கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்னமும் பயன்பாட்டுக்கு வராத திருச்சோபுரம் பாலம்.
கடலூர்:
கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பாலம், ஏனோ இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
- சிதம்பரம் சாலையில் இருந்து திருச்சோபுரம் செல்லும் சாலை மிகவும் குறுகலானது. இந்தச் சாலை வழியாக உப்பனாற்றைக் கடந்துதான், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சில தனியார் தொழிற்சாலைகள், மற்றொரு தனியார் தொழிற்சாலைக்கான சிறிய துறைமுகம், ஆலப்பாக்கம் ரயில் நிலையம் ஆகியவற்றுக்குச் செல்ல வேண்டும். மேலும் கம்பளிமேடு, தியாகவல்லி, பெரிக்குப்பம், நடுத்திட்டு, நொச்சிக்காடு, சித்திரைப்பேட்டை, தம்பணாம்பேட்டை உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் இச்சாலையில் உள்ள உப்பானாற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
உப்பனாற்றைக் கடந்து செல்லும் இவ்வழியில் சீனிவாசபுரத்தில் உள்ள இந்தத் தரப்பாலம் மிகப் பழையது. வடகிழக்குப் பருவமழை காலத்தில், தரைப்பாலத்தில் நீர் மட்டம் உயர்வதால், முந்தைய ஆண்டுகளில் 5 நாள்களுக்கு மேலும் போக்குவரத்து தடைபட்டது உண்டு.இந்த ஆண்டு 3 நாள்கள் இப்பாலத்தில் போக்குவரத்து நடைபெற வில்லை. குறுகிய தரைப்பாலம் வழியாகச் செல்வதில் உள்ள சிரமங்களைப் போக்க, 15 ஆண்டுகளுக்கு முன், 100 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இப்பாலத்தின் இரு முனைகளும் அணுகு சாலைகளால் இணைக்கப்படாமல் பாலம் துண்டாக நிற்கிறது.
.இது குறித்து திருசோபுரத்தைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சாமி கச்சிராயர் கூறுகையில்,
"உப்பனாற்றில் நீர் மட்டம் அதிகரிக்கும்போது தரைப் பாலத்தில் போக்குவரத்து தடைபட்டு விடும். பொதுமக்களுக்கும் தொழிற்சாலைகளுக்குச் செல்வோருக்கும் வசதியாக உயர்மட்டப் பாலம் தேவை என்று கோரியதால் நெடுஞ்சாலைத் துறை இப்பாலத்தைக் கட்டியது.நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த பிரச்னை காரணமாக, உயர்மட்டப் பாலத்துக்கு அணுகுசாலை அமைக்கும் பணி தடைபட்டது.தற்போது தொழிற்சாலைகளுக்கு தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் தரைப்பாலம் வழியாகச் சென்று வருகிற நிலையில், உப்பனாற்றில் உயர் மட்டப் பாலத்தின் தேவை அதிகரித்து உள்ளது' என்றார்.
குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்
நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை எழுந்ததால் பாலம் கட்டும் பணி நிறைவு அடைய வில்லை. மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணிகள் அப்போது தடைபட்டு நின்றுவிட்டது. அதனால் பாலம் பற்றி அப்போது யாரும் கவலைப்படவில்லை' என்று தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், அரசின் உதவியுடன் எளிதாக கையகப்படுத்தப்படுகிறது.ஆனால் ஒரு பாலத்துக்கான சிறிய அளவு நிலத்தை கையகப்படுத்துவதில் எழுந்த பிரச்னையை, அரசால் ஏன் தீர்த்து வைக்க முடியவில்லை என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
Read more »