெரும்பகுதியை கடல் உணவுகள் பூர்த்தி செய்கின்றன.
ஆனால் தமிழக தென் மாவட்டங்களில் இலங்கை கடற்படையினரின் தொல்லை, வட மாவட்டங்களில் அந்நிய நாட்டு மீன்பிடிக் கப்பல்கள், கடலில் கலக்கும் ரசாயன ஆலைக் கழிவுகள் உள்ளிட்ட காரணங்களால் மீன் பிடித் தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. 62 கி.மீ. நீளம் கடற்கரை கொண்ட கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்படுவதாக, மீன் வளத்துரையின் பழைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகள், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை நம்பி உள்ளன.
சுனாமிக்குப் பிறகு வங்கக் கடலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ரசாயனக் கழிவுகள், மீன் பிடித் தொழிலைக் கேள்விக் குறியாக மாற்றி வருவதுடன், மக்கள் உடல் நலனுக்கு ஏற்ற உணவான மீன்கள் உள்ளிட்ட கடல் பொருள்களின் தட்டுப்பாடு விலையேற்றத்தை உருவாக்கி, மக்களுக்குக் கடல் உணவு கிடைக்காத நிலையைத் தோற்றுவித்து வருகிறது. மீன்களின் இனப் பெருக்கத்துக்காக ஏப்ரல் 15-ம் தேதிமுதல் 45 நாள்கள் தடை விதிக்கப்பட்டபோதிலும், அடுத்து வரும் காலங்களில் அப்படியொன்றும் மீன்கள் அபரிமிதமாகக் கிடைத்துவிடவில்லை என்கிறார்கள் மீனவர்கள்.
நாளொன்றுக்கு 100 டன் மீன்கள் கிடைத்து வந்த கடலூரில், மக்கள் விரும்பும் மீன் ரகங்களுக்கு சமீபகாலமாக பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது மத்தி மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. அவைகளை கடலூர், அருகாமை மாவட்டங்களில் விரும்பி உண்பதில்லை. எனவே கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவ்வப்போது குறைந்தளவில் கிடைக்கும் பால் சுறா, சூரை, கோலா, திருக்கை, வஞ்சரம் உள்ளிட்ட சில வகை மீன்கள், திடீர் திடீர் என அதிகமாக 5 டன்கள் வரை கிடைக்கின்றன.
இந்த வகை மீன்களும், வெளி நகரங்களுக்கே அனுப்பப்படுகின்றன. பிற கடலோர மாவட்டங்களிலும் மீன்கள் கிடைப்பது குறைந்து வருவதால், கடலூரில் கிடைக்கும் கொஞ்ச மீன்களும், நல்ல விலை கருதி, வெளி மாவட்ட வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு விடுகின்றன. இதனால் கடலூரில் மீன்கள் கிடைப்பது அரிதாகி, விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. எப்போதும் 50 பேருக்குக் குறைவின்றி மீன் விற்கும் பெண்களால் நிரம்பி வழியும் கடலூர் முதுநகர் மீனவர் அங்காடியில், வெள்ளிக்கிழமை 3 பேர் மட்டுமே விற்பனை செய்து கொண்டிருந்தது வியப்பை அளித்தது.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை வஞ்சரம் மீன் விலை கிலை ரூ. 500 ஆக உயர்ந்தது. இதனால் மீன் வாங்க வந்த பலரும், கோழிக்கறி வாங்கிக் கொள்ளலாம் என்று திரும்பிச் சென்றனர். கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 வரை விற்கும் சங்கரா மீன் வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 180 ஆகவும், கிழங்கா மீன் ரூ. 200 ஆகவும் உயர்ந்து விட்டது. கடலூரில் பிடிபடும் மீன்கள் பெரும்பகுதியை வெளிமாவட்ட வியாபாரிகள் வாங்கிச் சென்று விடுகிறார்கள். வெள்ளிக்கிழமை கடலூர் மீன் இறங்கு தளத்தில் கிலோ வஞ்சரம் மீன் ரூ. 350 க்கும், கிழங்கா மீன் ரூ. 120 க்கும், சங்கரா மீன் ரூ. 80 க்கும், பிற வகை மீன்கள் ரூ. 40 முதல் ரூ. 50 க்கும் வெளிமாவட்ட வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டதாக மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தெரிவித்தார்.
மீன்கள் பற்றாக்குறைக்குக் காரணம் பற்றிக் கேட்டதற்கு சுப்புராயன் கூறுகையில், கடலூர் கடற்கரையிóல் 20 கி.மீ. தூரத்துக்குள் மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. அதற்குக்குமேல் 30 கி.மீ. தூரத்தில் ஆழ்கடலில் தைவான், ஜப்பான், நார்வே உள்ளிட்ட பிற நாட்டுக் கப்பல்கள் மீன்களை பெருமளவு பிடித்துத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்று விடுகின்றன. 20 கி.மீ. தூரத்துக்குள் உள்ள நமது கடல் பகுதிகளில், கடல் நீரோட்டம் அடிக்கடி மாறுவதால், மீன்கள் கிடைப்பது இல்லை. ரசாயன ஆலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமலேயே தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவது மீன்களை இடம்பெயரச் செய்து விட்டன.
மக்கள் உணவுத் தேவையையும், மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இப் பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்வதே இல்லை. நவீன விசைப் படகுகளுடன் மீன் பிடித் தொழில் செய்தவர்களில் 25 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளில் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர் என்றார்.