கடலூர்:
கடலூரில் வெள்ளிக்கிழமை இரவு, நகர பொது நல அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்து இருந்த பொது மேடை நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், தாங்கள் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன செய்வோம் என்று, வாக்குறுதிகளை அளித்தனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் என்றாலே, தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்வது என்பது, நினைத்துப் பார்க்க முடியாத, கற்பனைக்கு எட்டாத விஷயமாகவே இருந்து வருகிறது.ஆனால் கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு, ஏற்பாடு செய்து இருந்த பொதுமேடை நிகழ்ச்சியில், கடலூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் கலந்து கொண்டது, சிறந்த ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும், மிகப்பெரும் சாதனையாக கடலூர் மக்களிடையே பேசப்படுகிறது.
கடலூர் புதுப்பாளையம் கடைவீதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கடலூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்யிடும் வேட்பாளர்கள்,
சி.கே.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.),
கே.எஸ்.ராஜா (தி.மு.க.),
செ.தனசேகரன் (மார்க்சிஸ்ட்),
ஏ.எஸ். சந்திரசேகரன் (காங்கிரஸ்),
தாமரைச்செல்வன் (விடுதலைச் சிறுத்தைகள்),
ஏ.கே.சேகர் (ம.தி.மு.க.),
செல்வம் (பா.ஜ.க.)
ஆகியோர் கலந்து கொண்டனர்.அவர்களை பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் வரவேற்று, அறிமுகம் செய்து வைத்து, பெயரின் அகர வரிசையில், மேடையில் அமரச் செய்தார்.வேட்பாளர்களை அவரவர் கட்சி சார்பில் ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார். வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றால், கடலூர் நகர மக்களுக்கு என்னென்ன பணிகளைச் செய்வர் என்று, தலா 10 நிமிடங்கள் பேசினர்.வாக்காளர்களின் கேள்விகளுக்கும் தனித்தனியாக பதில் அளித்தனர்.
ஏ.கே.சேகர் (ம.தி.மு.க.):
கடலூரைக் குப்பையில்லா நகரமாக்குவேன். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழுவை ஏற்படுத்தி, அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், நகராட்சி நிர்வாகத்தை நேர்மையாக நடத்துவேன்.
செல்வம் (பா.ஜ.க.):
கடலூரை சுற்றுலா நகரமாக்குவேன். குஜராத் மாநிலத்தைப் போல் சிறந்த நிர்வாகத்தை அளிப்பேன்.
சந்திரசேகரன் (காங்கிரஸ்):
காங்கிரஸ் தலைவர்கள் இந்நகராட்சியை நிர்வகித்தது போல், தூய்மையான நிர்வாகத்தையும், காமராஜர் ஆட்சியையும் தருவேன். புழுதி படிந்த கடலூரை சுத்தமாக்குவேன்.
தாமரைச் செல்வன் (விடுதலைச் சிறுத்தைகள்):
நான் துணைத் தலைவராக பணிபுரிந்த காலத்தில் ரூ. 25 கோடிக்கு சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டன. நான் தலைவரானால் நகரில் பல இடங்களில், வணிக வளாகங்கள் கட்டுவேன். பொதுக் கழிப்பிட வசதிகளை மேம்படுத்துவேன்.
செ.தனசேகரன் (மார்க்சிஸ்ட்):
வார்டு தோறும் அனைத்து தரப்பினரையும் கொண்ட ஆலோசனைக் குழு அமைப்பேன். திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியில் கமிஷன் வாங்க மாட்டேன். ஊழலற்ற, வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை அளிப்பேன்.கிராமங்களை இணைத்து முதல்நிலை நகராட்சி ஆக்குவேன். விலை மதிப்பற்ற வாக்குகளை, விற்றுவிடக் கூடாது என்று அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
கே.எஸ்.ராஜா (தி.மு.க.):
வருமானத்தை நம்பி அரசியல் நடத்துபவன் நான் அல்ல. பழைமையான குடிநீர் குழாய்களை அகற்றி, சுத்தமான குடிநீர் வழங்குவேன்.நகராட்சிப் பள்ளிகளை தரம் உயர்த்துவேன். நகராட்சிப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் உயர் கல்விக்கு உதவுவேன்.
சி.கே.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.):
ரூ. 240 கோடி நிதி ஒதுக்கி, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.கடலூருக்கு இத்திட்டம் மூலம் நல்ல குடிநீர் வழங்கப்படும். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், நகராட்சியின் தலைவராக அல்ல, மக்களுக்குத் தொண்டாற்றும் நல்ல ஊழியனாகச் செயல்படுவேன்.
பின்னர் வாக்காளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில். செலவின்றி தேர்தல் பணியாற்றி, வாக்காளர்கள் பணம் பெறாமல் வாக்களித்தால், நாங்களும் நேர்மையாக இருப்போம் என்றார் தாமரைச்செல்வன். தரமற்ற பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை ரத்து செய்வோம் என்று தனசேகரனும், கே.எஸ்.ராஜாவும் பதில் அளித்தனர்.அதிகாரிகள் சரியாக இருந்தால் ஒப்பந்ததாரர்கள் தவறு செய்ய மாட்டார்கள். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார் சி.கே.சுப்பிரமணியன்.பொது மேடைக்கான ஏற்பாடுகளை பொதுநல அமைப்புகள் சார்பில் எம்.நிஜாமுதீன், வெண்புறா குமார், அருள்செல்வன், பண்டரிநாதன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.