உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 12, 2011

கடலூர் மத்திய சிறையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் ஸ்டாலின்சந்திப்பு


கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும், முன்னாள் அமைச்சர் பொன்முடியை சந்தித்து விட்டு வெளியே வரும், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடலூர்:

           அ.தி.மு.க. அரசைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று, முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடலூரில் தெரிவித்தார்.

          நிலம் பறிப்பு புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் இருக்கிறார். அவரை வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

பின்னர் சிறை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் கூறியது: 

           புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவேன், உலகத்தில் 2-வது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவேன் என்று பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு வருகிறார்.போயஸ் தோட்டத்தையும் மனநல மருத்துவமனையாக மாற்றி அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை, அடியோடு நிறுத்தி விட்டார்.துக்ளக் ஆட்சியைப் போல் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

           ஹிட்லர் ஆட்சிபோல் 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.அவர்களின் குடும்பங்கள் கண்ணீரும் கம்பளையுமாக உள்ளன. கடந்த முறை மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டபோது, 70 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மீண்டும் அந்த அவலம் உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எல்லோருக்கும் எதிர்காலத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது. இந்த ஆட்சியின் அவலங்களைக் கண்டித்து பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

              தி.மு.க. இளைஞரணி சார்பில் வருகிற 15-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.அதைத் தொடர்ந்து கட்சித் தலைமையின் அனுமதி பெற்று உண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த ஆலோசித்து வருகிறோம் என்றார் ஸ்டாலின்.அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மக்களவை உறுப்பினர் ஆதி.சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, முன்னாள் நகராட்சித் தலைவர்கள் ஏ.ஜி.ராஜேந்திரன், து.தங்கராசு உள்ளிட்டோர் வந்து இருந்தனர்







Read more »

திருமண நல உதவித் தொகை, தாலிக்கு தங்கம் திருமணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னதாக வழங்கப்படுகிறது: சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்

 விருத்தாசலம்:

          திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே திருமண நல உதவித் தொகை, தாலிக்கு தங்கம் ஆகியன வழங்கப்பட்டு வருவதாக தமிழக சமூக நலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தெரிவித்தார். 

             விருத்தாசலம், கம்மாபுரம், மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட 224 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி விருத்தாசலத்தில் நடைபெற்றது. 

 விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது: 

            பெண்கள் கல்வி அறிவை பெற சிறப்பான திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமாகும். பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய திட்டமாக உள்ளது.  பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கமும், 25 ஆயிரம் ரூபாய் பணமும், பட்டப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் பணமும், 4 கிராம் தங்கமும் வழங்கி வருகிறார். இது பெண்களை கல்வி கற்க ஊக்குவிப்பதற்கான திட்டமாக உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கு தாயாக, தந்தையாக விளங்குகிறார் என தெரிவித்தார்.  

அமைச்சர் செல்வி ராமஜெயம் தெரிவித்தது: 

              தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்து 6 மாதத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் திட்டங்கள் சென்றடைந்துள்ளது. மங்களூர் ஒன்றியத்தில் பத்தாம் வகுப்பு படித்த 34 பேருக்கும், பட்டப் படிப்பு படித்த 27 பேருக்கும் வழங்கப்படுகிறது. கம்மாபுரம் ஒன்றியத்தில் 10-ம் வகுப்பு படித்த 38 பெண்களுக்கும், பட்டப் படிப்பு படித்த 5 பேருக்கும், விருத்தாசலம் ஒன்றியத்தில் 10-ம் வகுப்பு படித்த 55 பெண்களுக்கும் வழங்கப்படுகிறது.  நல்லூர் ஒன்றியத்தில் 10-ம் வகுப்பு படித்த 40 பெண்களுக்கும், பட்டப் படிப்பு படித்த 2 பெண்களுக்கும் நிதி உதவி மற்றும் தங்கம் வழங்கப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு 83 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் என தெரிவித்தார். 

             நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் வெ.அமுதவல்லி தலைமை ஏற்றார். ஊரகத் தொழில்துறை மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினர்.








Read more »

இலவச இலவச மடிக்கணினியில் பொறியியல், கலை அறிவியல் பாடங்கள் பதிவு செய்து வழங்கப்படும்

            கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச லேப்டாப்-ல் பொறியியல், கலை அறிவியல் பாடங்கள் பதிவு செய்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக உயர்கல்வித் துறைச் செயலர் ஆர்.கண்ணன் தெரிவித்தார்.

கோவையில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் தரமான கல்வி என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடந்த கருத்தரங்கைத் துவக்கி வைத்து தமிழக உயர்கல்வித் துறைச் செயலர் ஆர்.கண்ணன் பேசியது:

               கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்துவது என்ற இலக்கில் தமிழகம் வெற்றி அடைந்திருக்கிறது. அனைவரும் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதே தற்போதைய அரசின் நோக்கமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வதேச அளவில் திறன் மிக்கவர்களாக மாணவர்களை மாற்றுவதற்காக, மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. ஆராய்ச்சிப் படிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக பிஎச்டி பட்டம் அளிப்பதற்கான நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன.

           உலகப் போட்டி, பல்வேறு துறைகளின் வியத்தகு வளர்ச்சிக்கு ஏற்ப பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்பதே நமக்கு சவாலாக இருக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இதில் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் பாடங்களை பதிவு செய்து அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். பாடங்கள் குறித்த விடியோ, பாடச் சுருக்கங்கள் இதில் இடம்பெறும். இது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார். சிஐஐ கோவை மண்டல தலைவர் ரவி சாம், சிஐஐ கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.கே.சுந்தரராமன், கே.செந்தில்கணேஷ் உள்ளிட்டோர் பேசினர்.












Read more »

கடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஜே.சி.பி. ஓட்டுனர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கடலூர் : 

         கடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஜே.சி.பி. ஓட்டுனர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கடலூர் நகராட்சி கமிஷனர் இளங்கோவன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

             கடலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப நபர்களிடம் இருந்து 2011-12ம் ஆண்டுக்கான சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் நடந்தது.இதில் 205 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், ஜே.சி.பி. ஓட்டுனர் பயிற்சி, வெல்டிங், பிட்டர் மற்றும் கணினி சம்பந்தமான பயிற்சிகள் நடைபெற உள்ளதால் 8ம் வகுப்பு (தேர்ச்சி, தோல்வி), முதல் பட்டயப் படிப்பு கல்வி பயின்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

            பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கடலூர் நகராட்சி பொது சுகாதார பிரிவில் அனைத்து வேலை நாட்களிலும் 11ம் தேதி முதல் வரும் 18ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நகராட்சி அலுவலகத்தில் வரும் 18ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 







Read more »

நவீன வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட பிரமாண்டமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் - தமிழக அரசு அறிவிப்பு





            வீதிகள் தோறும் நமது அரசு மதுபானகடைகளை திறந்து வைத்துள்ளது.   இப்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு 14,965 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும்.     இந்த வருமானத்தை அடுத்த அண்டில் 20 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.

           இதையடுத்து  வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும், நவீன வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட பிரமாண்டமான அளவில் இருக்கும் “எலைட் ஷாப்” என்ற பெயரில் மதுபான கடைகளை திறக்கவும், அது தவிர மாவட்டம் தோறும் ஐந்து இடங்களில் சாதாரண மதுபானகடைகளை திறக்கவும் கோட்ட முதுநிலை மேலாளருக்கு அதிகாரம் அளித்துள்ளது தமிழக அரசு.


       தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஐந்து சாதாரண டாஸ்மாக் கடைகளையும், இரண்டு “எலைட் ஷாப்” கடைகளையும் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள் மண்டல மேலாளர்கள்.  இந்த “பார்”களில் மற்ற “டாஸ்மாக்” பாரில் இருப்பதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் “சேவை”க்கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு அலுவலர் கூறினார். அரசு மக்களுக்கு செய்யும் “நல்ல சேவை” 













Read more »

மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாள் தேசியக் கல்வி நாளாக கொண்டாட்டம்

சிதம்பரம்:

              சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாள் தேசியக் கல்வி நாளாக சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபலின் வேண்டுகோளின்படி, கொண்டாடப்பட்ட இவ்விழாவில், பிரதமர் மன்மோகன்சிங்கின் தூதுமடலை, மாணவர்கள் முன்னிலையில் மாணவி ஆதித்யா படித்தார். விழாவுக்கு பள்ளித் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் முன்னிலை வகித்தார்.







Read more »

திட்டக்குடி நகைக் கடையில் ரூ.50 லட்சம் நகை கொள்ளை

கடலூர்:

           கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகைக்கடையில் ரூ. 50 லட்சம் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.

             திட்டக்குடி சின்ன கடைவீதியில் அடகுக் கடையுடன் இணைந்த நகைக் கடை வைத்து இருப்பவர் பூபதி (35).வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று விட்டார். அதிகாலை 2 மணி அளவில் இரண்டுக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் அங்கு வந்து, நகைக் கடையின் 5 பூட்டுகளையும் உடைத்து 120 பவுன் நகைகள், 33 கிலோ வெள்ளி நகைகள் ஆகியவற்றை கொள்ளை அடித்துள்ளனர். 

               அவற்றின் மதிப்பு ரூ. 50 லட்சம். நகைகளை அவை வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் டிரேக்களுடன் எடுத்துச் சென்ற கொள்ளையர்கள், அவற்றை திட்டக்குடியில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள, புலிவலம் ஓடையில் வீசியுள்ளனர்.இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி திட்டக்குடி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior