சிதம்பரம்:
சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகை பெற மாவட்டத்தில் 62 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி தெரிவித்தார்.
இந்த முன்னோடி திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து காணொளி (வீ டியோ கான்ஃபரன்ஸ்) மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் பேசியது:
அரசின் முன்னோடி திட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அரசு வழங்குகிற இந்த ஓய்வூதியத் தொகையை பயனாளிகள் பெறுவதற்கு இதுவரை சிரமங்கள் இருந்துவந்தன. இந்த புதிய முன்னோடி திட்டத்தின் மூலம் சிரமங்கள் நீக்கப்பட்டு பயனாளிகள் வசிக்கும் கிராமத்துக்கே வங்கி சேவையாளர்கள் நேரில் சென்று உதவித் தொகையை வழங்குகிறார்கள். எனவே ஸ்மார்ட் கார்டு மூலம் இந்த வாரமே பயனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்கும். சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு இந்த புதிய திட்டம் பயனளிக்கும், உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என ஜெயலலிதா தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி பேசியது:
முன்னோடி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் மொத்தம் 161 கிராமங்களில் ஓய்வூதியம் பெறும் 10,530 பேர் பயன்பெறும் முன்னோடி திட்டமாகும். உடையார்குடி வங்கி மூலம் கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த இருதயமேரி என்ற பயனாளிக்கு ஸ்மார்ட் கார்டு மூலம் பணம் பெறும் திட்டத்தை முதல்வர் அனுமதியின் பேரில் தொடங்கப்படுகிறது என வே.அமுதவல்லி தெரிவித்தார்.
விழாவில் பயனாளி இருதயமேரி தெரிவிக்கையில் இதுவரை ரூ.500 உதவித்தொகை பெற்று வந்த எங்களுக்கு முதல்வர் ரூ. ஆயிரமாக உயர்த்தி வழங்கியுள்ளது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. மேலும் கிராமம், கிராமமாக வந்து கைரேகை மூலம் பணத்தை பெறுவதற்கு ஏற்பாடு செய்த முதல்வருக்கு நன்றி என்றார். இவ்விழாவில் காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகமாறன், கோட்டாட்சியர் எம்.இந்துமதி. வட்டாட்சியர் விஸ்வநாதன், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சந்திரா மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டத்தில் இந்த முன்னோடி திட்டத்தின்கீழ் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் மூலம் 62 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மொத்தம் 10,530 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக