உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 11, 2011

ரூ. 30 கோடியில் கடலூரில் கரைகள் பலப்படுத்தும் திட்டம்


கடலூர் ஆல்பேட்டை அருகே நகராட்சி கரும காரிய கொட்டகையின் குறுக்காகப் போடப்பட்டிருக்கும் பெண்ணையாற்றின் தெற்குக் கரை. க
கடலூர்:

           கரைகள் பலப்படுத்தும் திட்டத்தில் கடலூரில் ரூ. 30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆற்றங்கரைகள், அரைகுறையாகப் போடப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.  

              கெடிலம், பெண்ணையாறு ஆகியன கடலூர் நகருக்குள் புகுந்து வங்கக் கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் கடலூர் நகராட்சி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து, நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைகின்றன.  விளைநிலங்களும் அடித்துச் செல்லப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் அரசு இழப்பீடு வழங்க வேண்டியது இருக்கிறது. இதனால் ரூ. 30 கோடியில், பெண்ணையாறு கெடிலம் ஆறு ஆகியவற்றின் கரைகளை பலப்படுத்தும் திட்டம், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.  தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவு அடைந்து விட்டன.

                இரு ஆறுகளின் கரைகளிலும் 4 சக்கர வாகனங்கள் சென்று வருவதற்கு வசதியாக, சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கரைகளுக்கு மேல் சுமார் 3 அங்குல கனத்தில் சரளைக் கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளன.  இக்கரைகளின் வலிமை எத்தகையது என்பது வரவிருக்கும் வடகிழக்குப் பருவ மழையின் போதுதான் உறுதிபடுத்தப்படும். மேலும் கரைகள் பல இடங்களில், அமைக்கப்படாமல் விடுபட்டுள்ளன.   குறிப்பாக கெடிலம் ஆற்றில் கம்மியம்பேட்டை பாலம் அருகே இரு கரையிலும், தலா 100 மீட்டர் தூரத்துக்குக் கரைகள் அமைக்கப்படவில்லை. இப் பகுதியில்தான் ஆண்டுதோறும் கெடிலம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு, பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

               கரைகள் அமைக்கப்படாத பகுதிகளில் இருந்து, ஆற்று வெள்ளம் நகருக்குள் புகும் அபாயம் நிறைய இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.  மேலும் ஆல்பேட்டை அருகே பெண்ணை ஆற்றங்கரையில் சுடுகாடு அருகே, நகராட்சி பல லட்சம் செலவில் கட்டியிருக்கும் கரும காரியக் கொட்டகையை மூழ்கடித்துக் கரை அமைக்கப்பட்டு உள்ளது. வெள்ளக் காலங்களில் இதன் வழியாக மஞ்சக்குப்பம் பகுதிக்குள் வெள்ளம் புகவும், கரும காரியக் கொட்டகை இடிந்து, வெள்ளத்தில் அடித்துக் செல்லும் அபாயமும் உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.  

இதுகுறித்து கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்கக் கூட்டடைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில், 

                கெடிலம், பெண்ணை ஆறு ஆகியவற்கு தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் கரைகள் பல இடங்களில் விடுபட்டுள்ளன. இது மிகவும் ஆபத்தானது. அப்பகுதிகள் வழியாக நகருக்குள் வெள்ளம் புகுந்து, பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  ஆல்பேட்டையில் பெண்ணை ஆற்றங்கரையில், நகராட்சி கருமாதிக் கொட்டகையின் குறுக்காக, கரை அமைக்கப்பட்டு இருப்பது, கரும காரியங்கள் நடத்துவோருக்கு இடையூறாக அமைந்துள்ளது. இதனால் கரும காரியக் கொட்டகை வெள்ளத்தில் அடித்துச் செல்லும் அபாயமும், அதன் வழியாக ஊருக்குள் வெள்ளம் புகும் ஆபத்தும் உள்ளது.  ஆக்கிரமிப்புகள் அகற்றப் படாமல், இருப்பது இருக்கிறபடியே கரைகள் அமைக்கப்படுவதாலும், தனி நபர்களின் நிர்ப்பந்தம் காரணமாகவும் இவ்வாறு கரைகள் அரைகுறையாக அமைக்கப்படுகின்றன. 

                 இதனால் மக்கள் வரிப் பணம் வீணாகிறது. எதிர்பார்த்த வெள்ளப் பாதுகாப்பு, மக்களுக்குக் கிடைக்க வில்லை என்றார்.  

இதுகுறித்து பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சின்னராஜ் கூறியது 

                    மேற்கண்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கரைகள் பலப்படுத்தும் பணிகளைப் பார்வையிட சிறப்புக் குழு ஒன்று வர இருக்கிறது என்றார்.  




Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

விருத்தாசலம்:

               விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், புதன்கிழமை வகுப்பை புறக்கணித்து கோட்டாட்சியரிடம் மனுகொடுக்க ஊர்வலமாகச் சென்றனர். 

               திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் மணிமுத்தாறு உள்ளது. இப்பகுதியில் மணல் எடுப்பதற்காக கல்லூரி செல்லும் வழியாக நாள்தோறும் மாட்டு வண்டிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் மணல் வண்டி செல்வதால் கல்லூரி செல்வதற்கு இடையூறாக இருக்கிறது எனக்கூறி மாணவர்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஊர்வலமாகச் சென்று, கடலூர் சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்கச் சென்றனர்.  

             அப்போது கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த போலீசார்  கோட்டாட்சியரை பார்க்க அனுமதிக்காமல், தாங்களே கோட்டாட்சியரிடம் மனுவை கொடுப்பதாகக் கூறி மனுவை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.





Read more »

கடலூரில் பெண் ஒருவருக்கு விஜயா வங்கி நஷ்ட ஈடு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

கடலூர்:

               வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் பெண் ஒருவர் அளித்த காசோலையை, கணக்கில் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பிய வங்கி, பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

               கடலூர் வங்கி ஊழியர்கள் நகரில் வசிப்பவர் பெரியசாமி மகள் கவிதா. அவருக்கு கடலூர் விஜயா வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. நிதி நிறுவனம் ஒன்றில் பெற்று இருந்த தனிநபர் கடனுக்கு, மாதம்தோறும் விஜயா வங்கியின் சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ. 1,978 பெற்றுக் கொள்ளும் வகையில் கவிதா காசோலைகளை வழங்கி இருந்தார். 5-9-2009 நாளிட்ட காசோலையை விஜயா வங்கிக்கு, நிதி நிறுவனம் அனுப்பியபோது, கவிதாவின் கணக்கில் போதிய பணம் இல்லை என்று, காசோலை திரும்பி விட்டது. ஆனால் அன்றைய தேதியில் விஜயா வங்கியில், கவிதாவின் சேமிப்புக் கணக்கில் ரூ. 2,772 இருந்தது.  காசோலை பணமின்றி திரும்பியதால் நிதிநிறுவனம் கவிதாவுக்கு ரூ. 250 அபராதம் விதித்தது. அபராதம் கட்டத் தவறினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியதால் கவிதா அபராதத் தொகையை செலுத்த நேரிட்டது. 

                 இதுகுறித்து வங்கிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது மட்டுமன்றி, காசோலை திரும்பியதற்காக விஜயா வங்கி, கவிதாவின் கணக்கில் இருந்து ரூ. 85 பிடித்தம் செய்தது. வங்கிக் கணக்கில் போதிய பணம் இருந்தும், காசோலை திருப்பி அனுப்பப்பட்டது. வழக்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பா.ஜெயபாலன், உறுப்பினர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் விசாரித்து அண்மையில் தீர்ப்பு கூறினர். வங்கியின் கணினியில் ஏற்பட்ட தவறு என்றும், வங்கி ஊழியர் உள்நோக்கத்துடன் செய்யவில்லை என்றும் வங்கி சார்பில் வாதிட்டதை நீதிமன்றம் ஏற்கவில்லை.  

                    மன உளைச்சலுக்காக ரூ. 4 ஆயிரம், அவருக்கு நிதி நிறுவனம் விகித்த அபராதத் தொகை ரூ. 250 மற்றும் காசோலை திரும்பியதற்காக வங்கி வசூலித்த ரூ. 85, வழக்கு செலவுத் தொகை ரூ. 500 ஆகியவற்றைச் சேர்த்து விஜயா வங்கி பாதிக்கப்பட்ட கவிதாவுக்கு ரூ. 4,335-யை 2 மாதத்தில் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.7-9-2009ல் இருந்து இத்தொகையை, 10 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கவிதாவுக்காக, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், நுகர்வோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார். 







Read more »

கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை பெறுபவர்களில் பெண்களே அதிகம்

கடலூர்:

        தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 
              வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஆதரவற்ற முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண், முதிர் கன்னி மற்றும் ஊனமுற்றோர்களுக்கு தமிழக அரசு சமூக நலத்துறை சார்பில் மாதம் தோறும் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் வரை 61 ஆயிரத்து 888 பேர் உதவித் தொகை பெற்று வந்தனர். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, முதியோர் உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தில் உதவி பெற ஏராளமானோர் முன் வந்துள்ளனர்.

                இதனால் ஜூன் மாதம் பயனாளிகளின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 100 ஆக உயர்ந்தது. அதில் ஆண்கள் 16 ஆயிரத்து 527 பேரும், பெண்கள் 45 ஆயிரத்து 573 பேரும் இத்திட்டத்தில் உதவித் தொகை பெற்று வருகின்றனர். மேலும், ஆங்காங்கே நடைபெற்று வரும் மனுநீதி நாள் முகாம், கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டங்களில் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 8ம் தேதி கலெக்டர் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட 513 மனுக்களில் முதியோர் உதவித் தொகை கோரி 300க்கும் மேற்பட்ட மனுக்களாகும். உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்து வருவதால், வருவாய் துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior