கடலூர் :
கடலூர் ஒன்றிய குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களுக்கு பதில் அவர்களது கணவர்கள் விவாதத்தில் ஈடுபட்டதுடன் தீர்மானத்திலும் கையெழுத்திட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது தி.மு.க., அரசு. இதனை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் அதிகளவில் பதவி வகித்தனர். இருந்தும் பெரும்பாலான இடங்களில் பதவியில் உள்ள பெண்களின் கணவர்களே அனைத்து பணிகளையும் செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக கிளம் பிய புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள், ஒவ்வொரு கூட்டத்திலும் பெண் கவுன்சிலர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும். பணிகள் முழுவதும் அவர் களே செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும் உள்ளாட்சிகளில் பெண்களின் பங்கு குறித்து தொண்டு நிறுவனங்கள் பெண் சேர்மன், கவுன்சிலர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி அவர்கள் சுயமாக செயல்படவேண்டிய அவசியத்தை உணர்த்தினர். இது ஓரளவிற்கு பயனளித்தாலும் பெரும்பாலான இடங்களில் இன்னமும் பழைய நிலையே தொடர்கிறது. ஆனால் தற்போது அனைத்தையும் மீறும் அளவிற்கு கடலூரில் நடந்த ஒன்றிய கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கூட்ட அரங்கில் அமர்ந்து கூட்ட பொருள் குறித்து விவாதித்தது வேடிக்கையாக இருந்தது.
கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 கவுன்சிலர்களில் 13 பேர் பெண் கவுன்சிலர்கள் உள்ளனர். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் ஆசைவள்ளி, சுமதி இருவர் மட்டுமே வந்திருந்தனர். மற்ற கவுன்சிலர்களான உமா, சுசீலா, ஜெயந்தி, ஜெயபாரதி, மணிமொழி, செல்வி, ராதா, வள்ளி அவரவர் கணவர்கள் மட்டுமே வந்திருந்தனர். கூட்டத்திற்கு வந்தது மட்டுமின்றி கேள்வி எழுப்பி விவாதத்திலும், வருகை பதிவேடு மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பதிவேட்டிலும் கையெழுத்திட்டதுதான் விந்தையிலும் விந்தை.
பெரும்பாலான கூட்டங்கள் இதே போல் நடந் தாலும் நேற்று நடந்த கூட்டத்தில் கணவன்மார்கள் ராஜ்ஜியமே மேலோங்கி காணப்பட்டது. பலமுறை எடுத்துரைத்தும் கவுன்சிலர்கள் காதில் போட்டுக் கொள்வதாக இல்லை. கட்சி மேலிடம், அமைச்சர் என மிரட்டல்தான் வருகிறது என அதிகாரிகள் தரப்பில் புலம்புகின்றனர். உள்ளாட்சிகளில் பெண் களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்த தி.மு.க., ஆட்சியிலேயே இந்த அவலம் நீடிக்கிறது.
பொது அறிவிற்கு:
உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் - ஜான் சுல்லிவன்
Read more »