கடலூர்:
மாநில எல்லைப் பிரச்னைகளில், பிழைப்புக்கு வழியின்றி, கடலூர் ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
மாவட்டத் தலைநகராக கடலூர் இருந்த போதிலும், கடலூர் மக்களுக்கு அருகே உள்ள பெருநகரம் புதுவைதான். விலை வித்தியாசம் இருக்கிறதோ இல்லையோ, துணி மணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க, புதுவை சென்று வருவது என்பது கடலூர் மக்களுக்கு இயல்பான விஷயம். இதனால் தினமும் கடலூரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் புதுவை செல்கின்றனர். கடலூர்- புதுவை இடையே 22 கி.மீ. தூரத்துக்குள், பிரபல தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மதுபானங்கள் அருந்த வசதியான கவர்ச்சிகரமான புதுவை பார்கள் என்று எண்ணிலா வசதிகளை, கடலூர் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
காலை 8 மணிக்குள் கடலூரில் இருந்து புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள், குறிப்பாக பெண்களின் எண்ணிக்கை பல்லாயிரம். கடலூரில் இருந்து புதுவை செல்ல 5 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.எனினும் ஒவ்வொரு பஸ்ஸிலும் அமர்ந்து செல்வோர் 56 பேர் என்றால், 70-க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டே பயணிக்கும் பரிதாப நிலைதான் அதிகம். நெரிசல் மிகுந்த நேரத்தில் நின்று பயணிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகம். மூட்டையில் புளியை அடைப்பது போல் என்ற சொற்றொடர், கடலூர் - புதுவை பஸ்களில் பயணிக்கும் அப்பாவி மக்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.
கடலூரில் இருந்து புதுவை வரை 22 கி.மீ. தூரத்துக்குள் தமிழகப் பகுதியும் புதுவை பகுதியும் மாறிமாறி வருவதன் மூலம், இரு மாநில கிராமங்களும் பின்னிப் பிணைந்து கிடப்பதைப் பார்க்க முடியும். கிழக்குக் கடற்கரைச் சாலையில், தமிழக எல்லை எங்கே முடிகிறது?, புதுவை எங்கே தொடங்குகிறது? என்றே கண்டறிய முடியாத நிலை. ஆனால் கடலூர்- புதுவை பஸ்களில், கடலூரில் புறப்படும் போதே, புதுவை செல்வோர் மட்டும் பஸ்ஸில் இருக்கலாம், இடைப்பட்ட பகுதிகளுக்கு செல்வோர் பயணிக்க அனுமதியில்லை, இறங்கிக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு, ராணுவக் கட்டளை போல் நடத்துநரிடம் இருந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.
கடலூர்- புதுவை இடையே உள்ள பகுதிகளுக்கு, சாதாரண கடலூர் மக்கள் சென்று வருவதற்கு வேறு என்னதான் வாகன வசதி இருக்கிறது.ஆட்டோக்களையம் ஷேர் ஆட்டோக்களையும் விட்டால், கடலூர் மக்களுக்கு வேறு வழியில்லை.கடலூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள முள்ளைடை வரை (புதுவை மாநிலம்) மட்டுமே கடலூரில் இருந்து ஆட்டோக்கள் அனுமதிக்கப்படுகின்றன. கடலூரில் வழங்கப்பட்டு இருக்கும் ஆட்டோ பெர்மிட்டில், மாவட்ட எல்லையில் இருந்து, 25 கி.மீ. தூரம் வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் கடலூரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள புதுவை, அடுத்துள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம், கடலூரில் இருந்து 8 கி.மீ. தொலையில் உள்ள தமிழகப் பகுதியான ரெட்டிச்சாவடி, இங்கெல்லாம் செல்ல கடலூர் ஆட்டோக்களை புதுவைப் போலீஸôர் அனுமதிப்பது இல்லை.ஆனாலும் பிழைப்பு நடக்க வேண்டுமே. தினமும் 150 ஆட்டோக்கள், 50-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் மட்டும் தமிழகப் பகுதியான ரெட்டிச்சாவடி சென்றுவர, புதுவை மாநில போலீஸôருக்கு மாதம் ரூ. 500 முதல் ரூ. 600 வரை, மாமூல் கொடுத்து வருவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.மாமூல் கொடுக்காமல் புதுவை சென்று, போலீஸôரிடம் சிக்கிக் கொண்டால், ரூ. 3 ஆயிரம் வரை அபராதம் செலுத்தும் நிலையை உருவாக்கி விடுகிறார்களாம்.
இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கச் செயலர் ஏ.பாபு கூறுகையில்,
"25 கி.மீ. தூரம் வரை புதுவை மாநிலத்துக்குள் செல்ல அனுமதி இருக்கிறது. ஆனாலும் மறுக்கிறார்களே என்று புகார் செய்தால், நியாயம் அல்ல என்று கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்தாலும், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது இருமாநில எல்லை பிரச்சினை. இரு மாநில அரசுகளும்தான் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார்கள் அதிகாரிகள்.ஆட்டோக்களுக்கு இரு மாநில பெர்மிட் வழங்குங்கள் என்றால், அதையும் மறுக்கிறார்கள். கடலூரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. நகரில் போக்குவரத்து நெரிசல் பெருகி, விபத்துகள் அதிகரிக்கின்றன.ஆட்டோ பெர்மிட்டை கொஞ்ச காலம் நிறுத்தி வையுங்கள் என்றால், அதற்கும் அரசு தயாராக இல்லை. 3 ஆயிரம் ஆட்டோக்களை நம்பி இருக்கும் குடும்பங்களின் பிழைப்புக்கு வழி என்ன?' என்றார்.