கடலூர் அருகே உச்சிமேடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம்.
கடலூர்:
கடலூரில் வெங்காய விதைகள் தயாரிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றன. நாணமேடு வெங்காயம் என்ற உள்ளூர் வகை வெங்காயம் கடலூரை அடுத்த நாணமேடு, உச்சிமேடு, உப்பளவாடி, கண்டக்காடு, தேவனாம்பட்டினம், கிள்ளையை அடுத்த கிராமங்கள் மற்றும் வல்லம்படுகை உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்படுகிறது.
இதன் அளவு சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நிலையில் இருப்பதாலும், குறிப்பிடத்தகுந்த சுவையாலும் நாணமேடு வெங்காயத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.வெங்காயம் பயிரிட்டு 120 நாள்களில் அறுவடைக்கு வரும்.10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் கடலோர கிராமங்களில் வெங்காயம் 1,000 ஏக்கர் அளவுக்குப் பயிரிடப்பட்டு வந்தது.ஆனால் நிலத்தடி நீர் உவர் நீராக மாறி வருவதாலும், நோய் தாக்குதல் காரணமாகவும் கடலூர் மாவட்டத்தில் வெங்காயம் பயிரிடும் பரப்பளவு குறைந்து வருகிறது.
எனினும் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெங்காயம் பயிரிடும் விவசாயிகளும் இங்கு உள்ளனர்.ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள். வெங்காயத்துக்கு கிராக்கி அதிகம் இருக்கும் ஆண்டுகளில் ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரைகூட வருவாய் கிடைத்து இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.ஆனால் வெங்காய விலையில் உள்ள ஏற்ற இறக்கம் காரணமாக, விவசாயிகள் பலர் தற்போது வெங்காய விதை உற்பத்திக்கு மாறி உள்ளனர்.
கடலூரில் உற்பத்தி ஆகும் வெங்காய விதைகளுக்கு கோவை, திருப்பூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, திண்டுக்கல் பகுதிகளில் நல்ல கிராக்கி இருப்பதாக கடலூர் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.மேற்கண்ட பகுதிகளில் நாணமேட்டு வெங்காய விதைகளுக்கு, நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. தரமான விதையாக இருந்தால் கிலோ ரூ. 1,000 வரை விலை போகும் என்றும், குறைந்தபட்சம் கிலோ ரூ. 500 நிச்சயம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
சாகுபடி குறைவு ஏன்?
இது குறித்து 25 ஆண்டுகளாக வெங்காய விவசாயம் செய்து வரும் நாணமேடு விவசாயி ராஜாராம் கூறுகையில்,
"கடலூர் பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் நாணமேடு வெங்காயம் பயிரிடப்பட்டு வந்தது.தற்போது 30 ஏக்கராக குறைந்து விட்டது. காரணம் நிலத்தடி நீர் உவர் நீராக மாறி வருவதுதான். மேலும் கடலூர் பகுதியில் வெங்காயப் பயிரில், நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கு மருந்து இல்லை' என்கிறார்கள் வேளாண் அதிகாரிகள். இதன் காரணமாக வெங்காய விவசாயிகள் பலர், வெங்காய விதை உற்பத்திக்கு மாறிவிட்டனர். நோய் தாக்குதல் இன்றி தரமான விதை கிடத்தால், கிலோ ரூ. 1,000 வரை விற்பனை செய்ய முடியும்.ஏக்கருக்கு 300 கிலோ விதை தாராளமாகக் கிடைக்கும்.
கடலூர் மாவட்டத்தில், ஆண்டுக்கு 3 ஆயிரம் கிலோ வெங்காய விதை உற்பத்தி செய்யப்படுகிறது.நாணமேடு வெங்காய விதைக்கு திண்டுக்கல், கோவை, திருப்பூர், பல்லடம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் நல்ல வரவேற்பு உள்ளது' என்றார் ராஜாராம்.
தொழில்நுட்ப ஆலோசனை
இது குறித்து கடலூர் வேளாண் துறை தெரிவிக்கும் தகவல்கள்:
கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் வெங்காய உற்பத்திக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் நமது விவசாயிகள் பாரம்பரிய முறை விவசாயத்திலேயே உள்ளதால், தரமான வெங்காயம், வெங்காய விதை மற்றும் கூடுதல் உற்பத்திக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. வேளாண் விதை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வெங்காய விவசாயிகள் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.வேளாண் துறையில் இருந்து வழங்கப்படும் நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று விவசாயம் செய்தால், சான்று பெற்ற வெங்காய விதைகளை விற்பனை செய்தால் கிலோ ரூ. 1,000-க்கு மேல் விலை கிடைக்கும் என்றும் வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக