கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி, சக கைதியால் புதன்கிழமை நள்ளிரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கடலூர் மத்திய சிறையில் 830 தண்டனைக் கைதிகளும், 420 விசாரணைக் கைதிகளும் உள்ளனர். ஆயுள் தண்டனைக் கைதிகள் 8-வது பிளாக்கில் தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர். சில கைதிகள் தனித் தனியாகவும், சில அறைகளில் இருவரும் அடைக்கப்பட்டு உள்ளனர். இருவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து, நள்ளிரவு அலறல் சத்தம் கேட்டது. சிறைக் காவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு கைதி, ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருந்தார். மற்றொரு கைதி அவர் மீது அமர்ந்து சாப்பாட்டுத் தட்டால் ஓங்கி அடித்துக் கொண்டு இருந்தார்.
பணியில் இருந்த மற்ற காவலர்கள் அறையைத் திறந்து, தாக்குதலில் ஈடுபட்ட கைதியை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். பலத்த காயம் அடைந்த கைதியை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இறந்த ஆயுள் தண்டனைக் கைதி, விழுப்புரம் ராஜாகோவில் தெருவைச் சேர்ந்த கந்தவேல் (34) என்று விசாரணையில் தெரியவந்தது. பண்ருட்டி காவல் நிலையத்தில் பதிவான கொலை வழக்கில், இவர் ஆயுள் தண்டனை அடைந்தவர். அவர் 9-4-2007 முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
தாக்குதல் நடத்திய கைதி, சென்னை செயின்ட் தாமஸ் மெüன்ட் ராஜபாளையம் தெருவைச் சேர்ந்த அய்யனார் (31). அவர் திருவெண்ணை நல்லூரில் நடந்த கொலை தொடர்பாக ஆயுள் தண்டனை அடைந்தவர். அவர் 16-3-2007 முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கந்தவேலை கொன்றது ஏன் என்று விசாரித்தபோது அய்யனார் மௌனம் சாதித்ததாகக் கூறப்படுகிறது. கந்தவேலும், அய்யனரும் சிறைக்கு வந்தபின் மன நோயாளிகளாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். கடலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்த இருக்கிறார்.