கடலூர் : 
     முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
          கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு  வரும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர்  புஞ்சை நிலம் சொந்தமாக வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், கூலி வேலை  செய்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். தற்போது கிராம நிர்வாக அலுவலர்  மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பில் விடுபட்ட  விவசாயிகள் 10ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு  செய்து கொள்ளலாம். பதிவு செய்தால் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற  முடியும்.
 
       இத்திட்டத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் விபத்து மரணத்திற்கு  ஒரு லட்ச ரூபாயும், இயற்கை மரணத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும், ஈமச்சடங்கிற்கு  2,500 ரூபாயும் வழங்கப்படுகிறது. விபத்தினால் உறுப்புகள் இழப்பு மற்றும்  கொடுங்காயம் ஏற்படுவோருக்கு தன்மைக்கேற்ப 2,000 முதல் ஒரு லட்சம் ரூபாய்  வரை வழங்கப்படுகிறது. பதிவு பெற்ற உறுப்பினர் மற்றும் உறுப்பினரின்  குழந்தைகளுக்குத் திருமணம் நடைபெற்றால் பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்,  ஆண்களுக்கு 8,000 ரூபாயும் திருமண உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தின் கீழ் 60 முதல் 65 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற, முதுமை காரணமாக  உடல் உழைக்கும் திறனற்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 1,000  ரூபாய் வழங்கப்படுகிறது.
 
      பதிவு பெற்ற உறுப்பினருடைய குழந்தைகள் ஐ.டி.ஐ.,  பாலிடெக்னிக் உட்பட பல்வேறு படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு  விடுதியில் தங்குவோர் உட்பட அனைவருக்கும்  1,250 முதல் 1,750 ரூபாய் வரை  படிப்பிற்கேற்ப கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி  உதவித்தொகை உட்பட அனைத்து உதவிகளையும் பெற பொது மக்கள் தாசில்தாரை (சமூக  பாதுகாப்புத் திட்டம்) அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு  செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக