உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

விளையாட்டு வீரர்கள் தேர்வில் முறைகேடு : திறமையானவர்கள் புறக்கணிப்பு¬

கடலூர் :

                     மாவட்ட அளவில் விளையாட்டு வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால், திறமையுள்ள வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாவட்ட அளவிலான பைக்கா விளையாட்டு போட்டிகள் டிசம்பர் மாதம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந் தது. இதில் 13 ஒன்றியங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங் கேற்றனர். கோ-கோ, கபடி, ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து உட்பட பல போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெறும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார் கள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.இதில் விருத்தாசலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கபடி மற்றும் ஹாக்கி போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். அதே போல் கால்பந்தில் இரண்டாமிடமும், கோ-கோவில் மூன்றாமிடமும் பெற்றனர்.

                    இந்நிலையில் மாநில அளவிலான பைக்கா ஹாக்கி, கபடி போட்டிகள் கரூரில் கடந்த வாரம் நடத்தப்பட்டு தேசிய அள வில் பங்கேற்கும் வீரர் கள் தேர்வும் முடிந்துள்ளது. இதில் பங்கேற்ற கடலூர் மாவட்ட அணிக்கு விருத் தாசலம் அரசு மகளிர் பள் ளியைச் சேர்ந்த ஒரு மாணவிகள்கூட தேர்வு செய்யப் படாமல், சிபாரிசின் அடிப்படையில் வேறு மாணவிகள் தேர்வு செய்து போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளனர் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள்.மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவோம் என ஆவலுடன் காத்திருந்த உண்மையான திறமையுடைய விருத்தாசலம் பள்ளி மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.அதே போல் கடலூர் ஒன்றியம் நடுவீரப்பட்டில் நடந்த ஒன்றிய அளவிலான விளையாட்டு போட் டியில் கே.என்., பேட்டை அணி கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்றது.

               ஆனால் இந்த அணியைச் சேர்ந்த வீரர்கள் ஒருவர் கூட கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை கொண்ட அணியே போட் டிகளில் பங்கேற்றுள்ளது. இதனால் ஒன்றிய போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் விரக்தி அடைந் துள்ளனர்.அதே போல் ஒவ்வொறு போட்டிகளுக்கும் வயது வாரியாக வீரர்கள் தேர்வு செய்வதிலும் பல்வேறு  முறைகேடுகள் நடந்து வருவதால் திறமையான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஒன்றியம், மாவட்டம், மாநில அளவில் 14 வயது, 16, 18, 21 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் வயது சான்றிதழ் மாவட்ட விளையாட்டு கழக செயலாளர் கையெழுத்திட்டு சான்று கொடுத்தால் போதுமானதாக உள்ளது.

               இந்நிலையில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சில உடற்கல்வி ஆசிரியர்கள், அதிகாரிகள் தங்களது பள்ளி அணிகள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் 14 வயது பிரிவு போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும் போது தங்களது பள்ளியிலேயே பிளஸ் 2 படிக்கும் 16, 17 வயதுள்ள மாணவர்களை முறைகேடாக தேர்வு செய்து அவர்களுக்கு 14 வயது என சான்றிதழ் கொடுத்து போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர். வேறு சில பள்ளிகளோ, தங்கள் பள்ளியில் படிக்காத திறமையுள்ள வெளி மாணவரை தேர்வு செய்து பள்ளிகளின் சார்பில் போட்டிகளில் பங் கேற்க வைக்கின்றனஇதனால் விளையாட் டில் திறமை இருந்தும் 14 வயதுடைய மாணவர்கள் வயதில் மூத்த வீரர்களிடம் மோதி தோல்வி அடைந்து வருகின்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு உண்மையான திறமையுள்ள விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து போட்டிகளில் பங் கேற்க செய்தால் விளையாட்டின் தரம் உயரும்.

Read more »

ஜெ., மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

பரங்கிப்பேட்டை :

            அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மீதான தேர் தல் விதிமுறை மீறல் வழக்கு வரும் பிப்., 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., 2006ம் ஆண்டு நான்கு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., தடை உத்தரவு பெற்றார். இதனால், பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இதுவரை 26 தடவை, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வசந்தி, பிப்., 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Read more »

கடலூர் அருகே உப்பனாற்றில் படகு கவிழ்ந்தது : 19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் :

                    கடலூர் அருகே உப்பனாற்றில் பள்ளி மாணவ, மாணவியர் சென்ற படகு கவிழ்ந்ததில், 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் அடுத்த நொச்சிக்காடு காலனி, வள்ளலார் நகர், நந்தன் நகர் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து தடம் எண்.32 அரசு டவுன் பஸ், காலை 8 மணிக்கு விடப்படுகிறது;  அதற்கு பிறகு 10 மணிக்கு ஒரு பஸ் விடப்படுகிறது. பஸ்சை தவற விடுபவர்கள், நொச்சிக்காடு உப்பனாற்று வழியாக சங்கொலிக்குப்பம் வரை படகில் சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து பள்ளிக்கு செல்கின்றனர்.நேற்று காலை 8 மணி பஸ்சை தவறவிட்ட 41 மாணவ, மாணவியர், கயிற்றை கட்டி இயக்கும் படகில் ஏறி அவர்களாகவே படகை இயக்கினர். கரை அருகே வந்த போது திடீரென படகு கவிழ்ந்ததில், மாணவ, மாணவியர் புத்தக பையுடன் தண்ணீரில் விழுந்தனர்.

             அங்கிருந்தவர்கள், தண்ணீரில் மூழ்கிய வித்யா(13), ஜெயசித்ரா(14), சந்திரா(16), விக்னேஸ்வரன்(17), ஜெயேந்திரன்(13), அருள்ராஜ்(13) உட்பட 19 பேரை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரவிக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி மற்றும் அதிகாரிகள், விபத்து குறித்து மாணவர்களிடம் விசாரித்தனர். ஆழம் இல்லாத பகுதியில் படகு கவிழ்ந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.  பள்ளி நேரத்தில் பஸ் விடப்பட்டால், இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம். கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் தம்புசாமி, துறைமுகம் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Read more »

இரண்டாம் நிலை காவலர் தேர்வு 203 பேருக்கு மருத்துவ சோதனை

கடலூர் :

                       கடலூர் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியைத் தொடர்ந்து நேற்று முதல் மருத்துவ பரிசோதனை துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கடந்த அக்டோபர் 25ம் தேதி நடந்தது. பின்னர் உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 156 ஆண்கள், 47 பெண்கள் என 203 பேருக்கு மருத்துவ பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இதில்  30 பெண்கள் உட்பட 55 பேருக்கு நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை துவங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று 17 பெண்கள் உட்பட 56 பேருக்கும், 29ம் தேதி 49 ஆண்களுக்கும், 30ம் தேதி 43 ஆண்களுக்கும் பரிசோதனை நடக்கிறது.மருத்துவ பரிசோதனையில் தேர்வு பெறுபவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பயிற்சி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more »

சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

குறிஞ்சிப்பாடி :

                 வடலூர் ஜோதி நகரில் உள்ள ஜோதி சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அமைச்சர் பன்னீர்செல் வம் உள்ளிட்டோர் பங் கேற்றனர். வடலூர் ஜோதி நகரில் உள்ள ஜோதி சுப்ரமணிய சுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 25ம் தேதி மாலையில் கணபதி வேள்வி, நவக்கிரக வேள்வி நடந்தது. அன்று இரவு 8 மணிக்கு முதல் கால வேள்வி, பூர்ணாகுதி மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

               நேற்று முன்தினம் (26ம் தேதி) காலையில் புதிய திருமேனிகள் கரிக்கோலம், இரண்டாம் கால வேள்வியும் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு அருட்பா அகவல் பாராயணம், 7 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் சீர்வளர்சீர் குருமகா சன்னிதான சுவாமிகள், முத்துகுமாரசாமி தம்பிரான், மற்றும் சிங்காரவேல் குழுவினர் புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து மூலவர் சுப்ரமணிய சுவாமி கோபுர கலசத்திலும், நவக்கிரக சன்னதி கலசத்திலும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

                   கும்பாபிஷேகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், ஊரன் அடிகளார், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தெய்வ நிலையம் அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், வடலூர் பேரூராட்சி தலைவர் அர்ச்சுனன், காங்., சேவாதள தவைலர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

Read more »

ரூ.17 லட்சத்தில்சாலை பணி துவக்கம்

பரங்கிப்பேட்டை :

                     பரங்கிப்பேட்டையில் புதிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி சேர்மன் துவக்கி வைத் தார்.பரங்கிப்பேட்டை சலங்குகார தெருவிலிருந்து அன்னங்கோவிலுக்கு நேரடியாக சென் றிட நபார்டு திட்டத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் துவக்கி வைத் தார். அவருடன் துணை சேர்மன் செழியன், தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி காண்டீபன், அருள்வாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கொள்ளிடத்தில் பாலம் கட்ட பூஜை

காட்டுமன்னார்கோவில் :

            காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடத்தில் பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது. கடலூர் மாவட்ட எல் லையான காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் கிராமம் அருகே உள்ள  கொள்ளிடம் ஆற்றை கடந்தால் நாகை மாவட் டம் துவங்கி விடும். இரு மாவட்டங்களை இணைத்திடம் கொள்ளிடம் ஆற்றிலம் பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.          

                      அதனைத் தொடர்ந்து அமைச்சர் பன்னீர்செல் வம் முயற்சியால் கொள்ளிடம் ஆற்றில் 43 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து நில ஆர்ஜிதம் பணி முடிந்து சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. தற்போது ஆற்றில் பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது. திட்ட உதவி இயக்குநர் கீதா, கட்டுமான பிரிவு இன்ஜினியர் செல்வம் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி அடுத்த இளமங்கலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

திட்டக்குடி :

                    திட்டக்குடி அடுத்த இள மங்கலம் பெட்ரோல் பங்க் அருகில் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார் பில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. பேரூராட்சி தலைவர் மன்னன் துவக்கி வைத் தார். உழவர் மன்றத் தலைவர்கள் வேணுகோபால், ரவிச்சந்திரன், தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு, காங்., மாவட்ட பொதுச் செயலாளர் இளவழகன் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க., விவசாய அணி அமிர்தலிங்கம், காங்., நகர தலைவர் கனகசபை, உழவர் மன்றத் தலைவர்கள் விஜயகுமார், ரவிச்சந்திரன், தேவேந்திரன், விடுதலை சிறுத்தை கவுதமன், பில் கலெக்டர் பழனிவேல், உதவியாளர் ரவிச்சந்திரன், காவலர் முத்துசாமி பங்கேற்றனர்.

Read more »

வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு மூன்று மாதத்திற்கு பிறகு சம்பளம் வழங்கல்

விருத்தாசலம் :

                       கோமங்கலம் ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு இரண்டாம் கட்டமாக சம்பளம் நேற்று வழங்கப்பட்டது. விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் ஊராட்சியில் கடந்த அக்டோபர் மாதம் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிகள் நடந்தது. அதில் அப்பகுதியை சேர்ந்த பலர் வேலை செய்தனர். அவர்களுக்கு சம்பளம் ஒரு பகுதி மட்டுமே வழங்கப் பட் டது. ஆனால் அரசிடம் இருந்து முழுத் தொகை பெறப்பட்டது.இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதமே கலெக்டரிடம் புகார் செய்யப்பட் டது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந் நிலையில் நேற்று முன்தினம் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சிலர் இந்த பிரச் னையை எழுப்பியதால் திடீர் சலசலப்பு ஏற்பட் டது.

           மேலும், வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் வழங்காததைக் கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று (28ம் தேதி) விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் வேலை செய்தவர்களுக்கு சேர வேண்டிய பாக்கி சம்பளத்தை வழங்கும் பணி நேற்று மாலை வழங்கப்பட்டது.

Read more »

கண்கள் தானம்

சிதம்பரம் :

            சிதம்பரத்தில் இறந்த இருவரது கண்கள் தானமாக பெறப்பட்டது. சிதம்பரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ருக்குமணியம்மாள் (82), விழல் கட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந் தவர் கல்யாணி அம்மாள் (75). இவர்கள் இருவரும் இறந்தனர். இதையறிந்த சிதம்பரம் காஸ்மா பாலிடன் அரிமா சங்க தலைவர் கமல் கிஷார் ஜெயின், செயலாளர் விஜயகுமார், மனோகரன் ஆகியோர் இறந்தவர்களின் குடும் பத்தாருடன் பேசி கண் களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

Read more »

நடராஜர் கோவிலில் மார்ச் 13ல் சிவராத்திரி

சிதம்பரம் :

                       சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா சிவராத்திரி குறித்த பொதுமக்களின் குழப்பத்தை தீர்க்க, பொது தீட்சிதர்கள் சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. விரோதி ஆண்டான இந்த ஆண்டு, வழக்கத்துக்கு மாறாக ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை, இரண்டு கிரகணங்கள் என பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, மகா சிவராத்திரி கொண்டாடுவதிலும் மக்களுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பிப்., 12ம் தேதியா, மார்ச் 13ம் தேதியா என்ற குழப்பம் நீடிக்கிறது.

              இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்ச் 13ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது என, பொது தீட்சிதர்கள் சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.பூலோக கயிலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில், மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை பூஜைகள் முடிந்த பிறகு, மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து விடிய, விடிய கால பூஜைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்படும். சிவ தொண்டர்கள், பொதுமக்கள் விரதமிருந்து திருமுறை பாராயணம் பாடியபடி சிவ ஜோதி எடுத்து மகா சிவாலய தரிசனம் நடக்கும்.

Read more »

சிதம்பரம் பகுதிகளில் குடியரசு தின கொண்டாட்டம்

சிதம்பரம் :

                   சிதம்பரம் பகுதிகளில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் நகராட்சியில்  சேர் மன் பவுஜியாபேகம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் ராமநதான், காமராஜ் மெட்ரிக் பள்ளியில் மாணவி லஷ்மிசுதா, வீனஸ் பள்ளியில் தாசில்தார் காமராஜ்,  ராமசாமி செட்டியார் பள்ளியில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சீனு, ராமகிருஷ்ணா பள்ளியில் பேராசிரியர் வள்ளியப்பன், பச்சையப்பா பள்ளியில் ஆசிரியர் நடராஜன், ஆறுமுகம் நாவலர் பள்ளியில் அருள்மொழிச்செல்வன், சி.முட்லூர் கல் லூரியில் முதல்வர் (பொறுப்பு) சேரன் கொடியேட்டினர்.


                         மாரியப்பா நகர் சீனுவாச வாண்டையார் உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியர் சின்னதுரை, குஞ்சரமூர்த்தி வினாயாகர் கோவில்தெரு முருகன் தொடக்கபள்ளியில் நிர்வாகி ராஜராஜன், ஓரியண்டல் நர்சரி பிரைமரி பள்ளியில் மூசா, கிள்ளை எம்.ஜி.ஆர் நகர் இருளர் குடியிருப்பு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவகுமாரவேல் கொடியேற்றினர். அண்ணாமலைநகர் பேரூராட்சியில் சேர்மன் கீதா தேசியகொடியை ஏற்றிவைத்தார்.  அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தில்லை மெட்ரிக் பள்ளியில் கணேஷ், நத்தமேடு பள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் கலையரசி, சாத்தப்பாடிபள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் கலைச்செல்வி, வல் லம்படுகை பள்ளியில் ஊராட்சி தலைவர் கலையரசன், சிதம்பரம் நெல்லுக்கடை தெருவில் காங்., வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சித்தார்த்தன், இளமையாக்கினார் கோவில் தெருவில் மனித உரிமைகள் கழக  லோகநடேசன், காசுக்கடை தெருவில் காங்., மாவட்ட தலைவர் சச்சிதானந்தம் தலைமையில் தேசிய ஆசிரியர் சங்க பாலசுந்தரம் கொடியேற்றினர்.

                     சிதம்பரம் அடுத்த நான் முனிசிபல் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் ராஜேந்திரன் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பாலு, ஊராட்சி உதவியாளர் மணிமாறன் மற்றும் உறுப்பினர்கள் பஙகேற்றனர். மஞ்கொல்லையில் கிராமத் தில் செந்தில்வேலன் தலைமையில், பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் திருமுருகபொய்யாமொழி, பரங்கிப்பேட்டை ஒன் றிய அலுவலகத்தில் ஆணையர்  சுப்ரமணியன், பேரூராட்சியில் சேர்மன் முகமது யூனுஸ், கிள்ளை பேரூராட்சியில் சேர்ங மன் ரவிச்சந்திரன் கொடியேற்றினர்.

                       தச்சக்காடு பள்ளியில் ஊராட்சி தலைவர் கோபு, சின்னகுமட்டி பள்ளியில் ஊராட்சி தலைவர் நகப்பன், கொத்தட்டை பள்ளியில் ஊராட்சி தலைவர் பழனி, சிலம்பிமங்களம் பள்ளியில் ஊராட்சி தலைவர் சங்கர், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் துணைத் தலைவர் முருகானந்தம், த.வீ.செ. கல்வி நிறுவனங்களின் செயலா ளர் செந்தில்நாதன், எஸ்.பி.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் தாளாளர் சவுந்திரராஜன் கொடியேற்றினார். மேல்புவனகிரி ஒன்றியத்தில் சேர்மன் தனலட்சுமி கலைவாணன் கொடி ஏற்றினார்.  மங்களம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்மணி, சுப்ரமணிய பாரதியார் மெட்ரிக் பள்ளியில் தலைமையில் ராஜேந் திர பிரசாத், அரசு மகளிர்பள்ளியில் தலைமை ஆசிரியர் காவேரி, ஆண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் அப்துல் நபி,  பு.சித்தேரி ஊராட்சியில் அதன் தலைவர் சச்சிதானந்தம் கொடி ஏற்றி வைத்தனர்.

                      காட்டுமன்னார்கோவிலில் தாலுகா அலுவலகத்தில் தாசில் தார் வீரபாண்டியன், ஒன்றிய அலுவலகத்தில சேர்மன் ஜெயச்சந்திரன், பேரூராட்சியில் சேர்மன் கணேசமூர்த்தி, குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் மலர்மன்னன், லால் பேட்டையில் சேர்மன் சபியுல்லா கொடி ஏற்றினார். பூவிழந்தநல்லூர் பள்ளியில் ஊராட்சி தலைவர் திரிபுரசுந்தரி, குமராட் சியில் ஊராட்சி தலைவர் எழில்மதி, கலைமகள் பள்ளியில் முதல்வர் வீரமுத்துகுமரன் கொடி ஏற்றினார். சேத்தியய்தோப்பு போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி., ராமச் சந்திரன், சர்க்கரை ஆலையில் அலுவலக மேலாளர் நாராயணசாமி, பேரூராட்சி அலுவலகம் மற்றும் சந்திரா பெண்கள் பள்ளி மற்றும் வடக்குசென்னிநத்தம் பள்ளிகளில் சேர்மன் கணேசன், வீரமுடையாநத்தம் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாரி, அள்ளூர் பள்ளியில் ஊராட்சி தலைவர் ஞானமணி, காவாலக்குடி பள்ளியில் ஊராட்சி தலைவர் தனலட்சுமி கொடியேற்றினர்.

Read more »

ஆசிரியர்களுக்கு வில்லுப்பாட்டு பயிற்சி

ஸ்ரீமுஷ்ணம் :

                    ஸ்ரீமுஷ்ணம் பகுதி ஆசிரியர்களுக்கு வில்லுப் பாட்டு, பொம்மலாட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது.  காட்டுமன்னார்கோவில் வட்டார வளமையம் சார்பில் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஸ்ரீஆதிவராகநல்லூர் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையம், நாச்சியார் பேட்டை பள்ளி தொகுப் பாய்வு மையங்களில் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது.ஆசிரியப் பயிற்றுனர் பழனிமுத்து, கீதா ஆகியோர் ஆசிரியர்களுக்கு வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் மூலம் கற்பிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் காமராஜ் இரண்டு மையங் களிலும் நடந்த பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டார். இதில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள 32 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.

Read more »

நெய்வேலி தி.மு.க.,வின் கோட்டை : அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்

நெய்வேலி :

                   என்.எல்.சி., தொழிலாளர்கள் தான் ஆபத்து காலத்தில் உதவுபவர்கள் என தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.  நெய்வேலி நகர தி.மு. க., சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். தலைமை செயற் குழு உறுப்பினர் ராசவன் னியன், நகர தலைவர் சிவந்தான் செட்டி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் வீரராமச்சந்திரன், தொ.மு.ச., பொது செயலாளர் கோபாலன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 
                      
                         நெய்வேலி நகரம் தி.மு.க.,வின் கோட்டை. என்.எல்.சி., தொழிலாளர்கள் தி.மு.க.,வின் தூண் களாக உள்ளனர். தி.மு.க., எதிர்கட்சியாக இருந்தபோதும் கூட தமிழகத்திலேயே அதிக ஓட்டு  வித்தியாசத்தில் அமைச்சர் பன்னீர் செல்வம் இந்த தொகுதியில் வெற்றி பெற்று அசத்தினார். அந்த அளவிற்கு என்.எல்.சி., தொழிலாளர்கள் ஆபத்து காலத்தில் உதவினர்.நமது அரசியல் எதிரிகள் தேர்தலுக்கு தேர்தல் நம்மை அசைத்து பார்க்க முயன்றனர். ஆனால் இனி எப்பொழுதும் அசைக்க முடியாத அளவிற்கு கருணாநிதி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என பேசினார்.மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் பேசுகையில், தமிழை அழிக்க வேண்டும் என்று நினைத்தவர்களின் நினைப்பை அழித்தவர் அண்ணாதுரை. அவரது தளபதியாக இன்றளவும் விளங்கி வருபவர் கருணாநிதி. இயந்திர சொல்லாக இருந்த தமிழ் மொழி எழுத்து சொல்லாக மாறிய வரலாறு தமிழுக்கு உண்டு என பேசினார்.

Read more »

சமத்துவபுரங்களில் பெரியார் சிலை :மங்களூர், நல்லூரில் பணிகள் தீவிரம்

சிறுபாக்கம் :

                            மங்களூர், நல்லூர் ஒன்றிய சமத்துவபுரங்களில் பெரியார் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.  மங்களூர் ஒன்றியம் கழுதூர், நல்லூர் ஒன்றியம் ஐவதுகுடி பகுதிகளில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலை அருகில் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் பெரியார் சிலை இல்லாத சமத்துவபுரங்களில் உடனடியாக சிலை நிறுவ தமிழக அரசு உத்தரவிட்டது. 

                        இதனையடுத்து சென் னையிலிருந்து  கொண்டு வரப்பட்ட இரண்டு பெரியார் சிலைகளை சமத்துவபுரங்களில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை ஒன்றிய ஆணையர்கள் மங்களூர் ஜெகநாதன், நல்லூர் ரவிசங்கர்நாத் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Read more »

மருத்துவ முகாம்

சிறுபாக்கம் :

                      சிறுபாக்கம் அடுத்த ம.கொத்தனூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் இந்திரா தலைமை தாங்கினார்.
                        
                          ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி, ஊராட்சி துணைத் தலைவர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி உதவியாளர் வேல்முருகன் வரவேற்றார்.மங்களூர் வட்டார மருத் துவ அலுவலர் மகேஸ்வரி தலைமையில் டாக்டர்கள் பிரேம்நாத், பாவாணன், சுரேஷ்குமார், உதயகுமார், ஜெய்சியா, ராஜேஸ்வரி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், காசநோய், இருதயம், ரத்த பரிசோதனை, சிறுநீர், எய்ட்ஸ் உள்ளிட்ட பல் வேறு நோய்களுக்கு 678 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.இதில் சுகாதார ஆய்வாளர்கள் பூவராகவன், லோகநாதன், மருந்தாளுனர் சீனிவாசன், செல்வராஜ், திருவள்ளுவன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கரும்பு அறுவடை இயந்திரம்செயல்விளக்க பயிற்சி

திட்டக்குடி :

                   திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை நிறுவனத்தின் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரத்தின் பயன்பாடுகள் குறித்த செயல்விளக்க பயிற்சி கரும்பு விவசாயி கோபாலகிருஷ்ணன் வயலில் நடந்தது. சர்க்கரை ஆலை துணை மேலாளார் (கரும்பு) கார்த்திக்ராஜா தலைமை தாங்கினார். கரும்பு அதிகாரி நடராஜன், ஆய்வாளர்கள் வசந்தகுமார், தெய்வசிகாமணி முன்னிலை வகித்தனர். ஆய்வாளர் ராஜேந்திரன் வரவேற்றார். சர்க்கரை ஆலை துணை பொது மேலாளர் (கரும்பு) செந்தில்குமார் கரும்பு அறுவடை இயந் திரத்தின் செயல்பாடுகள் குறித்த விளக்கமளித்து கரும்பு அறுவடையை துவக்கி வைத்தார். 

Read more »

அச்சுறுத்தும் சாலையோர தரைக் கிணறுகள் நான்கு வழிச்சாலையில் 'திக் திக்' பயணம்

திண்டிவனம் :

                      திண்டிவனத்திலிருந்து, புதுச்சேரி செல்லும் வழியில் சாலை ஓரம் உள்ள தரைக் கிணறுகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. விபத்துகள் ஏற்படும் முன், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி - திண்டிவனம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக விவசாய நிலங்கள் ஆர் ஜிதம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலங்களில் உள்ள தரைக் கிணறுகள் தற்போது சாலையை ஒட்டி அமைந்துள்ளன. திண்டிவனம் அடுத்துள்ள மொளசூர் கிராமம் அய்யனார் கோவில் அருகில் மூன்று தரைக் கிணறுகள் உள்ளன. இவை, திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி  செல்லும் சாலையின் இடது புறத்தில் உள்ளன. அவ்வழியே செல்லும் வாகனம் சாலையையொட்டி விலகினால், இந்த தரைக் கிணறுகளில் தான் விழ வேண்டிய அபாய நிலை உள்ளது.

                  தற்போது, இத்தரைக் கிணறுகள் உள்ள பகுதியில் சாலை அமைக்கும்  பணி நடைபெறுவதால், வழி மூடப்பட்டுள்ளது. இதனால், கிணறு உள்ள பக்கம் ஒரு சில வாகனங்களே வருகின்றன. நான்கு வழிச் சாலை பணி முடிவடைந்தால், வாகனங்கள் அதிகளவில் செல்லும்.  இதனால், தரைக் கிணறுகளால் விபத்துக்கள் ஏற்படும்.தற்போது, திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் பலர் இரு சக்கர வாகனங்களில் புதுச்சேரிக்கு செல்கின்றனர். ரோட்டை ஒட்டி செல்லும் வாகன ஓட்டிகள், சிறிது விலகினாலும் இந்த கிணறுகளில் தான் விழ வேண்டும். இந்த கிணறுகளால் விபத்து ஏற்படுவதற்கு முன், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சாலையில் பைக் நிறுத்தி அடாவடிபரங்கிப்பேட்டையில் 'டிராபிக் ஜாம்'

பரங்கிப்பேட்டை :

                      பரங்கிப்பேட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக பைக்கை நிறுத்தி விட்டு எடுக்காததால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பரங்கிப்பேட்டை சங்குமரத்தடியில்  இருந்து சின்னக்கடை தெரு வரை நெடுஞ் சாலைதுறை சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் அடிக்கடி போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை சஞ் சீவிராயர்கோவில் தெருவில் உள்ள மளிகை கடையில் பொருள் வாங்க வந்த ஒருவர் பைக்கை ரோட்டில் நிறுத்தியிருந்தார். அப்போது எதிரெதிரே பஸ் கள் வந்தது. ஒதுங்க இடம் இல்லாததால் தனியார் பஸ் கண்டெக்டர், ரோட்டில் நிறுத்தியிருந்த பைக்கை எடுக்குமாறு கூறினார். அதற்கு அந்த நபர் பைக்கை எடுக்க முடியாது என கூறினர். அதனால் தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டனர்.

                இதனால் அந்த வழியாக நடந்து செல்லவே முடியாத அளவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். அதனை அறிந்த பைக் ஆசாமி அங்கிருந்து "எஸ்கேப்' ஆகினார். அதன்பிறகு போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் பரங்கிப்பேட்டை - சிதம்பரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Read more »

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் 'சஸ்பெண்ட்'

பரங்கிப்பேட்டை :

                    அகல ரயில் பாதை யில் சிக்னல்கள் இயங்காதது குறித்து உயர் அதிகாரிகளிடம் சுட்டிக் காட் டிய ஆலப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சரக்கு ரயில் கள் இயக்கப்பட்டு வருகிறது.  ரயில் வரும் தகவலை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அருகாமையில் உள்ள ரயில்வே கேட் கீப்பர்களுக்கு மொபைல் போன் மூலமே தகவல் கொடுத்து வரப்படுகிறது. ஆய்வு பணிக்கு வந்த உயர் அதிகாரிகளிடம் இந்த குறைகளை சுட்டிக் காட்டிய ஆலப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்  மாஸ்டர் ஜெயராமன், திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Read more »

பிராந்தி பாட்டில் கடத்தியவர் கைது

பண்ருட்டி :

         புதுச்சேரியில் இருந்து பிராந்தி பாட் டில்கள் கடத்தி  வந்தவரை போலீசார் கைது செய்தனர். புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கண்டரக்கோட்டையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கைப்பையில் 6 பிராந்தி பாட்டில் கடத்தி வந்த பண்ருட்டி அடுத்த  கந்தன்பாளையம் சவுந்தரராஜன் (23) என்பவரை கைது செய்தனர்.

Read more »

சிறையில் கைதி கொலையா? ஆர்.டி.ஓ., மறு விசாரணை

கடலூர் :

                          கடலூர் மத்திய சிறையில்  தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட கைதி, கொலை செய்யப் பட்டாரா என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ., மறுவிசாரணை துவங்கியுள்ளது.சென்னை புளியந் தோப்பு, கனக நாராயண முதலியார் தோப்பை சேர்ந்தவர் பழனி மகன் அமுல் என்கிற அமுல்பாபு (29). திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக் குகளில் சம்பந்தப்பட்ட இவரை, புளியந்தோப்பு போலீசார்  குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். அங்கு அவர், சிறை ஊழியர்களிடம் கஞ்சா கேட்டு தகராறு செய்ததால்,  கடந்த ஜூலை 14ம் தேதி கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.கடந்த ஆக., 3ம் தேதி இரவு கஞ்சா கேட்டு சுவற் றில் தலையை மோதிக் கொண்டு  மயங்கி விழுந் தார்.

                     அவரை, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.மத்திய சிறை கண்காணிப்பாளர் ஜெயராமன் புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்தனர்.  கடலூர் ஆ.டி.ஓ., செல்வராஜ், கைதியின் உறவினர்கள், சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.இந்நிலையில், பிரேத பரிசோதனையில் அமுல் பாபுவின் விலா எலும்புகள் உடைந்துள்ளது தெரிய வந்தது. அதனால், கைதி அமுல்பாபு சிறையில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ., மறுவிசாரணை நடத்தி வருகிறார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior