உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 02, 2012

காட்டுமன்னார்கோவிலில் சோழர் காலத்து பழமையும், பெருமையும் வாய்ந்த வீரநாரயணப் பெருமாள் கோயில் பாதுகாப்பு கேள்வி குறி


சிதம்பரம்:

        கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சோழர் காலத்து பழமையும், பெருமையும் வாய்ந்த வீரநாரயணப் பெருமாள் கோயில் பாதுகாப்பு, பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளதாக பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

            காட்டுமன்னார்கோவில் சன்னதி தெருவில் சோழர் காலத்து பழமை வாய்ந்த வீரநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் முதலாம் பராந்தக சோழன், குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டதாகும். மதங்க மகரிஷி சாபவிமோசனம் பெற்ற கோயிலாகும்.நாலாயிர திவ்யபிரபந்தத்தை தொகுதி நாதமுனிகள் மற்றும் ஆளவந்தார் ஆகியோர் பூஜித்த கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமியில் தேர், தெப்ப உற்சவம் நடைபெறும். ஆனி மாதத்தில் நாதமுனிகள் அவதார உற்சவம் நடைபெறும். இவையல்லாமல் 12 மாதங்களும் இக்கோயிலில் உற்சவம் நடைபெற்று வருகிறது.

            இக்கோயிலில் பழங்காலத்து 60 ஐம்பொன் சிலைகள், நகைகள் உள்ளன. இவைகள் விலைமதிக்க முடியாதவை எனக் கூறப்படுகிறது. 2008, 2009 ஆண்டுகளில் இக்கோயிலில் உள்ள வெள்ளி கிரீடங்கள், பாத்திரங்கள் திருடு போனது. 2009-ம் ஆண்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இக்கோயிலுக்கு இரவுக் காவலாளிகளை நியமிக்க வேண்டும் கோயில் முன்னாள் அறங்காவலர் எம்.தோத்தாத்திரி, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மற்றும் கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு பல முறை மனுக்கள் கொடுத்துள்ளார்.பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு மாவட்ட காவல்துறை பரிந்துரையின் பேரில் முன்னாள் ராணுவத்தினரை இரவு காவலாளியாக நியமிப்பது வழக்கம். 

          அண்மைக்காலமாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளைச் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழக அறநிலையத் துறை, கடலூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் ஆகியன இக்கோயிலுக்கு இரவுக் காவலாளியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளன
















Read more »

தென்கொரியாவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய சிதம்பரம் மாணவர் எம்.குருவிஷ்ணு

சிதம்பரம்:

           தென்கொரியாவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய சிதம்பரம் பள்ளி மாணவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  

       தென்கொரியாவில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் 10 முதல் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.  இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவரான சிதம்பரம் மணலூர் எடிசன் ஜி.அகோரம் மெமோரியல் பள்ளி 5-ம் வகுப்பு மாணவர் எம்.குருவிஷ்ணு (10) பங்கேற்று உரையாற்றினார்.  

           புவிவெப்பமடைதலுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து கருத்தரங்கில் அவர் பேசினார். இக்கருத்தரங்கை சாம்சங் இன்ஜினியரிங், டுன்சா எக்கோ ஜெனரேஷன், கொரியா கிரீன் பௌண்டேஷன், கிராஜூவேட் ஸ்கூல் ஆஃப் என்வயர்மென்டல் ஸ்டேடிஸ், சியோல் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின.  இம்மாநாட்டில் உலகிலுள்ள மற்ற நாடுகளிலிருந்து 400 பேரும், கொரியாவில் இருந்து 350 மாணவர்களும் பங்கேற்றனர். உலகளவில் 7 நாடுகளில் இருந்து 5 மாணவர்கள் அவர்களது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயல்பாடுகள், கட்டுரைப்போட்டி மற்றும் டுன்சா எக்கோ ஜெனரேஷன் வளைதளத்தில் எழுதியதன் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

      டுன்சா எக்கோ ஜெனரேஷனின் 7-வது ஆசிய பசுபிக் இளம் தூதுவரான குருவிஷ்ணு தேர்வு செய்யப்பட்டவர்களில் வயதில் மிகவும் சிறியவராவார்.  உலகளாவிய சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றித் திரும்பிய மாணவரையும், அவரது பெற்றோர்கள் கே.மதிவாணன், ஏ.தரணி ஆகியோரையும் பள்ளித் தாளாளர் கீதாஅகோரம், முதல்வர் கல்யாணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
















Read more »

"தானே புயலின் அறுவடை" குறும்பட சி.டி. மத்திய அமைச்சரிடம் அளித்தார் இயக்குநர் தங்கர்பச்சான்


புயல் தொடர்பான குறும்பட சி.டி.யை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் வியாழக்கிழமை வழங்குகிறார் திரைப்பட இயக்குநர்  தங்கர்பச்சான்
      
           தானே  புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வி.நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் ஆகியோரை தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.  புயல் பாதித்த இடங்களில் மறுவாழ்வுத் திட்டங்களை சரிவர செயல்படுத்தவில்லை என்றால் எந்தப்பலனும் கிடைக்காது என்றும் அவர் கூறினார்.  கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தாக்கிய "தானே' புயல் பாதிப்பு குறித்த 35 நிமிடங்கள் ஓடும் குறும்படத்தை தங்கர்பச்சான் தயாரித்து இயக்கி உள்ளார்.
 
          "தானே புயலின் அறுவடை' என்று அந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.  அந்தக் குறும்பட சி.டி-யை (குறுந்தகடு) தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோரிடம் தங்கர்பச்சான் வியாழக்கிழமை நேரில் அளித்தார். இதைத்தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை அவர் சந்தித்தார். "தானே' புயல் பாதிப்பு பற்றி ஜெயந்தி நடராஜனிடம் விளக்கிய அவர் தமது குறும்பட சி.டி-யையும் அளித்தார். 
 
 பின்னர் தங்கர்பச்சான் அளித்த பேட்டி:  
 
            "தானே' புயலால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி, பலாப்பழம், தென்னை, புளியமரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வகை மரங்கள் மீண்டும் வளர குறைந்தது ஆறு முதல் எட்டு வருடங்கள் ஆகும். இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களின் வருமானத்தை நம்பி அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் நடைபெற திட்டமிட்டிருந்த திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களுக்கு கட்டணம் செலுத்த குழந்தைகளின் பெற்றோரிடம் பணம் இல்லை. அதனால் புயலால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளின் பள்ளிக்கூட கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்.  தற்போது புயல் பாதித்த இடங்களில் நிலத்தடி நீர் 600 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. பிரச்னையின் தீவிரம் கருதி, கடலூர்-பரங்கிப்பேட்டை இடையே புதிய தொழிற்சாலைகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது.  மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 
 
            அப்பணியில் பெண்கள் ஈடுபட்டு வருதால் காலதாமதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் புயல் பாதிப்பின் தாக்கம் தெரியவரும். மக்களுக்கு நிரந்தர மறுவாழ்வுத் திட்டங்களை அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வருகிறேன். அவர்களும் கனிவாக கேட்டு கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகக் கூறியது நம்பிக்கை அளிக்கிறது என்று தங்கர்பச்சான் கூறினார்.   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior