உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

எஸ்எஸ்எல்சி தேர்வு: 2009, 2010 ஒப்பீடு

                  எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் பள்ளிகள் மூலம் விண்ணப்பித்தவர்கள் தொடர்பான புள்ளிவிவரம் கீழே தரப்பட்டுள்ளது.


















2009
2010
       


விண்ணப்பித்த மொத்த மாணவர்கள்
9,41,853
9,67,420

 


       


பள்ளிகள் வழியாக விண்ணப்பித்தவர்கள்
8,22,872
8,44,280



 


       


மாணவர், மாணவியர் எண்ணிக்கை





 




a) மாணவர்கள்  
4,04,044
4,12,761


b) மாணவியர்  
4,18,828
4,31,519
       


மொத்த தேர்ச்சி விகிதம்  
81.6 %
82.5 %

 
( 6,71,437 )
( 6,96,704)
       







 




a)மாணவர்கள்  
78.8 %
79.4 %



 
( 3,18,166 )
( 3,27,764 )



 




b) மாணவியர்  
84.4 %
85.5 %



 
( 3,53,271 )
( 3,68,940 )
 


60 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்கள்
3,92,166 
4,17,371 
       


கணிதத்தில் நூற்றுக்கு நூறு  
5,112
2,399
       


அறிவியலில் நூற்றுக்கு நூறு
1,541
1,310
       


சமூக அறிவியலில் நூற்றுக்கு நூறு  



 
368
467
       

Read more »

இடிந்து விழுந்தது ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ராஜகோபுரம்


விரிசல் ஏற்பட்ட நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ராஜகோபுரம். புதன்கிழமை இரவு இடிந்து விழுந்த ராஜகோபுரம்.
   

                திருப்பதிக்கு அருகிலுள்ள ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது.

                  கோபுரம் இடிந்து விழுந்தபோது கோபுரத்துக்கு அருகில் இருந்த பக்தர்கள் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஸ்ரீகாளஹஸ்தியில் ஸ்ரீகாளஹஸ்தி ஞானப்பிரசுன்னாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. கோயிலின் ராஜகோபுரம் 136 அடி உயரம் கொண்டது. இந்த ராஜகோபுரத்தில் கடந்த 1988-ம் ஆண்டு லேசான விரிசல் ஏற்பட்டது. இதனால் கோபுரத்திலிருந்த சில சிற்பங்கள் உடைந்து விழுந்தன. இதையடுத்து சேதமடைந்த பகுதிகள் ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டன. இந்த நிலையில் ராஜகோபுரத்தில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அந்த விரிசல் சரி செய்யப்படவில்லை. இதனால் விரிசல் பெரிதாகி கோபுரத்தின் உச்சி வரை சென்று விட்டது. இந்த நிலையில் புதன்கிழமை காலை கோபுரத்தின் விரிசல் பெரிதாகி கோபுரம் இரண்டாகப் பிளந்துவிட்டது. இதனால் ராஜகோபுரம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து கோயிலுக்குள் பக்தர்கள் யாரையும் கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் புதன்கிழமை இரவு கோயில் ராஜகோபுரம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.÷இதையடுத்து கோயிலின் அருகில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் கோபுரத்தின் இடிபாடுகளில் சிலர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.சம்பவம் அறிந்ததும் சித்தூர் மாவட்ட ஆட்சியர் வி. சேஷாத்ரி ஸ்ரீகாளஹஸ்திக்கு விரைந்தார். ராஜகோபுர இடிபாடுகளை அகற்றுவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

விசாரணைக்கு முதல்வர் உத்தரவு: 

               ஸ்ரீகாளஹஸ்தி கோயில் கோபுரம் இடிந்து விழுந்த செய்தி அறிந்ததும் ஆந்திர மாநில முதல்வர் கே. ரோசையா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதே இடத்தில் புதிய ராஜகோபுரம் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறநிலையத்துறை அமைச்சர் ஜி. வெங்கடரெட்டிக்கு முதல்வர் உத்தரவிட்டார்.மேலும் சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

5-ம் நூற்றாண்டு கோயில்:  

              இந்தக் கோயில் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் கி.பி. 1516-ம் ஆண்டில் விஜய நகரப் பேரரசின் கிருஷ்ணதேவராய மன்னரால்தான் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டது. பஞ்சபூத தலங்களில் இக்கோயில் வாயு ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் ராகு-கேது தோஷம் போக்குவதில் புகழ் பெற்ற கோயிலாகவும் இது விளங்கி வருகிறது. தென் கைலாசம் என்றும் இந்தக் கோயில் அழைக்கப்பட்டு வந்தது. பெண்ணாறு ஆற்றின் கிளை ஆறான ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் இந்த கோயில் அழகுற அமைந்துள்ளது. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலத் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். சமீபத்தில் கூட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா ஆகியோர் கோயிலுக்குச் சென்றிருந்தனர். 

லைலா புயல் காரணமா? 

                 ராஜகோபுரம் இடிந்ததற்கு லைலா புயல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஸ்ரீகாளஹஸ்தி கோயில் கோபுரத்தின் விரிசல் அதிகமாகிக் கொண்டே போனதால் சென்னையிலிருந்து ஐஐடி பேராசிரியர், திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆலோசகர் பேராசிரியர் நரசிம்மன், புவியியல் வல்லுநர் ராம்மோகன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்தனர்.விரிசல் ஏற்பட்டிருந்த பகுதியில் அவர்கள் ஆய்வு நடத்திவிட்டுச் சென்றனர். சமீபத்தில் ஆந்திரத்தைத் தாக்கிய லைலா புயலால் ராஜகோபுரத்தின் விரிசல் மேலும் அதிகமாகியிருக்கலாம் என்றும் அந்தக் குழுவினர் கூறியதாகத் தெரியவந்துள்ளது.

Read more »

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டல மாணவர் முதலிடம்


                 நாடு முழுவதும் உள்ள மத்திய தொழில் நுட்ப நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.) சேருவதற்கு நடைபெற்ற ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வு 2010-ன் தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது.  நுழைவுத் தேர்வில் சென்னை ஐ.ஐ.,டி. மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் அனுமுலா ஜிதேந்தர் ரெட்டி முதலிடம் பெற்றுள்ளார். புவனேசுரம், சென்னை, தில்லி, காந்திநகர், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கான்பூர், காரக்பூர், மண்டி, மும்பை, பாட்னா, ராஜஸ்தான், ரோபர், ரூர்க்கி ஆகிய இடங்களில் உள்ள 15 ஐ.ஐ.டி.கள் உள்பட 17 கல்வி நிறுவனங்களில் 2010-11-ம் கல்வி ஆண்டில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஏப்ரல் 4-ம் தேதி கூட்டு நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

                  நாடு முழுவதும் நடைபெற்ற இந்தத் தேர்வில் சென்னை ஐ.ஐ.டி. மண்டலத்தில் இருந்து 65,557  மாணவர்கள் உள்பட மொத்தம் 4,55,571 பேர் தேர்வு எழுதினார்கள்.  ஐ.ஐ.டி.களில் உள்ள 9,509 இடங்களுக்கு சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 2,619 மாணவர்கள் உள்பட 13,104 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 1,13,127 மாணவிகளில் 1,476 பேர் தகுதி பெற்றுள்ளனர்.  1,27,760 ஓ.பி.சி. மாணவர்களில் 2,357 பேரும்,  42,800 எஸ்.சி., பிரிவு மாணவர்களில் 1,773 பேரும், 15,975 எஸ்.டி. மாணவர்களில் 517 பேரும் கல்வி நிறுவனங்ளில் சேர தகுதி பெற்றுள்ளனர். ஐ.ஐ.டி.களில் ஆன்லைன் மூலம் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்யும் பணி மே 30-ம் தேதி முதல் தொடங்கும். பொதுப் பிரிவு மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஐ.ஐ.டி.-யின் கலந்தாய்வில் பங்கேற்க நேரில் செல்ல வேண்டியதில்லை.  ஆனால், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க நேரில் செல்ல வேண்டும். இது பற்றிய விவரங்கள் மாணவர்களுக்கு அனுப்பப்படும் அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் தேர்வு முடிவுகளை அனைத்து ஐ.ஐ.டி.களின் இணையதளங்களிலும் பார்வையிடலாம்.

Read more »

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் நெல்லை மாநகராட்சிப் பள்ளி மாணவி முதலிடம்


சாதனை மாணவி(வலமிருந்து 3-வது) ஜாஸ்மினுடன் பெருமையைப் பகிர்ந்து கொள்ளும் தாயார் மற்றும் தந்தை(வலமிருந்து 4-வது). உடன் மகிழ்ச்சியில் திளைக்கும் தோழிகள்.
 
             பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்த திருநெல்வேலி மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவரைத் தவிர 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 494 மதிப்பெண்களை 4 பேரும், 493 மதிப்பெண்களை 11 பேரும் பெற்றுள்ளனர். மொத்தம் 16 மாணவ, மாணவியர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். மாநில பாட திட்டத்தில் தேர்வெழுதிய 9,67,420 பேரில் 6,96,704 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 82.5 சதவீதமாகும்.
 
கணித புலிகள் குறைவு: 
 
               கணிதத்தில் 2,399 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 5,112 பேர் 100 மதிப்பெண் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரேங்க் பட்டியல் மற்றும் தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல மாணவிகளே சிறப்பு சேர்த்துள்ளனர். 3,68,940 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 85.5 சதவீதம். 3,27,764 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 79.4 சதவீதமாகும்.  அறிவியல் பாடத்தில் 1,310 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 467 பேரும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தொடர்ந்து மாணவிகள் சாதனை: முதல் இடத்தை திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாஸ்மின் என்ற மாணவி பெற்றுள்ளார். 494 மதிப்பெண்களுடன் 4 பேர் இரண்டாம் இடத்தையும், 493 மதிப்பெண்களுடன் 11 பேர் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளவர்களில் 11 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மெட்ரிகுலேஷன்:
 
                 மெட்ரிகுலேஷன் பாட திட்டத்தில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்த கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.பவித்ரா 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். சென்னை (முகப்பேர் மேற்கு) வேலம்மாள் பள்ளி மாணவி ஜி.ஸ்ரீவந்தனா 493 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், பொன்னேரி பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி மாணவி டி.லாவண்யா 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த இருவரும் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்து சிறப்புச் சேர்த்துள்ளனர். இதில் ஸ்ரீவந்தனா, லாவண்யா ஆகியோர் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் மாநில அளவில் 2 மற்றும் 3-வது இடங்களைப் பெற்றுள்ளனர். முகப்பேர் மேற்கு வேலம்மாள் பள்ளி மாணவர் ரோஷன் வரலாறு - புவியியல் பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மெட்ரிகுலேஷன் பாட திட்டத்தில் தேர்வெழுதிய 1,32,545 பேரில் 1,22,246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.7 சதவீதமாகும். மெட்ரிகுலேஷனில் இந்த முறை 2,638 பேர் கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 1,374 பேர் மட்டுமே 100 மதிப்பெண் பெற்றிருந்தனர். ÷அதேபோல, அறிவியல் பாடத்தில் 1,894 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டில் 774 ஆக இருந்தது. 
 
ஆங்கிலோ-இந்தியன்:
 
               ஆங்கிலோ - இந்தியன் பாட திட்டத்தில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த கோவை செயின்ட் பிரான்சிஸ் பள்ளி மாணவி ரெனி ஏஞ்சல், கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மாணவி நம்ரிதா ஆகியோர் 483 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளனர். 482 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தில் 3 பேரும், 481 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தில் 4 பேரும் உள்ளனர். ஆங்கிலோ இந்தியன் பாட திட்டத்தின்படி 4,762 பேர் தேர்வு எழுதினர். இதில் 4,503 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.3 சதவீதமாகும். 
 
ஓரியண்டல்:
 
              ஓரியண்டல் பாட திட்டத்தில் அரபு பாடத்தை முதன்மையாக எடுத்துப் படித்த கரூர் யு.எச். ஓரியண்டல் அரபு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வி.எம்.ஏ. பக்மிதா பானு, எம்.ஏ.ஜைனப் ஷாகனாஜ் ஆகியோர் 476 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பிடித்துள்ளனர். அதே பள்ளியைச் சேர்ந்த ஏ.ஏ.நசிகா 473 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளார். 472 மதிப்பெண்களுடன் 2 பேர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.÷ஓரியண்டல் பாட திட்டத்தின்படி தேர்வு எழுதிய 1,548 பேரில் 1,298 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.2 சதவீதமாகும். 
 
ஜூன் 15-ல்  மதிப்பெண் சான்றிதழ்:
 
            பள்ளி மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஜூன் 15-ம் தேதி வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். 
 
மாணவி ஜாஸ்மின் மதிப்பெண்கள்:
 
         தமிழ்                     98
       ஆங்கிலம்          99
       கணிதம்              100
      அறிவியல்         100
     சமூக அறிவியல்     98
    
    மொத்தம்                   495 
 
 மெட்ரிக் மாணவி பவித்ராவின் மதிப்பெண்கள்:
 
      தமிழ்                      98
    ஆங்கிலம்           98
    கணிதம்               100
    அறிவியல்          100
    சமூக அறிவியல்     99
   
        மொத்தம்          495
 
 
பொறியாளர் ஆவதே இலட்சியம்: ஜாஸ்மின்
 

 
                 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். பொறியாளர் ஆவதே தனது லட்சியம் என அவர் தெரிவித்தார். புளியங்குடி ஏ.வி.எஸ். உயர்நிலைப் பள்ளி மாணவி ரம்யா 493 மதிப்பெண்களும், பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எம். ஜெயலின் 493 மதிப்பெண்களும் பெற்று மாநில அளவில் 3-வது இடங்களைப் பெற்றுள்ளனர். ஜாஸ்மின் தந்தை எஸ். ஷேக்தாவூது, இரு சக்கர வாகனத்தில் ஜவுளிகளை வைத்து ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்து வருகிறார். தாய் நூர்ஜஹான், இல்லத்தரசி. திருநெல்வேலி நகரம் ராவுத்தர் காம்பவுண்டில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். தமது பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பில் சேர்ந்து கணினி அறிவியல் பாடம் எடுத்து படித்து எதிர்காலத்தில் பொறியாளராக வருவதே தனது லட்சியம் என்றார் ஜாஸ்மின். பள்ளித் தலைமை ஆசிரியர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள் படிப்பில் என் மீது காட்டிய ஆர்வம் இந்தளவுக்கு மதிப்பெண்கள் பெற காரணமாக இருந்தது என்றும், டியூஷன் எதுவும் படிக்கவில்லை என்றும் ஜாஸ்மின் தெரிவித்தார்.
 
3-வது இடம்:  
 
            பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயலின் 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்-96, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-99. மாநில அளவில் முதலிடம் கிடைக்கும் என எதிர்பார்த்து படித்ததாக மாணவி ஜெயலின் தெரிவித்தார். பிளஸ் 2 முடித்த பிறகு பொறியியலில் சிவில் பிரிவு படித்து விட்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். புத்தகங்களை விரும்பிப் படிப்பதாகவும் பள்ளி ஆசிரியர்கள், தாய், தந்தை ஆகியோர் படிப்புக்கு ஊக்கம் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். தந்தை ஜே. மனுவேல் இடையன்குடியில் உள்ள டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், தாய் ஜாக்குலின் தமிழாகுறிச்சி டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மேலப்பாளையம் டார்லிங் காலனி ராஜாநகரில் வசித்து வருகின்றனர். புளியங்குடி ஏ.வி.எஸ். உயர்நிலைப் பள்ளி மாணவி ரம்யா 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-வது இடத்தைப் பெற்றுள்ளார். 
 
இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்: 
 
              தமிழ்-97, ஆங்கிலம்-96, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. படிப்புக்கு ஆசிரியர்கள் எடுத்த தீவிர முயற்சியினால் இந்த மதிப்பெண் பெற முடிந்தது என்றார் மாணவி ரம்யா. அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து, எதிர்காலத்தில் எம்.பி.பி.எஸ். படித்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார். தந்தை முருகன் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றுகிறார். தாய் வெள்ளையம்மாள். ஏழைக் குடும்பத்தில் படித்து வரும் தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற தனது விரும்பத்தையும் அவர் தெரிவித்தார். முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின், 3-ம் இடம் பெற்ற மாணவிகள் ரம்யா, ஜெயலின் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் பாராட்டி கேடயங்களைப் பரிசாக வழங்கினார்.
 
 

Read more »

சிறப்பிடம் பெற்ற நெய்வேலி பள்ளிகள்

நெய்வேலி:

                  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள என்எல்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 98 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி ராகப்பிரியா 472 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மெட்ரிக் பள்ளி வரிசையில் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.ஆர்த்தி 485 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இப்பள்ளியில் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

நெய்வேலியில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்: 

               நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்எல்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 86 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளியின் ஜி.இளமதி 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். வட்டம் 10-ல் உள்ள என்எல்சி ஆண்கள் மேநிலைப் பள்ளியில் 60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இப் பள்ளியின் மனோஜ்குமார் 457 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மந்தாரக்குப்பம் என்எல்சி மேநிலைப் பள்ளியில் 73 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி மாணவிகள் எஸ்.ஆனந்தவள்ளி, எம்.அனிதா ஆகியோர் தலா 475 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தனர்.நெய்வேலி வட்டம் 26-ல் உள்ள என்எல்சி உயர்நிலைப் பள்ளியில் 64 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இப் பள்ளியின் சிவஞானவதி 454 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.

Read more »

விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை

விருத்தாசலம்:

               பத்தாம் வகுப்பு தேர்வில் கடலூர் மாவட்ட அளவில் விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது. 

                   இப் பள்ளியி மாணவி சிவரஞ்சனி 490 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல் விருத்தாசலம் கல்வி மாவட்ட அரசுப் பள்ளிகளில், விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் மூன்று இடங்களை வென்றுள்ளது. இதில் மாணவி பிரியா விருத்தாசலம் கல்வி மாவட்ட அனைத்து பள்ளிகள் அளவில் 3-ம் இடமும், அரசு பள்ளிகள் அளவில் 2-ம் இடமும் பெற்றுள்ளார். மேலும் அதே பள்ளி மாணவி ஜெயலட்சுமி  481 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகள் அளவில் 3-ம் இடம் பெற்றார்.விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் காட்டுமன்னார்குடி பி.ஆர்.ஜி. பர்வதராஜகுல பள்ளி மாணவன் முத்துக்குமார் 485 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். மெட்ரிக் பள்ளிகள்: விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்  காட்டுமன்னார்குடி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், அதே ஊரைச் சேர்ந்த ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜேசுதா 473 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளி மாணவி பத்மதிலகா 472 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்ட முதல் மாணவி கே.சிவரஞ்சனி

கடலூர்:

                பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.சிவரஞ்சனி 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

                 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டது. இதில் விருத்தாசலம் இரட்டை தெருவைச்  சேர்ந்த கனகசபை-விஜயா தம்பதிகளின் மகள்  கே.சிவரஞ்சனி 490 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இவரின் தந்தை எல்.ஐ.சி.  முகவராகவும், தாய் கம்மாபுரம் அங்கன்வாடி ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.

தேர்வு முடிவு குறித்து சிவரஞ்சனி கூறுகையில், 

                 மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி. ஆசிரியர்களும், பெற்றோர்களும் அளித்த ஊக்கமே அதிக மதிப்பெண் பெற உதவியது. ஆசிரியர்கள் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வந்தனர். மருத்துவத் துறையில் சேரும் வகையில் மேல்நிலை வகுப்பில் சேர விரும்புகிறேன் என்றார்.

மாவட்ட அளவில் இரண்டாமிடம்:

         மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவன் எஸ்.மனோஜ்குமார் 489 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். கடலூர் புதுப்பாளையத்தில் வசித்து வரும் இவரின் தந்தை சந்திரன் கட்டடத் தொழிலாளி. தாய் சத்தியவாணிமுத்து. கடின உழைப்போடு அதிகாலையில் எழுந்து படித்ததால் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது என மனோஜ்ரகுமார் கூறினார். 

மாவட்ட அளவில் மூன்றாமிடம்:

                கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.யாஷினி 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.இதில் முதலிடம் பிடித்த கே.சிவரஞ்சனி விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர். 

             இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த எஸ்.மனோஜ்குமார், பி.யாஷினி ஆகியோர் கடலூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கடலூர் கல்வி மாவட்டத்தில் கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.சுஜனாபானு 487 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் டி.ஆர்.ஜி. மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.முத்துகுமார் 485 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.பிரியா 483 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.மெட்ரிக் பள்ளிகள்: கடலூர் மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் கடலூர் புனிதமேரி மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.ஏ.ஷாஜிதாபானு 488 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவி எம்.ஆர்த்தி 485 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் பள்ளி மாணவி எம்.நந்தினி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 

               இவர்கள் மூவரும் கடலூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் கலைமகள் பள்ளி மாணவி எம்.அபிநயா 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஜி.கே.மெட்ரிக் பள்ளி மாணவி ஏ.ஜெஷிதா 473 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.பத்மதிலகம் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

Read more »

மீண்டும் கட்டப்படுமா பாண்டியநாயகம் கோயில்?


சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பாண்டியநாயகம் கோயிலின் வெளிப்புறத் தோற்றம், இடிக்கப்பட்ட கோயில் மண்டபத்தின் சுவர்கள்
சிதம்பரம்:

             சிதம்பரம் நடராஜர் கோயிலில் இடிக்கப்பட்ட பாண்டியநாயகம் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் மீண்டும் கட்டப்படுமா என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் வடக்குகோபுர வாயில் அருகே அமைந்துள்ளது புகழ்பெற்ற பாண்டியநாயகம் கோயில் என்கிற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில். மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கி.பி. 1216-1251 -ல் இக் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வள்ளி தெய்வானை உடன் மயில்மீது அமர்ந்த நிலையில் சுப்பிரமணியசுவாமி காட்சி தரும் கோயிலாகும் இது. இக் கோயிலின் முகப்பில் தேர் உருளைகள், யானைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாலய மண்டபத்தில் உட்புற மேல்பகுதியில் கந்தபுராணச் சிற்பங்களும், திருமுறை ஆசிரியர்கள் திருஉருவங்களும் தீட்டப்பெற்றிருக்கும். இவ்வாலயத்தில் பங்குனி உத்திர பெருவிழா 10 நாள்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு திருப்பணி செய்யப் போவதாக கூறி, கோயில் கருவறையை தவிர மிக அழகான வேலைப்பாடுகளும், ஓவியங்களும், சிற்பங்களும் அமைந்த வெளி மண்டபம் முற்றிலும் இடிக்கப்பட்டது. கோயிலை சுற்றியிருந்த அழகிய நந்தவனமும் அழிக்கப்பட்டது. 

                  எவ்வித சேதமின்றி இருந்த பழமைவாய்ந்த கோயில் மண்டபத்தை ஏன் இடித்தார்கள் என தெரியவில்லை. மண்டபத்தை இடித்து இந்த ஆலயத்தை மூடிவைத்துள்ளதால் கடந்த ஓராண்டாக எவ்வித பூஜையும் நடைபெறவில்லை. அதேவேளையில் திருப்பணிகளும் நடைபெறவில்லை. இதனால் முருக பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடராஜர் ஆலயத்தை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கையகப்படுத்திய பின்னர் பாண்டியநாயகம் கோயில் திருப்பணி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

தீர்ப்பு வந்தவுடன் திருப்பணி 
  
கோயில் செயல் அலுவலர் க.சிவக்குமார் கூறியது: 

                  இந்து அறநிலையத்துறை கையகப்படுத்திய பின் 13-வது நிதிஆணையம் மூலம் கோயில் முழுவதும் திருப்பணி செய்ய ரூ.38 கோடி நிதிஒதுக்கீடு கோரி அனுமதி பெற்றது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அறநிலையத்துறையினர் திருப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தீர்ப்பு வந்தவுடன் திருப்பணி தொடங்கும் என்றார்.

ஆலய தீட்சிதர்கள் தரப்பில் கூறுகையில், 

             கோயிலின் மண்டபம் சிதிலமடைந்ததால் இடித்துவிட்டு புதிய மண்டபம் கட்டி குடமுழுக்கு செய்வது என பொதுதீட்சிதர்களால முடிவு செய்யப்பட்டு இடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்து அறநிலையத் துறையினர் கையகப்படுத்தியதால் பணிகள் தொடங்க முடியாமல் போனது. தற்போது உச்சநீதிமன்ற தடை உள்ளதால் பணிகளை தொடர முடியவில்லை. தடை நீங்கியவுடன் திருப்பணி நடைபெறும் என்றனர். தொன்றுதொட்டு பூஜைகள் நடைபெற்று வந்த இக் கோயில் மூடப்பட்டுள்ளது பக்தர்களுக்கு மிகவும் வேதனையை தந்துள்ளது. இக் கோயிலில் விரைந்து திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பக்தர்களின் கோரிக்கை.

