கடலூர், டிச. 5:
பள்ளி மாணவ, மாணவியர் செல்போன்களை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கடலூரில் சனிக்கிழமை நடந்த குழந்தைகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளி நேரங்களில் ஆசிரியர்களுக்கும், பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு வாகனத்தை இயக்கும்போதும் செல்போன் பயன்படுத்த தமிழக அரசு தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் குழந்தைகள் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
பொயட்ஸ் தொண்டு நிறுவனம், பி.எம்.எஸ்.எஸ். தொண்டு நிறுவனம், புதுயுகம், கருணைவிழிகள், மனுஷி உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் சனிக்கிழமை கடலூரில் குழந்தைகள் உரிமை தின விழா மற்றும் குழந்தைகள் பேரணி நடந்தது.
விழாவை யொட்டி பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்ட பேரணி, பெரியார் சிலை அருகில் இருந்து புறப்பட்டு விழா நடைபெற்ற டவுன்ஹாலில் முடிவடைந்தது. பேரணியை கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தொடங்கி வைத்து குழந்தைகளுடன் நடந்து வந்தார்.
டவுன்ஹாலில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு பொயட்ஸ் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். சி அறக்கட்டளை இயக்குநர் டெய்சி வரவேற்றார். குழந்தைகள் நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.அமுதவல்லி பதவிப் பிரமாணம் செய்து வைத்து உரை நிகழ்த்தினார். குழந்தைகள் நாடாளுமன்றக் கண்காட்சியை அய்யப்பன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து குழந்தைகள் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காலை, மாலை வேலைகளில் மாணவர்களுக்கு சிறப்புப் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். உரிய பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்த வேண்டும். பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பள்ளி மாணவ, மாணவியரை கண்ணியத்துடன் நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு போக்குவரத்துத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் செல்போனைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். பள்ளி நேரங்களில் ஆசிரியர்களும், பள்ளி வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்டும் போது செல்போன் பயன்படுத்த தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும். குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்கள், சத்துணவு மையங்களில் சரியான முறையில் சுகாதாரமான உணவு வழங்க வேண்டும். திரைப்படங்கள், தொலைக்காட்சி, விளம்பரங்களில் குழந்தைகளைத் துன்புறுத்தும் காட்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொ டர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாடாளுமன்ற இணைய ஆலோசகர் கல்பனா, நாடாளுமன்ற கூட்டமைப்பின் அமைப்பாளர் கிறிஸ்டோபர், வெல்த்துங்கர் ஹில்பே தொண்டு நிறுவன இயக்குநர் முனைவர் ஆறுமுகம், பொயட்ஸ் இயக்குநர் திரிவேணி, பி.எஸ்.ஜி. தொண்டு நிறுவனச் செயலாளர் தாமரைச்செல்வன், கேர் இந்தியா மாவட்ட ஒருங்கிமைப்பாளர் மோசஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Read more »