உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 28, 2011

கடலோர கிராமங்களில் ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையம்: எம்.எஸ்.சுவாமிநாதன்

சிதம்பரம்:

           கடலோர கிராம மக்களின் வாழ்வாதாரம், வருவாயைப் பெருக்கும் வகையில் ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையம் தொடங்கப்படும் என விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

            சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பிச்சாவரத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி, கடலோர வள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அடிக்கல் நாட்டு விழா, ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையம் தொடக்க விழா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையத்தைத் தொடங்கி வைத்து ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது: 

               படிக்காத மீனவ இளைஞர்களுக்கு கடலோர வள பயிற்சி அளிக்கவும், புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் கடலோர வள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. கடலோர கிராமங்களில் கடல் நீரிலிருந்து விவசாயம், மீன் வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு அதற்கான பயிற்சியையும் வழங்கப்பட உவுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்களுக்குச் சத்துணவு இல்லை. எனவே இப்பகுதி மக்களுக்குச் சத்துணவு வழங்குவதற்கான நடவடிக்கையை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.÷சுனாமி பேரலையின் போது அந்தமான் நிக்கோபார் தீவில் வசித்த பழங்குடியினர் மட்டும் உயிர் தப்பினர். 

               ஏனென்றால் சுனாமி வருவது குறித்த அறிகுறிகளை அறிந்து உயர்ந்த மரத்தின்மீது அமர்ந்து தப்பியுள்ளனர். எனவே நாம் பழமையான விஞஞானத்தையும், புதிய வஞ்ஞானத்தையும் இணைத்து செயல்படுத்த வேண்டும். மீண்டும் சுனாமி பேரழிவிலிருந்து கடலோர மக்களைக் காக்க கடலோரப் பகுதிகளில் சுரபுன்னை போன்ற காடுகளை வளர்க்க வேண்டும் என்றார் எம்.எஸ். சுவாமிநாதன். 

விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் புல முதல்வர் டி.பாலசுப்பிரமணியன் பேசியது: 

             கடலோர கிராமமான இப்பகுதியில் பெண்கள் வீட்டில் இருந்தவாறு வருமானத்தை பெருக்கும் வகையில் கடல் வண்ண மீன் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.  கடல் நீரில் வண்ண மீன் உற்பத்தி செய்யும் பணி ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தைத் செயல்படுத்த உள்ளது என்றார். 

              விழாவில் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பயனாளிகளுக்கு உமிரி மற்றும் கண்டல் செடிகளை வழங்கினார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம வள மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட மீனவ சமுதாயத்திற்கான அரசு நலத்திட்டங்கள் விளக்க கையேடு, கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள டீசல் எஞ்சின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பதற்கான விளக்க கையேடு, மீனவர்களுக்கான செயல்முறை விளக்க கையேடு ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன.

               முன்னதாக சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல் இயக்குநர் அஜய்பரீடா வரவேற்றார். சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் துறை தேசியத் திட்ட இயக்குநர் ஏ.செந்தில்வேல், தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை இயக்குநர் டி.எஸ்.சீனுவாசமூர்த்தி, சேத்தியாத்தோப்பு ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.விஜயகுமார், மீனவர் கிராமத் தலைவர் ஏ.அன்புஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கடலோர வள ஆராய்ச்சி மைய இயக்குநர் வி.செல்வம் நன்றி கூறினார்.













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior