
                         கடலூரில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால்,  குளம்போல் காட்சி அளிக்கும் மஞ்சக்குப்பம் மைதானம். (வலதுபடம்) கொட்டும்  கனமழையின் பின்னணியில் தெரிவது மாவட்ட
                                              கடலூர்:
           கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 2 நாள்களாக கனமழை  பெய்து வருகிறது. இதனால் கடைமடைப் பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நடவுப்  பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.இவ்வாண்டு கடலூர் மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில்  1.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் ஆகும். 
                        இம்மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டதாக  வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.தேவையான டி.ஏ.பி.உரம், பொட்டாஷ் கையிருப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.டெல்டா  பாசனப் பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் நாற்று நடவுப் பணிகள் முடிவடைந்து  விட்டது. வீராணம் பாசனப் பகுதிகள் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளில் 40 ஆயிரம்  ஏக்கர் பரப்பளவில், இனிமேல்தான் நடவுப் பணிகள் தொடங்க வேண்டும்.பெரும்பாலான  பகுதிகளில், நாற்றுகள் 30 நாள் பயிராகி நடவுக்குத் தயாராக உள்ளன.  வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால், கடந்த 2 நாள்களாக டெல்டா பாசனப்  பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் வயல்களில் பெருமளவு தண்ணீர் தேங்கி உள்ளது. 
             எனவே நடவுப் பணிகளை விவசாயிகள் உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.கடந்த  சில நாள்களுக்கு முன்பு வரை, கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளில்  தண்ணீர் பற்றாக்குறை நிலவியதாகவும், வடகிழக்குப் பருவமழை தொடங்கி  விட்டதால், தண்ணீப் பற்றாக்குறை தீர்ந்து விட்டதாகவும் விவசாயிகள்  தெரிவிக்கிறார்கள் .டெல்டா பாசனப் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில்,  நெல்பயிர் நட்டு 15 முதல் 25 நாள்கள் பயிராக உள்ளது. இப்பயிருக்கு தற்போது  பெய்து வரும் மழை, உகந்ததாக இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள். வீராணம்  ஏரியின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 44 அடியாக இருந்தது. வடகிழக்குப்  பருவமழை தொடங்கியதும், வீராணம் ஏரிக்கு வரும் காட்டாற்று வெள்ளத்தை  நினைத்து, டெல்டா பாசனப் பகுதி விவசாயிகளிடம் அச்சம் ஏற்படுவது வாடிக்கை.  எனினும் இவ்வாண்டு மேட்டூர் அணை வழக்கத்துக்கு மாறாக முன்னரே பாசனத்துக்கு  திறக்கப்பட்டதால், டெல்டா பாசனப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள்  நடவுப்பணிகளை முடித்து விட்டது, பெரிதும் அச்சத்தைப் போக்கி இருக்கிறது.
இது  குறித்து மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன்  கூறுகையில்,
               "டெல்டா கடைமடைப் பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள்  நடைபெற வேண்டியது இருக்கிறது. மழை 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை  ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை சற்று ஓய்ந்து இருந்தால்  நடவுப் பணிகள் முடிவையும். தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் டி.ஏ.பி. உரம்  விவசாயிகள் கேட்கும் அளவுக்குத் தாராளமாகக் கிடைக்க வில்லை.டி.ஏ.பி.  உரம் தாராளமாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்குப்  பருவமழை பரவலாகப் பெய்து வருவதால் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து  அதிகரிக்கும் அச்சம் உள்ளது.வடகிழக்குப் பருவமழை காலத்தில் வீராணம்  ஏரியின் நீர் மட்டும் திடீரென உயரவும், உடனேயே அதிக அளவில் உபரிநீரைத்  திறந்து விடும் நிலையும் ஏற்பட்டால் டெல்டா பாசனப் பகுதி விவசாயிகளுக்கு  ஏற்படும் பாதிப்பு சொல்லும் தரமன்று.
        எனவே வீராணம் ஏரி நீர் மட்டத்தை 44 அடிக்கு மேல் உயர்த்தாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.வீராணம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றார். 
கடலூரில் 77 மி.மீ                  
              வடகிழக்குப்  பருவமழை பெய்யத் தொடங்கி விட்டதால், கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை  இரவு முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. செவ்வாய்க்கிழமையும்  பலத்த மழை கொட்டியது.
செவ்வாய்க்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைந்த  24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் பெய்துள்ள மழையின்  அளவு மில்லி மீட்டரில் வருமாறு: 
              கடலூர் 77, பரங்கிப்பேட்டை 29,  ஸ்ரீமுஷ்ணம், தொழுதூர், சேத்தியாத்தோப்பு 25, காட்டுமன்னார்கோவில் 11,  தொழுதூர் 18, விருத்தாசலம் 15, பண்ருட்டி 7.5, கொத்தவாச்சேரி 21,  கீழ்ச்செறுவாய் 20, அண்ணாமலை நகர் 18, புவனகிரி 21, லால்பேட்டை, மேமாத்தூர்  10, வேப்பூர் 12, குப்பநத்தம் 23, லக்கூர் 14, பெலாந்துரை 22.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக