சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைகள்.
சிதம்பரம்:
விவசாயத்தில் லாபமின்றி நலிந்து போனதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் விளைநிலங்கள் தற்போது தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தாரால் வாங்கப்பட்டு வீட்டுமனை அமைக்கப்பட்டு நகர்களாக மாறி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள் காவிரி டெல்டா பாசன பெறும் கடைமடை பகுதியாகும். குறிப்பாக இரண்டு தாலுகாக்களில் விவசாயம் தொழிலாக தொன்று, தொட்டு நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் 3 போக சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் அதிகம் லாபம் பெற்று வந்தனர். ஆனால் குறிப்பிட்ட 10 ஆண்டுகளாக வறட்சி, வெள்ளம் போன்றவற்றாலும், வேளாண் இடுபொருள்கள் விலையேற்றம், ஆள் பற்றாக்குறை, நூறு நாள் வேலை திட்டத்தால் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் விவசாயம் லாபமின்றி நலிந்து வருகிறது.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலங்களை விற்றுவிட்டு நகர்புற பகுதிக்கு குடியேறி வருகின்றனர். இதனை ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு விவசாயிகளிடம் விளை நிலங்களை பெற்று நகர்களை அமைத்து வீட்டுமனைகளை விற்று வருகின்றனர். பொதுமக்களும் வங்கியில் பணத்தை டெபாசிட் போடுவதை விட மனையை வாங்கி பின்னர் அதிக விலைக்கும் விற்று லாபம் பெறும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விளைநிலங்களில் பிளாட் போட்டாலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
குறிப்பாக சிதம்பரம் நகரின் கிழக்கு பகுதியில் நக்கரவந்தன்குடி, மீதிகுடி உள்ளிட்ட பகுதிகளிலும், தெற்கு பகுதியில் வல்லம்படுகை வரையும், வடக்குப் பகுதியில் சி.முட்லூர் வரையிலும், மேற்குப் பகுதியில் கண்ணங்குடி மற்றும் புத்தூர் குறுக்குரோடு வரையிலும் விளை நிலங்கள் முழுவதும் ரியல் எஸ்டேட் அதிபர்களால் நகர்கள் அமைக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போன்று காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, சிவாயம், பி.முட்லூர், புதுச்சத்திரம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு நகர்கள் போடப்பட்டுள்ளது.
ரியல்எஸ்டேட் நிறுவனத்தினர் நகர்கள் அமைத்தால் ஒன்று அல்லது 2 மனைகளை அந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கு இலவசமாக வழங்குவதால் அவர்கள் நகர் அமைக்க ஊராட்சி மன்ற அனுமதி வழங்கி வருகின்றனர். இதனால் விவசாயத் தொழில் அழிந்து வரும் நிலை உள்ளது. எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் விளைநிலங்கள் நகர்களாக அமைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.