உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 08, 2010

முதலாம் ஆண்டில் கடலூர் மாவட்ட செய்திகள் இணையத்தளம்

                  


             இன்று  (08/10/2010) வெள்ளிக்கிழமை   முதலாம் ஆண்டில் கடலூர் மாவட்ட செய்திகள் இணையத்தளம் அடிஎடுத்து வைக்கிறது, இதுவரை ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எமது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நமக்கு செய்திகள் தரும் தினமணி, தினமலர், மாலைமலர், தி ஹிந்து, நக்கீரன் செய்தித்தாள்களுக்கும், பிளாக்கர், கூகுள் இணையதளத்திற்கும்,  தமிழ் திரட்டிககளான  தமிழ்மணம், திரட்டி, வெப்தமிழன், தமிழ்.நெட்  இணையத் தளங்களுக்கும்  எமது நன்றியினை  தெரிவித்து கொள்கிறேன்.

குறைகளை சுட்டிகாட்டுங்கள்

             இதுவரை நம் தளத்தின் நிறைகளை  மட்டுமே சுட்டிக்காட்டிய நண்பர்கள் குறைகளையும் சுட்டிகாட்டுங்கள் அப்போதுதான் குறைகளை நிவர்த்தி செய்து மேலும் சிறப்பான சேவை அளிக்க  முடியும்.

நன்றி 

                   கடலூர் ஆன்லைன்  இணையகுழுவிற்க்கும், கடலூர் மாவட்ட நண்பர்கள் அனைவருக்கும்  எமது நன்றியினை தெரிவித்துக்    கொள்கிறேன். வரும் ஆண்டுகளிலும் உங்கள் வருகையும் ஆதரவும் தொடர்ந்து எங்களுக்கு அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்,
   

 


மஜாகார்த்தி 

Read more »

அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை

               அடுத்த ஆண்டு (2011) அரசு விடுமுறை நாட்கள் எத்தனை என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

                    ஆங்கிலப் புத்தாண்டு (ஜனவரி 1), தமிழ் புத்தாண்டு (ஜனவரி 15), திருவள்ளுவர் தினம் (ஜனவரி 16), உழவர் தினம் (ஜனவரி 17), குடியரசு தினம் (ஜனவரி 26), மிலாது நபி (பிப்ரவரி 16), வர்த்தக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிவு (ஏப்ரல் 1), தெலுங்கு வருடப் பிறப்பு (ஏப்ரல் 4), அம்பேத்கர் பிறந்த தினம் (ஏப்ரல் 14), மகாவீரர் ஜெயந்தி (ஏப்ரல் 16), புனித வெள்ளி (ஏப்ரல் 22), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), கிருஷ்ண ஜயந்தி (ஆகஸ்ட் 21), ரம்ஜான் (ஆகஸ்ட் 31), விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 1), வங்கிகளின் அரையாண்டுக் கணக்கு முடிவு (செப்டம்பர் 30), காந்தி ஜயந்தி (அக்டோபர் 2), ஆயுத பூஜை (அக்டோபர் 5), விஜய தசமி (அக்டோபர் 6), தீபாவளி (அக்டோபர் 26), பக்ரீத் (நவம்பர் 7), மொஹரம் (டிசம்பர் 6), கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) ஆகிய 24 நாட்கள் பண்டிகைக்கால விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Read more »

கடலூரில் இடிந்து விழும் நிலையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு


புதர் மண்டியும், கழிவுநீரால் சூழப்பட்டும், இடிந்து விழும் நிலையில் காணப்படும் கடலூர் செம்மண்டலம் அரசு வீட்டுவசதி வாரிய வாடகைக் குடியிருப்பு.
கடலூர்:

               இடிந்து விழும் நிலையில் அச்சத்தை கிளப்பி வருகிறது கடலூர் செம்மண்டலம் குண்டுசாலை அரசு ஊழியர்கள் வாடகை குடியிருப்பு.  இங்கு மொத்தம் 630 வீடுகள் உள்ளன. இவற்றில் 330 வீடுகள் 1960-க்கு முன்னால் கட்டப்பட்டவை. மீதமுள்ள 300 வீடுகளும் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை.  

                இப்போது 200 வீடுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்ற வீடுகள் அனைத்தும் உருக்குலைந்து போய்விட்டது.  இங்கு குடியிருக்கும் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் வாடகையாகப் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே தொகையில் இதைவிட வசதியான வீடுகள், கடலூர் நகரத்தில் வாடகைக்கு கிடைக்கும். எனவே, இந்தக் குடியிருப்பை விட்டு அரசு ஊழியர்கள் பலர் வெளியேறி வருகின்றனர்.  பெரும்பகுதி, புதர்கள் மண்டி சுகாதார சீர்கேட்டின் அடையாளமாக மாறிவிட்டது இக்குடியிருப்பு. ஆக்கிரமிப்பைத் தடுக்க சுற்றுச்சுவர் கட்ட 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டுவசதி வாரியம் இட்ட உத்தரவு காற்றோடு போச்சு.  

                பராமரிப்பு இல்லாததால் வீட்டின் சுவர்கள் அனைத்தும் மழைநீர் கசிவால் பலமிழந்து காணப்படுகிறது.  அனைத்து வீடுகளுக்கும், இரண்டே இரண்டு செப்டிக் டேங்குகள். அவைகளுக்கு மூடி கிடையாது. கழிவுநீர் எப்போதும் வழிந்தோடி தொற்று நோய்க்கு அச்சாரம் போட்டு வருகிறது.  அதேபோல் குடிநீர் தொட்டிகளுக்கும் மூடி கிடையாது. இதை சுத்தப்படுத்தி ஆண்டுக்கணக்கில் ஆகிறது என்கிறார்கள் அங்கு குடியிருப்போர்.  

                 அரசு ஊழியர்கள் குடியிருப்பின் சாலைகள் மற்றும் பொது இடங்களை, நகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டும், நகராட்சி இன்னமும் எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார் கடலூர் நகர அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு. மருதவாணன்.  

கடலூர் நகர அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு. மருதவாணன் கூறுகையில், 

                     தரமான குடிநீர் இல்லை. பஸ்சிற்கு க்கு 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். வசிக்கத் தகுதியான வீடுகளைச் செப்பனிட்டு, மற்ற வீடுகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்பைக் கட்ட வேண்டும்.  கடலூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளை, வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்கிறார் மருதவாணன்.  

இதுகுறித்து வீட்டுவசதி வாரிய அலுவலர்கள் கூறியது 

                     ,இக்குடியிருப்பைச் சீரமைக்க வீட்டுவசதி வாரியம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Read more »

நெல்லிக்குப்பத்தில் இடவசதியின்றி நூலககட்டடம்: வாசகர்கள் அவதி

நெல்லிக்குப்பம்: 

                   நெல்லிக்குப்பம் நூலகத்தில் போதுமான இடவசதி இல்லாததால் வாசகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.நெல்லிக்குப்பம் நகரின் மத்தியில் கிளை நூலகத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்குவதால் ஏராளமான செய்தித் தாள்களும், வார, மாத இதழ்களும் வாங்குகின்றனர். ஆனால் இட வசதியின்றி தற்போது சிறிய அறையில் நூலகம் செயல்படுகிறது. 

                இதனால் புதிய புத்தகங்களை அடுக்க இடமில்லை.தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வரும் நூலகம் சாலையோரம் இருப்பதால் வாகனங்கள் எழுப்பும் ஒலியும், அள வுக்கு அதிகமான தூசு படிகிறது. மேலும் அருகில் ஓட்டல் இருப்பதால் கழிவுகளின் துர்நாற்றம் வீசுவதால் வாசகர்கள் நிம்மதியாக உட்கார்ந்து படிக்க முடியவில்லை. பல ஆண்டுகளாக நூலகத்துக்கு அமைதியான இடம் ஒதுக்கி தர வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டு வருகின்றனர். 

                இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சியில் இடம் ஒதுக்கிக் கொடுத் தால் நூலகத்துறை சார்பில் கட்டடம் கட்டிக் கொள்ளத் தயாராக உள்ளனர். அதற்கான நிதியும் உள்ளது. உடன் வாசகர்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் நூலகத்துக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 20,679 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

கடலூர் : 

                  கடலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

                கடலூர் மாவட்டத்தில் 117 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு ஆண்டு தோறும் இலவச சைக்கிள் வழங்குகிறது. இந்த ஆண்டு மாவட்டத்தில் பிளஸ் 1 படித்து வரும் எஸ்.சி.,- எஸ்.டி.,- எம்.பி.சி.,- பி.சி., - ஓ.சி., உள்ளிட்ட 20 ஆயிரத்து 679 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு அமைக்கும் பணி துவக்க விழா

சிதம்பரம்: 

                    இரண்டு ஆண்டுகளாக இருண்டு கிடந்த ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.  சிதம்பரம் நகரில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி  திறக்கப்பட்டது. பாலம் திறக்கப்பட்டும் மின் விளக்கு வசதி செய்யப்படாமல் இருளில் மூழ்கி கிடந்தது. மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் முயற்சியால் விளக்கு அமைக்கும் பணிக்கு 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

                     மின் விளக்கு அமைக்கும் பணியின் துவக்க விழா நேற்று சிதம்பரத்தில் நடந்தது. நெடுஞ்சாலை துறை திட்டங்கள் கோட்டப்பொறியாளர் செல்வம் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., ராமராஜ் மின் விளக்கு அமைக்கும் பணியின் பெயர் பலகையை திறந்து வைத்தார். உதவி கோட்ட பொறியாளர் சீனுவாசன், மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர், தாசில்தார் காமராஜ், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Read more »

அண்ணாமலை தொலைதூர கல்வி இயக்ககத்தில் திரைப்பட தொழில் நுட்ப கல்வி துவக்கம்

சிதம்பரம்: 

                 அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி இயக்ககத்தில் திரைப்பட தொழில்நுட்ப கல்வி துவக்க விழா நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மற்றும் ஹைதராபாத் ஜீவன் ஸாப்டெக் சார்பில் திரைப் பட தொழில் நுட்பம் சார்ந்த கல்வியை துவக்குவது என முடிவு செய்யப்பட்டது.  

                  ஹைதராபாத் தாஜ் டெக்கான் ஹோட்டலில் நடந்த விழாவிற்கு அமைச்சர் புரந்தேஷ்வரி தலைமை தாங்கி  துவக்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். 

விழாவில் அமைச்சர் புரந்தேஷ்வரி கையேட்டை வெளியிட்டு பேசுகையில், 

                          உயர்கல்வி விகிதத்தை இந்தியாவில் உயர்த்த வேண்டியது அவசியம். இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு தேவையான கல்வி தருவதற்கு கல்லூரிகளோ, பல்கலைக்கழகங்க ளோ இல்லை.  அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், ஜீவன் ஸாப்ட் டெக்கும் இணைந்து வழங்கும் திரைப்பட தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகளை வழங்குவது பாராட்டுக்குறியது என்றார். 

                     பல்கலைக்கழக துணை வேந்தர் ராமநாதன் பேசுகையில், திரைப்படம் என்பது ஒரு முக்கிய கலை மற்றும் பொழுதுபோக்கு அம்சமாகும். சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் வெளிப்படுத்துவதாகவும், அது ஒரு தொழில் துறையாகவும் முன்னனேற்றம் அடைந்துள்ளது.  திரைப் பட துறையில் எல்லா அம்சங்களையும் கல்வி சார்ந்து வடிவமைக் கப்பட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஹைதராபாத்தில் உள்ள ஜீவன் ஸாப்ட்டெக்குடன் புரிந் துண்வு ஒப்பந்த முறையில் எம்.பி.ஏ., பி.பி.ஏ., மீடியா மேனேஜ்மெண்ட் மற்றும் திரைப்பட தொழில் நுட்பத்தில் பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளை இந்த கல்வி ஆண்டு முதல் வழங்க இருக்கிறது. 

                     தொலைதூரக்கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், திரைப்பட தயாரிப்பாளர் தம்மாரெட்டி பரத் வாஜா, நடிகர் சலபதிராவ், லாபிங் லயன்ஸ் அனிமேஷன் ஸ்டுடியோ தலைவர் ஸ்ரீகாந்த், ஜீவன் ஸாப்ட் டெக் தலைவர் சீத்தாராமய்யர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

வெள்ளம்- வறட்சியில் பாதுகாக்க விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வது மிக அவசியம்: வேளாண் இயக்குனர் அறிக்கை

கடலூர்:
  
கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 

                             கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி துரிதகதியில் நடைபெற்று, இதுவரை சுமார் 30 ஆயிரம் எக்டரில் நடவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நடப்பு ஆண்டில் சுமார் 97 ஆயிரம் எக்டரில் சம்பா சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

                      ஆண்டுதோறும் அக்டோபரில் இருந்து டிசம்பர் வரை பெய்யும் கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள், மகசூல் இழப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பயிர் காப்பீடு செய்வது மிக அவசியம். இதற்கென தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தினை தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகள் இத்திட்டத்தில் தங்களை பதிவு செய்து தேவையான காப்பீடு பிரிமியத்தினை உரிய படிவத்துடன் கூட்டுறவு வங்கிகளிலோ, தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளிலோ செலுத்த வேண்டும். கடன் பெறும் விவசாயிகளுக்கு அந்தந்த வங்கிகளிலேயே பிரிமியத் தொகை வசூல் செய்யப்படும்.

                   கடன் பெறாத விவசாயிகள் காப்பீட்டுத் தொகையில் 2 சதவீத தொகையினை பிரிமியமாக செலுத்த வேண்டும். இதில் தமிழ்நாடு அரசால் 50 சதவீதம் இதர விவசாயிகளுக்கும் 55 சதவீதம் சிறு,குறு விவசாயிகளுக்குமான பிரிமியத் தொகை மானியமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறது.
அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.13024 காப்பீடு செய்யவிரும்பும் கடன் பெறாத சிறு,குறு விவசாயிகள் 117 ரூபாயும் இதர விவசாயிகள் 130 ரூபாயும் பிரிமியமாக செலுத்த வேண்டும். கடன் பெறம் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பிரிமியத் தொகை ஏக்கருக்கு 130 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

                       இந்த தொகையினை 15.12.2010-க்குள் உரிய படிவத்துடன் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ விவசாயிகள் செலுத்தி பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான படிவம் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கிடைக்கும். இது குறித்து மேலும் விவரங்கள் பெற விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior