ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
என்ற இணையதளத்தில் பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 22-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுதலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை எழுதலாம்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.இந்த இரண்டு தாள்களிலும் 150 மதிப்பெண்ணுக்கு "மல்டிபிள் சாய்ஸ்' வடிவில் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இதில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். முதல் தாளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களிலிருந்து பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தாளுக்கு 6 முதல் 12 வகுப்பு வரையான பாடப் புத்தகங்களிலிருந்து பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களை முழுமையாகப் படித்தால் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாடத் திட்ட விவரம்:
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, மொழிப் பாடம் முதல் தாள், மொழிப் பாடம் இரண்டாம் தாள் (ஆங்கிலம்), கணிதம், சுற்றுச்சூழலியல் மற்றும் அறிவியல் பாடங்களிலிருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் இடம்பெறும்.
இரண்டாம் தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, மொழிப் பாடம் முதல் தாள், மொழிப் பாடம் இரண்டாம் தாள் (ஆங்கிலம்) பாடங்களிலிருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். கணிதம் மற்றும் அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு அந்தந்தப் பாடங்களில் இருந்து மட்டும் தலா 60 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். பிற பாட ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒரு தாளை தேர்ந்தெடுத்து எழுதலாம்.
நாளை முதல் விண்ணப்பம்:
தமிழகம் முழுவதும் உள்ள 66 மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 8 லட்சம் விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வழங்குவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 4 ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50.