கட்சியில் புரையோடியுள்ள ஜாதிய உணர்வு மற்றும் கோஷ்டி அரசியல் காரணமாக, தி.மு.க.,வின் கோட்டை என கூறப்பட்ட பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள, 20 தொகுதிகளிலும் தி.மு.க., படுதோல்வி அடைய நேரிட்டுள்ளது' என கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியது:
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த தற்போதைய கடலூர், விழுப்புரம் மாவட்டம், தி.மு.க., தேர்தலை சந்தித்த காலத்தில் இருந்தே கோட்டையாக விளங்கி வந்தது.அந்த கால கட்டத்தில் தொண்டர்கள் ஜாதி, மதங்களை மறந்து கொள்கை பிடிப்போடு இருந்தனர். தொண்டர்களை வழி நடத்திய நிர்வாகிகளும் அவ்வாறே செயல்பட்டனர். கொள்கை ஈடுபாடும், ஆற்றல் மிக்கவர்கள் நிர்வாகிகளாக இருந்ததால், மாவட்டமே தி.மு.க.,வின் கோட்டையாக விளங்கியது.
ஒருங்கிணைந்த மாவட்ட செயலராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது கட்சியில் ஜாதிய உணர்வு மேலோங்கியதால், தொண்டர்கள் ஜாதி வாரியாக பிளவுபட்டனர். அதேகால கட்டத்தில், கட்சியின் பொறுப்புகளுக்கு ஏற்கனவே பொறுப்புகளில் இருந்தவர்களின் வாரிசுகளே நியமிக்கப்பட்டனர். இதனால், காலம் காலமாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் பதவிக்கு வரமுடியாததால் அவர்களின் செயல்பாடு குறைந்தது.
இந்நிலையில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தை, கட்சியின் நிர்வாக வசதிக்காக, கடலூர் மற்றும் விழுப்புரம் என இரு மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு கடலூர் மாவட்ட செயலர் பதவிகளுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், விழுப்புரம் மாவட்ட செயலர் பொன்முடியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடாமல், ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வந்தனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வன்னியர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் அல்லாதவர்களே, கட்சிப் பதவிகளுக்கு வர முடியும் என்ற நிலையை உருவாக்கினர்.
அனைத்திற்கும் மேலாக, மாவட்டத்தில் கட்சி பொறுப்புகளுக்கு வருபவர்கள் தங்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டனர். இவர்களை மீறி, கட்சியில் கோலோச்ச முயன்றவர்கள், மாவட்ட செயலர்களால் பல்வேறு வழிகளில் ஓரம் கட்டப்பட்டனர்.
இவ்வாறு கட்சி ஆரம்ப கால முன்னோடிகளில் ஒருவரான, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் மகன் சம்பத், பழனியப்பன், கடலூர் மாவட்ட செயலராக இருந்த மருதூர் ராமலிங்கம், துரை கிருஷ்ணமூர்த்தியின் மகன் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் உள்ளிட்ட பலர் ஓரம் கட்டப்பட்டனர். இவர்களுக்கு கட்சி பதவி முதல் எம்.எல்.ஏ., சீட் பெற முடியாமல் மாவட்ட செயலர்கள் தடை ஏற்படுத்தி வந்தனர். இதே பாணியை கடந்த தேர்தலிலும் கையாண்டனர். தனது எதிர்ப்பாளர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே, வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்குத் தள்ளி விட்டனர்.
இவர்களால் ஓரம் கட்டப்பட்ட நிர்வாகிகள், கட்சியில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க சொந்த கட்சி வேட்பாளர்களையே தோற்கடிக்க, உள்ளடி வேலைகளில் ஈடுபடத் துவங்கியதால் கோட்டையில் ஓட்டை விழத் துவங்கியது. இதே நிலைதான் நடந்து முடிந்த தேர்தலிலும் நீடித்தது.
கடலூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த அய்யப்பனுக்கு "சீட்' மறுக்கப்பட்டது. அந்த விரக்தியில் அவர் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க உள்ளடி வேலை செய்தார். அவரை அழைத்து சமாதானம் செய்வதற்கு பதிலாக, அவரை கட்சியை விட்டு நீக்கச் செய்தனர். அவர் வேறு வழியின்றி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அ.தி.மு.க.,வில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக மாவட்டத்தின் தலைநகர் தொகுதியான, கடலூரில் தி.மு.க., வேட்பாளர் வரலாறு காணாத வகையில் படுதோல்வி அடைய நேரிட்டது.
பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட சபா ராஜேந்திரன், மாவட்ட செயலரின் எதிரணி என்பதால், அவரை தோற்கடிக்க உள்ளடி வேலைகள் படு ஜோராக நடந்தது. இதேபோன்று மாவட்ட செயலரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போட்டியிட்ட, குறிஞ்சிப்பாடி தொகுதியில் அவரால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து முழுவீச்சில் உள்ளடி வேலைகளை செய்தனர். இதில் உச்சகட்டமாக பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க விழுப்புரம் மாவட்ட செயலரான பொன்முடியும், அவரை தோற்கடிக்க மற்றொரு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் முன்னோடி அமைச்சர் ஒருவரும் உள்ளடி வேலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதே உள்ளடி வேலை விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அரங்கேறியது. இழந்த பெருமையை மீட்க, கட்சியின் தலைமை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, எங்களைப் போன்ற மூத்த தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. இவ்வாறு தி.மு.க., மூத்த நிர்வாகி கூறினார்.