தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான (எம்.பி.பி.எஸ்.) விண்ணப்பங்கள் மே 16-ல் இருந்து வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப் படிப்பிற்கு 1653 இடங்களும், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு கலந்தாய்வு மூலமான சேர்க்கைக்கு 635 இடங்களும் உள்ளன. ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்களும், 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு கலந்தாய்வின் மூலமான சேர்க்கைக்கு 891 இடங்களும் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு மே 15-ல் வெளியாகிறது. விண்ணப்பங்கள் மே 16-ல் இருந்து ஜூன் 2 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூன் 2. மாணவர்களின் தகுதிப் பட்டியல் ஜூன் 21-ல் வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ல் தொடங்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் ஷீலா கிரேஸ் கூறியது:
இந்த கல்வி ஆண்டுக்கான (2011-12) எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 30-ல் தொடங்குகிறது. அன்று சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 1 முதல் பொதுவான கலந்தாய்வு நடைபெறும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பம் மே 16 முதல் ஜூன் 2-ம் தேதி வரை வழங்கப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசம். மற்ற மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ளன.
விண்ணப்பத்தை இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் விண்ணப்பங்கள் கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு தட்டுப்பாடியின்றி விண்ணப்பப் படிவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பொறியியல் கல்லூரிகளுக்கு...
பொறியியல் கல்லூரிகளுக்கும் மே 16 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.