கடலூர் மஞ்சக்குப்பத்தில் கட்டப்படும் எரிவாயு தகனமேடை.
கடலூர்:
கடலூரில் 2 எரிவாயு தகன மேடைகள், கடந்த 3 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வருகின்றன. கடலூரில் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு ஆகியவற்றின் கரைகளில் சடலங்கள் புதைக்கவும் எரிக்கவும் செய்யப்படுகின்றன. சடலங்கள் எரிக்கப்படும்போது நகருக்குள் பெருமளவுக்கு துர்நாற்றம் அடிக்கும் நிலையும் உள்ளது.
இதனால் நகருக்குள் காற்று மாசுபடுவதாகக் கூறப்படுகிறது.எனவே கடலூர் மஞ்சக்குப்பம், கம்மியம்பேட்டை ஆகிய இரு இடங்களில் தலா 50 லட்சம் செலவில், எரிவாயு தகன மேடைகள் அமைக்கும் பணி, 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இவற்றில் மஞ்சக்குப்பம் எரிவாயு தகனமேடைக்கான பணிகள் மட்டுமே பெரும்பாலும் நிறைவு அடைந்துள்ளது. எரிவாயு தகன மேடைகளை தனியார் அறக்கட்டளை மூலமாகத்தான் நிர்வகிக்க வேண்டும் என்று, நகராட்சிகளின் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதற்காக நகராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையின்பேரில், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரங்கநாதன் தலைமையில் அறக்கட்டளை ஒன்று 4 மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. அறக்கட்டளையில் நகராட்சித் தலைவர் மற்றும் ஆணையர், மக்கள் பிரதிநிதிகள் பலரும் உறுப்பினர்களாக உள்ளனர்.அறக்கட்டளைக்கு இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் கணக்குத் தொடங்கி 10 ஆயிரம் நிதியும் செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில் நகராட்சி, 2 மாதங்களுக்கு முன் இதே பணிக்காக மற்றொரு வங்கியில் கணக்கு தொடங்கி இருக்கிறது. பொதுமக்கள் சிலரிடம் நன்கொடைத் தொகையும் வசூலித்து, அந்தக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்கு தொடங்கியது பற்றி நகராட்சி நிர்வாகம், தங்களுக்குத் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அறக்கட்டளைத் தலைவர் ரங்கநாதன் தெரிவித்தார். எனவே இப்பணியில் நாங்கள் அக்கறை கொள்ள மாட்டோம் என்று, நகராட்சிக்குக் கடிதம் கொடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அறக்கட்டளைத் தலைவர் ரங்கநாதன் மேலும் கூறியது:
கடலூரில் 2 எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவற்றில் விறகைக் கொண்டு டீசலைச் சூடாக்கி, அதில் இருந்து கிடைக்கும் வாயுவை எரித்து, சடலங்கள் தகனம் செய்யப்படும். மஞ்சக்குப்பம் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி மட்டும் பெரும்பாலும் முடிந்துள்ளது. அதிலும் சில வேலைகள் பாக்கி உள்ளன.
ஒரு எரிவாயு தகன மேடை, முறையாகச் செயல்பட மாதம் 35 ஆயிரம் நிதி வேண்டும். மேலும் ஒரு சடலத்துக்கு 2,500 கட்டணம் வசூலிக்க வேண்டும். பராமரிப்புப் பணிகளுக்காக அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ஆனால் எங்களுடன் ஆலோசிக்காமல், நகராட்சியே வங்கிக் கணக்கைத் தொடங்கி இருப்பது எங்கள் மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டது என்றார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் டி.குமார் கூறியது ,
""எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. சென்னையில் இருந்து பொறியாளர் ஒருவர் வந்து, இயந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதற்காகத்தான் காத்து இருக்கிறோம். மற்ற பணிகள் எல்லாம் முடிந்து விட்டன. மஞ்சக்குப்பம் எரிவாயு தகன மேடை விரைவில் செயல்படத் தொடங்கும்'' என்றார்.