Read more »

மானிய விலையில் சி.எப்.எல்., பல்பு: கடலூர் மாவட்டத்தில் வழங்க முடிவு

கடலூர்: 

                  உலக வெப்பமயமாதலை தடுக்கவும், மின் சிக்கனத்தை கடைபிடிக்கவும் மின் வாரியம் சார்பில் மானிய விலையில் சி.எப்.எல்., பல்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் வெப்பமயமாதலை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் தமிழ்நாடு மின்சார வாரியம், பல்புகளால் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

                   அதற்காக பரிட்சார்த்த முறையில் தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கடலூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக இம்மாவட்டத்தில் வெப்பத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளவிருக்கின்றன. அதன்படி, வீடுகளில் போடப்பட்டுள்ள குண்டு பல்புகளுக்குப் பதிலாக (டி.என்.இ.பி., பொறிக்கப்பட்ட) சி.எப்.எல்., பல்புகளை அரசு வழங்க முடிவு செய்துள்ளது. தற்போது 6 வாட்ஸ் முதல் 30 வாட்ஸ் வரை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள இவ்வகை பல்புகள், 30 முதல் 275 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற பல்புகள், 40 வாட்ஸ் டியூப் லைட் எரியும் வெளிச்சத்திற்கு 18 வாட்ஸ் உள்ள சி.எப்.எல்., பல்புகள் சமமாகும். அதே நேரத்தில் சி.எப்.எல்., பல்புகள் வெப்பத்தை வெளியிடாது. இந்த பல்புகளை மின் வாரியம், 15 ரூபாய்க்கு மானிய விலையில் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.

                  அதன்படி, வீடுகளில் போடப்பட்டுள்ள குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, மானிய விலையில் கிடைக்கும் சி.எப்.எல்., பல்புகளை வாங்கி போட்டுக் கொள்ளலாம். இதை எக்காரணம் கொண்டும் வீட்டின் உரிமையாளர்களோ, வாடகைக்கு குடியிருப்பவர்களோ கழற்றி சென்று விட முடியாது. இதற்காக ஒவ்வொரு வீடுகளில் எத்தனை குண்டு பல்புகள் உள்ளன என்பது குறித்து மின் வாரியம் சர்வே எடுக்கும் பணியில் இறங்கியுள்ளது. இப்பணி முடிந்ததும், சி.எப்.எல்., பல்புகள் உபயோகப்படுத்தும் வீடுகளுக்கு மட்டும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. டியூப் லைட் உபயோகப்படுத்துபவர்களுக்கு இச்சலுகை கிடையாது.

Read more »

Government school student is district topper in Cuddalore


K. Sivaranjani

CUDDALORE: 

               K. Sivaranjani of Government Girls' Higher Secondary School at Vriddhachalam has emerged district topper (490/500) in the Secondary School Leaving Certificate examinations held in March/April.

              Chief Educational Officer C. Amudhavalli congratulated Sivaranjani at her office on Wednesday. A municipal school and two government schools are among seven schools in the district which achieved cent per cent results. The schools that have registered all-pass are Municipal High School at Chidambaram, Government Higher Secondary Schools at Kanni Tamil Nadu and P. Mettukuppam, P.R.G.Higher Secondary School at Kattumannarkoil, St.Agnes High School at Veerareddykuppam, O.P.R.High School at Tholudur and Kasturi Ammal High School at Nattarmangalam.

State board toppers

Toppers in the State board examinations are 

                K. Sivaranjani (490), S. Manoj Kumar of St. Joseph HSS at Manjakuppam, Cuddalore (489), and P.Yashini of St.Anne's Girls HSS, Cuddalore (488).

                Government school students who figured in the merit list are M. Akila (484) and R. Divya (483) of Govt. Girls' HSS at Chidambaram and A. Priya of Govt. Girls' HSS at Vriddhachalam (483). Top rankers from aided schools are S. Manoj Kumar of St. Joseph's HSS at Manjakuppam (489), P. Yashini of St. Anne's HSS at Cuddalore (488), and A. Sujana Banu of St. Anne's HSS at Cuddalore (487). 

               Matriculation Toppers in the matriculation stream are S.A. Sajitha Banu of St. Mary's Mat.HSS at Cuddalore (488), M. Arthi of Jawahar Mat.HSS at Neyveli (485), and, M.Nandini of Nirmala Mat.HSS at Chidambaram (483).

The CEO said that this year, 

                 the State board schools achieved a pass percentage of 75.15 which was 4 per cent higher than that last year. However, in the matriculation stream, the pass percentage was 92.44 against 94.45 the previous year. She attributed the good performance of government schools to training imparted to teachers in August-September 2009 on handling subjects and motivating students.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 75.15 சதவீதம் தேர்ச்சி! எஸ்.எஸ்.எல்.சி.,யில் 4 சதவீதம் கூடுதல்

கடலூர் : 

              கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 873 மாணவ, மாணவிகளில் 23 ஆயி ரத்து 201 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 75.15 சதவீதமா கும். இது கடந்தாண்டை விட 4 சதவீதம் கூடுதலாகும்.

 எஸ்.எஸ்.எல்.சி., மற் றும் மெட்ரிக் பொதுத் தேர்வு முடிவுகளை கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுத வல்லி வெளியிட்டு கூறியதாவது: 

                        எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 207 பள்ளிகளைச் சேர்ந்த 15,001 மாணவர்கள், 15 ஆயிரத்து 972 மாணவிகள் என மொத் தம் 30 ஆயிரத்து 873 பேர் தேர்வு எழுதினர். அதில் 11 ஆயிரத்து 43 மாணவர்கள், 12 ஆயிரத்து 158 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 201 பேர் தேர்ச்சி அடைந்து 75.15 சதவீதம் பெற்றனர். கடந்தாண்டை விட 4 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 71.69 ஆக இருந்தது.

மாவட்டத்தில் முதலிடம்: 

                 விருத்தாசலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி சிவரஞ்சினி 490, கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் மனோஜ்குமார் 489, கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி யாஷினி 488 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

மெட்ரிக்: 

                   மாவட்டத்தில் உள்ள 83 பள்ளிகளைச் சேர்ந்த 2,721 மாணவர் களும், 2,135 மாணவிகள் என மொத்தம் 4, 856 பேர் தேர்வு எழுதினர். இவர் களில் 2,456 மாணவர்கள், 2,033 மாணவிகள் என மொத்தம் 4,489 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 92.44 ஆகும். இது கடந் தாண்டை விட 2 சதவீதம் குறை வாகும். கடலூர் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி ஷாஜிதாபானு 488ம், நெய்வேலி ஜவகர் மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்த்தி 485, சிதம் பரம் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி 483 மதிப் பெண் பெற்று மாவட்ட அளவிலும், கடலூர் கல்வி மாவட்ட அளவி லும் முதல் மூன்று இடங் களை பிடித் தனர்.

முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகள்: 

                 மாவட்டத்தில் உள்ள 290 பள்ளிகளில் 32 பள்ளி கள் முழு தேர்ச்சி பெற்றுள் ளன. இவைகளில் 17 பள் ளிகள் கடந்தாண்டும் முழு தேர்ச்சி பெற்றவை என் பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். எஸ்.எஸ்.எல்.சி., தேர் வில் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவி சிவரஞ்சனி, மனோஜ்குமார், யாஷினி, மெட்ரிக் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவி ஷாஜிதாபானு ஆகியோருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் அமுதவல்லி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

சி.இ.ஓ., பாராட்டு : 

கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி பேசுகையில், 

                      "மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் களின் கூட்டு முயற்சியால் இந்த ஆண்டு 4 சதவீதம் கூடுதல் தேர்ச்சி கிடைத் துள்ளது. மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி 2 சதவீதம் குறைந்துள் ளது. இதற்கான காரணத்தை கண்டறிந்து வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடி மறுதேர்வு எழுதவுள்ள மாணவர்க ளிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வரும் 31ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 32 பள்ளிகள் "சென்டம்'

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ். எல்.சி., மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வுகளில் 32 பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன.

              நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடலூர் மாவட் டத்தில் உள்ள 207 பள்ளிகளில் 8 பள் ளிகளும், மெட்ரிக் பிரிவில் 83 பள்ளிகளில் 24 பள்ளிகளும் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. 

முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் பெயர் மற்றும் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை விபரம் அடைப்புக்குள் வருமாறு:

                       காட்டுமன்னார்கோவில் பர்வதராஜ குருகுலம் மேல்நிலைப் பள்ளி (167), எறுமனூர் வி.இ.டி. உயர்நிலைப்பள்ளி (87), வீராரெட்டிக்குப்பம் செயின்ட் ஆக்னஸ் உயர்நிலைப் பள்ளி (38), கன்னித் தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளி (30), தொழுதூர் ஓ.பி.ஆர்., உயர்நிலைப் பள்ளி (24), மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி (18), நாட்டார்மங்கலம் கஸ்தூரி அம்மாள் உயர்நிலைப் பள்ளி (15), சிதம்பரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி (7).

மெட்ரிக் பிரிவு: 

                 சிதம்பரம் நிர் மலா மெட்ரிக் பள்ளி (154), கடலூர் கூத்தப்பாக்கம் செயின்ட் ஜோசப் (79), விருத்தாசலம் இன்பேன்ட் (54), நாட்டார்மங்கலம் அருள் பள்ளி (45), காட்டுமன்னார்கோவில் ஜி.கே.எம். பள்ளி (43), குறிஞ்சிப்பாடி செயின்ட் பால் (41), பூதங்குடி எஸ்.டி.சியோன் பள்ளி (34), வேப்பூர் அய்யனார் (30), கடலூர் துறைமுகம் லட்சுமி பள்ளி ( 27), விருத்தாசலம் சக்தி பள்ளி (26), திட்டக்குடி இந்தியன் பள்ளி (23), பெண்ணாடம் கிருஷ்ணா (22), குறிஞ்சிப்பாடி ஸ்ரீராம் (21), தட்டாஞ்சாவடி புனித அன்னாள் பள்ளி (15), சிதம்பரம் சரசு பள்ளி (10), பேர்பெரியான்குப்பம் டி.கே. நினைவு பள்ளி (9), விருத்தாசலம் பேபி பள்ளி (7), வல்லம்படுகை வில்லியம்ஸ் பள்ளி (6), நெய்வேலி செவன்த்டே பள்ளி (6), சின்னகங்கணாங்குப்பம புனித அந்தோணி பள்ளி (6), சூரக்குப்பம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாமந்திர் (4), நெய்வேலி ஏ.ஆர்.ரகமத் பள்ளி (3), வடலூர் தம்புசாமி பள்ளி (3), பெண்ணாடம் பாரதி பள்ளி (3). மாவட்டத்தில் மூன்று அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 69 பேர் தமிழ் பாடத்தில் மட்டும் தோல்வி

கடலூர் : 

              எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 69 பேர் தமிழ் பாடத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ளனர்.

              எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 54 பேர் தமிழிலும், 262 பேர் ஆங்கிலத்திலும், 382 பேர் கணக்கிலும், 919 பேர் அறிவியலிலும், 97 பேர் சமூக அறிவியலிலும் தோல்வியடைந்துள்ளனர். மெட்ரிக் பாடத்தில் 15 பேர் தமிழிலும், ஆங்கிலத்தில் 10, கணக்கில் 188, அறிவியலில் 101, சமூக அறிவியலில் 2 பேரும் தோல்வியடைந்துள்ளனர். ஒரு பாடத்தில் 1,714 பேரும், இரண்டு பாடத் தில் 2,326, மூன்று பாடத்தில் 1,694, நான்கு பாடத்தில் 1,094, எல்லா பாடங்களிலும் 893 பேரும் தோல்வியடைந்துள்ளனர். மெட்ரிக் பிரிவில் ஒரு பாடத்தில் மட்டும் 233, ஆங்கிலத்தில் 87, கணக் கில் 32, அறிவியலில் ஒன்பது பேரும், எல்லா பாடங்களிலும் ஐந்து பேரும் தோல்வியடைந் துள்ளனர்.

Read more »

பிளஸ் 2வில் மாநிலத்தில் முதலிடம் பெறுவது லட்சியம் : மெட்ரிக் முதலிட மாணவி உறுதி

கடலூர் : 

                  பிளஸ் 2 வில் மாநில அளவில் முதலிடம் பெறுவதே லட்சியம் என்று மெட்ரிக் பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஷாஜிதாபானு கூறினார்.

                    கடலூர் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஷாஜிதாபானு 488 மதிப் பெண்கள் பெற்று மெட்ரிக் பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். இவர் தமிழ் பாடத்தில் 97, ஆங்கிலம் 94, கணிதம் 99, அறிவியல் 99, வரலாறு புவியியல் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் மேலப்பாளையத் தைச் சேர்ந்தவர் அக்பர் உசேன் - ஜன்னத்து பிர் தவ்ஸ் தம்பதியர் மகள் ஷாஜிதாபானு. அக்பர் உசேன் சிப்காட் ஸ்பிக் பார்மா கம்பெனியில் முதுநிலை மேலாளராக பணி புரிந்து வருகிறார்.முதலிடம் பிடித்த மாணவி ஷாஜிதாபானு கூறியதாவது: என் தந்தை 488 மதிப்பெண் பெறவேண்டும் என கூறியிருந்தார். அதே போல் மதிப் பெண் பெற்றது மகிழ்ச் சியாக உள்ளது. பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் கொடுத்த ஊக்கம் மூலமே அதிக மதிப்பெண் பெற முடிந்தது. "டிவி', சினிமா பார்த்தாலும் தினமும் தவறாமல் காலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும், இரவு 8 முதல் 10 மணி வரையும் படிப் பேன். பள்ளியில் நடந்த மாலை நேர சிறப்பு வகுப் புகளும் எனக்கு உறுதுணையாக இருந் தது. டாக்டர் படிப்பில் இருதய சிகிச்சை (கார்டியாலஜி) படிக்க விரும்புகிறேன். பிளஸ் 2 வில் மாநில அளவில் முதலிடம் பெறுவதே எனது லட்சியம். எனது படிப்பிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு மாணவி ஷாஜிதாபானு கூறினார்.

Read more »

ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் 3ம் இடம் பெற்ற மாணவி பெருமிதம்

கடலூர் : 

             பாடத்தை திரும்ப திரும்ப படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது என மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற புனித அன்னாள் பெண்கள் பள்ளி மாணவி யாஷினி தெரிவித்தார்.

              எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி யாஷினி 488 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார். அவர் தமிழ் 96, ஆங்கிலம் 94, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது தந்தை பிரகாஷ், தாய் அமுதா. பிரகாஷ் நெல்லிக்குப்பம் இ.ஐ.டி.,பாரியில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார்.

இது குறித்து மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற புனித அன்னாள் பெண்கள் பள்ளி மாணவி யாஷினி கூறுகையில், 

                     "எதிர்பார்த்த மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி. வகுப்பில் ஆசிரியர் நடத்துவதை குறிப்பு எடுத்து படித்தேன். வீட்டில் தினமும் காலை, மாலை தவறாமல் படித்தேன். ஒருமுறை படித்ததை திரும்ப திரும்ப படித்து பார்ப் பேன். பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்புகள் போன் றவற்றால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். பெற்றோர் மட்டுமின்றி தாத்தா, மாமா, சித்தப்பா எனக்கு வழிகாட்டியாக இருந்தனர்' என்றார்.

Read more »

குடும்ப சூழ்நிலையை உணர்ந்து படித்தேன் : அரசு பள்ளி மாணவி அகிலா பேட்டி

சிதம்பரம் : 

                குடும்ப சூழ்நிலை உணர்ந்து படித்ததால் அதிக மதிப்பெண்பெற முடிந்தது என மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி அகிலா கூறினார். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அகிலா 484 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இவர் பெற்ற மதிப்பெண் விவரம்: 

                   தமிழ் 93, ஆங்கிலம் 95, கணிதம் 100, அறிவியல் 96, சமூக அறிவியல் 100 என மொத்தம் 484 மதிப்பெண் பெற்றார். இவருக்கு தந்தை இல்லை. தாய் புவனேஸ்வரி மருந்து கடையில் வேலை செய்து வருகிறார்.

மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி அகிலா கூறுகையில், 

                "குடும்ப சூழ்நிலை உணர்ந்து, படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென்ற லட்சியத்தோடு படித்தேன். அதனால் என்னால் நல்ல மதிப் பெண் பெற முடிந்தது. "டிவி' பார்ப்பதில்லை, டியூஷன் படிக்கவில்லை. கவனத்துடன் அதிக நேரம் எடுத்துக் கொண்டு படித்தேன். அதிகாலையிலேயே எழுந்து படித் தேன். எனது உழைப் புக்கு பலன் கிடைத்து விட்டது. ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் எனது சாதனைக்கு உதவியது. மனப்பாடம் செய் வதை விட புரிந்து கொண்டு படித்தால் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற முடியும். பிளஸ் 2 தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்று இன்ஜினியர் ஆவதே எனது லட்சியம் என்றார்.

Read more »

மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி இந்த ஆண்டு 2 சதவீதம் குறைவு

கடலூர் : 

               கடலூர் மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி  சதவீதம் குறைந்தது.

            கடலூர் கல்வி மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து 2,257 மாணவர்கள், 1,790 மாணவியர்கள் என மொத்தம் 4,047 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட் டத்தில் 464 மாணவர்களும், 345 மாணவியர்களும் மொத்தம் 809 பேரும் மெட்ரிக் தேர்வு எழுதினர். அதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 89.59 சதவீதமும், மாணவிகள் 95.31 சதவீதமும் பெற்று சராசரியாக 92.12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 93.53 சதவீதமும், 94.78 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்று சராசரியாக 94.07 சதவீதத்தை அடைந்துள்ளனர். இவ்விரு கல்வி மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம் 92.44 சதவீதமாகும். கடந்த ஆண்டு 2008-09 மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 94.45. ஆனால் இந்த ஆண்டு 92.12 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது 2 சதவீதம் குறைந்துள்ளது.

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் 144 பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிப்பு

கடலூர் : 

              எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 144 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

               எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 203, மெட்ரிக் பள்ளிகள் 87 உள் ளன. இதில் 32 பள்ளிகள் முழு தேர்ச்சி பெற் றுள் ளன. மேலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 114 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந் துள்ளது. கடலூர் கல்வி மாவட்டத்தில் 46 பள்ளிகளிலும், 32 மெட்ரிக் பள்ளிகளிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 30 பள்ளிகளிலும், 6 மெட்ரிக் பள்ளிகளிலும் மொத்தம் 114 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அதே போல் 144 பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. அதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 165 பள்ளிகளிலும், 21 மெட்ரிக் பள்ளிகளிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 51 பள்ளிகளிலும், 7 மெட்ரிக் பள்ளிகளிலும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. இரண்டு பள்ளிகளில் 35 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் சிதம்பரம் பச்சையப்பா மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 72 பேரில் 20 பேரும், குடியிருப்பு அரசு உயர் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 92 பேரில் 29 பேர் தேர்ச்சி பெற்றனர்.

Read more »

பண்ருட்டியில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டம்

பண்ருட்டி : 

          தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பண்ருட்டி தனியார் பள்ளிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

             பண்ருட்டி நகர தனியார் பள்ளிகள் சங்க கூட்டம் சுப்ராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு பாலவிகார் மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். ராதிகா பள்ளி நிறுவனர் மணிகண்ணன், சுப்ராய செட்டியார் பள்ளி இணை செயலாளர் மாதவன் முன் னிலை வகித்தனர். திருவள்ளுவர் பள்ளி தாளாளர் சேரன் வரவேற்றார். கூட்டத்தில் வரும் 2ம் தேதி முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் திறப்பது எனவும், சுயநிதி பள்ளிகள், நர்சரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதியரசர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவிற்கு கட்டணம் குறித்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்வது, நகர சங்கத்தை தாலுகா அளவில் விரிவுபடுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் பள்ளி தாளாளர்கள் வீரமணி, லட்சுமிபதி, நாராயணன், ராமகிருஷ்ணன், அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Read more »

பிச்சாவரத்தில் சதுப்புநில தாவரங்கள் வளர்ப்பு

கிள்ளை : 

          சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் இயற்கை பேரிடர்களை தடுக்கும் வகையில் வனத்துறை மூலம் சதுப்பு நில தாவரங்கள் நடப்பட்டுள்ளது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் பகுதியில் சதுப்பு நிலக்காடுகள் கடலுக்கும், ஆற்றுக்கும் இடையில் இயற்கை அரண்களாக உள்ளது. இதனால் கடந்த சுனாமியின் போது அதிகளவில் பாதிப்பு தடுக்கப்பட்டது. சுனாமிக்குப் பின் பிச்சாவரம் வனப்பகுதியில் சதுப்பு நிலத் தாவரங்கள் அதிகளவில் நடப்பட்டது. சின்னவாய்க்கால் பகுதியில் ஆற்றின் நடுவிலும் சதுப்பு நில தாவரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

Read more »

மங்களூர் கனரா வங்கிக்கு சிறப்பு விருது


சிறுபாக்கம் : 

            மங்களூர் கனரா வங்கி கிளைக்கு விருது வழங்கப்பட்டது. திருச்சி மண்டலத்தில் கனரா வங்கி 140 கிளைகளை கொண்டு செயல்படுகிறது. இந்த மண்டலத் திலேயே மங்களூர் வங்கி கிளை அனைத்து நிலைகளிலும் முதன்மையாக செயல் பட்டுள்ளதை பாராட்டி விருது வழங்கப்பட்டது. துணை பொது மேலா ளர் கிருஷ்ணன், அருண் உல்மன், சந்திரகுமார் ஆகியோர் இரண்டு சிறப்பு விருதினை கிளை மேலாளர் ஜெயச்சந்திரன், அதிகாரி செல்வமணி ஆகியோரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் பாஸ்கரன், ராமலிங்கம், ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

திருச்சோபுரம் கோவில் நிலம் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம்

கடலூர் : 

              திருச்சோபுரம் கோவில் நிலம் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் விடப்பட்டது.

            கடலூர் அடுத்த திருச்சோபுரத்தில் உள்ள திருச் சோபுரநாதர் கோவிலுக்கு சொந்தமாக 183 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட நிலங் களை ஏலம் விடுவதாக இந்து அறநிலையத்துறை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறிவித்தது. அப்போது சர்வே எண் தவறாக இருப்பதாக கூறி பொது மக்கள் ஏலத்தை புறக்கணித்தனர். இதனையடுத்து ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து சிதம்பரம் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் திருச்சோபுரத்தில் குவிக்கப்பட்டனர். பின்னர் உதவி ஆணையர் ஜெகநாதன், செயல் அலுவலர் மேனகா, கடலூர் ஆய்வர் வெங்கடேசன் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் போது கோவில் நிலத்தை மொத்தமாக ஏலம் விட வேண்டும் என மக்கள் சிலர் ஏலத்தை புறக்கணித்தனர். பின்னர் 21.46 ஏக்கர் நிலம் 27,520 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

Read more »

கடலூர் அருகே தீ விபத்தில் 7 வீடுகள் சாம்பல் : ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கடலூர் : 

               கடலூர் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழு வீடுகள் எரிந்ததில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாயின.

               கடலூர் அடுத்த கோண்டூர் காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் (36). இவரது மனைவி விமலா நேற்று மதியம் வீட்டில் சமைப்பதற்கு ஸ்டவ் பற்ற வைத்தபோது வீட்டின் கூரையில் தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது. கடலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி குமார் தலைமையில் உதவி அலுவலர் மதிவாணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். அப்பகுதி முழுவதும் குடிசை வீடுகளாக இருந்ததாலும், காற்று பலமாக வீசியதாலும் கூடுதலாக நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

                இவ்விபத்தில் நடராஜன், நாகராஜன் ஆகியோரின் வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் சாம்பலானது. மேலும் டேவிட் (25), ஜெயராஜ் (34), சக்கரவர்த்தி (47), குப்புசாமி (50), செல்லத்துரை (37), சண்முகம் (36), சாந்தகுமார்(28) உள்ளிட்ட 7 பேரின் வீடுகளும் எரிந்து பொருட்கள் சேதமதடைந்தது. இந்த விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின. தாசில்தார் தட்சணாமூர்த்தி, தீயணைப்புத் துறை கோட்ட அலுவலர் சுப்ரமணியன், உதவி கோட்ட அலுவலர் ரவிச்சந்திரன், நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் இடத்தை பார்வையிட்டு தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

Read more »

கொத்தட்டை கோவில் திருவிழாவில் போலீஸ்காரரை தாக்கியதால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை : 

              கோயில் திருவிழாவில் போலீஸ்காரை மர்ம ஆசாமிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

               பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டையில் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று முன்தினம் அரவாணிகள் திருவிழா நடந்தது. இந்த விழாவில் அரவாணிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் பங்கேற்க வந்தததால் பரங்கிப் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாலையோரங்களில் கும்பலாக நின்றுகொண்டு அரவாணிகளை கிண்டல் செய்து கொண்டிருந்த சின்னகுமட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை போலீஸ் செந்தில் விரட்டிச் சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாக இரண்டு பேர் போலீஸ்காரர் செந் திலை கல்லால் தாக்கினர். இதில் செந்தில் படுகாயமடைந்து புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவர் பைக்கில் சென்ற போது கடலூரைச் சேர்ந்த கனிவளவன் என்பவர் தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

நகை கடையில் புகுந்து திருட்டு ஆசாமிக்கு 3 ஆண்டு சிறை


கடலூர் :

               நகை கடையின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை திருடிய ஆசாமிக்கு கடலூர் கோர்ட்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

              மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (65). என்பவருக்கு சொந்தமான நகைக் கடையில் கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி 50 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடு போனது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விழுப்புரம் மாவட்டம் சித்திரைக்கரையைச் சேர்ந்த சூரியா என்கின்ற சூரியமூர்த்தியை (46) பிடித்து விசாரித்தனர். அதில் மேல்பட்டாம்பாக்கத்தில் நகை கடையில் திருடியது. பண்ருட்டியில் வட்டிக்கடையில் பூட்டை உடைத்து திருட முயன்றது. விருத்தாசலத்தில் கார் திருடிய குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட் (1)ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுதா, நகைகடையில் திருடிய குற்றத்திற்காக சூரியமூர்த்திக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior