உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 14, 2012

தானே புயல் : கடலோர் மாவட்டத்திற்கு 60 லட்சம் முந்திரி கன்றுகள் தேவை

விருத்தாசலம்:
 
            புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60 லட்சம் மரக்கன்றுகள் தேவை என வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார்.  விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முந்திரி, பலா, நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு சேத மதிப்பை அறியவும், புதிய நடவு குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டில்லி வேளாண் விரிவாக்க பொது துணை இயக்குநர் கோகடே தலைமை வகித்தார். விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். 
 
இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசபூபதி தெரிவித்தது:  
 
            புயலால் கடலூர் மாவட்டத்தில் முந்திரி, பலா, தென்னை உள்ளிட்ட மரங்கள் பலத்த சேதமடைந்துள்ளது. இவைகளைக் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதன்பிறகு விவசாயிகள் குறுகிய ரக பயிர் விளைவிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். முந்திரி விவசாயம் 30 ஆயிரம் ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் முந்திரி கன்றுகளை நடவு செய்ய 60 லட்சம் கன்றுகள் தேவை. இதற்குக் குறுகிய கால பயிரான வி.ஆர்.ஐ. 3 ரக முந்திரி கன்றுகளை விருத்தாசலம் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்வது குறித்து விஞ்ஞானிகளுடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், 1 லட்சம் பலா கன்றுகளை பாலூர் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்வது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.  பேராசிரியர் கலைச்செல்வன், ஜெயராஜ், ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

Read more »

தானே புயல் : கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களுக்கு கட்டண விலக்கு

             "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் என்று அக்கல்லூரி வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் தெரிவித்தார்.  
 
இதுகுறித்து எஸ்.ஆர்.எம். கல்லூரி வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர்  கூறியது: 
 
              இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டங்கள் நடத்தி, கட்சியின் மாவட்ட அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன. கட்சியின் நிர்வாக வசதிக்காக 71 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னைக்காக கேரள அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் கட்சி சார்பில், இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாரி நற்பணி மன்றம் சார்பில் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.  கட்டண விலக்கு: "தானே' புயல் பாதித்த பகுதிகளில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் செலவில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.  
 
              புயலால் பாதிப்படைந்த பகுதி விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை அதிகமாக வழங்கவேண்டும்.  புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும். அதற்கு முன்னோடியாக எஸ்.ஆர்.எம். குழும கல்லூரிகளில் பயிலும் கடலூர் மாவட்ட மாணவர்கள் 328 பேருக்கு 5 ஆண்டுகளுக்கான ரூ.7 கோடி கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.  மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய கூடங்குளம் அணு மின்நிலையம் செயல்படவேண்டும். அணு மின்நிலையம் தொடர்பான வீண் பயத்தை விடவேண்டும். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றார் பாரிவேந்தர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்ட 207 விவசாயிகளுக்கு 6,02,412 ரூபாய் முதற்கட்டமாக நிவாரணத் தொகை


கடலூர் : 

              கடலூரில், தானே புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர். மாவட்டத்தில் புயலால் நெல், கரும்பு, மணிலா, உளுந்து, பருத்தி, உள்ளிட்ட விவசாய பயிர்களும், முந்திரி, பலா, மா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, வாழை, மரவள்ளி கிழங்கு, வெற்றிலை, மஞ்சள், தென்னை, பனை ஆகிய தோட்டக்கலை பயிர்கள் உட்பட மொத்தம் 3,26,957 ஏக்கர் பரப்பில் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

            பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை மூலமாக 1,34, 631 பேருக்கும், தோட்டக்கலைத் துறை மூலமாக 52,470 பேருக்கும் நிவாரணத் தொகையாக முதல்வர் ஜெ., 120.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இத்தொகை 166 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

             முதற்கட்டமாக கடலூரில் கோண்டூர், உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த 207 விவசாயிகளுக்கு 6,02,412 ரூபாய் நிவாரணத் தொகையை மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஊரக தொழில் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சம்பத், கூட்டுறவுத் துறை செல்லூர் ராஜூ ஆகியோர் வழங்கினர். கலெக்டர் அமுதவல்லி, முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், வங்கியியல் கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். 















Read more »

கடலூரில் தானேபுயல் நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

இது குறித்து, கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவள்ளி கூறியது: 

             வீடுகளுக்கான நிவாரணத் தொகை பெறுவதில், ஏதேனும் குறைகள் இருந்தால், 1700 என்ற இலவச எண்ணிலும், 230 555 மற்றும் 231 653 ஆகிய எண்களிலும், பயனாளிகள் புகார் தெரிவிக்கலாம். வீடுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குவது குறித்து, அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அமுதவள்ளி கூறினார்.

         கடலூரில், "தானே' புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்குவதில், மாவட்ட நிர்வாகத்தின் தெளிவான அறிவிப்பு இல்லாததால், 5,000 ரூபாய் நிவாரணம் பெற வேண்டியவர்களுக்கு, குறைந்த தொகையும், சிலருக்கு, நிதியே கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.

பண்ருட்டி வட்டம், புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயி, முருகன் என்பவர் கூறியது: 

            வீடுகளுக்கான நிவாரணத் தொகை, வி.ஏ.ஓ., மூலம் வழங்கப்படும், என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால், எங்கள் பகுதியில், அரசு அலுவலர் அல்லாத தனி நபர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் பண பட்டுவாடா செய்கின்றனர். அவர்கள், பணம் தந்ததற்கான அத்தாட்சிக்கு, வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்குகின்றனர்.

               "தானே' புயல் நிவாரணம் என அச்சிடப்பட்ட சீட்டில், நிவாரணத் தொகை பெறுவோரின் குடும்ப அட்டை எண், அவர்கள் வசிக்கும் கிராமம் ஆகிய விவரங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. மேலும், 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள எங்கள் கிராமத்தில், 5,000 ரூபாய் தர வேண்டிய பலருக்கு, 2,500 ரூபாயும், சிலருக்கு அத்தொகைக் கூட தரப்படவில்லை. இந்நிவாரணத் தொகையுடன் தர வேண்டிய, அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி மற்றும் சேலை, எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

                இந்நிவாரணத் தொகை வழங்குவதில், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, அரசு நிர்ணயித்துள்ள பயிர் இழப்பீடு தொகையும் எங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும். இல்லையென்றால், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த, 100 க்கும் மேற்பட்டோர், அவர்களின் ரேஷன் கார்டை, மாவட்ட கலெக்டரிடம், "சரண்டர்' செய்ய முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு முருகன் கூறினார்.

புறங்கனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துசாமி என்பவர் கூறும்போது, 

               ""புயலில் என் குடிசை முற்றிலும் சேதமடைந்து விட்டது. எனக்கு, 2,500 ரூபாய் தான், நிவாரணத் தொகை தரப்பட்டது. என் வீட்டை சரிசெய்ய, குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். தமிழக அரசு, வீடுகளுக்கு கூடுதல் நிவாரணத் தொகை தந்தால் பேருதவியாக இருக்கும்,'' என்றார்.














Read more »

தானே புயலால் நெல்லிக்குப்பத்தில் வெறிச்சோடிய போகி சந்தை

நெல்லிக்குப்பம் : 

            காராமணிக்குப்பம் போகி சிறப்பு வாரச்சந்தை "தானே' புயலால் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது. 

               நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறும். ஆண்டுதோறும் போகிப் பண்டிகைக்கு முன்பு போகி சிறப்பு சந்தை நடக்கும். இச்சந்தையில் பொங்கலுக்குத் தேவையான பானை, மஞ்சள் கொத்து, மாட்டுப் பொங்கலன்று மாடுகளை அலங்கரிக்கத் தேவையான வர்ணங்கள், அலங்கார பொருட்கள், கயிறுகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு "தானே' புயல் வீசியதால் மாவட்டம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் பெரும்பாலான கிராமங்களில் பொங்கல் கொண்டாடும் மனநிலையில் இல்லை. இதன் காரணமாக நேற்று நடந்த போகி சந்தையில் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது










Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior