"தானே' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.103.87 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொழிலதிபர்கள், திரைப்பட பிரமுகர்கள் என பலரும் தாங்களாக முன்வந்து நிதியை அளித்து வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை வியாழக்கிழமை சந்தித்து 25 பேர் நிதி அளித்தனர். வருவாய்த் துறை சார்பில் அதன் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.1.88 கோடியையும், தொழில் துறை சார்பில் அமைச்சர் பி.தங்கமணி ரூ.1.64 கோடியையும் முதல்வரிடம் வழங்கினர். பள்ளிக் கல்வி சார்பில் ரூ.25 கோடி அளிக்கப்பட்டது.செய்தித் துறை சார்பில் ரூ.13.23 லட்சத்தையும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ரூ.10 லட்சத்தையும் அளித்தனர்.எம்.ஆர்.எப். நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம்.மேமன் ரூ.1 கோடியும், அப்போலோ மருத்துவமனை சார்பில் ரூ.1.5 கோடியும், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா ரூ.1 கோடியும் அளித்தனர்.தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.75 லட்சமும், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஊழியர்கள் சார்பில் ரூ.50 லட்சமும், எம்.பி. குழுமம் சார்பில் ரூ.25 லட்சமும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ரூ.20 லட்சமும் நிதி அளிக்கப்பட்டது.
கோவை கே.ஜி. மருத்துவமனை சார்பில் ரூ.15 லட்சமும், கோவை பிரிகால் நிறுவனத்தின் சார்பில் ரூ.15 லட்சமும், மாதா குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.பீட்டர் சார்பில் ரூ.10 லட்சமும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் சார்பில் ரூ.10 லட்சமும் நிதி அளிக்கப்பட்டது.சிரைன் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளி சார்பில் ரூ.10 லட்சமும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் சார்பில் ரூ.10 லட்சமும், அம்மன் குழுமம் சார்பில் ரூ.7 லட்சமும், இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ரூ.7.10 லட்சமும் நிதி வழங்கப்பட்டது.
பாரதியார் பல்கலைக்கழகம் ரூ.7 லட்சமும், ஆசான் மெமோரியல் சங்கம் ரூ.6 லட்சமும், திரைப்பட நடிகை நயன்தாரா ரூ.5 லட்சமும் நிதி அளித்தனர். சர்ச் பார்க் பள்ளி மாணவிகள் ஜெய்வர்ஷினி, மனிஷா, சுஜித்ரா ஆகியோர் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அளித்தனர்.தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.35 கோடி வழங்கப்பட்டது. நிவாரணப் பணிகளுக்காக இதுவரை ரூ.103.87 கோடி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.