நெய்வேலி, டிச. 10:
விருத்தாசலம் நகர வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேவைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையில் பேச ஆளில்லை என்றார் நகர்மன்றத் தலைவர் வி.கே. முருகன். இதனால் பல்வேறு பணிகள் தடைபட்டிருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: எங்களைப் பொருத்தமட்டில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.16 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. இம்மாதம் 11-ம் தேதி நடைபெற உள்ள நகர்மன்றக் கூட்டத்தில் மேலும் ரூ.3 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளுக்கு திட்டங்கள் தயார் செய்யப்பட்டு, அவை ஒப்புதல் பெறப்பட உள்ளன.
தெரு விளக்குகள் பராமரித்தல் பணியை தனியாரை விட முடிவுசெய்து அதற்கான ஒப்பந்ததாரரும் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோன்று நகரில் குவியும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து, மக்காக குப்பைகளை அகற்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் விருத்தாசலம்- திருச்சி சாலையில் புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் பஸ் நிலைய இடமாற்றம் இவ்விரண்டு பணிகளும் கிடப்பில் உள்ளன. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் விஜயகாந்த் எதுவும் பேசுவது கிடையாது.
பு திய பஸ் நிலையம் கட்டுவதற்கு விருத்தாசலம் சந்திப்பு எதிரே 5.7 ஏக்கர் இடம் தேர்வுசெய்துள்ளோம்.மேலும் பாதாள சாக்கடைத் திட்டத்தின் மூலம் கழிவுநீரை கொண்டுசெல்லும் வழி குறித்தும் சட்டப்பேரவையில் பேசி உள்ளாட்சித் துறை அமைச்சர் கவனத்திற்கு தொகுதி எம்எல்ஏ முயற்சித்தால் மட்டுமே,இப்பணிகள் விரைவில் நடைபெற வாய்ப்புண்டு.
விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில் எதிரே இருந்த நந்தவன இடத்தில் மார்க்கெட் அமைந்திருந்தது. தற்போது அந்த மார்க்கெட்டை அகற்றி, வாகன நிறுத்தமிடமாக மாற்ற முயற்சி மேற்கொண்டால், கோயில் நிர்வாகத்தினர், அனுமதி மறுக்கின்றனர்.போக்குவரத்துப் போலீசாரும் பொறுப்பற்ற முறையில் இருப்பதால் வாகன நெரிசலில் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள் என்றார் அவர்.