உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 03, 2009

நாளை கலைஞர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்


கடலூர், அக். 30:


உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளை அதிகரிக்கும்பொருட்டு, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய 3 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் முகாம்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கிவைக்கிறார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இத் திட்டத்தின் கீழ், இதுவரை கடலூர் வட்டத்தில் 1,02,599 பேருக்கும், சிதம்பரம் வட்டத்தில் 82,894 பேருக்கும், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 50,999 பேருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டு, 20,660 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 207 பேர் பயன்பெற்று உள்ளனர். 39 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நவம்பர் 1-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் முகாம்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
வருமுன்காப்போம் திட்டத்தில் பங்கேற்று, மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களும் இதில் பங்கேற்கலாம்.
20-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் ஆட்சியர்.

Read more »

ரூ.38 கோடியில் சிதம்பரம் கோயிலை சீரமைக்க திட்டம்

சிதம்பரம், அக். 29:

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களை ரூ.200 கோடியில் சீரமைத்து புதுப்பிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் ரூ.38 கோடியில் சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் சீரமைத்து புதுப்பிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை இணை ஆணையர் ந. திருமகள் தெரிவித்தார்.
இதுகுறித்து சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் 4 பிரகாரங்கள் பகுதிகளிலுள்ள குடிநீர்த் தொட்டிகளை ரூ.3 லட்சத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது ரூ.24.50 லட்சத்தில் 4 உயர்கோபுர மின்விளக்குகள், சிவகங்கை குளத்தைச் சுற்றி குழல் விளக்குகள், 4 பிரகாரங்களை சுற்றி குழல் விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இப் பணிகளுக்கு ஆணைய பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சமும், பழனி தண்டாயுதபாணி ஆலய நிதியிலிருந்து ரூ.19.50 லட்சமும் பெறப்பட்டுள்ளது.
இவற்றை நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெரியகருப்பன் ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர். கடலூர் பாடலீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.18 லட்சத்தில் செலவில் கட்டப்பட்டுள்ள லோக விக்ரகங்கள் பாதுகாப்பு கட்டடம், ரூ.1 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நந்தவனம் ஆகியவறையும் இவ்விழா மேடையில் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைக்கிறார்.
தரிசனக் கட்டணம் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. சிற்றம்பலமேடையில் இலவச தரிசனமும் உண்டு. சிறப்பு தரிசனமும் உண்டு.
திருக்கோயிலை மேம்படுத்த கட்டணம் வசூலிப்பது என்பது அவசியமானதாகும். ஆனால், உள்ளூர் பக்தர்கள் இடையூறின்றியும், கட்டணமின்றியும் தரிசிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆலயத்தின் அனைத்து சாவிகளும் பொது தீட்சிதர்களிடமிருந்து பெறப்பட்டு இரட்டைச் சாவி முறை அமல்படுத்தப்படும். தீட்சிதர்கள் ரசீது அடித்து கட்டணம் வசூலிப்பதாக வந்துள்ள புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

Read more »

இணைப்பு சாலைக்கு முதல்வர் பெயர் பண்ருட்டி நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக, மதிமுக வெளிநடப்பு

பண்ருட்டி, அக். 29:

கும்பகோணம்- கடலூர் சாலை இணைப்புச் சாலைக்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இங்கு வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பண்ருட்டி நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எம். பச்சையப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நிலவும் குறைபாடுளை எடுத்துரைத்து, அவற்றுக்குத் தீர்வு காண வலியுறுத்தினர்.
பழனி (திமுக): நகராட்சியில் செயல்படாத வரி விதிப்பு குழுவை ரத்து செய்யுங்கள்.
தலைவர்: வாலாஜா கால்வாய் பணி நடைபெறவுள்ளது. வரி குறைக்க அதிகாரம் கொடுக்கவில்லை; யாரேனும் தவறு செய்தால் தெரியப்படுத்துங்கள். கார்த்தி (அதிமுக): குழந்தைகளுக்கு 3 வயது ஆகியும் மகப்பேறு உதவி கிடைக்கவில்லை.
தலைவர்: நிதி வந்ததும் வழங்கப்படும். இதுவரை ரூ.2 லட்சம் வழங்கியுள்ளோம்.
கே. கோதண்டபாணி (துணைத் தலைவர்) பேசுகையில், குடிநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் பவுடர் போடவில்லை என புகார் தெரிவித்தார். மேலும், மழைக் காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். ரகூப்: வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை புதிதாக தயாரிக்க வேண்டும்.
சரஸ்வதி பேசுகையில், சிறப்பு தீர்மானத்தில் உள்ள பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
இதனிடையே, கும்பகோணம்- கடலூர் சாலையை இணைக்கும் இணைப்பு சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டுவதை எதிர்த்து எம். எம். கமலக்கண்ணன் தலைமையில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Read more »

ஒருநாள் மழைக்குக்கூட தாக்குப்பிடிக்காத கடலூர் நகரச் சாலைகள்

கடலூர், அக். 29:

கடலூரில் ஒருநாள் (புதன்கிழமை இரவு) பெய்த மழையைக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் படுமோசமாகக் காட்சி அளிக்கின்றன.
கடலூரில் பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் தணியும் வகையில், புதன்கிழமை இரவு 57 மி.மீ. மழை பெய்தது.
ஆனால், இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையைத் தவிர்த்து, பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் குண்டும், குழியுமாக உள்ள ஏனைய சாலைகள் அனைத்தும் திடீர் மழையால் உழுதுபோட்ட வயல்போல சகதிக் காடாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பலர் சாலைகளில் விழுந்து, சகதியில் புரளும் நிலை ஏற்பட்டது. இரு சக்கரவாகன ஓட்டிகளும் சகதியில் வழுக்கி விழுந்து சாக்கடையை உடலில் பூசிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை மழைக்கு முன்னரே முடிக்குமாறு, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், குறிப்பிடத்தகுந்த அளவில் பணிகள் எதுவும் முடிக்கப்படாதாதால் இத்தகைய நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஒரு நாள் மழையிலேயே இந்நிலை என்றால், பலத்த மழை பெய்யும் போது ஏற்படும் விளைவுகள் குறித்து இப்போதே கடலூர் நகர மக்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, மழைக் காலம் தொடங்கிவிட்டதால், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தற்போது தொடர வாய்ப்பு இல்லை என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்காகத் தோண்டப்பட்ட மண் முழுவதும் சாலைகளில் கொட்டப்பட்டு, சாலைகளின் மட்டம் உயர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது.
இதுகுறித்து கடலூர் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன் கூறுகையில், சாலைகள் மோசமானதால், சாலைகளின் தடுப்புக் கட்டை மேலும் மதிற்சுவர்களுக்கு மேலும் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட மண்ணை முழுமையாக அகற்றாததால் 50 செ.மீ. வரை சாலைகளின் மட்டம் உயர்ந்து விட்டது. புதிய சாலைகள் அமைக்கும் போது மேலும் 30 செ.மீ. உயர வாய்ப்பு உள்ளது.
எனவே, சாலைகளில் குவிக்கப்பட்ட மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior